Saturday, November 15, 2014

பெருஞ்சித்திரனார்


 வறுமை... அளவிட்டுக் கூறமுடியாத வறுமை.

குப்பையிலே முளைத்த கீரை. அதன் இலைகள் ஏற்கனவே பறிக்கப்பட்டுவிட்டன. அந்தக் கணுக்களிடையே புதிய தளிர்கள் முளைவிட்டிருக்கின்றன. அவை இன்னமும் முதிரவில்லை. அந்த பிஞ்சுத் தளிர்களைப் பறித்து உப்பில்லாமல் நீரையே உலையாகக் கொண்டு காய்ச்சி, மோரும் இன்றி, சோறும் இன்றி, உண்கின்ற வறுமை.

புலவர் பெருஞ்சித்திரனார் குடும்பத்தில் தாண்டவமாடிய வறுமை இப்படித்தானிருந்தது.

 எஞ்சிய உயிரோடும், ஒட்டிய உடலோடும் வள்ளல் குமணனை நோக்கிப் போகின்றரர் புலவர்.

பகையை மட்டுமல்ல, புலவோர் வறுமையையும் புறமுதுகிட்டோடச் செய்யும் பெருவள்ளல் குமணன்.

"மன்னா! கொடும் வறுமையில் வாடும் என் சுற்றம் மகிழ நீ பொருள் தந்துதவ வேண்டும். நான் வருத்தியும் நீ வருந்தியும் தரும் பொருள் வேண்டாம். மனமுவந்து நீ ஈயும் பொருள் குன்றிமணி அளவேயாயினும் நாம் கொள்வோம். விரைந்து தருவாயாக" என்கிறார்.

குமணண் சில நாள் அவரை தன்னோடு இருத்தி உடல்வளம் பெருகச் செய்து பொருள் கொடுத்து அனுப்புகின்றான்.

பெரும் பொருள். வாழ்நாள்வரையிலும் அவர் குடும்பத்திற்குப் போதுமான பொருள்.

பொருளோடு சென்ற பெருஞ்சித்திரனாரைக் குற்றுயிரும் குலையுயிருமாக வாடிக்கிடந்த குடும்பம் வரவேற்றது. மனைவியின் கையில் அத்தனை பொருளையும் ஒப்படைக்கின்றார்.

“என் மனைக்குரியவளே,

உன்னை விரும்பியவர்களுக்கும், நீ விரும்பியவர்களுக்கும் இந்தப் பொருளைக் கொடு. நமது சுற்றமாகத் திகழ்கின்ற மூத்த பெண்களுக்கெல்லாம் கொடு. வறுமையுற்ற காலத்தே கடனாகப் பொருள் தந்துதவிய அனைவருக்கும் கொடு. இன்ன தன்மையர் இவர், என்று வேறுபாடு காட்டாது எல்லோருக்கும் கொடு. கொடுக்கின்றபோது என்னைக் கலந்துபேச வேண்டும் என்று எண்ணாதே. நீயாகவே எல்லாம் செய்துவிடு. பொருள் இருக்கின்ற காலத்திலே அதில் பற்று வைத்து, சேமித்து நீண்டநாள் வாழலாம் என்ற எண்ணம் வேண்டாம். எல்லோருக்கும் கொடு. இது முதிரமலைத் தலைவன் குமணன் தந்த பொருள்” என்கிறார்.

வறுமையிலும் செம்மை செறிந்த வாழ்வு என இதைத்தான் கூறுவதா?

கிடைத்த பெரும்பொருளை தனக்கென வைத்து வாழாமல் சுற்றம் செழிக்கக் கொடு என்கிறாரே... இந்த உயர்வுள்ளத்தை எப்படி வாழ்த்துதா? இல்லை வைவதா?

“இது குமணன் தந்த பொருள். என்னுடைய பொருள் அல்ல. தன்பொருள் எனப் பற்று வைக்காது வேந்தன் ஈந்த பொருள். அதில் நாம் பற்று வைப்பதா? வேண்டாம். அனைவருக்கும் அதைப் பகிர்வோம்” என்கிறார் புலவர்.

'நின்னயந் துறைநர்க்கு நீநயந் துறைநர்க்கும்
பண்மான் கற்பினின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி யெதிர்ப்பை நல்கியோர்க்கும்
இன்னோர்க் கென்னா தென்ணொடுஞ் சூழாது
வல்லாங்கு வாழ்து மென்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேற் குமண னல்கிய வளனே  (புறம் 163)  

தமிழையே எழுதி வாழ்ந்த பெருமை மிக்க புலவோரின், தரம் தாழ்ந்து போகாத வாழ்வுக்கு இந்த நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு. பொருளையே விரும்பும் சிந்தையுடையோர், சிலபொழுதில் புலவரை இகழ்தல் கூடும்.

மனதிடை எழும் உணர்வுகளை படைப்பாக்கும் மாசற்ற புலவோர் மனதின் வழியேதான் செல்வர். அதனாற்றான் அவர்கள் சிறத்த படைப்பாளிகளாகவும் திகழ்திருக்கின்றனர். உயர்ந்த மனிதர்களாகவும் வாழ்ந்திருக்கின்றனர்.