Sunday, May 17, 2015

முள்ளிவாய்க்கால் - ஆறாம் ஆண்டில் ஆறா வடு

விழி மடல்களில் நீரும்
கை விரல்களில் மலருமாய்
உறைந்த உணர்வுகளோடு
மீண்டும் உங்கள் சுவடுகளைத்
தொழ வந்திருகின்றேம்.

கொவைவெறி நிறைத்து நீண்ட
பகையின் விரல்கள்
எட்டிய தூரத்தில் நீங்களும்
எட்டாத தொலைவில் நாங்களும்.

ஆயினும் உணர்வுகளால்
ஒன்றியே இருந்தோம்.

ஆதிக்க வெறியர்
உங்கள் உயிர் பிடுங்கிச்
சிதைத்த பொழுதுகளில்
உடைப்பெடுத்த விழியூற்று
இன்றும் ஓயவில்லை.

நெஞ்சிலேறிய நெருஞ்சி முள்ளாய்
கனவிலும் கூட கனத்துக் கிடக்கிறது
முள்ளிவாய்க்கால்

முடிந்தவரை முயன்றோம்,
இன்னும் முயன்றால்
ஏதேனும்
முடிந்திருக்குமோ எம்மால்.

தெரியவில்லை..

காக்கமுடியாதிருந்த
கையாலாகாத்தனம்
உள்ளிருந்து
உறுத்திக்கொண்டேயிருக்கின்றது.

இன்றும் தெரிகிறது
அதே முள்ளிவாய்க்கால்

கரையோர மணலெங்கும்
இப்போதும் இளமையாய்
உலர்ந்து கிடக்கின்றன
அவர்களின் குருதின் துகள்களும்
எலும்புகளின் சிதறல்களும்.

வங்கக்கடல் அலைகள்
அழுதபடியே துயரக்கதைகளைக்
கரைகளில் எழுதிச் செல்கின்றன.

பெருங் கும்பல்களாய் ஒலித்த
தமிழ்ப் புலம்பல்களை
அவலத்தின் உச்ச ஓலங்களை
இப்போதும்
ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கின்றன
முல்லைக் கரையோரக்
கண்ணீர் அலைகள்.

நாம் எனப்பட்டோர்
உலகத் தெருவெங்கும் இறங்கி
அரற்றி அழுது புலம்பி
ஆறு ஆண்டுகள் ஆயின.

கண்முன்னே
கதறிச் சிதைந்த உறவுகளின்
கடைசிக் கணங்களிலிருந்தும்
விடுதலை விருப்பிலிருந்தும்
காலம் எம்மை
விலக்கிச் செல்லுமோ?

எமக்கான அனைத்தையும்
அரை நூற்றாண்டாய்ச்
சிறுகச் சிறுக
அழித்தாளும் அசுரர்
உலகறிய எம்மைக் கொன்றழித்த
கொடுங்காலம்
நெஞ்சிருந்து மெல்ல நீங்குமோ?

படிந்திருக்கும் பேரழிவுத்
துயரங்களைப் போக்கி
எம்மைக் கழுவிச் சலவை செய்யவும்
சிலர் முயல்கின்றனர்.

முள்ளிவாய்க்கால்
கழுவித் துடைக்கக் கறையல்ல ஆறா வடு.
தோன்றும் தலைமுறைகளின்
உயிர் ஒவ்வொன்றிலும்
எழுதப்பட்டிருக்கும்
நிரந்தரரக் குறி.

வங்கக்கடல் குளித்தேறும்
கதிரவனின் தங்கச் சுடர்
என்றேனும் ஒருநாள்
முள்ளிவாய்க்கால் கரைகளைச்
சுதந்திரமாய் முத்தமிடும்.

எம் போரியல் தொடர்ச்சியில்
இனப்படுகொலை என்னும்
ஒற்றைச் சொல்லை
வலுவாக்கி வாழும் உன்னதங்களே!

வணங்குகின்றோம்.