Friday, November 11, 2022

ஆண்களுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்!

 ஆண்களுக்கான தமிழ்ப் பெயர்கள்! 

இப்பெயர்கள் வடமொழிக்கலப்பு அற்றவை, அத்துடன் பொருள் செறிந்தவை.

அறிவன், அறிஞன்,அழகன்,அழலன், அன்பன், அருள், அருளன், அதியன், அனைத்தன், அரணன், அமுதன், அமிழ்தன், அகண்டன்,அகத்தியன், அகவன், அகில்,அங்கயன், ,அண்ணல்,அண்ணாவி, அணியன், அம்பரன், அம்பலன்,அமரன்,அரங்கன் .அரன், அரவணையன், அறன்,  அரியன், அருந்திரள், அருகன், அருங்கலன், அருளி, அரும்பன், அளியன், அனலன் ,அழல்வண்ணன், அறவோன், அறவாழி,அறவாணன், அறுமுகன்,அனிச்சன், ஆழன், அரசன், அஞ்சுகன், அகன், 

ஆதன், அறிவன், ஆடகன், ஆணையன், ஆரூரன், ஆர்கலியன்,ஆராவமுதன், ஆழியன், ஆழ்வார், ஆளரி, ஆற்றுநன், ஆன்றவன், ஆய், ஆயன், ஆயனன், 

இனியன், இயன், இதழன், இமிரன், இசை, இளவல், இயல்,  ஈழவன், எழில், எழிலன், ஈகன்,  ஒளிரன், உதியன், உரன், உரவோன், எல், எல்லாளன், ஐயன், ஐயன்கோ, ஐயனார், ஒப்பிலான், 

வாகை, கோ, வளவன், சேயோன், வழுதி, கோன், முருகன், சான்றோன். யாழன், வள்ளல், பாரி, வேள், வேந்தன், நன்னன், எயினன். நாடன், கிள்ளி, தமிழ், தமிழவன், சுடர், சுடரவன்,  பரிதி, பாகன், பகலவன், தூயோன், தென்றல், கிழான், வழுதி, வெற்பன், சேந்தன், வேலன், ஐயன், பாவலன், புரவலன், புலவன், மன்னன், மலரவன், வானன், வாணன். நாகன், வேங்கை, 








Saturday, November 5, 2022

சங்கத் தமிழரது குடும்பக் கொள்கைகள்

 சங்கத் தமிழரது குடும்பக் கொள்கைகள்

அனைத்துலக மனித உரிமை சாசனம் குடும்பம் என்பதற்கு பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளது.

“குடும்பம் என்பது, சமுதாயத்தின் இயல்பானதும் அடிப்படையானதுமான குழு அலகாகும் என்பதுடன் சமூகத்தாலும் தேசத்தாலும் பாதுகாக்கப்படுவதற்கான தகுதியைக் கொண்டது என்பதாகும்.”

குடும்பமே ஓர் இனத்தின் முதன்மையான சமூக அலகு எனப்படுகின்றது. மிக நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட ஓர் இனத்தினது பண்பாட்டு வளர்ச்சியின் அடையாளமாகவும் பண்பாட்டைப் பேணி வெளிப்படுத்தும் தளமாகவும் குடும்ப அலகே  திகழ்கின்றது. 

தமிழர் வரலாற்றில் குடும்ப அமைப்பு எப்போது, எவ்வாறு தோன்றியது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. எனினும் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியம் குடும்பம் தொடர்பான சிறந்த விளக்கங்களையும் இலக்கண வரையறைகளையும் எமக்குத் தந்துள்ளது. இவ்வாறான குடும்ப ஒழுக்கநெறிகள் தொல்காப்பியர் காலத்தில் நடைமுறையில் இருந்திருக்கின்றது என்பதை அறியும் போது தமிழர் குடும்ப அமைப்பு தொல்காப்பியத்துக்குப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என்பது உறுதியாகின்றது.

தொல்காப்பியமும் அக, புற திணைகளைச் சார்ந்த சங்க இலக்கியங்களும் தமிழரது அக்காலக் குடும்பக் கொள்கைகளை வரையறுப்பதற்குரிய போதிய சான்றுகளைத் தருகின்றன. அவற்றை நோக்குவோம். 

தொல்காப்பியரின் குடும்பக் கொள்கைகள்: 

உலகில் இப்போது பேசப்படுகின்ற ஆயிரக்கணக்கான மொழிகளுக்கு முன்பே தோன்றிய மூத்த மொழி தமிழ். மனிதத் தோற்றத்தின் பின்னான முதல் மொழியாகிய சைகை மொழியில் இருந்து பேச்சு, எழுத்தாக வளர்ச்சி பெற்ற மொழி, பின்னர் இன்புறுத்தற்குரிய இலக்கியம் எனப் பன்முக வளர்ச்சி கொண்டு எழுச்சி பெற்ற மொழியாகத் தமிழ் திகழ்ந்தது. இலக்கியப் போக்குகளைச் சீரமைக்கவும் வரையறுக்கவும் இலக்கணத் தோற்றத்தின் அவசியம் உணரப்பட்டதையடுத்துப் பல இலக்கண நூல்கள் தோன்றின. பின்னாளில் அவ்விலக்கணங்களின் செழுமையான வடிவமாகத் தோற்றங் கொண்டு இன்றுவரை அழியாது தமிழர் வாழ்வியலின் பெருஞ்சான்றாகத் திகழ்வது தொல்காப்பியமாகும். 

மொழியால் செய்யப்படுவது இலக்கியம் என்பதால் இலக்கியம் படைப்பதற்கு மொழியிலக்கணம் அறிய வேண்டியது அவசியமாயிற்று. மொழி வல்லாளர் அக்காலத்திலேயே மொழியை எழுத்து, சொல் எனும் இரு பகுப்புகளாகக் கொண்டு இலக்கணம் செய்தனர். இன்றுவரை உலக மொழிகள் பலவும் இவ்விரு பகுப்புகளுக்கும் மட்டுமே இலக்ணம் செய்து வருகின்றன. 

இலக்கியம் ஆக்குதற்கு மொழியறிவு மட்டுமே போதுமா? காலத்தை விம்பமாய்க்; காட்டவல்ல இலக்கியம் படைக்க வேண்டுமாயின் தமிழர் வாழ்வு பற்றிய தெளிவும் வரையறைகளும் படைப்போருக்குத் தெரிந்திருக்க வேண்டுமே.

இதை நன்கு உணர்ந்து கொண்ட தமிழ் இலக்கணவியலாளர் தமிழர் வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர் எழுத்து, சொல்லோடு இவ்விலக்கணத்துக்குப் ‘பொருள்’ எனப் பெயரிட்டனர். இந்தப் பொருள் இலக்கணமானது அக்காலத்தில் நடைமுறையில் இருந்த வாழ்வியலை உய்த்துணர்ந்து பகுத்தும் தொகுத்தும் உருவாக்கப்பட்டது. 

இலக்கியம் செய்வோர் தமிழர் வாழ்வியலை இயல்பாகவும் நுட்பமாகவும் செப்பமாகவும் படைக்க இவ்விலக்கண வரையரைகளே உதவின. இக்காலத்தே இயல்புக்குப் புறம்பான கற்பனை மிகுந்த காவியங்களை வடமொழி உட்பட பிற மொழிகள் படைத்துக்கொண்டிருந்தவேளை இயற்கையோடிணைந்த வாழ்வை இயல்பு மாறாமல் தமிழர் படைத்தனர். இதற்கான முதன்மைக்காரணம் இலக்கணத்தார் வரையறுத்த ‘பொருள்’ இலக்கணமே. 

அகம், புறம் என்ற இருபெரும் பகுப்புகளைக் கொண்ட பொருள் இலக்கணத்தில் அகத்திணையே தமிழரது குடும்பக் கொள்கை வகுப்பின் தளமாகத் திகழ்கின்றது. 

தொல்காப்பியர் காட்டும் அகத்திணையானது களவு, கற்பு என்னும் இருபெரும் பகுப்புகளைக் கொண்டதாகும். பருவம் எய்திய ஆணும் பெண்ணும் மனமொத்துச்; செய்யும் காதல் பெரிதும் களவு நெறி சார்ந்ததாகும். களவு ஒழுக்கம் வெளிப்பட்ட பின் திருமண உறவினூடாக இருவரும் இணைந்து  குடும்ப வாழ்வை ஆரம்பிப்பர். 

சங்க இலக்கியங்கள் பெரிதும் காதலைப் போற்றியுரைத்தாலும் அக்காலச் சமூகம் களவு ஒழுக்கமாகிய காதலை பெரிதும் ஏற்றுக்கொண்டதாகக் கூற முடியாது. தொல்காப்பியம் களவுக் காலத்தில் நிகழும் நான்கு விடயங்களைக் குறிப்பிடுகின்றது. இச்செறித்தல், அறத்தொடு நிற்றல், உடன்போகுதல், மடல் ஏறுதல் என்பனவாகும்.

இச்செறித்தல்: காதல் வயப்பட்ட தலைவியின் போக்கை உணர்ந்த பெற்றோர் அவளை வீட்டுக்காவலில் வைப்பர். 

அறத்தொடு நிற்றல்: தலைவியின் காதலைத் தோழி போன்றோர் பெற்றோருக்குத் தெரியப்படுத்துதல்.

உடன்போக்கு: பெற்றோர் திருமணத்துக்கு ஒப்புதல் வழங்காதவிடத்துத் தலைவனும் தலைவியும் உடன்போக்கின் வழியே தனித்துச் சென்று திருமணம் செய்தல்.

மடல் ஏறுதல்: விரும்பிய பெண்ணை அடைய முடியாதவிடத்து ஆண்மகன் பனை மட்டைகளால் செய்யப்பட்ட குதிரையில் ஏறி உடலில் பெண்ணின் உருவத்தையும் பெயரையும் பச்சை குத்தி ஊர்வலமாக வருதல். 

இளையோரது காதலைப் பெற்றோரும் சமூகத்தோரும் ஏற்றுக்கொள்ளப்படாத சூழ்நிலையிலேயே இவையெல்லாம் நிகழ்ந்தன. 

தொடக்ககாலத்தில் ஊர் அறிய நிகழ்த்தப்படுகின்ற திருமண முறை இருக்கவில்லை. பருவம் அடைந்த ஆணும் பெண்ணும் இயல்பாகக் கூடி வாழ்தலே குடும்ப வாழ்வாக இருந்திருக்க வேண்டும். இந்த வாழ்வில் ஏமாற்றுதலும் பொய்யும் களவும் தோன்றியதையடுத்து, ஊரார் அறிய நிகழும் திருமணமுறை தோன்றியது என்கின்றார் தொல்காப்பியர். 

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் 

ஐயர் யாத்தனர் கரணம் என்ப. (தொ. பொ. 72)

தொல்காப்பியர் குறிப்பிட்ட ஐயர் என்போர் ஆரியப் பிராமணர் அல்லர். சமூகச் சான்றோரே என ஆய்வாளர் குறிப்பிடுகின்றனர். 

திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பத்து வகையான பொருத்தங்கள் இருக்க வேண்டும் என இலக்கணம் கூறுகின்றது. 

“பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு,

உருவு, நிறுத்த காம வாயில்,

நிறையே, அருளே, உணர்வொடு, திரு என

முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே. (தொ.பொ.மெ. 25)

நற்குடிப் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு பிறந்தால் போதாது. அந்நற்குடிக்கேற்ற நல்லொழுக்கம் இருவரிடமும் இருக்க வேண்டும். பிறப்பு வேறு, குடிமை வேறு எனப் பிரிக்கிறார். இருவரிடமும் ஆண்மை அதாவது ஆளுமை ஒத்திருக்க வேண்டும்.

அகவை ஒப்புமை வேண்டும். காலத்திற்கு ஒப்ப வயது ஒப்புமை பார்க்க வேண்டும். உருவ ஒப்புமையும் வேண்டும். பார்ப்பவர் பொருத்தமான இணையர் என்னும்படியாக உயரம், பருமன் இருக்க வேண்டும்.

நிறுத்தக் காம வாயில் என்பது தொல்காப்பியர் சிந்தித்துச் சொன்ன அரிய கருத்தாகும். உடலில் அமைந்த காம நுகர்வுக்கான உடல், உள்ளக் கூறுகள் பொருத்தமாக இருக்க வேண்டும்.

நிறை என்பது மனத்தைத் திருமணமான பின் கண்டவாறு ஓடவிடாது தடுத்து நிறுத்துதல். அருளுடைமையும் அதன் அடிப்படையான அன்பும் உடையவர்களாக இருவரும் திகழ வேண்டும். உணர்வு என்பது ஒருவரை ஒருவர் அறிதல்; புரிந்து கொள்ளுதல்; உலகியலறிதல் வேண்டும். திரு என்பது செல்வம்.

இவ்வகைப் பத்துப் பொருத்தமும் நல்ல குடும்ப வாழ்வுக்குரிய திருமணத்துக்கு இன்றியமையாததாகும் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். 

திருமணத்துக்குப் பின்னான குடும்ப வாழ்வைக் கற்புநெறி என்பர் இலக்கணவியலாளர். 

“கற்பெனப்படுவது கரணமொடு புணரக்

கொளற்குரிய மரபிற் கிழவன் கிழத்தியைக் 

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே.”  (தொல் பொ. 71)

பெண்ணைப் பெறுவதற்குரிய மரபிற் தோன்றிய ஆடவனுக்குப் பெண்ணைக் கொடுக்கவல்ல மரபில் தோன்றிய பெற்றோர், உறவினர் என்போர் பெண்ணைக் கொடுக்க ஆடவன் தரப்பினர் கொள்வர். இதுவே கற்புநெறியின் தொடக்கமாகும். 

பெற்றோர், சமூகத்தோரது உடன்பாடு இன்றியும் திருமணங்கள் நடைபெறவல்லன என்பதையும் தொல்காப்பியம் சுட்டுகின்றது. 

“கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே

புணர்தலுடன் போகிய காலையான” (தொல். பொ 73) 

மறைந்து ஒழுகும் களவுநெறியில் நின்று வெளிப்படுவதுவும், உறவினர் கொடுக்க நடக்கும் திருமணமும் இயல்புநெறி சார்ந்ததாகும். இத்திருமண உறவில் மகிழ்ச்சி, புலத்தல், ஊடல், ஊடல் உணர்தல், பிரிதல் ஆகிய நிகழ்வுகளும் உள்ளன எனவும் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.(தொல்.பொ.74)

இலக்கியங்களில் குடும்பக் கொள்கைகள்: 

திருக்குறள் தமிழரது குடும்பக் கொள்கைகளை விளக்கும் உயர்ந்த நூலாகும். திருக்குறள் வகுத்த கொள்கைகள் பலவும் தமிழரது நீண்ட வாழ்வின் வழியே பெறப்பட்ட சாரம் எனலாம். சங்க இலக்கியங்கள் பலவும் இக்குடும்பக் கொள்கைகளை அழகாகப் புலப்படுத்துகின்றன. 

கணவனும் மனைவியும் மனமொத்துத் தன்னலமில்லாமல் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொண்டு ஈருடல் ஓருயிராய் வாழ வேண்டும் என இலக்கியங்கள் கூறுகின்றன. 

இல்லறம் நல்லறம்

வாழ்க்கைத் துணை நலமாய் விளங்கும் பெண், அன்பு, கற்பு, பொறுமை, விருந்தோம்பல், சுற்றம் பேணல் முதலிய அருங்குணங்களைப் பெற்றுத் திகழ்தல் சிறப்பு. மேற்குறித்த பண்புகளோடு பிற சிறந்த பண்புகளும் ஒருங்கே அமையப் பெற்ற தலைவியை அகநானூறு பின்வருமாறு சித்தரிக்கிறது.


“அன்பும், மடனும், சாயலும், இயல்பும்,

…………………………………………………………………………

ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி,“……………(அகம் 225 : 1-3)

பாலைத்திணையில், ‘தன் மீது அன்பு கொண்டவள், சிறந்த மடமையும் சாயலும் குணங்களும் பொருந்தியவள், எலும்பையும் நெகிழச் செய்விக்கும் இனிதான பேச்சை உடையவள், இப்படி பிற சிறந்த குணங்களும் எல்லாம் ஒன்றுபட்டு இருக்கின்ற ஒரு குறிக்கோளுடையவளாக ஒருங்கே அமைந்திருப்பன போல விளங்குபவள் நம் தலைவி’ என்று தலைவன் கூற்றாக எயினந்தை மகனார் இளங்கீரனார் என்ற புலவர் தலைவியின் இயல்புகளைக் குறிப்பிடுகிறார்.

மனைவி என்பவள் தன் கணவன் மீது அன்பும், ஐம்பொறியால் நுகரும் மென்மைத் தன்மையினைக் கொண்டு இருத்தல் வேண்டும். இத்தகைய தன்மையினைக் கொண்ட தன் மனைவியைக் காணவேண்டுமென்று எண்ணித் தேரினை விரைந்து செலுத்த பாகனை வேண்டுகிறான்.

“வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து 

…………………………………………………………

இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே! “……………(அகம் 94 : 12-14)

என்று நன்பலூர்ச் சிறுமேதாவியார் முல்லைத்திணையில் குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.

பிறவிதோறும் தொடரும் உறவு:

கணவன் மனைவி உறவு சட்டெனத் தோன்றுதல்ல,  பல பிறவிகளாகத் தொடர்ந்து வருவதாகச் சங்கத் தமிழர் கருதினர். முதற் பிறப்பிலும் கணவன் மனைவியாக வாழ்ந்தோரே இப்பிறவியிலும் விதியின் வலிமையால் இணைந்துள்ளனர் என நம்பினர். 

ஒரு குறுந்தொகைப் பாடல் இதை அழகுறக் கூறுகின்றது. 

இம்மை மாறி மறுமை யாயினும்

நீயா கியரென் கணவனை

யானாகியர் நின் நெஞ்சுநேர் பவளே” (குறு 49)

இப்பிறப்பு நீங்கி மறுபிறவியில் பிறப்பினும் நீயே என் கணவனாவாய். நானே உன் நெஞ்சில் நிறைந்தவளாவேன் என்கிறாள் மனைவி. 

உண்மை மிக்க காதல் பிறவிதொறும் தொடரும் என்பதனை,

“சாதல் அஞ்சேன், அஞ்சுவல் சாவில்

பிறப்புப் பிறிதாகுவ தாயின்

மறக்குவென் கொல்என் காதலன் எனவே” (நற்றிணை 397)

என்னும் அடிகளும் காட்டுகின்றன.


“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆர் அளவின்றே – சாரல்

கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. (குறுந்தொகை-3)

என்றுரைக்கிறாள் மற்றுமொரு பெண். என் காதலனோடான நட்பு நிலத்தை விடப் பெரியது. வானத்தை விட உயர்ந்தது, நீரை விட ஆழமானது என அன்பின் அகலத்தையும் உயரத்தையும் ஆழத்தையும் வெளிப்படுத்துகின்றாள். 

வறுமையிலும் செம்மை:

செல்வக் குடும்பத்தில் பிறந்தவள் தலைவி. அவளை மணந்தவன் குடி வறுமையுற்றது. அந்நிலையிலும் தலைவி தன் செல்வத் தந்தையின் உதவியை எதிர்பாராமல், எளிய உணவை வேளை தவறி உண்டு வாழ்கிறாள்.

“கொண்டகொழுநன் குடிவறன் உற்றெனக்

கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்

ஒழுகுநீர் நுணங்கு அறல்போலப்

பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே” (110)


காதல் வாழ்வின் நுட்பங்களை மிக அழகாகக் கூறுவது கலித்தொகை. இதன் உவமைகள் அழகு மிக்கன்; ஓசை இனிமை நிறைந்தன் எண்ணங்கள் மிக உயர்ந்தன.

இருக்கின்ற ஒரே ஆடையைப் பகுத்து உடுத்து வாழும் கொடிய வறுமை நிலையிலும் மனம் ஒன்றி வாழும் வாழ்க்கையே சிறந்த இல்லற வாழ்க்கை என்பதை ஒரு புலவர் பின்வருமாறு பாடுகிறார்.

“ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை”     (கலி.18)

காதலன் துன்பத்தில் பங்கு ஏற்றலைவிடக் காதலிக்குப் பெரிய இன்பம் இல்லை என்கிறாள் ஒரு தலைவி.

அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு

துன்பம் துணையாக நாடின் அதுவல்லது

இன்பமும் உண்டோ எமக்கு?           (கலி. 6)

மனத்தில் வருத்தம் உண்டாகும்படி பிரிந்து செல்வதைப் பற்றி எண்ணாமல் உன்னுடன் வந்து வழியில் ஏற்படும் துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதைவிட வேறு இன்பம் எங்களுக்கு உண்டா? என்கிறாள் தலைவி.

விருந்தோம்பல்:

தமிழ் மக்களின் பண்பாட்டில் விருந்தோம்பல் சிறப்பிடம் பெற்றிருக்கும் பெருமரபாகும். 

“இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு” எனத் திருவள்ளுவர் இல்லறத்தானின் கடமைமையை உணர்த்துகின்றார். குடும்ப வாழ்வின் உயர்ந்த கொள்கையாக விருந்தோம்பல் பேணப்பட்டு வந்திருக்கின்றது. 

நீண்ட மரபைக் கொண்ட சங்கத் தமிழரின் விருந்தோம்பல் பண்பின் தொடர்ச்சியே வள்ளுவத்தில் கூறப்பட்டுள்ளது என்பதற்கான சான்றுகள் பல சங்க இலக்கியங்களில் உள்ளன.

தொல்காப்பியம் புதியதாக வரும் எல்லா இலக்கியங்களையும் விருந்து என்ற பொருளில் குறிப்பிடுகின்றது.

விருந்தே தானும்

புதுவது புனைந்த யாப்பின் மேற்றே (பொருள் 1495)

இதனை அடிப்படையாகக் கொண்டே புதியதாக வருவோரை விருந்தினர் என அழைக்கும் வழக்கம் தோன்றியிருக்கலாம். 

இல்லறத்தார் தம் இல்லத்திற்கு விருந்தினர் வரவேண்டும் என்ற எண்ணத்தையும் அவ்விருந்தினருக்கு இனிய உணவு அளிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் கொண்டிருப்பர். அதனால் மீன் வேட்டைக்குச் சென்ற கணவர் விரைவில் திரும்பி வரவேண்டும் என்று மனைவி எதிர்நோக்கிக் காத்திருக்கும் செய்தியும் இரவில் விருந்தினர் வந்தாலும் மனைவியும் கணவனும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் வரவேற்று விருந்து படைக்கும் செய்தியும் நற்றிணையில் இடம் பெற்றுள்ளன.

“... மனையிலிருந்து

இருங்கழி துழவும் பனித்தலைப்பரதவர்

திண்திமில் விளக்கம் எண்ணும்” (நற்:372)

”அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும்

முல்லை சான்ற கற்பின் மெல்லியல்” (42, 9-18)

பெருங்குன்றூர்கிழார் இளஞ்சேட் சென்னியிடம் பரிசில் பெறச் சென்ற பொழுது “எனக்கு எந்தக் குறையும் இல்லை என்றாலும் விருந்தினர் வந்தால் அவர்களை வரவேற்பதற்குத் தேவையான செல்வம் இல்லாத வறுமைநிலை மட்டும் என்னிடம் இருக்கின்றது. அதனை மட்டும் தீர்த்து வைப்பாயாக” என்று கூறுவதன் மூலம் விருந்தோம்பலின் சிறப்பு வலியுறுத்தப்படுகின்றது.

“விருந்துகண் டொளிக்குந் திருந்தா வாழ்க்கைப்

பொறிப்புன ருடம்பிற் றோன்றியென்

அறிவுகெட நின்ற நல் கூர்மையே” (புற:266)

என்ற பாடல் வரிகள் விருந்தோம்பலின் முக்கியத்துவத்தைக் கூறுகின்றது.

சிறுபாணாற்றுப்படை அரசர்களின் கொடைச் சிறப்பைக் கூறுவதுடன் விருந்தோம்பல் பற்றிய செய்திகளையும் கூறுகின்றது.

‘எயில்பட்டின பரதவப் பெண்கள் சூடான குழல் மீன் கறியையும், வேலூரில் இருக்கும் எயினர் குலப்பெண்கள் இனிய புளிக்கறி சேர்த்து சமைத்த சோற்றுடன் காட்டுப்பசு இறைச்சியையும், ஆழுரைச் சார்ந்த உழவர்களின் தங்கைகள், குற்றிச் சமைத்த சோற்றுக் கட்டியுடன் பிளந்த காலுடைய நண்டுக்கறியையும் விருந்தோம்பலுக்குப் பயன்படுத்துவர்’ என்று சிறுபாணாற்றுப்படை கூறுகின்றது.

“எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு

தேமா மேனிச் சில்வளை ஆயமொடு

ஆமான் நாட்டின் அமைவரப் பெறுகுவீர்” (சிறு 175 – 177)

“சுவைப்பு மான் அரிசி அமலை வெண்சோறு

சுவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர்” (சிறு 194-195)

நமது நெஞ்சம் வலிக்கத்தக்தாக காதலர் பொருள் தேடச் சென்றுள்ளார். அப்பொருள் நாம் அனுபவிப்பதற்காக அல்ல, இல்லை என்று வருவோருக்குக் கொடுப்பதற்காகவே. ‘இரக்கமே என் காதலர்’ எனத் தலைவி தன் தோழிக்கு உரைக்கின்றாள். 


'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல் 

வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும் 

பொருளே காதலர் காதல்;

அருளே காதலர் என்றி, நீயே. (அகம் 53)

‘அறநெறியிலிருந்து நீங்காது இல்வாழ்க்கை நடத்துதலும் சுற்றத்தாரது பலவகையான துன்பங்களைத் தாங்குதலும் பசித்தவர்க்கு இல்லை என்று சொல்லாத உயர்ந்த பண்பையும்; தொல்தமிழர் பெற்றிருந்தனர்’ என முள்ளியூர்ப் பூதியார், அகநானூற்றில் குறிப்பிட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அன்பு கொண்ட தலைவனும் தலைவியும் விருந்தோம்புதலையும், சுற்றம் தழுவுதலையும், வலியோர் தம்துயர் துடைத்தலையும் தம்முடைய கடமைகளாகக் கொண்டிருந்தனர் என்னும் பண்பு தெரிகிறது.

பிறரிடம் கேட்பதைத் விடவும் கொடுப்பதே சிறந்தது என்ற உள்ளம் கொண்ட தலைவனும் தலைவியும் இல்லறத்திலிருந்து பிறர்க்கு ஈதலையே தம்நெறியாகக் கொண்டனர். தான் ஈட்டிய செல்வம், தனக்கு மட்டுமேயின்றி பிறரும் பயனடைய வேண்டும் என்று விரும்பினர். அதுவே தம் பிறவிப்பயன் என்றும் கருதினர், இதனை,


“இரப்போர் ஏந்து கை நிறைய, புரப்போர் 

…………………………………………………………

அரும் பொருள் வேட்டம் எண்ணி, கறுத்தோர்”…………… (அகம் 389 : 11-13)

என்று நக்கீரனார், பாலைத்திணையில் குறிப்பிடுகிறார். இல்லையென்று வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாத உயர்ந்த பண்பு இன்றைய தலைமுறையினருக்குப் பாடமாக அமைகின்றது. இத்தகைய நற்குணங்களைக் கொண்ட தலைவன் தலைவி தம் இல்லத்திலிருந்து சமுதாயக் கடன்களை ஆற்றியுள்ளமை போற்றுதலுக்குரியது.


மக்கட்பேறு:

குடும்ப வாழ்க்கை மக்கள் பேறின்றி முழுமையடைவதில்லை என்பது தமிழ் ஆன்றோர் கொள்கையாகும். வள்ளுவர் மக்கட் பேறு என்னும் தனித்துவமான அதிகாரத்தின் வழியே குடும்பப் பேறிள் சிறப்பினை அழகுறக் கூறியுள்ளார். 

பாண்டிய மன்னன் அறிவுடைநம்பி எழுதிய ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெறுகின்றது. 

“படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்

உடைப்பெருஞ் செல்வராயினும் இடைப்படக்

குறுகுறு நடந்து சிறு கை நீட்டி

இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்

மயக்குறு மக்களை இல்லோர்க்குப்

பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே"(புறம்-188)

"எல்லாச் செல்வங்களையும் பெற்று செல்வனாக இருப்பது பயனில்லை. பலரோடு விருந்துண்டு உறவாடுதலிலும் பயனில்லை. வீட்டில் இங்கும் அங்குமாக நடைபயிலும் குழந்தை கையை நீட்டும்; கலத்துணவைத் தரையில் தள்ளும். பிசைந்து வாயிலிட்டு,நெய்யுணவை உடலில் படுமாறு சிதறிவிடும். இவ்வாறு சிறுகுறும்பு செய்யும் மக்களை பெற்றிராதோரது வாழ்நாள் பயனற்றது என்கிறது இப்பாடல்.

ஐங்குநூறு என்ற இலக்கியத்தில் ஓர் அழகிய காட்சி. 

செவிலித்தாய் தலைவியும் தலைவனும் வாழும் வீட்டிற்குச் சென்றபொழுது, அவர்கள் மகனுடன் மகிழ்ச்சியாக ஒற்றுமையாக இருப்பதைப் பார்த்து மகிழ்கிறாள். திரும்பி வந்து தலைவியின் தாயிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள இவ்வாறு சொல்கிறாள். 


“மறி இடைப் படுத்த மான் பிணை போலப்

புதல்வன் நடுவணனாக நன்றும்

இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி

நீல் நிற வியல் அகம் கவைஇய

ஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே"

(ஐங். 401) 

மான் இணையின் இடையே படுத்திருக்கும் மான் போல மகன் நடுவில் படுத்திருக்க வெறுப்பின்றித் தலைவனும் தலைவியும் படுத்திருப்பது இனிமையிலும் இனிமையாய் இருக்கிறது. இக்காட்சி நீல நிறம் சூழப்பட்ட அகன்ற இவ்வுலகிலும் மறு உலகிலும் கிடைத்தற்கரியதாகும்.

குழந்தை பெற்ற தாய் இலக்கியங்களில் பல இடங்களிலும் பாராட்டப்படுகின்றாள். 

“மனைக்கு விளக்கம் மடவாள் மடவாள்

தனக்கு விளக்கம் தகைசால் புதல்வர்” என விளம்பிநாகனார் என்னும் புலவர் கூறுகின்றார். 

குடும்ப வாழ்வில் பெருவரமாகச் சங்கத் தமிழர் மகப்பேற்றைக் கருதினர். 

அக்காலச் சமூகத்தில் குடும்பம் வலுவானதோர் அங்கமாகவே கருதப்பட்டது. இக்குடும்ப அமைப்பில் மகளிருக்குக் கடமைகளும் கட்டுப்பாடுகளும் அதிகமாவே இருந்தன. ஆண்களின் அதிகார எல்லை பரந்து விரிந்திருந்தது. எனினும் சிறப்பான வாழ்க்கை முறைகளும் ஒழுக்கநெறிகளும் குடும்பங்களுக்கென வகுக்கப்பட்டிருந்தன.

சங்கத் தமிழரின் வாழ்வு இலக்கியங்கள் வாயிலாக உணரப்பட்டு போற்றப்படுவதற்கு அக்கால குடும்ப அமைப்பே முதன்மைக் காரணம் எனலாம். 


துணை நின்ற நூல்களும் இணையத்தளங்களும்:

தமிழர் நாகரிகமும் பண்பாடும் - முனைவர் அ. தட்சனாமூர்த்தி

சங்ககாலம் - முனைவர் கு. முத்துராசன். 

அகநானூறு

புறநானூறு

ஐங்குநூறு 

https://thoguppukal.wordpress.com/2011/03/15/விருந்தோம்பலின்-சிறப்பு
https://ta.wikipedia.org/wiki/அறிவுடை_நம்பி
http://thaenmaduratamil.blogspot.com/2014/04/ainkurunooru401.html






Sunday, May 29, 2022

தமிழர் மரபுரிமை - புரிதலும் பேணலும்

 தமிழர் மரபுரிமை - புரிதலும் பேணலும்

இன்றைய காலத்தில் மரபுரிமை என்ற சொல்லாட்சியைத் தமிழர் பெரிதும் கையாண்டு வருகின்றனர். குறிப்பாக ஈழத்தமிழர்களும் புலம்பெயர்ந்தோரும் இன்றைய தேவைகளுக்கு ஏற்ப இச்சொல்லை அதிகமாவே பயன்படுத்துகின்றனர். வாழும் சூழலும் காலமாற்றங்களுமே இச்சொல்லாட்சியின் பொருளையும் பயன்பாட்டையும் விரிவாக்கி விளக்கம் தருகின்றன எனலாம். 

மரபு உரிமை என்ற வேறுபட்ட பொருளைக் கொண்ட இவ்விரு சொற்களும் இணைக்கப்பட்டு, புதியதொரு சொல்லாட்சியில் தமிழர் கையாளத் தொடங்கிய காலம் கடந்த நூற்றாண்டாகவே இருக்க வேண்டும். 


Legacy என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக மரபுரிமை என்ற சொல்லை அகராதிகள் சுட்டுகின்றன. Heritage  என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக அகராதிகள் 'பாரம்பரியம்' என்பதைக் குறிப்பிடுகின்றன. 

இரு நூற்றாண்டுக்கு முற்பட்ட எந்தத் தமிழ் ஆக்கங்களிலும் மரபுரிமை என்ற சொல் பயன்பட்டதாகத் தெரியவில்லை. தமிழரிடையே ஏற்பட்ட ஆங்கில மொழித்தாக்கமும் மரபுரிமை என்ற சொல்லின் தோற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம்.

தமிழர் இயல்பான அன்றாட வாழ்வுடன் இணைந்து வெளிப்பட்டும் மறைந்தும் பின்பற்றப்பட்ட வந்த மரபுகள், வாழிடச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே, அவை பேணப்பட வேண்டும் என்ற தேவையை சமூகத்துக்கு ஏற்படுத்திருக்கக் கூடும். 

எடுத்துக்காட்டாக, பிறவினத்தோரின் பண்பாட்டு நடத்தைகள், தமிழினத்தோரிடையே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சூழலில், இனம் சார்ந்த தனித்துவமான மரபைப் பேணுதல் என்ற உணர்வு தோற்றம் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. 

பண்பாட்டுப் படையெடுப்புகள், பண்பாட்டுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் தோன்றும் நிலையில், காலங்காலமாகப் பின்பற்றி வந்த மரபை தமது உரிமையாகக் கருதி, அவற்றைப் பேண வேண்டும் என்ற விழிப்புணர்வை இனத்தோரிடையே ஏற்படுத்தும் நோக்கில் இது உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.

இன்றைய பொழுதுகளில் மரபுரிமை என்ற சொல், தமிழரின் மரபுகளை, அடையாளங்களைப் பேணிச் செல்லும் நோக்கில் எங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இச்சொல் பற்றிய தெளிவான புரிதலையும் அதைப் பேணிச்செல்லும் வழிவகைகளையும் கூற முனைகின்றது இந்தக் கட்டுரை. 

சொல் விளக்கம்: 

தமிழர் மரபுரிமை என்றால் என்ன? என்பதற்கு விடையாக, ~ஒரு தனித்துவமான இனக்குழுமானது கடந்த காலங்களில் தமக்கென உருவாக்கிக் கொண்டு, பின்பற்றியும் போற்றியும் வருகின்ற மரபுகள், மொழி, கட்டிடங்கள் என்பன இன்றும் நிலைத்து நிற்கும் நிலையில் அவை மரபுரிமை எனக் கருதப்படுகின்றன| என்ற விளக்கத்தை கேம்பிறிஜ் அகராதியை அடியொற்றிக் குறிப்பிடலாம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்ககழக வரலாற்றுத்துறை விரிவுரையாளர் ச. குமரதேவன் மரபுரிமை குறித்து பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 

'மரபுரிமை என்பது எமது முன்னைய சந்ததிகளில் இருந்து கொண்டுவரப்படுவதாகும். இது பாரம்பரியமாக முன்னோர்களால் வைத்திருக்கப்பட்ட உருவமற்ற சொத்து அல்லது கலை அல்லது சம்பிரதாயத்தால் கொண்டுவரப்படும் நடைமுறைகள், கட்டடங்கள், சமூகம் மற்றும் கலாசாரம் போன்றவற்றிற்கு முக்கியமாக கருதப்படும் வரலாறு, நம்பிக்கைகள் போன்றவற்றை குறிக்கும். இதனால் மரபுரிமை என்பது வரலாற்றுச் சூழலின் ஒரு உள்ளீட்டு அங்கமாக கொள்ளப்படும். ஆனால் இதனை ஒரு விடயமாக மட்டும் வரைவிலக்கணப்படுத்த முடியாது. இது பல்வேறு அம்சங்களின் தொகுப்பாகும். பண்பு, அடையாளம், கலாசார வேறுபாடு என்பன காலந்தோறும் கட்டியெழுப்பப்படும். இவற்றின் கலவை ஒரு இடத்தின் மரபுரிமையை உருவாக்க பயன்படும். பொதுவாக ஒரு நாட்டின் மரபுரிமையை கலாசார மற்றும் இயற்கை அம்சங்களைக் கொண்டு கலாசார மரபுரிமை, இயற்கை மரபுரிமை என இரண்டாக பிரிக்கலாம். இதில் கலாசார மரபுரிமை. கண்ணுக்கு புலப்படக்கூடிய, கண்ணுக்கு புலப்படாத இரு அம்சங்களைக் கொண்டு காணப்படுகின்றது. இது ஒரு குழு அல்லது சமூகத்தால் கடந்த காலத்தில் பின்பற்றப்பட்டதும் நிகழ்காலத்தில் தொடர்ந்து பராமரிக்கப்படுவதும், எதிர்காலத்தில் அடுத்த சந்ததியினரின் நலனுக்காக கொடுக்கப்பட வேண்டியவையுமாகும். இவ்வாய்வு கண்ணுக்கு புலப்படக்கூடிய யாழ்ப்பாணத்தில் உள்ள புராதன குடியிருப்பு மையங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமய வழிபாட்டு ஸ்தலங்கள், யாழ்ப்பாண இராசதானி கால கட்டடங்கள், ஐரோப்பியர் கால கோட்டைகள், ஐரோப்பியர் கால அரச நிர்வாக மையங்கள், வெளிச்ச வீடுகள் முதலான மரபுரிமைச் சின்னங்களை அடையாளப்படுத்தி, ஆவணப்படுத்தி, அதன் வரலாற்று முக்கியத்துவத்தினை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று, மரபுரிமைச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற சூழலை உருவாக்குவதாகும். இதன் மூலம் மரபுரிமைச் சின்னங்கள் அழிந்து போவது மக்களால் தடுக்கப்படுவதற்குரிய ஒரு சூழலை உருவாக்குவதுடன், அவற்றை பாதுகாப்பதன் மூலம் எமது எதிர்கால சந்ததியினருக்கு எமது மரபுரிமைச் சின்னங்களை ஒப்படைப்பதுமாகும்." 

இக்கூற்றானது, மரபுரிமை பற்றிய போதிய விளக்கத்தைத் தருவதாக அமைகின்றது. 

தொல்காப்பியத்தில் மரபு - உரிமை: 

பழம்பெரும் இலக்கணமான தொல்காப்பியம் மரபு, உரிமை என்ற இரண்டு சொற்களையுமே ஆழமான பொருளில் கையாண்டுள்ளது. 

மரபு என்றால் என்ன? என்பதற்கு 'மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல்" என்று தொல்காப்பியம் விளக்கம் தருகின்றது. அதாவது, மரபு என்பது மாற்றமுடியாத சிறப்பினை உடையது. மொழி முன்னோர் கூறிய மரபு வழியில் பேசப்படுகிறது. மரபுநிலை திரிந்தால் மொழி பலவாகச் சிதையும் என்பதே இதன் பொருளாகும். 

தொல்காப்பியரின் மரபு பற்றிய விளக்கம் மொழிப் பயன்பாடு சார்ந்ததேயாயினும் பிற்காலத்தில் அது தமிழரின் வாழ்வியற் கோட்பாடுகளை முன்னிறுத்தியும் பொருள் தருவதாயிற்று. 

பொதுவாகவே தமிழர் பேச்சுவழக்கில் மரத்தல் என்ற சொல்லைப் பயன்படுத்துவர். ‘கால் மரத்து விட்டது’ ‘கை மரத்து விட்டது’ என இன்றும் பலர் கூறுவதைக் கேட்கலாம். மரத்தல் என்றால் நிலைபெற்ற நிலை எனவும் பொருள் கொள்ளலாம். நிலைபெற்று நிற்கும் தாவரம் மரம் எனப்பட்டது. இதனடிப்படையிலேயே ஓரினத்தின் நிலைபெற்ற நடத்தைகளை மரபு என அழைக்கம் வழக்கம் தோன்றியிருக்கலாம் எனவும் கருதுவர்.

உரிமை என்ற சொல் மிகவும் தொன்மையானது. இச்சொல் பெரிதும் இலக்கணங்களில் கையாளப்பட்டுள்ளது. தொல்காப்பியர் சில இடங்களில் உடைமை என்ற பொருள்படக் கையாண்டிருக்கின்றார். 

'உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும்

ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்.." என்பது தொல்காப்பியர் கூற்று. 

இலக்கியங்கள் பெரிதும் கிழமை என்ற சொல்லையே  உடைமை என்ற பொருளில் கையாண்டிருக்கின்றன. 

தொன்மையான தமிழ்ச் சொற்களான மரபு, உரிமை இரண்டையும் இணைத்து மரபுரிமை என்ற சொல்லை ஆக்கியோர் நுட்பமாகவே சிந்தித்திருக்கின்றனர். 

பன்முகப் பண்பாட்டு வாழ்க்கைச் சூழலும் உலக மயமாதலும்  உலகெங்கும் வாழ்கின்ற ஒவ்வொரு இனத்தினதும் தனித்துவதான பண்பாட்டுச் சூழலுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் ~எமக்கான எமது மரபுரிமை| என்ற உரவொலியே (கோஷம்) மக்களுக்குள் ஓர் எழுச்சியை ஏற்படுத்துகின்றது. 

தமிழர் மரபின் தொன்மை:

இனங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்துவமாக வரலாறுகள் இருக்கின்றன. சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பு தோற்றம் கொண்ட இனங்களும் இருக்கின்றன. பலவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகிவிட்ட இனங்களும் இருக்கின்றன. 

பழமையானவற்றைப் பேணிச்செல்வதில் இவ்வுலகம் பெரும் ஈடுபாட்டை வெளிப்படுத்தி வருகின்றது. பழைய கட்டிடங்களையும் தாவரங்களையும் பேணுவதற்காகப் போராட்டங்களே நடைபெறுகின்றன. 

தமிழினத்தின் தொன்மை குறித்து அதிகம் எழுத வேண்டியதில்லை. உலகில் இதுவரை செம்மொழி தகுதி பெற்ற ஏழு மொழிகளில் தமிழும் ஒன்று. தமிழ்மொழிக்குத் தாய்மொழி இல்லை. இன்றும் அன்றாடப் பயன்பாட்டிலும் இலக்கியப் பயன்பாட்டிலும் சிறந்திருக்கும் மொழி. 

நீண்ட வரலாற்றையும் உயர்ந்த பண்பாட்டு மரபுகளையும் கொண்டிருக்கும் தமிழனம் உயர்வான வாழ்வியல் கொள்கைகளைக் கொண்டிருந்ததாகப் பிறவறிஞர் கூறுகின்றனர். அவ்வாறதொரு வாழ்வியல் கொள்கைகள் இல்லையெனில் திருக்குறள் என்ற மானுடப் பொதுமை மிக்க நூலை உருவாக்கியிருக்க முடியாது என்பது அவர்கள் கருத்து. 

பிறவினத்தோர் மற்றுமோர் இனத்துக்கான பெறுமானத்தை வழங்குவதில், அவ்வினத்தின் தொன்மையும் போற்றுதற்குரிய பண்பாட்டு நடத்தைகளும் சிறப்பிடம் பெறுகின்றன. வரலாறு அறிந்த பிறவினத்து அறிஞர் தமிழரைப் பெருமதிப்போடு நோக்குவது இயல்பு. 

பன்முகப் பண்பாட்டுச் சூழலில் வாழும் தமிழர், இனஞ்சார் தொன்மையும் மரபையும் பேணிச் செல்வதனூடாகப் பிறவினத்தோரின் நன்மதிப்பைப் பெற முடியும். எமது தனித்துவத்தையும் காத்துக்கொள்ள முடியும். 

புலம்பெயர்ந்தோர் சூழலில் மரபுகளும் பண்பாட்டு நடத்தைகளும்:

ஓரினத்தின் மரபுகளும் பண்பாட்டு நடத்தைகளும் வாழும் சூழலுக்கு ஏற்பவே வடிவமைக்கப்படுகின்றன. நிரந்தரமானதொரு நிலத்தில் வரலாற்றுக்காலம் தொட்டு வாழ்கின்ற இனம், அந்த நிலத்தின் அமைவுக்கும் தட்பவெப்ப சூழலுக்கும் ஏற்பவே வாழ்வை அமைத்துக் கொள்கின்றது. அந்த வாழ்விலிருந்தே மரபுகளும் பண்பாட்டு நடத்தைகளும் தோற்றம் கொள்கின்றன. 

இயற்கை, மற்றும் போர்ச் சூழல் காரணமான இடப்பெயர்வுக்கு உள்ளாகி, புதிய சூழலில் வாழத் தொடங்கும் இனம், வாழும் சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ள முற்படுகின்றது. இது தவிர்க்க முடியாத மாற்றமாகும். ஓரினமாது தமது தனித்துவத்தை ~மரபைப் பின்பற்றுதல்| என்ற இயக்கத்தின் மூலமே வெளிப்படுத்திப் பேணிச்செல்ல முடியும். 

இத்தன்மையைப் புலம்பெயர்ந்தோர் வாழ்வியலில் காண முடியும். 

தமிழர் பெரிதும் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் அனைத்தும் பன்முகப் பண்பாட்டுச் சூழலைக் கொண்டவையே. அந்நாடுகளில் குடியேறிய இனம் ஒவ்வொன்றும் தனித்துவமான பண்பாட்டு மரபுகளைக் கொண்டிருப்பது இயல்பு. பெரும்பாலன இனங்கள் குடியேறிய நாடுகளில் தமது மரபுகளைப் பேணிச்செல்வதில் முனைப்போடு செயற்படுகின்றன. யூதர், சீக்கியர், ஆர்மேனியர், சீனர், இஸ்லாமியர் போன்றோரை இதற்கு எடுத்துக்காட்டாகக் கருதலாம். 

புதிய பண்பாட்டு, வாழ்வியல் சூழல்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய, வடஅமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் குடியேறிய தமிழர்கள் தாயகத்துக் வெளியே தமக்கானதொரு தனித்துவமான வாழ்களத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனர். தொடக்கத்தில் அங்கு வாழும் பிறவினங்களோடு இணைந்து வாழ்வதிலும் தனித்துவமான பண்பாட்டு மரபுகளைப் பேணுவதிலும் பல சவால்களை எதிர்கொண்ட போதிலும் காலவோட்டத்தில் வலுவான சமூகமாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். 

தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்த முதல் தலைமுறையினர் பெரிதும் தாயக வாழ்வியல் நடத்தைகளையே பின்பற்றி வாழ்ந்திருந்தனர். அந்த வாழ்வில் இயல்பாகவே மரபும் பண்பாட்டு உணர்வுகளும் இணைந்திருந்தன. மரபைப் பேணுதல் வேண்டும் என்ற உணர்வு பெரியளவில் தலைதூக்கவில்லை எனலாம். 

இன்றைய காலத்தில் முதற் தலைமுறையினர் ஏறக்குறைய ஓய்வுக்கு வந்துவிடுகின்ற நிலையில், இளைய தலைமுறையினர் சமூகத்தில் முதன்மை பெற்று வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து மூன்றாம் தலைமுறையினர் இளையோராக வளர்ந்து வருகின்றனர். 

குடியேறிய நாடுகளில் பிறந்தும் அல்லது சிறிய வயதில் குடியேறியவர்களுமான இளையோர் பெரிதும் வாழும் நாடுகளுக்குரிய பொதுமைப் பண்பாட்டு வாழ்வியல் முறைமைகளை உள்வாங்கி வளர்வது இயல்பானதே. 

எனினும் பன்முகப் பண்பாட்டுச் சூழலில், ஓரினம் என்ற அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கும் ஒருமைப்பாடு மிக்க தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவதற்கும் மரபுகள்,  பண்பாட்டு நடத்தைகள் பின்பற்றப்படுவது மிக அவசியமாகும். 

மரபுகள், பண்பாடுகள் என்பவற்றைப் பின்பற்ற வேண்டும் என கூறிச் செல்வது அனைவருக்கும் எளிதானது. ஆனால் தமிழர் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைமுறைகளுக்கமைய மரபுகளைப் பேணிச் செல்வது மிகவும் கடினமானது. 

புலம்பெயர் நாடுகளில் வாழும் இளையோர், தமிழருக்கான மரபுகளையும் பண்பாட்டு நடத்தைகளையும் விட்டு விலகிச் செல்கின்றனர்| என்ற கூற்றை முன் வைப்பதற்கு முன், அவர்களைப் தமிழர் மரபுகளின் வழியே நடத்திச் செல்வதற்கு சமூகம் எடுத்த ஆக்கபூர்வமான முயற்சிகள் யாவை? எனக் கேட்பின், பொருத்தமான விடையை எவராலும்  கூற இயலாது. 

மரபியல் பண்பாட்டுக் கல்வி:

தமிழர் வாழும் நாடுகளில் அந்நாடுகளுக்குரிய தேசியப் பொதுமைப் பண்பாடு என்ற ஒரு பொதுமையான போக்கு காணப்படும். இந்தப் பொதுமைப் பண்பாடு அங்கு வாழும் அனைத்து இனங்களுக்கும் பொதுவானது. கிறிஸ்மஸ், ஆங்கிலப் புத்தாண்டு என்பன ஏறக்குறைய இந்தப் பொதுமைப் பண்பாட்டு இயக்கங்களுக்குள் உள்ளடங்கி விட்டன. பள்ளிகளிலும் பணியிடங்களிலும் இவ்வாறான பொதுமைப் பண்பாட்டு நடத்தைகள் தவிர்க்க முடியாதன. 

இவ்வாறான பொதுமைப் பண்பாட்டு நடத்தையை ஏற்றுக்கொண்டு வளரும் இளையோர், தமது இனஞ்சார்ந்த பண்பாட்டு நடத்தைகளைத் தமது சமூகத்திடமிருந்தே கற்றுக் கொள்ள வேண்டியவர்களாகின்றனர். சமூகக் கொண்டாட்டங்களிலும் வீட்டுச் சடங்குகளிலும் வெளிப்படும் மரபுசார் விடயங்கள், பண்பாட்டு நடத்தைகள் வாயிலாகவே இளையோர் பலவற்றைத் தெரிந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுகின்றன. இளையோர் மரபுகளையும் பண்பாட்டு நடத்தைகளையும் அறிந்து கொள்வதற்கு இந்த வாய்ப்பை மட்டுமே சமூகம் வழங்குகின்றது. 

இதேவேளை, இளையோரின் சூழலையும் சமூகம் தெரிந்து கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட சமூகக் கொண்டாட்டங்களில் பெரும்பாலான இளையோர் பங்குபற்றுவதில்லை. அனைத்து இளையோரும் வீட்டுச் சடங்குகளில் பெரிதும் ஈடுபாடு கொள்வதில்லை. பல இளையோர், சமூகத்தோரால் பின்பற்றப்படும் மரபுகளுக்கும் பண்பாட்டு நடத்தைகளுக்கும் விளக்கம் கேட்கின்றனர். போதிய விளக்கம் தாருங்கள், அவற்றைப் பின்பற்றுவது குறித்துச் சிந்திக்கின்றோம் என்கின்றனர். மரபுசார் செயற்பாடுகள் பற்றிய போதிய விளக்கங்கள் பெரியோர் பலருக்கும் இல்லை என்பதே உண்மை. 

இந்நிலையில்தான் மரபு, பண்பாடு சார்ந்து கட்டமைக்கப்பட்ட தனித்துவமான கல்வியின் தேவை ஏற்படுகின்றது. இக்கல்வியானது மொழிக்கல்வியில் இருந்து வேறுபட்டது. அதேவேளை மொழிக்கல்வியோடு இணைத்துக் கற்பிக்கப்பட வேண்டியது. 

குடியேறிய பல நாடுகளிலும் மொழிக்கல்வி தொடர்பாடல் தேவையை அடியொற்றியே கற்பிக்கப்படுகின்றது. அண்மைக்காலங்களில் ஏற்பட்டுவரும் கல்வித்திட்ட மாற்றங்களில் பண்பாட்டுக் கல்வி ஓரளவு இணைக்கப்பட்டிருந்தாலும் பண்பாட்டுக் கல்வி சார்ந்த தனித்துவமான கட்டமைப்புக்குரிய தேவை உருவாகி வருகின்றது. 

தமிழர் மரபியல், பண்பாட்டுக் கல்வியைத் திட்டமிடுவோர், புலம்பெயர் வாழ்வியலை நன்கு உள்வாங்கியவர்களாகவும் தமிழர் மரபியல், பண்பாடு சார்ந்து தெளிந்த அறிவைக் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். 

தாயகத்தில் பின்பற்றப்படும் மரபு, பண்பாடு செயற்பாடுகளை உள்ளதை உள்ளவாறே பிற சூழல்களில் பின்பற்ற முடியாது. வாழும் சூழலுக்கு ஏற்ப, சில செயற்பாடுகள் முற்றாகக் கைவிடப்பட வேண்டியிருக்கும். சிலவற்றில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருக்கும். சிலவற்றை உள்ளதை உள்ளவாறே பின்பற்றலாம். 

இவ்வாறான பண்பாட்டுக் கல்வியும் வாழிட மொழியில் எழுதப்பட்ட ஒரு பண்பாட்டுக் கையேடும் காலத்தின் தேவை என்பதைப் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் அறிந்திருத்தல் வேண்டும். 

முன்னர் ஒருதடவை குறிப்பிட்டதைப் போன்று, தமிழர் மொழிவழிப்பட்ட இனத்தோர் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். தமிழர் தன்னாட்சி அரசு என்ற ஆளுமையான தளத்தையோ, மதவழிப்பட்ட இனம் என்ற வலுவான தளத்தையோ கொண்டிருக்கவில்லை. உலகெங்கும் பரந்து வாழும் 80 மில்லியன் வரையான தமிழ்மக்கள் மொழியென்ற ஒற்றை இழையால் மட்டுமே தமிழர் பிணிக்கப்பட்டிருக்கின்றனர். 

எனவேதான் மொழி சார்ந்த பண்பாட்டுக் கல்வியானது தனித்துவத் துறையாகத் தோற்றம் கொண்டு பேணப்பட வேண்டும் என்ற கருதுகோளை இக்கட்டுரை முன்வைக்கின்றது. 

பெயர்வுச் சமூகத்தில் (Diapora) மரபுரிமையின் முதன்மை: 

இக்கட்டுரையின் தொடக்கத்திலேயே மரபுரிமை பற்றிய தெளிவான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. மரபுரிமை சொல்லின் ஆழமான பொருளை உணர்ந்து பயன்படுத்த வேண்டிய தேவைகளை அதிகமாகக் கொண்டுள்ள சமூகம் இதுவாகும். 

பெயர்வுப்புலத்தில் தனித்துவமான இருப்பைப் புலப்படுத்துவதற்கும் தம்மை நிலைநிறுத்துவதற்கும் மரபுப் பேணல் அவசியமாகின்றது என்பதை பெயர்வுச் சமூகம் உணர்ந்து வருகின்றது. 

பல்லினச் சமூகச் சூழல் கொண்ட வாழ்புலத்தில் ஒரு பொதுமைப் பண்பாடு நிலவும் என்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தோம். பள்ளிகளிலும் வேலைத்தலங்களிலும் பெரிதும் ஆளுமை செலுத்தும் இப்பொதுமைப் பண்பாடு, தன்னினப் பண்பாடு மீது ஈர்ப்பு இல்லாதவர்களை எளிதாகவே ஆட்கொண்டுவிடுகின்றது. 

பொதுவாக நம்மவர்களால் மேற்கத்தைய நாகரிகம் என அழைக்கப்படுகின்ற இப் பொதுமைப் பண்பாடு, நடை, உடை, நடத்தை, பழக்கவழக்கங்கள் சிந்தனைகள் என்பவற்றில் எல்லா இனங்களுக்கும் பொதுவான தனித்துவங்களைக் கொண்டிருக்கும். 

எடுத்துக்காட்டாக, விருந்து, திருமண வரவேற்பு நிகழ்வுகளில் ஆண், பெண் ஒன்றாக இணைந்து ஆடுவதைக் குறிப்பிடலாம். னுயவiபெஇ டiஎiபெ வழபநவாநச என்று சொல்லப்படுகின்ற நடத்தைகளெல்லாம் இப் பொதுமைப் பண்பாட்டுக்குரியதே. 

ஒவ்வொரு இனங்களிலும் தன்னினம் சார்ந்த மரபு, பண்பாடு என்பவற்றில் விருப்பு இல்லாதவர்களைக் காணலாம். இவ்வாறானோர் பொதுமைப் பண்பாட்டு நடத்தைகளே தமது பண்பாடாகக் கருதி வாழத் தலைப்படுகின்றனர். 

தமிழ்ச் சமூகத்தின் இளையோர் பலரும் இவ்வாறான பொதுமைப் பண்பாட்டு நடத்தைகளையே தமது பண்பாட்டுத் தளமாகக் கருதத் தொடங்கியுள்ளனர். இளையோர் மட்டுமல்ல, குறிப்பிடத்தக்கவளவு பெரியோரும் முற்றுமுழுதான ஆங்கிலச் சூழலுக்குள் தம்மைக் கட்டமைத்து, தமிழியற் செயற்பாடுகளில் இருந்து முற்றும் விலகி வாழ்ந்து வருகின்றனர். 

தனித்துவமான மரபுகளையும் பண்பாடுகளையும் பேணுவதில் பெரும் சவால்களைக் கொண்டதான இந்த வாழ்புலத்தில், பொதுமைப் பண்பாட்டுக்குள் தொலைந்து காணாமல் போவோர் பல இனங்களிலும் இருக்கின்றனர். 

எனினும் இந்தப் பெயர்வுப்புலத்தில் வேர்களைத் தேடுதல் என்ற ஒரு பொது மரபும் இருக்கின்றது. பெற்றோரால் அடையாளங்களைத் தொலைத்த இளையோர் பலர் தீவிரமாகவே தமது வேர்களைக் கண்டறிந்து, தான் சார்ந்த இனத்தோடு இணைந்து செயற்படுவதையும் இங்கு காணக்கூடியதாக உள்ளது. 

தன்னினம் சார்ந்த மரபுகளிலும் பண்பாட்டு நடத்தைகளிலும் ஈர்ப்பு ஏற்படாமையே பொதுமைப் பண்பாட்டு நடத்தைகளைப் பலர் முழுமையாக உள்வாங்கக் காரணம் என்பதை பெயர்வுத் தமிழச்சமூகம் ஏற்றுக்கொண்டாகவேண்டும். 

நான் தமிழ்ப் பண்பாட்டை வெறுக்கின்றேன் எனக் கூறிய இளம் பெண் அதற்குக் கூறிய காரணம், 'எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் என் அப்பாவும் அம்மாவும் நாள்தோறும் கெட்ட வார்த்தைகளைப் பேசி சண்டை பிடித்துக்கொண்டிருப்பார்கள். இடையே வந்துபோகும் உறவினர்களும் அவ்வாறே சண்டை பிடிப்பார்கள். என்னைக் கவனிக்க யாரும் இல்லை. இதனால் எனக்குத் தமிழர் என்றாலே பிடிக்கவில்லை" என்றாள். 

இவை போன்ற (தாயகத்தில் பொதுவாக நிகழும்) பல சமூகக் குறைபாடுகள் இளையோரைப் பாதிக்கின்றன. சமூகத்தின் நடத்தைகளைப் பொதுமைப் பண்பாட்டுடன் ஒப்பிட்டு, இனஞ்சார் நடத்தைகளைக் தாழ்வாக மதிப்பிடும் போக்கு இயல்பாகவே எங்கும் காணப்படுகின்றது. 

ஆங்கியேர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர் வெளிப்படுத்திய மேற்குலகப் பண்பாட்டு நடத்தைகளைப் போற்றிய மனோபாவத்தில் இருந்து விடுபடாத பெற்றோரும் தமிழர் பண்பாட்டு விழுமியங்களைப் போற்றத் தவறுகின்றனர். 

தமிழர் பின்பற்றிவரும் பல பண்பாடுசார் நடத்தைகளுக்கும் சடங்களுக்குமான போதிய விளக்கங்கள் இளையோருக்கு இல்லை. எடுத்துக்காட்டாக ஏன் நிறைகுடம் வைக்க வேண்டும் என ஒரு இளையவர் கேட்டால் அதற்கான விளக்கத்தைத் திருத்தமாக வழங்க எல்லோராலும் முடிவதில்லை. பொருத்தமான விளக்கங்கள் கிடைக்காதவிடத்து இளையோர் இனஞ்சார்ந்த பண்பாட்டு நடத்தைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்குவர். 

ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, தமிழர் சிறப்பான பண்பாட்டு நெறிகளைக் கொண்டுள்ளனர் என்ற போதிலும் பெயர்வுப்புலத்திற்கேற்பத் தமிழர் தமது மரபுசார் இயங்கங்களையும் பண்பாட்டு நடத்தைகளையும் வடிவமைத்துக் கற்கைக்குரிய நெறியாகவே சமூகத்தோருக்குப் புகட்ட வேண்டிய தேவையைச் சமூகம் நன்குணர வேண்டும். 

இவ்வாறான வாழ்களச் சூழலில் குறிப்பிட்ட இளையோர், இனஞ்சார் மரபுகளையும் பண்பாட்டு செல்நெறிகளையும் உள்வாங்கிப் பின்பற்றுவதுடன், அவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் செயற்பட்டு வருகின்றனர். 

தமிழ்ச்சமூகமானது, மேற்குறிப்பிட்ட சவால்களை வெற்றி கொண்டு வாழும் மண்ணில் மரபுரிமையை நிலைநிறுத்துவதற்கான வழிவகைகளைக் கண்டறிதலே தற்போதைய தலையாய பொறுப்பு. தமிழர் மரபுகளை உறுதியுடன் பேணுவதோடு, அதை ஒவ்வொரு தலைமுறைக்கும் ஊட்டிச்செல்லும் வலுவான சமூகக் கட்டமைப்பையும் உருவாக்குதல் வேண்டும். அடையாளங்களைப் பேணும் நோக்கிலான தொடர் செயற்பாடுகள் இடையறாது நடைபெற வலுவான இயங்குதளங்கள் உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய செயற்பாடுகளே எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்வதற்கும் இறுக்கமான சமூகப் பிணைப்புகளைப் பேணுவதற்கும் அவசியமானவை. 

இச்செயற்பாட்டுக்கு வலிமை செய்யும் வகையில் கனடா அரசு தைத்திங்களைத் தமிழருக்கான மரபுரிமைத் திங்களாக அங்கீகரித்துள்ளமை சிறப்புக்குரியது. 

தமிழர் மரபுரிமைத் திங்கள்:

பெயர்வுத் தமிழச்சமூகம் வாழும் நாடுகளில் அதிக தமிழர்களைக் கொண்ட நாடாகக் கனடா  திகழ்கின்றது. கனடாவின் பன்முகப் பண்பாட்டுக் கொள்கைகளுக்கு ஏற்ப, பலருடைய முயற்சியாலும் தைத்திங்கள் தமிழரின் மரபுரிமைத் திங்களாக அரச நிர்வாக அலகுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

மரபுத்திங்களை முன்னிட்டு, பல அமைப்புகளும் நிறுவனங்களும் பல நிகழ்வுகளையும் ஒன்றுகூடல்களையும் நடத்துகின்றன. சில நிகழ்வுகளும் செயற்பாடுகளும் காத்திரமான பயன்களைத் தருகின்றன என்ற போதிலும் பல நிகழ்வுகள் ஆடலும் பாடலுமாக வழமையான கலைநிகழ்வுகளைப் போலவே நடந்தேறி விடுகின்றன. 

மரபுரிமை நிகழ்வுகளி;ன நோக்கம் பெரிதும் மரப்புப் பேணல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவே இருத்தல் வேண்டும். அமைப்புகளும் விழா ஏற்பாட்டாளர்களும் கீழ்க்காணும் விடயங்களைக் கவனத்திற் கொள்ளுதல் சிறப்பாக இருக்கும். 

மரபுரிமை விழிப்புணர்வுச் செயற்பாடுகளை மூன்று தளங்களாக வகுக்கலாம்.

 

1. இளையோருக்கு விழிப்புணர்வுவை ஏற்படுத்துதல்

2. பிறனத்தோருக்கு உணர்த்துதல்

3. இனஞ்சார் செயற்பாடுகளை வடிவமைத்தல்

இளையோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பில் பின்வரும் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். 

இளையோரிடையே மொழி, பண்பாடு, கலை போன்ற  இனஞ் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகளை நடத்துதல்

மொழி, கலை, பண்பாடு, இனம் சார்ந்த செயற்பாட்டுக் களங்களை இளையோருக்கு உருவாக்கிக் கொடுத்தல்.

செயற்படும் மாணவர்களுக்கு ஊக்கம் வழங்கி வழிகாட்டி இயக்கிச் செல்லுதல்

இளையோருக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நடத்துதல். 

உலகலாவிய இளையோர் அமைப்புகளை எதிர்கால இருப்புநோக்கி ஒருங்கிணைத்தல். 

இளையோரிடையே தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தி, இனஞ்சார்ந்து பணியாற்றத் தூண்டுதல். 

பிறவினத்தோருக்கு உணர்த்துதல்: 

நாம் பல நாடுகளிலும் பிறவினங்களோடு இணைந்தே வாழ்கின்றோம். எமது பண்பாடு, மொழி, கலை தொடர்பில் பிறவினத்தோருக்குப் பெருமதிப்பை ஏற்படுத்த வேண்டியது எமது பொறுப்பாகும். 

பிறவினத்தோர் எம்மினம் குறித்து உயர்வான எண்ணத்தைக் கொண்டிருக்கும் நிலையில், நாம் புலம்பெயர மண்ணில் எம்மைச் சிறப்பாக நிலைநிறுத்த முடியும். ஓரினம் கொண்டிருக்க வேண்டிய அனைத்துச் சிறப்புகளும் எமக்கு உண்டு. அதைத் திட்டமிட்டுப் பிறவினத்தோரிடையே எடுத்துச்செல்ல வேண்டும்.

பள்ளிகளில், வேலைத்தலங்களில், பொதுஅமைப்புகளில் அங்கம்பெறும் தமிழர்கள் மரபுரிமை மாதத்தைப் பயன்படுத்தி இந்தப் பணிகளைச் செய்ய வேண்டும். 

இனஞ்சார் செயற்பாடுகளை வடிவமைத்தல்:

நாம் அன்றாட நடத்தைகளில் பின்பற்றிச் செல்ல வேண்டிய பல பண்புகளை இழந்து செல்கின்றோம். எமது விழாக்கள், சடங்குகள் என்பன பண்பாட்டுத்தளங்களை விட்டு, விலகிச் செல்கின்றன.

கலை வகுப்புகளில் ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு என்பன இடம்பிடிக்கின்றன. சடங்குகளில் இந்திப் பாடல்கள் தாராளமாக இடம் பிடிக்கின்றன. ஆடை முறைமைகள் வடநாட்டைத் தழுவிச் செல்கின்றன.

தமிழர்கள் மட்டுமே கூடும் அரங்குகளில் நிகழ்ச்சித் தொகுப்பு ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறுகின்றது. தமிழ்,பண்பாட்டு வகுப்புகளுக்கு மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.

மரபுகள் பண்பாடுகள் பற்றிய பிரக்ஞை ஏதுமின்றி, தான்தோன்றித்தனமாக எதுவும் செய்யலாம், எதையும் மாற்றியமைக்கலாம் என்ற போக்கு இயல்பாகவே தமிழர் பலரிடமும் இருக்கின்றது. இதனாலேயே பொதுமைப் பண்பாட்டு நடத்தைகளும் வடஇந்தியப் பண்பாட்டு நடத்தைகளும் தமிழர் பண்பாடுகளுக்குள் எளிதாகக் கலந்துவிடுகின்றன. 

இந்தப் பெயர்புலங்களில் தமிழர் பின்பற்ற வேண்டிய மரபுகள், பண்பாட்டு நடத்தைகள் என்பன தீர்க்கமாக வரையறுக்கப்பட்டு கையேடாக வழங்கப்பட வேண்டும். 

ஆடை, அணிகலன், ஒப்பனை தொடர்பில் தமிழர் மரபியல் அழகின் வெளிப்பாடாக அமைதல் நன்று. 

பெரிதும் தமிழர் கலந்துகொள்ளும் நிகழ்வில் நிகழ்வுகளும் நிகழ்வுத் தொகுப்பும் தமிழ்மொழியிலேயே இருத்தல் வேண்டும். 

தமிழ்மொழிக்கல்வி எங்கும் ஊக்குவிக்கப்பட வேண்டும். 

தமிழருக்கிடையேயான தொடர்பாடலில் பெரிதும் தமிழ்மொழியே பயன்படுத்தப்பட வேண்டும். 

தாயக உறவுகளுடன் இளையோருக்குத் தொடர்புகளை ஏற்படுத்தி அதைப் பேணல் வேண்டும்.


இவை போன்ற எளிதான முயற்சிகளை அனைவரும் மேற்கொண்டாலே இனஞ்சார்ந்த இருப்புகளுக்கு வலுச் சேர்க்க முடியும். இளையோரிடையும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இவ்வாறான சமூக ஈடுபாடு கொண்ட செயற்பாடுகளைப் பலர் செய்து வருகின்றனர். 

 முடிவுரை

கனடாவில் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர் மரபுரிமை விழிப்புணர்வு நிகழ்வுகள், பெயர்வுப் புலங்கள் யாவற்றிலும் முன்னெடுக்கப்படும் நிலை உருவாக வேண்டும். தைத்திங்களில் உலகெங்கும் இவ்வாறான மரபுரிமை விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுமாயின் அது உலகத் தமிழரிடையே இனவுணர்வு தொடர்பில் பேரெழுச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.  

தமிழினம் மொழிவழி நின்று, மரபுகள், பண்பாடுகள் வாயிலாவே தம்மை ஓரினமாகக் கட்டமைத்திருக்கின்றது. மதவழி, தன்னாட்சிக் கட்டமைப்புகளை விட இக்கட்டமைப்பு வலிமை குறைந்தது. அடையாளங்களைப் பேணிச்செல்வதில் பெரும் சவால்களையும் இடர்களையும் எதிர்கொள்ளக் கூடியது. 

வலிமையான செயற்பாட்டுத்தளமும் இனவொருமையும் இருந்தால் மட்டுமே நாம் எமது மரபுரிமைகளைக் காலாகாலத்துக்கும் பேணிச்செல்ல முடியும். 


பொன்னையா விவேகானந்தன் 

விரிவுரையாளர் - ரொரண்ரோ பல்கலைக்கழகம் 


 






 


Monday, May 16, 2022

புலம்பெயர் தமிழர்களின் தாய்மொழிக்கல்வியும் பண்பாட்டு மொழியும்

 புலம்பெயர் தமிழர்களின் தாய்மொழிக்கல்வியும் பண்பாட்டு மொழியும்

முன்னுரை:

பண்டைய இலக்கியங்கள் தமிழர் வாழ்வை நிலம், காலம் முதற்பொருட்களுக்கமைய ஐந்தாக வகுத்திருந்தன. இந்தப் பகுப்பின் அடிப்படையில் இன்றைய தமிழர் வாழ்வை உற்றுநோக்கின் புதியதும் ஆறாவதுமான ஒரு வாழ்வியல்தளத்தை நாம் அடையாளம் காண முடியும். 

குறிப்பாகப் பெருமளவில் இலங்கையில் இருந்து பெயர்ந்த தமிழர்கள் ஐரோப்பா, வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியேறி, அங்கு நிரந்தரமான வாழ்வுத்தளத்ததை கட்டமைத்துள்ளனர். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர்தான் இக்கட்டமைப்புச் சூழல் அடையாளம் காணுமளவுக்கு வளர்ச்சிபெற்றிருந்தது. இத்தளத்தின் வழியே ஒரு புதிய தலைமுறைத் தொடர்ச்சி குடியேறிய நாடுகளில் ஏற்படத் தொடங்கிவிட்டது. தாயக வாழ்வியல் நெறிகளில் இருந்து பெரிதும் மாறுபட்ட பண்புகளைக் கொண்டதான இத்தமிழ்ச் சமூகத்தையே ஆறாம்திணை எனச் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். இச்சமூகம் ‘புலம்பெயர் தமிழச் சமூகம் எனத் தமிழிலும் (Diaspora Tamil) என ஆங்கிலத்திலும் குறிக்கப்படுகின்றது. 

இச்சமூகத்தின் இன்றியமையாத தேவைகளில் முதன்மையானதான தாய்மொழிக்கல்வி பற்றியும் அதன் வழியே பண்பாட்டு மொழி என்ற நோக்கில் பண்பாட்டுக்கல்வி குறித்தும் இக்கட்டுரை சுருக்கமாக ஆய்வு செய்வதாக அமைகின்றது.

தாய்மொழிக் கல்வியின் தேவையும் தோற்றமும் 

பெயர்வுத் தமிழர்கள் வாழும் நாடுகள் ஒவ்வொன்றும் தனித்துவமான தேசியப் பண்பாட்டைக் கொண்டிருந்தன. இ;ந்தத் தேசியப் பண்பாட்டு ஓட்டத்துடன் இணைய வேண்டிய அழுத்தம் இயல்பாகவே  அங்கு குடியேறும் ஒவ்வொரு இனத்துக்கும் உண்டு. குறிப்பாக, அந்நாடுகளில் பிறந்து வளரும் தமிழ்ப் பிள்ளைகள் வாழிட நாடுகளுக்கான தேசியப் பண்பாட்டை ஒட்டியே வளர்ந்து வருவர். இந்நிலையில் தாய்மொழியையும் பண்பாட்டு மரபுகளையும் வரலாற்றையும் கல்;வி வாயிலாகவே பெயர்வுத் தமிழர்களின் புதிய தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் வழியே தமிழ்மொழிக்கல்வியின் தேவையை உணர்ந்த பெயர்வுத்தமிழர்கள் வலுவான தாய்மொழிக்கல்விக் கட்டமைப்புகளை உருவாக்கத் தலைப்பட்டனர். 

புலம்பெயர்ந்தோர் சமூகச் சூழலில் தமிழ்க்கல்வியின் தோற்றம் ஏறக்குறைய கால் நூற்றாண்டைக் கடந்துவிட்டது. இந்தக் கால் நூற்றாண்டில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. தொடக்ககாலத் தமிழ்ச் சமூகத்தின் உளப்பாங்கு இப்போது இல்லை. வாழும் நாட்டுக்குரிய பண்பாட்டு வடிவங்களை உள்வாங்கிய தலைமுறையினர் தலையெடுத்து விட்டனர். பொருளாதார வளங்களும் வேறு தளத்துக்குச் சென்றுவிட்டன. சமூகத்தவரின் அடிப்படைச் சிந்தனைகளும் தேடல்களும் மாற்றங்களை நோக்கிச் செல்கின்றன. 

பெயர்வுத்தமிழர்கள் முன்னெடுத்துவரும் தாய்மொழிக்கல்வி, அடையாளம் சார்ந்த இருப்பைப் பேணுவதில் பெரும்பங்கு வகிக்க வேண்டியதொன்றாகும். இக்கல்வியின் தேவை குறித்தும் எதிர்ப்படும் சவால்கள் பற்றியும் சற்றே விரிவாக ஆராய்கின்றது இக்கட்டுரை.

தாய்மொழியை இரண்டாம் நிலையில் கற்கும் சூழலின் தோற்றம்:

‘தாய்மொழியைப் பாரம்பரிய மொழியாக முதல் மொழிக்கு அடுத்த நிலையில் கற்றல்’ என்னும் சூழலின் தோற்றம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே அவதானத்துக்குரியதாக உருக்கொண்டதெனலாம். இக்கல்விச் சூழல் தோற்றம் கொண்டதற்கான பின்புலத்தை நாம் அறிந்திருத்தல் இக்கட்டுரையை முழுமையாக விளங்கிக்கொள்ள உதவும். 

ஐரோப்பியரது ஆட்சிக்காலத்தில் வேலை வாய்ப்புகளுக்காக அவர்களது ஆட்சிக்குட்பட்டிருந்த பிறநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டோர் இருவகையினராவர். கூலித்தொழிலாளிகளாகக் கொண்டு செல்லப்பட்டோர் ஒருவகை. கல்விப் பின்புலம் சார்ந்து தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்றோர் மறுவகை. இத்தகையோரும் அந்தந்த நாடுகளில் நிரந்தரமாகத் தங்கிவிட்டனர். 

விடுதலைக்குப் பின்னரும் கல்வி தொழில் வாய்ப்புகளுக்காக வளர்ச்சியுற்ற நாடுகளுக்குச் செல்வோரும் இருந்தனர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உள்நாட்டு யுத்தங்கள், இயற்கைப் பேரழிவுகள் காரணமாக அகதிகள் என்ற பகுப்பில் கணிசமானோர் ஐரோப்பிய, வடஅமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் குடியேறினர். இத்தகையோரும் குடியேறிய நாடுகளில் நிரந்தரமாகத் தம் வாழ்வை அமைத்துக்கொண்டனர். 

இவ்வாறு குடியேறியோர் தமது முதற் தலைமுறைக் காலத்தில் தாய்மொழியிலேயே பெரிதும் தமது தொடர்பாடலைக் கொண்டிருந்தனர். அவர்களது சிந்தனா மொழியாகவும் தாய்மொழியே இருந்தது. 

மொழியாலும் பண்பாட்டாலும் பழக்கவழக்கங்களாலும் முற்றிலும் மாறுபட்ட ஒரு புலத்தில் வாழத்தலைப்பட்ட ஓரினத்தினுடைய தனித்துவ இயல்புகளில் மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். 

குடியேறியோரது இரண்டாம் தலைமுறையே இவ்வாறான மாற்றங்களை பெரிதும் வெளிப்படுத்துவோராக இருந்தனர். குடும்பம் என்ற சிறு வட்டத்துக்கு அப்பால் இரண்டாம் தலைமுறையினரின் சமூக மொழியாகவும் தொடர்பாடல் மொழியாகவும் அந்தந்த நாடுகளுக்குரிய மொழியே ஆதிக்கம் பெற்றுச் சிந்தனா மொழியாகவும் திகழ்ந்தது. அவர்களது தாய்மொழி இரண்டாம் மொழி என்னும் நிலையை அடைந்தது. 

இந்நிலையில்தான் முதல்மொழியை அடுத்து, தாய்மொழியை பாரம்பரிய மொழியாக இரண்டாம் நிலையில் கற்கும் சூழல் தோற்றம் கொண்டது. இச்சூழல் தமிழருக்கு மட்டும் உரியதன்று. ஆசிய, ஆபிரிக்க தென்னமெரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தோருக்கும் பொருந்தும். 

தமிழ்மொழி இரண்டாம் நிலையில் கற்பிக்கப்படும் நாடுகள்: 

ஒரு நூற்றாண்டுக்கு முன்னேரே தாயகங்களை விட்டுப் புலம்பெயர்ந்தோரில் தமிழரும் அடங்குவர். பதினெட்டாம் நூற்றாண்டிலேயே தமிழர் பெயர்வுகள் தொடங்கிவிட்டன. ஆங்கிலேயர் தமிழரைக் கூட்டங்கூட்டமாகக்  கரிபியன் தீவுகள், லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா, பிஜி தீவுகள், சிங்கப்பூர், மலேசியா, மொறிசியஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்றனர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே கல்வி, தொழில் போன்றவற்றோடு அகதிகள் என்ற வகையிலும் ஐரோப்பா, வடஅமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற கண்டங்களில் தமிழர் குடியேறினர். பிரஞ்சு நாட்டின் ஆளுகைக்குட்பட்டிருந்த பாண்டிச்சேரியில் இருந்தும் தமிழர் கணிசமான தமிழர் பிரஞ்சு நாட்டில் குடியேறியிருந்தனர்.

 இன்றைய காலத்தில் கரிபியன் தீவுகளிலும்  கயானா, ட்ரினிடாட், ரியூனியன், பிஜி போன்ற நாடுகளிலும் வாழ்வோர் பெரிதும் தமிழருக்கான அடையாளங்களை இழந்துவிட்டனர். தாய்மொழி எதுவெனத் தெரியாதோராகவே பலரும் வாழ்கின்றனர். அவர்களது மொழி ஆங்கிலம் அல்லது ஸ்பானிய மொழியாகவே மாறிவிட்டது. 

தமிழர் குடியேறிய பிற பகுதிகளான ஐரோப்பா, வடஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா கண்டங்களிலும்  மொறிசியஸ் பர்மா போன்ற நாடுகளிலும் தாய்மொழியை இரண்டாம் மொழியாகக் கற்கும் சூழல் தற்போது வலுவாகத் தோற்றம் கொண்டுள்ளது. 

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழ் இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்பட்டாலும் முதல்மொழி என்னும் தகுதியை அது இன்னும் இழந்துவிடவில்லை எனலாம். சமூகமொழியாகவும் தொடர்பாடல் மொழியாகவும் தமிழ் இப்போதும் அங்கு நிலைத்துள்ளது. இவ்விரு நாடுகளும் தாயகத்தோடு நெருக்கமான தொடர்பைக் கொண்டிருப்பதனால் தமிழ்மொழி பயன்பாட்டுச் சூழல் எளிதில் மாற்றமடைய வாய்ப்பில்லை. 

தமிழ்மொழி இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்படும் நாடுகளான ஐரோப்பா, வடஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா போன்றவற்றினது கல்விச் சூழலே இக்கட்டுரைக்குக் தளமாக அமைகின்றது. 

தமிழ்மொழி இரண்டாம் நிலையில் கற்பிக்கப்படும் சூழலைப் புரிந்து கொள்ளல்: 

உள்நாட்டுப் போர் காரணமாகப் பெருமளவில் தமிழர் புலம்பெயர்வதற்கு முன்பாகவே குறிப்பிடத்தக்க தமிழர் ஐரோப்பா, வடஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்காப் பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். இவர்களில் சிலர் தமது பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்க முனைந்தனர். தொடக்கத்தில் வீடுகளில்; தமிழ்ப் பெற்றோர் அல்லது தமிழ் மொழியறிவு கொண்டோரால் தமிழ் கற்பிக்கப்பட்டது. 1980க்கு பின் ஈழத்தமிழர் பெருமளவில் வெளிநாடுகளை நோக்கிப் புலம்பெயரத் தொடங்கினர். தொடக்கத்தில் பெரிதும் இளைஞர்களே புலம்பெயர்ந்திருந்தனர். 80களின் கடைசியில்தான் கணிசமான அளவில் குடும்ப வாழ்க்கைச் சூழல் தோற்றம் கொண்டது. புதிய இளந்தலைமுறையில் தோற்றம் அவதானிக்கப்பட்டது. இதன் விளைவாகத் தமிழ் கற்பித்தல் செயற்பாடுகள் முனைப்புப் பெறத் தொடங்கின.

ஐரோப்பா, வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா கண்டத்திலும் கனடாவிலும் தாய்மொழிக் கல்விச் செயற்பாடுகள் 1990க்குப் பின் நிறுவனமயப்படுத்தப்பட்டன. இதன் பின்பே இக்கல்விச் சூழல் பற்றிய விழிப்புணர்வு தமிழ்ச்சமூகத்தவருக்கு ஏற்பட்டது.  

இக்கருத்துக்கு ஆபிரிக்கா விதிவிலக்காகும். ஆபிரிக்கத் தமிழர் 150 ஆண்டுகளுக்கு மேலாக ஆபிரிக்காவில் வலுவான சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். தாய்மொழியாக இரண்டாம் மொழியை கற்பிக்கும் சூழல் அங்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே உருவாகிவிட்டது. ஆபிரிக்காவில் குடியேறியோர் பலரும் கற்றறிந்தோர் என்பதனால் இனஞ்சார் அடையாளங்கள் பெரிதும் அங்கு பேணப்பட்டன. அதன் தொடர்ச்சியை இன்றும் அங்கு காணலாம். 

இப்புதிய கல்விச் சூழலானது, தாயகத்தின் மொழி கற்பித்தல் முறைகளிலிருந்து பெரிதும் மாறுபட்டது என்பதை அடிப்படையில் புரிந்து கொள்ளுதல் வேண்டும். 

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தோர் வீட்டில் பேச்சு மொழியாகத் தமிழைப் புரிந்து கொள்பவராகவும் சிலவேளை ஓரளவு அல்லது சில சொற்கள் பேசவும் தெரிந்திருப்பர். இவர்களுடைய தொடர்பாடலும் சிந்தனையும் கல்வி மொழியும் அந்நாட்டிற்குரிய மொழி வழியாகவே நடைபெறும். இந்த மொழியே இவர்களது முதல் மொழியாகும்.  இந்நிலையில் தாய்மொழியான தமிழை இரண்டாம் நிலையில் கற்பர். 

இவ்வாறானோர் தமிழைக் கற்கும்போது அந்நாட்டுக்குரிய மொழியோடு ஒப்பிட்டே கற்பர். அந்நாட்டுக்குரிய கற்பித்தல் முறைகளையும் வகுப்பறைச் சூழலையும் தமிழ் மொழி கற்பித்தல் சூழலோடு ஒப்பிடுவர். 

இந்நாடுகளில் தாய்மொழி கற்றலில் அந்நாடுகளுக்குரிய கல்விச் சூழல் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இச்சூழலில் தாய்மொழி கற்பிப்போர் அந்நாட்டுக்குரிய கல்விச் சூழலைப் புரிந்து கொள்வது மிக அவசியமானது. 

குடியேறிய புலங்களில் தொடக்ககாலக் கற்பித்தல் முறைகள்: 

தாய்மொழிக் கல்வி நிறுவனமயமாக்கப்படுவதற்கு முன்னரும் பின்னான தொடக்க காலத்திலும் பெரிதும் தாயகத்தில் கையாளப்பட்ட  கற்பித்தல் முறைகளே பின்பற்றப்பட்டன. தொடக்கத்தில் இக்கற்பித்தல் முறை பயன் தந்தது என்பதை மறுப்பதற்கில்லை. தாயகத்தில் பிறந்து இந்நாடுகளில் குடியேறியேறிய மாணவரே பெருமளவில் தமிழ் கற்போராக இருந்தனர். 

தாயகத்தில் இருந்து தருவிக்கப்பட்ட பாடநூல்களும் அவற்றை அடியொற்றி இங்கு உருவாக்கப்பட்ட சில நூல்களும் பயன்படுத்தப்பட்டன. பெரிதும் ஆசிரியர் மையக்கல்வி (Teacher-centered instruction) முறையே பின்பற்றப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள் தொடக்கக் கல்வியைத் தாயகத்தில் கற்றிருந்ததனால் அவர்களுக்கு மரபுசார் கற்பித்தல் முறைகள் சிக்கலாக இருக்கவில்லை.

தொடக்ககாலத்தில் தமிழ் கற்பிக்க முற்பட்ட ஆசிரியர்கள் தமிழ் கற்பித்தலில் தாய்நாட்டில் மொழி கற்பிக்கப்படும் வழிமுறைகளையே முற்றிலும் நம்பினர். குடியேறிய நாட்டில் நடைமுறையில் இருந்த கற்பித்தல் முறைகளையும் வகுப்பறைச் சூழலையும் பெரிதும் அறியாதவராக இருந்தனர். அதற்கான அவசியமும் அக்காலத்தில் இருக்கவில்லை. இவ்வாறு தமிழ் கற்பிக்க ஆரம்பித்தோரில் சிலர் தாயகத்தில் தமிழ்மொழி கற்பிக்காதவராகவும் வேறு சிலர் ஆசிரியத் தொழிலுக்கே புதியவர்களாகவும் இருந்தனர். 

இக்கற்பித்தல் முறைகள் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் போன்ற மொழிப்பயன்பாடுகளையே உச்ச இலக்குகளாகக் கொண்டிருந்தன. கற்போர் தமிழில் தொடர்பாடுதலும் அதற்குரிய மொழியறிவு பெற்றிருத்தலும் தொடக்ககாலக்  கல்விமுறையின் நோக்கங்களாக இருந்தன. தகவற்றொழில் நுட்பக் கருவிகளின் பயன்பாடுகள் அக்காலத்தில் பெரிதும் இல்லாதிருந்தன. 

தொடக்ககாலத்தில் வீடுகளில் பெரிதும் தமிழே பேச்சுமொழியாக இருந்தது. மாணவர்களும் தமக்கிடையேயான தொடர்பாடல்களைத் தமிழிலேயே மேற்கொண்டனர். 

அரச கல்விச்சபைகளில் தமிழ்மொழி கற்பிக்கத் தொடங்கியபின்தான் வாழும் நாட்டின் கல்விச் சூழலோடு தமிழ்மொழிக் கல்வியை இணைத்து நோக்கும் போக்கு ஏற்பட்டது. 

தமிழ் கற்கும் தற்கால மாணவரின் பின்னணி: 

1980க்குப் பின்  மேற்கூறிய நாடுகளில் இதுவரை ஏறக்குறைய பத்து இலட்சம் தமிழர் குடியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையில் வட, கிழக்குப் பகுதிகளிலிருந்து ஏதிலிகளாகப் புலம் பெயர்ந்தோராவர். 2009க்குப் பின்னர் இலங்கையிலிருந்து புலம்பெயர்வோரது எண்ணிக்கை வீழ்ச்சிடைந்து வருகின்றது. 2015க்குப் பின்னர் தொழில், கல்வி கருதி தமிழகத்திலிருந்து புலம்பெயர்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 

ஆயினும் குடியேறியோரது குடும்ப வாழ்வின் வழியே பிறக்கும் குழந்தைகளும் குடும்ப அழைப்பு (குயஅடைல ளிழளெழச) வாயிலாக வருவோரும்  தமிழரது எண்ணிக்கை உயர வழிசெய்கின்றனர். இத்தகைய நாடுகளில் தொடக்க காலத்தில் இளம் வயதில் குடியேறியோரும் இங்கு பிறந்தோருமே இரண்டாம் தலைமுறையினர் என அழைக்கப்படுகின்றனர். இக்காலத் தமிழ் சமூகத்தின் வலிமைமிக்க உறுப்பினர்களாக இவர்களே அழைக்கப்படுகின்றனர். இவர்களுடைய பெற்றோராகத் திகழ்ந்த மூத்த தலைமுறையினர் மெல்லமெல்ல ஓய்வை நோக்கிக் சென்று கொண்டிருக்கின்றனர். 

தற்காலத்தில் சமூகப் பொறுப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கும் இரண்டாம் தலைமுறையினரின் பிள்ளைகளே இப்போது மாணவராகத் திகழ்கின்ற மூன்றாம் தலைமுறையினராவர். இவர்களுடைய பெற்றோராகிய இரண்டாம் தலைமுறையினர் வாழும் நாட்டினுடைய மொழியைச் சரளமாகப் பயன்படுத்துவர். கணிசமானோருடைய வீட்டுமொழியாகவும் தொடர்பாடல் மொழியாகவும் அந்நாட்டுக்குரிய மொழியே பயன்படுவதாக இருக்கும். இவர்கள் கணிசமானவளவு வாழும் நாட்டினுடைய பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கியவராகவும் இருப்பர். இவர்களுடைய தாயகத் தொடர்புகள் முற்றிலும் அறுபட்டோ அல்லது குறைவாகவோ காணப்படும். 

இவ்வாறானதொரு சூழலில்தான் தற்போதைய மாணவர் சமூகம் வளர்கின்றது. அந்நாட்டுக்குரிய மொழியை ஏறக்குறைய எல்லாநிலைகளிலும் முதல்மொழியாக்கிக் கொண்ட இந்த மாணவ சமூகம் தாய்மொழி தமிழை முற்றிலும் இரண்டாம் மொழியாகப் பயில்கின்றவராக உள்ளனர். 

தலைமுறை இடைவெளிகள் பெரிதும் காணப்படுகின்ற இச்சமூகங்களில் தலைமுறை தோறும் தமிழ்ப் பயன்பாடு வீழ்ச்சியடைந்து செல்வதை வெளிப்படையாகவே கண்டுகொள்ளலாம். மொழி, பண்பாடு வாழ்வியல் நடைமுறைகள் சார்ந்து வாழும் நாட்டினது இயல்புகளைப் பெரிதும் உள்வாங்கியோராகவே மூன்றாம் தலைமுறையினர் பெரிதும் திகழ்கின்றனர். 

ஆங்கிலத்தை முதல்மொழியாகக் கொண்டிராத நாடுகளில் தமிழ் வீட்டுமொழியாக ஓரளவு பேணப்பட்டு வருகின்றது. இந்நாடுகளில் பயிலும் மூன்றாம் தலைமுறையினரின் தமிழ்க்கல்வி ஏனைய நாடுகளை விட மேம்பட்டிருக்கின்றது. 

நாடுகள் தோறும் மாறுபடும் கற்பித்தல் முறைகள்: 

மொழிக்கல்வி தொடர்பான கற்பித்தல் முறைகள், பெரிதும் கடந்தகால அனுபவங்களில் இருந்தும் கற்கும் மாணவரின் சூழலை நன்கு புரிந்து கொள்வதிலிருந்தும் தோன்றுகின்றன. 

மொழிக்கல்வி கற்பித்தல் முறைகள் நாடுகளின் சமூக அமைவுகளுக்கமைய மாறுபடுகின்றன. உலகெங்கும் காணப்படும் கற்பித்தல் முறைகளைக் கீழ்க்காணும் நான்கு பகுப்புகளுக்குள் அடக்கி விடலாம். 

•தமிழே மூல மொழியாக இருக்கும் சூழலில் அதனையே முதல் மொழியாகவும் கற்கும் முறை. எ-டு தாயகத் தமிழ்க்கல்வி

•தமிழ்மொழி வீட்டு மொழியாகவும் தொடர்பாடல் மொழியாகவும் பேணப்பட்டுவரும் சூழலி;ல் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் முறை. எ-டு சிங்கப்பூர், மலேசியா 

•இயற்கை, பண்பாட்டுத் தளங்களில் பெரிதும் மாறுபட்ட நாட்டில் பிறிதொரு மொழியின் பேராதிக்கம் மிக்க சூழலில் தமிழ் மொழியை இரண்டாம் மொழியாப் பயிற்றுவிக்கும் முறை. எ-டு ஐரோப்பிய நாடுகள் (பிரித்தானியா தவிர்த்து) 

•ஆங்கில மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளில் தமிழ்மொழியை இரண்டாம் மொழியாகப் பயிற்றுவிக்கும் முறை எ-டு பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா 

பின்னிரண்டு பகுப்புகளும் தமிழ்மொழி கற்பித்தலில் பெருஞ்சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. 

ஏறக்குறைய முப்பது ஆண்டுகால புலம்பெயர்ந்த தமிழர் வரலாற்றைக் கொண்ட ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளும் அவுஸ்திரேலியாவும் தொடக்க காலத்தில் தாயகக் கற்பித்தல் முறைகளையும் பின்னர் சிங்கப்பூர் கற்பித்தல் முறைகளையும் பின்பற்றின. தொடக்ககாலத்தில் புலம்பெயர்ந்தோர் வீட்டிலும் வெளியேயும் தொடர்பாடல் மொழியாகப் பெரிதும் தமிழையே கொண்டிருந்தனர். ஆனால் தற்போது இந்நாடுகளில் சமூக அமைவுகள் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்குள்ளாகியுள்ளன. 

இந்நாடுகளுக்குரிய மொழியையே முதல்மொழியாகக் கொண்ட இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர் தலையெடுத்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் தமிழ்மொழி கற்பித்தல் முறைகள் தனித்துவமான மாற்றங்களுக்குள்ளாக வேண்டிய வலுக்கட்டாய நிலை இப்போது தோன்றியுள்ளது. 

பெரும்பாலான தமிழர் குடும்பங்கள் இந்நாடுகளில் நிரந்தரமாகத் தங்கிவிடத் தலைப்பட்டு விட்டன. கல்வி, தொழில் சார்ந்து அந்தந்த நாட்டுக்குரிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்து வரும் புதிய தலைமுறையினரே எங்கும் தலையெடுத்துள்ளனர். இவ்வாறானோர் தமிழ்மொழியை இரண்டாம் மொழியாகக் கற்கும் தேவையும் அதன் போக்கும் பெரிதும் மாறியுள்ளன. 

ஆங்கிலத்தை முதன்மொழியாகக் கொண்ட நாடுகளில் குடியேறிய தமிழர் வெகுவிரைவாகத் தமது வீட்டுமொழியாகவும் ஆங்கிலத்தை ஆக்கிக் கொண்டு வருகின்றனர். வட அமெரிக்க நாடுகளில் வாழ்வோருடைய தாயகத் தொடர்புகளும் குறைவடைந்து வருகின்றன. இந்நாடுகளில் தோற்றம் கொண்ட புதிய தலைமுறையினர் தமிழ்மொழியை ஓர் அந்நிய மொழி போன்றே கற்க வேண்டியுள்ளது. 

ஆனால் பிரித்தானியா தவிர, பிற ஐரோப்பிய நாடுகளில் வாழ்வோர் பெரிதும் தமிழையே வீட்டுமொழியாகக் கொண்டிருந்தனர். இப்போதும் பெரும்பாலான வீடுகளில் தமிழே பேசப்பட்டு வருகின்றது. புதிய தலைமுறையினர் தாம் வாழும் நாடுகளின் மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் தமிழ்மொழியை நன்கு பேசத் தெரிந்தவர்களாக உள்ளனர். தாய்நாட்டு உறவுகளுடனும் தொடர்பில் இருக்கின்றனர். இவர்களுடைய தமிழ்க்கல்விச் சூழல் பிறவற்றிலிருந்து வேறுபட்டிருக்கின்றது. 

இவ்விரு சமூக அமைவுகளுக்கும் ஏற்ப, புலம்பெயர்தோர் மொழிக்கல்வி இருவேறு கற்பித்தல் முறைகளைக் கொண்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

மேற்கூறப்பட்ட கற்பித்தல் சூழல்களுக்கான கற்பித்தல் வழிமுறைகள் இப்போதும் முழுமையானதாக உருவாக்கப்படவில்லை. இந்த மாறுபட்ட சமூக அமைவுகளைக் கருத்திற் கொண்டு சிறந்த பாடத்திடங்களும் கற்பித்தல் முறைகளும் வகுக்கப்பட வேண்டும். 

இக்கல்விச் சூழலோடு நீண்டகாலமாக இணைந்திருந்து பெற்ற அனுபவமும் மொழி, மொழியியல் அறிவும் உலகளாவிய மொழிக்கல்விக் கோட்பாடுகள் பற்றிய தெளிவும் வாழும் நாட்டினது கல்விக்கொள்கை பற்றிய புரிதலும் கொண்டோரே புதிய கற்பித்தல் உத்திகளைக் கண்டறியவும் வகுக்கவும் வல்லோர் ஆவர். 

ஐரோப்பாவைத் தளமாகக் கொண்டியங்கும் அனைத்துலகத் தமிழர்கல்வி மேப்பாட்டுப் பேரவை என்ற கல்விக்கான தமிழர் அமைப்பு, மாணவ சமூகத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு, புதிய தாய்மொழிக்கல்வி கோட்பாடுகளை வகுத்து அதற்கமைய கற்பித்தலை முன்னெடுத்து வருகின்றது. 

நீண்ட வாழ்வியல் மரபையும் அதைத் தலைமுறைதோறும் காவிச்செல்லும் தனித்துவமான மொழியையும் கொண்ட ஓர் இனமானது புலம்பெயரந்து பலவினங்கள் வாழும் ஒரு சமூகத்தில் நிரந்தரமான வாழத் தலைப்படுகின்றது. இப்புதிய வாழ்களத்தில் வளரும் தலைமுறைகளிடையே வாழிட மொழியே ஆதிக்கம் பெற்றுவரும் நிலையில் தாய்மொழிக் கல்வியின் வடிவங்களை மாற்றிச் செல்ல வேண்டிய நிலை வலுவாக உணரப்பட்டு வருகின்றது. எனினும் மொழிக்கல்வி தொடர்பாடற் பயன்பாடு என்பதற்கு அப்பால் பண்பாட்டு மொழியாகவும் கற்பிக்க வேண்டியது முதன்மையாகின்றது. 

பண்பாட்டுக் மொழிக்கல்வி பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பாகப் பண்பாட்டு மொழி என்றால் என்ன? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வது சிறப்பானதாக இருக்கும். பண்பாட்டு மொழி என்பது மொழியின் தொடர்பாடல் பண்பிலிருந்து வேறுபட்டதாகும்.

தனக்கேயுரித்தான ஒரு நிலத்தில் தலைமுறை தலைமுறையாக மிக நீண்டகாலமாக வாழ்ந்து வரும் ஒரு இனமானது, உணவு, உடை, இருப்பிடம், உறவு முறைகள், நம்பிக்கைகள், பழக்க வழங்கங்கள், கலைகள் தொடர்பாக தனித்துவ வினைத்திறன் கொண்டியங்குவதாக இருக்கும். இவை தலைமுறை தோறும் காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்று அவ்வினத்தால் கைக்கொள்ளப்படுவதாக இருக்கும். 

ஒரு சமூகத்தின் இவ்வாறான தனித்துவமான வினைத்திறன் மிக்க இயக்கமே அவ்வினத்தின் பண்பாடு எனப்படுகின்றது. இந்தப் பண்பாட்டு நடத்தைகளை அச்சமூகம் சார்ந்த மக்கள் எவ்வாறு தலைமுறை தோறும் காவிச் செல்கின்றனர்? என்ற வினா இவ்விடத்தில் முக்கியமானது. ‘சமூகத்திலுள்ள மூத்தோரிடமிருந்து இளையோர் பண்பாட்டு விழுமியங்களைக் கற்றுச் செல்கின்றனர்’ என மேம்போக்காக விடையைக் கூறிவிட முடியாது. 

அச்சமூகத்தோடு இணைந்தியங்கிச் செல்லும் சில காவிகளே தலைமுறைதோறும் பண்பாட்டு நடத்தைகளைச் சுமந்து செல்கின்றன. சில இனங்களிடையே காவிகளாக மதங்கள் இருக்கின்றன. இவ்வனங்களின் மதம் அழியுமானால் வெகுவிரைவில் இவர்கள் பண்பாட்டுத் தனித்துவத்தையும் இழந்து விடுவர்.

வேறு சில இனங்களில் அரசியல் சட்டங்கள் பண்பாட்டு நடத்தைகளைக் காவிச் செல்கின்றன. இந்த அரசுகள் சிதையுமானால் விரைவிலேயே இவர்கள் பண்பாடும் சிதைந்துவிடும்.

இன்னும் சில இனங்களில் மொழியே அவற்றைப் பன்னூற்றாண்டுகளாகப் பாதுகாத்துச் செல்கின்றன. இவ்வாறான மொழிகள் வழக்கொழியுமானால் அத்தோடு இவ்வினங்களில் பண்பாடும் வழக்கற்று விடும்.

இதில் இறுதியாகக் கூறப்பட்ட நிலையிலேயே ஒரு மொழி பண்பாட்டு மொழியாகின்றது. உலகில் பல மொழிகள் பண்பாட்டு மொழியாகப் பேணப்பட்டு வருகின்றன. 

பண்பாட்டு மொழிக்கான அத்தனை வரைவிலக்கணங்களையும் கொண்ட மொழியாக தமிழ் திகழ்ந்து வருகின்றது. ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் எழுதியதோடு நின்றுவிடாது, தமிழருடைய வாழ்வியல் நெறிகளுக்கும் வரைவிலக்கணம் எழுதியது. இந்த வாழ்வியல் நெறிகளினூடாகத் பழந்தமிழருடைய பண்பாட்டுச் செல்நெறிகள் தெளிவாக வெளிப்பட்டிருந்தன. 

காலந்தோறும் தமிழ்மொழி, இலக்கியங்களின் வாயிலாகத் தமிழருடைய பண்பாட்டுச் செல்நெறிகளைப் பதிவு செய்து வருவதுடன் ஒவ்வொரு தலைமுறைக்கும் அதைப் புகட்டி வருகின்றது. தமிழர் தமது பண்பாட்டு மரபுகளையும் வரலாற்றையும் மொழிவழிப் பதிவுகளான இலக்கியங்களாகவே கொண்டுள்ளனர். 

தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் அற நூல்களும் ஐம்பெரும் காப்பியங்களும் பக்தி இலக்கியங்களும் சிற்றிலக்கியங்களும் சமகாலப் படைப்புகளுமே தமிழர் பண்பாட்டைச் சுமந்து நிற்கின்றன. 

தமிழினத்தின் இருப்புக்கும் அடையாளத்துக்குமான ஆதார ஊற்று தமிழ்மொழியே. தமிழர் எக்காலத்தில் தமது தாய்மொழியை இழக்கின்றனரோ அன்றே இனவi-யாளத்தையும் இழந்துவிடுவர். இதனாலேயே தமிழ் சிறந்த பண்பாட்டு மொழியாகத் திகழ்கின்றது. 

புலம்பெயர்ந்தோர் வாழிடங்களில் பண்பாட்டு மொழி.

பண்பாட்டு மொழி தொடர்பான புரிதல் அனைத்துத் தமிழர்களுக்கும் பொதுவான ஒன்றே. வாழும் சூழலும் அது சார்ந்த சமூக அமைப்புமே இது பற்றிய தேடல்களையும் தேவைகளையும் விரிவாக்குகின்றன.

இந்த நூற்றாண்டில் தனித்துவமான இனங்கள் பலவும் ஒரே சூழலில் இணைந்து வாழும் வாழ்க்கை முறைகள் பெருமளவில் பெருகியுள்ளன. இவ்வாறான பல்லினக் கலப்புகளைக் கொண்ட சமூகத்தில் பண்பாட்டு மொழி என்ற சொற்றொடர் இப்போது பலம் பெற்று வருகின்றது. இவ்வாறான சூழலில் வாழும் இனங்கள் பல தமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் தொடர்ச்சியாகப் பேணிச் செல்வதற்காகப் ‘பண்பாட்டு மொழி’ என்ற துறையைப் பலப்படுத்த ஆரம்பித்துள்ளன. 

உலகில் வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படுகின்ற பல்வேறு நாடுகளிலும் வாழுகின்ற தமிழர் பலர் அந்நாடுகளில் தமது வாழ்வை நிரந்தரமாக்கிக் கொண்டுள்ளனர். அவர்களில் பலரும் தாயகத்துக்குத் திரும்பப் போவதில்லை. இவ்வாறான சூழ்நிலையில் வாழும் நாடுகளில் இறுக்கமும் தனித்துவமும் மிக்க சமூகமாக வாழ வேண்டியுள்ளது. 

பல்லின சமூகத்தில் வாழும் ஓர் இனம் அந்தந்த நாடுகளுக்குரிய பொதுவான வாழ்வியல் முறைகளையே  பெரிதும் பின்பற்ற வேண்டியுள்ளது. வேலைத்தலங்களிலும் பள்ளிகளிலும் இந்தத் ‘தேசியப் பொதுப் பண்பாட்டு வாழ்வியல்’ தவிர்க்க முடியாதவொன்றாகின்றது. 

பல பண்பாடுகளைக் கொண்ட சமூகங்கள் வாழுகின்ற சூழலில் ஒரு பொதுமைப் பண்பாடு உருவாவதுவும் அதைப் பின்பற்ற வேண்டியதும் தவிர்க்க முடியாததாகும். வாழும் நாட்டினுடைய தேசிய அடையாளங்களைக் கொண்டதாகவும் தேசிய தனித்துவங்களில் ஓர் அங்கமாகவும் திகழும் வாய்ப்பினை இந்தப் பொதுமைப் பண்பாடு கொண்டுள்ளது. கனடாவில் நீண்ட காலத்துக்கு முன் குடியேறிய பல இனங்கள் இந்தப் பொதுமைப் பண்பாட்டையே தமது இனஞ் சார்ந்த பண்பாடாகவும் கொண்டுவிட்டன. 

இவ்வாறானதோர் சூழ்நிலையில்தான் இனஞ் சார்ந்த தனித்துவமான பண்பாட்டுப் பேணல்கள் தொடர்பான ஆழமான சிந்தனைகள் எழுகின்றன. பொதுமைப் பண்பாட்டைப் பின்பற்றும் அதேவேளையில் எவ்வாறு இனஞ் சார் பண்பாடுகளையும் மரபுகளையும் பேணலாம்? என்ற தேடல்களும் உருவாகின்றன. பல்லினப் பண்பாட்டு வாழ்புலத்தில் வாழும் தனித்துவ அடையாளங்கள் மிக்க இனத்தோரிடையே எழுகின்ற இவ்வாறான தேடல்கள் தவிர்க்க முடியாதவை. இயல்பானவை. 

தாயகங்களில் பாரம்பரியமானதும் பாரியதுமான பரந்த பண்பாட்டுச் சூழலுக்குள்ளேயே தமிழரின் வாழ்வு காலங்காலமாக இயங்கி வருகின்றது. புலம்பெயர் சூழலில் முற்றிலும் புதியதான வாழ்வியல் தளத்தில் திட்டமிட்டும் அதற்கான ஒழுங்குமுறை நெறிகளை வகுத்தும் பண்பாட்டுத் தொடர்ச்சியைப் பேணவேண்டியுள்ளது. 

இதுவே பண்பாட்டுச் சிந்தனை தொடர்பில் தாயக வாழ்வியலுக்கும் புலம்பெயர்ந்தோர் வாழ்புலச் சூழலுக்குமுரிய பாரிய வேறுபாடாகும். 

பெரிதும் பொருளாதாரப் பின்புலத்தையே மையமாகக் கொண்டியங்கும் இயந்திர இயக்கத்துக்கு ஒப்பான புலம்பெயர் வாழ்புலத்தில் தனித்துவமான பண்பாட்டுப் பேணல் எளிதானதல்ல. ஒவ்வொருவரையும் சுற்றி வளைத்திருக்கும் பொருளாதாரத் தேவைகளையும் அன்றாட இருப்புக்காகத் தொடர்கின்ற போராட்டங்களையும் மீறி, பண்பாட்டுப் பேணல் குறித்து ஆழமாகச் சிந்தித்துச் செயற்படுவது பெருஞ் சவால்களைக் கொண்டது. 

கனடா போன்ற பன்முகப்பண்பாட்டுச் சூழலைக் நாடுகளில் இவ்வாறான வாழ்வியல் போராட்டங்களுக்கு ஆட்பட்ட பல இனங்கள் தமது தனித்துவப் பண்பாட்டை இழந்துவிட்டன. வாழ்ந்து கொண்டிருக்கும் இனங்களிலிருந்து பல குடும்பங்கள் ஆண்டுதோறும் தொலைந்து கொண்டிருக்கின்றன. 

தாயகத்தில், ஐரோப்பியர் இனக்கலப்பில் தோன்றி, ஐரோப்பியப் பண்பாடு பழக்க வழங்க்ளைப் பின்பற்றி வாழ்கின்ற ‘பறங்கியர்’ என்ற இனத்தோரைப் போலவே இங்கு பல தமிழ்க் குடும்பங்கள் வாழத் தலைப்பட்டுவிட்டன. அவை தமிழர் என்று தம்மை அடையாளப்படுத்துவதை விடுத்துக் கனடியர் என்றே தம்மைக் கருதிக் கொள்கின்றன. 

இவ்வாறான சூழலில்த்தான் பண்பாட்டுத் தொடர்ச்சியை எவ்வாறு நெறிப்படுத்தப்பட்ட வழிமுறைகளில் பேணலாம் என்ற வினா பெரிதாக எழுகின்றது. 

இவ்வாhனதொரு சிந்தனைத்தளத்திலேயே தாய்மொழிக்கல்வி பண்பாட்டு மொழிக்கல்வியாகக் கற்பிக்க வேண்டும் என்ற கோட்பாடு வலுப்பெறுகின்றது. 

நிறைவுரை:

ஆறாந்திணைச் சமூகம் என்று கருதப்படக்கூடிய பெயர்வுத் தமிழ்ச்சமூகம் புதிய புலத்துக்கான வாழ்வியல் கோட்பாடுகளை வகுத்துக் கொள்வதிலும் அவற்றைப் பின்பற்றிச் செல்வதிலும் தாய்மொழிக்கல்வியின் வகிபாகம் முதன்மையானதாகவே இருக்கப் போகின்றது. இச்சமூகத்தினரின் தாய்மொழிக்கல்வியின் ஆய்வு பரப்பு பெரியது. இன்னுமொரு பொழுதில் அதை விரிவாக நோக்குவோம். 




Thursday, June 24, 2021

 கூத்துக் கலை அன்றும் இன்றும்’…

ப.இரமேஷ்

தமிழர்களின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் கலைகளில் கூத்தும் ஒன்றாக விளங்குகிறது. நெஞ்சை அள்ளும் நிகழ்த்து கலைகளுள் தெருக்கூத்தும் ஒன்று. கூத்துக்கலை இசைக்கலையைப் போலவே பழமை வாய்ந்தது என்பார் மயிலை சீனி வேங்கடசாமி. தமிழ் முத்தமிழ் என வழங்கப்படுகின்றது இயல், இசை, கூத்து என்பன முத்தமிழின் கூறுகள். வரி வடிவத்தில் இதயத்துக்கு இன்பம் பயப்பது ‘இயல்’ என்றும் ஒலி நயத்துடன் பாடப்பெறும் பொழுது இசையுடன் இயைந்தது ‘இசை’ என்றும் மெய்பாடுகளினால் வெளிப்படுத்தப்படுவது ‘கூத்து’ என்றும் வழங்கப்படுகிறது. ஆடற்கலையும் நடிப்புக்கலையும் ஒருங்கே வளர்ந்தவை ‘பாவஇ ராகஇ தாள’ வகை கொண்டு பதத்தால் பாட்டுக்கு இயைய நடிப்பது கூத்து என்று அபிதான சிந்தாமணி விளக்குகிறது. கூத்து என்பதை முதன்முதலில் ‘நாடகம்’ என குறிப்பிட்டவர் இளங்கோவடிகள். இத்தகைய சிறப்பும் பழமையும் வாய்ந்த கூத்துக் கலையின் அக்கால நிலையையும் இக்கால நிலையையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


கூத்து – விளக்கம்

“கூத்து” என்னும் சொல் “நாட்டியம்”, “நாடகம்” ஆகிய இரு கலைகளுக்கும் பொதுவானதாக வழங்கப் பெற்றுள்ளது. தொல்காப்பியத்தில் “கூத்து”, “கூத்தர்” என்னும் சொற்கள் உள்ளன. சங்க இலக்கியங்களிலும் “கூத்து” என்னும் சொல் மிகுதியாக உள்ளது. “கூத்தர் ஆடுகளம் கடுக்கும்” (புறம் 28) “இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து” (சிலம்பு 3:12) “நாட்டியம் நன்னூல் நன்கு கடைப்பிடித்து” (சிலம்பு 3:46) “நாடகமேத்தும் நாடகக் கணிகை” (சிலம்புஇ பதிகம் 15) “கூத்தாட்டு அவைக்கறம்” (திருக்.332) என்று சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. வேடம் புனைந்து இரவு தொடங்கி விடியும் வரை கதை தழுவி ஆடப்படும் நாடகமே கூத்து ஆகும். கூத்து எனும் சொல் முதலில் நடனத்தையும் பின்னர் கதை தழுவி வரும் நாடகத்தையும் குறித்தது. கூத்து நடத்தப்பட்ட களத்தை ஒட்டியே அவை தெருக்கூத்து எனப் பெயர்பெற்றது.

கூத்து வகைகள்

கூத்து என்பது பல்வேறு ஆடல்களைக் குறிக்கும் சொல்லாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கூத்துகள் ஏழுவகை என்பர். இவற்றிற்கு முரணான கூத்துகளும் உள்ளன.

1. வசைக்கூத்து - புகழ்க்கூத்து

2. வேத்தியல் - பொதுவியல்

3. வரிக்கூத்து - வரிச்சாந்திக்கூத்து

4. சாந்திக்கூத்து - விநோதக்கூத்து

5. தமிழ் - ஆரியம்

6. இயல்புக்கூத்து - தேசிக்கூத்து

7. வெறியாட்டு

இவைகளில் முதல் ஆறும் இரண்டு வகைகளாக இணைந்து விளங்கும். வசைக்கூத்து என்பது ஒருவரை வசைப்படுத்திக் கூறுதலாகும். இதற்கு முரண்பட்டதாக ஒருவரை ஏற்றிப் பாடுதல் புகழ்க் கூத்தாக அமையும். வேந்தன் முன்னால் ஆடிக் காட்டும் கூத்து வேத்தியல் என்றும் பொதுமக்கள் முன்னர் ஆடிக்காட்டும் கூத்து பொதுவியல் என்றும் அழைக்கப்பட்டன. தலைவனுடைய சாந்த குணங்களைப் பாடுவது வரிக்கூத்து எனவும்இ தலைவனுடைய சாந்த குணங்களை மாற்றிப் பாடுவது வரிச்சாந்திக் கூத்து எனவும் அழைக்கப்படுகின்றன. தலைவன் இன்பமாக நின்றாடியது சாந்திக்கூத்து என்றும் இதற்கு முரண்பட்டநிலையில் நின்றாடுவது விநோதக் கூத்து என்றும் அழைக்கப்பட்டன. ஆரிய நாட்டினர் வந்து ஆடிக் காட்டும் கூத்து ஆரியக் கூத்து என்றும் தமிழ்நாட்டவரின் கூத்து தமிழ்க்கூத்து எனவும் கூறப்பட்டன. இயல்பாக ஆடும் ஆடலை இயல்புக் கூத்து என்றும் தன் தேசத்திற்கு உரியவைகளை ஆடிக் காட்டுவதனைத் தேசிக் கூத்து என்றும் குறிப்பிட்டனர். தெய்வமேறி ஆடும் ஆடலை வெறியாட்டு என்றனர்.

பண்டைத் தமிழகத்தில் பதினொரு வகையான ஆடல்கள் சிறப்புற்று விளங்கின. சிலப்பதிகாரம் பதினொரு வகை ஆடல்களைக் குறிப்பிடுகிறது. இவைகளை மாதவி இந்திரவிழாவில் பொது மக்களுக்காக (பொதுவியல்) ஆடிக்காட்டினாள். இப்பதினொரு ஆடல்களும் பின்வருமாறு அமைந்தன. அவை, கொடுகொட்டி, பாண்டரங்கம், அல்லியம், மல்லாடல், துடிக்கூத்து, குடையாடல், குடம், மரக்கால் ஆடல், பேடியாடல், பாவையாடல், கடையம் என்பனவாகும்.

1. கொடுகொட்டி : கொடுங்கொட்டி என்பதே “கொடுகொட்டி” எனத் திரிந்தது என்று நச்சினார்கினியர் கூறுவார். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர்இ

“கொள்ளைக் காதில் குழைக் காதில் குண்டைப் பூதம்

கொடுகொட்டில் குனித்துப் பாட” (திருவெண்காடு, திருத்தாண்டகம், பாடல்5)

என்று தேவாரப் பாடலில் இக்கூத்தினைச் சுட்டுகின்றார். திரிபுரம் எரியும்போது கோபத்தினால் சிவனின் கண்கள் சிவப்பேறி இருப்பது போன்று வெகுளிச்சுவை மிஞ்ச அதன் மெய்ப்பாடுகள் தோன்றி இந்த ஆடலை ஆடுதல் வேண்டும். வெற்றியால் ஏற்பட்ட பெருமிதம் கலந்த வெகுளிச்சுவை கொடுங்கொட்டி ஆடலில் முனைப்பாக இருக்கும்.

2. பாண்டுரங்கம் : ஒரு போருக்கு ஆயத்தமாவதால் இந்த ஆடலில் வெளிப்படும் சுவை வீரமாகும். தேரின் முன் நிற்கும் நான்முகனின் முன்பாக முக்கண்னை அல்லது சிவம் ஆடிய ஆட்டத்திற்குப் “பாண்டரங்கம்” என்று பெயர். இதனைச் சிலப்பதிகாரம். “தேர்முன் நின்ற திசைமுகன் காணப் பாரதியாடிய வியன் பாண்டரங்கமும்” (சிலம்பு 6:44-45) என்று குறிப்பிடுகின்றது.


-3. அல்லியம் : மாயவன் அல்லது கண்ணன் ஆடும் பத்துவகை நடனங்களில் அல்லியம் ஒன்றாகும். கம்சன் ஒரு யானையின் உருவம் எடுத்து வஞ்சகமான முறையில் கண்ணனைக் கொல்ல முயன்றதையும் அதன் கொம்புகளை முறித்துக் கண்ணன் அதனைக் கொன்ற முறையையும் இந்த ஆடல் மூலம் நடித்துக் காட்டப்பெறும். வெற்றிபெற்றதும்இ ஒரு மாயத்தோற்ற நிலையில் கண்ணன் நிற்கும் நிலை அல்லியத்தில் சிறப்பிடம் பெறும்.

4. மல்லாடல் : கண்ணன் ஒரு மல்லனைப் போன்று உருமாறி வாணணை முறியடிக்கச் செல்லும்போது அவனால் ஆடப்பெற்ற ஆடலை “மல்லாடல்” என்று கூறுவர். கண்ணன் தனது எதிரியைப் பேரொலி செய்து அழைத்து அவன் வந்ததும் ஓடிச்சென்று பிடித்துக் கொன்று விடுவதை நடித்துக் காட்டுவது இந்த ஆடலாகும். இதன் மூலம் வெளிப்படும் சுவைகள் கோபம்இ வீரம் ஆகியவையாகும்.

5. துடிக்கூத்து : மாற்றுருவில் சூரன் உடலுக்குள் தந்திரமாகச் சென்று மறைந்து கொண்ட போது முருகன் ஆடிய ஆட்டத்தைத் “துடிக்கூத்து” என்று கூறுவர். முருகன் அவனைக் கண்டுபிடித்ததும் உணர்ச்சி மிகுதியில் கடல் அலையையே அரங்கத் திரையாகக் கொண்டு துடிக்கூத்து ஆடுகிறான். சிறிது நேரத்தில் எதிரியைக் கொன்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து ஆடுகிறான். இன்பமும் வீரமும் ஆடலின் மூலம் வெளிப்படும் சுவையாகும்.

6. குடையாடல் : படைகளை இழந்து அரக்கர்கள் தோல்வி கண்ட நிலையில் ஆறுமுகன் வெற்றிக் குடை பிடித்து ஆடிய ஆட்டம் இது.

7. குடம் : வாணாசுரனால் கைது செய்யப்பட்ட காமனின் மகன் அநிருத்தனை விடுதலை செய்வதற்காகக் குன்றெடுத்தோனாகிய கண்ணன் குடத்தின் மீது ஆடியது.

8. பேடியாடல் : தன் மகனை விடுவிக்கக் காமன் பேடி உருக்கொண்டு கண்டோர் வியக்கும்படி ஆடியது.

9. மரக்காலாடல் : அரக்கர்கள் ஏவிய பாம்பு, தேள் போன்ற நச்சுப்பூச்சிகளை நசுக்கிக் கொல்வதற்காக மரக்கால் கொண்டு கொற்றவை ஆடியது. இம்மரக்காலாடல் ஆட்டமே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்டத்திற்கான முன்னோடி ஆட்ட வடிவமாகக் கருதப்படுகிறது.

10. பாவையாடல் : அவுணர்களின் போர்க்கோலம் ஒழிவதற்காகத் திருமகள் ஆடியது.

11. கடயம் : இந்திரனின் மனைவியான அயிராணி வயலில் உழவனின் மனைவி வடிவில் ஆடியது. இவ்வகை ஆடல்கள்இ ஆடற்கலை இலக்கணத்துடன் மிகவும் நேர்த்தியாக ஆடப்பெற்ற நிலையை அறிய முடிகிறது.


மேற்கண்ட பதினொரு வகையான ஆடல்கள் மட்டுமில்லாமல் வள்ளிக்கூத்துஇ துணங்கைக் கூத்துஇ குரவைக்கூத்துஇ வெறியாடல் போன்றக் கூத்துக்களும் அக்காலத்தில் சிறந்து விளங்கின.

வள்ளிக்கூத்து : வள்ளிக்கூத்து எனப்படுவது நடைமுறையில் உள்ள ‘வள்ளி’யின் கதையைப் பின்பற்றி அமைவதாகும். காலங்காலமாகத் தொடர்ந்து வரும் இக்கூத்து அதன் கதைத் தன்மையால் வாடாமல் (அழியாமல்) நின்று செழித்துள்ளது என்பதை “வாடா வள்ளியின் வளம் பல தரூஉம்” (பெரும் : 370) என்ற பெரும்பாணாற்றுப்படைப் பாடல் அடி விளக்குகிறது.

துணங்கைக் கூத்து : துணங்கைக் கூத்து எனும் கூத்தானது மகளிர் கை கோத்துக் கொண்டு நடத்திக்காட்டிய கலையாகச் சங்க காலத்தில் விளங்கியது. இளம் பெண்கள் இறைவழிபாட்டின்போது இவ்வகை நிகழ்வுகளை நடத்திக்காட்டியிருக்க வேண்டுமெனக் கருதலாம். “எல்வளை மகளிர் துணங்கை” (குறுந் : 364 : 5-6) எனும் குறுந்தொகைப் பாடல் அடியும் துணங்கைக் கூத்து குறித்துப் பொதுவாகப் பேசுகிறது.

குரவைக் கூத்து : மிகவும் பழமையான கூத்து வகைகளுள் குறிப்பிடத்தக்கது குரவைக்கூத்து ஆகும். மக்களிடையே செல்வாக்குப் பெற்ற கலையாக இது விளங்கியது. இக்கூத்தானது பின்னணி இசைக்கு ஒப்பஇ பல கலைஞர்கள் சேர்ந்தாடும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்புக்குரியதாகும். ‘மன்று தொறு நின்ற குரவை’ (மதுரைக் காஞ்சி : 615) என்ற மதுரைக்காஞ்சிப் பாடல் அடியும்இ ‘வேங்கை முன்றில் குரவை’ (நற் : 276) என்ற நற்றிணைப் பாடல் அடியும் குரவைக் கூத்தின் செல்வாக்கினைக் குறிப்பிடுகின்றன. சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவைஇ குன்றக்குரவை ஆகியன குறித்த செய்திகளை விரிவாகத் தருகின்றது.

வெறியாடல் : வெறியாடல் என்பதே ஆடல் (ஆட்டம்)இ வடிவத்திற்கென அறியக்கிடைக்கும் முதல் வடிவமெனலாம். ‘வெறியாடல்’ என்னும் ஆடல்களை சங்க காலத்தில் சிறப்புற்று விளங்கியது. மலைப்பாங்கான இடங்களில் முருகனது அருள் பெற்றவனாக வேலன் வேகமாக ஆடத்தொடங்குவான். அவன் நோய்களைஇ குறிப்பாகப் பெண்களுக்கான நோய்களை நீக்கும் வல்லமை பெற்றவனாகக் கருதப்பட்டான்.

கூத்து அன்று

சங்க கால மக்கள் வாழ்வில், வழிபாடு என்பது முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. அவர்கள் ஆடியும் பாடியும் இறைவனை வழிபட்டனர் இறைவனைக் கூத்தாடும் நிலையில் கண்டு மகிழ்ந்தனர். முதற் கடவுளான சிவனை மக்கள் கூத்து நிகழ்த்தும் ஆடல் வல்லான் வடிவில் கண்டனர் அவன் கொடு கொட்டிஇ பாண்டரங்கம்இ கபாலக்கூத்து முதலிய கூத்தினை நிகழ்த்தியதாக புராணங்கள் எடுத்துக் கூறுகின்றன.

சங்க காலத்தில் வழிபாட்டு நிலையில் மட்டுமின்றிப் பொழுதுபோக்கு நிலையிலும் தொழில் அடிப்படையிலும் கூத்துகள் நிகழ்த்தப்பட்டன. குரவைக் கூத்து, துணங்ககைக் கூத்து, வெறியாட்டுஇ ஆரியக் கூத்து, பாவைக் கூத்து, வள்ளிக் கூத்து போன்ற பல் வகைக் கூத்துகள் நடத்தப்பட்டன என்பதைச் சங்க இலக்கியங்கள் வழி நாம் அறிய முடிகிறது.

கூத்தர், பொருநர் போன்ற சொற்கள் தொழில் அடிப்படையில் கூத்துகள் நடைபெற்றன என்பதைக் குறிக்கிறது. இடைக்காலத்தில் இறைவன் முன்பும் அரசர் முன்பும் சில இடங்களில் பொழுதுப் போக்குக்காகவும் கூத்து நிகழ்த்தப் பெற்றது. அக்காலத்தில் இயற்றமிழைப் புலவர்களும் இசைத் தமிழ்ப் பாணர்களும் வளர்த்தமை போன்றே நாடகத் தமிழாகிய கூத்தையும் நாடகத்தையும் கூத்தர் என்போர் வளர்த்தனர். இயல் இசை ஆகிய இரண்டும் கேட்போருக்கு இன்பம் தருவன. கூத்து கேள்வி இன்பத்தோடு காட்சி இன்பத்தையும் தரவல்லது கூத்து பெரிதும் விரும்பப்பட்டதால் அக்காலத்தில் கூத்தர்கள் பெருகினர். கூத்து வகைகளும் பெருகின.

பாரதம், இராமாயணம், புராணங்கள் மற்றும் காத்தவராயன், நல்லதங்காள், பத்மாசூரன், மதுரை வீரன் கதைகள் போன்றவை கூத்துக்கான கதைகளாக அமைகின்றன. தொடக்க காலத்தில் சமயவாதிகள் தங்களின் சமயத்தையும் மதக் கருத்துக்களையும் பரப்புவதற்காக மேற்கொண்ட இக்கலை பின்னர் மக்களின் பொழுது போக்கிற்காகப் பயன்பட்டது.

பெரும்பாலும் புராணக்கதைகளையும், வரலாற்றுக் கதைகளையுமே அடிப்டையாகக் கொண்டு கூத்து நடத்தப்பட்டன. சில நாடகங்கள் ஐதீகம் காரணமாகவும் நடத்தப்பட்டன. சிறு தொண்டர் நாடகம் நடத்தினால் குழந்தைப் பேறு கிடைக்கும்இ மழை பெய்யும்இ இதனால் செல்வம் செழிக்கும்இ பஞ்சமின்றி வாழலாம் என்றும் மக்கள் நம்பினர். சங்க காலத்தில் கூத்துக்கலை எழில் மிகுந்த கலையாகத் திகழ்ந்தது. மிகவும் உயர்ந்த நிலையில் போற்றப்பட்டது.

கூத்தின் இன்றைய நிலை

மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்த தெருக்கூத்து என்னும் உன்னதமான கலை இன்றைக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து அழிந்துவிடும் சூழ்நிலையில் உள்ளது. அக்காலத்தில் உள்ள கூத்து வகைகள் தற்காலத்தில் பொம்மலாட்டம்இ ஒயிலாட்டம்இ பாவைக் கூத்துஇ கரகம்இ கழியாட்டம்இ தேவராட்டம்இ கணியான் கூத்துஇ அலிக்கூத்துஇ பொய்க்கால் குதிரைஇ காவடியாட்டம் என்று மாற்றம் அடைந்தாலும் மக்களிடம் அவை பெற்றிருக்கின்றசெல்வாக்கு என்பது மிகவும் சரிந்த நிலையிலேயே உள்ளது. அதற்கான காரணங்களை ஆராய்ந்தோமானால்இ இன்றைக்கு மக்களால் பெரிதும் விரும்பப்படும் திரைப்படம்இ நாடகம் மற்றும் நவ நாகரீக வளர்ச்சியும் அடிப்படைக் காரணமாக அமைகின்றன. மேலும் இப்போதைய விரைவு வாழக்கையின் கூறுகளாலும் புதுமை விழையும் மக்களின் மனநிலையாலும் கூத்துக்கலை பாதிப்படைந்துள்ளது.

முன்பு தமிழகம் முழுவதும் இக்கலை பரவியிருந்தது. ஆனால் இன்றைக்கு வட மாவட்டங்களிலும் தென்மாவட்டங்களில் ஒருசில பகுதிகளிலும் கூத்துக்கலை ஆடி மாதத்தில் உயிர்ப்பு பெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் நடைபெறும் அம்மன் கோயில் திருவிழாக்களில் தான் கூத்துகளை காண முடிகிறது. மற்ற காலங்களில் எங்கும் காணமுடிவதில்லை. இத்தகைய நிலைப்பாட்டினால் கூத்துக் கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் கூத்துக் கலைஞர்கள் தங்களுடைய தொழிலையே மாற்றவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். கூத்துக் கலைஞர்களை காப்பதற்கு அரசு முன்வர வேண்டும். மேலும் இன்றைய நாகரீக உலகிற்கேற்ப கூத்துக்கலையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் ஓரளவேனும் கூத்துக் கலை அழிவைத் தடுக்க முடியும். கூத்தின் கதைகளாக அமைந்துள்ள புராணக் கதைகளை மக்கள் கேட்டு அலுத்துப் போய் உள்ளதால்இ இன்றைய சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு கற்பனையோடு பயன்தரக்கூடிய கதைகளை அரங்கேற்றலாம். மேலும் கூத்து நிகழ்த்தும் நேரத்தை மூன்று அல்லது நான்கு மணி நேரமாக குறைத்து கொள்வதும் கூத்துக்கலையின் மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும். இறை வழிபாட்டிற்காக மட்டும் நிகழ்த்தப்படும் இந்த கூத்துக்கள் மக்களின் பொழுது போக்கிற்காக எல்லாக் காலங்களிலும் நிகழ்த்தப்படும் அளவிற்கு கூத்தின் போக்கினை மாற்றி அமைத்துக் கொள்வதும் அவசியமாகிறது.

தொகுப்புரை :


அக்காலத்தில் மக்கள் இறைமீதும் வழிபாட்டின் மீதும் கொண்டிருந்த நம்பிக்கையின் வெளிப்பாடே கூத்துக் கலை வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தன. இன்றைய காலங்களில் கூத்துக் கலை பல்வேறு வடிவங்களில் மாற்றம் பெற்றாலும் மக்களிடம் தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் அழிவின் விளிம்பில் உள்ளன. இன்றைக்கு ஒரு சில மாவட்டங்களில் மட்டும் எச்சங்களாய் மிஞ்சி இருக்கின்றன. ஆடிமாதம் என்றால் கோயில் திருவிழாவும் கூத்தும் தான் நினைவுக்கு வருகிறது. அந்தளவுக்கேனும் மனதில் பதிந்துள்ளது சற்று ஆறுதலாக உள்ளது. பழமையும்இ பெருமையும் வாய்ந்த உன்னதமான இந்தக் கலையைப் போற்றி பாதுகாக்க வேண்டிய பொறுப்பை அரசு ஏற்க வேண்டும். கூத்துக்கலை மறுமலர்ச்சிக்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் கூத்துக்கலை உயிர்ப்பு பெறும்.

                                                                 ( திண்ணை இணையத்தில் வெளியான கட்டுரை)





Monday, February 4, 2019

தைப்பொங்கல் - பண்பாட்டு நோக்கு

பண்பாட்டு நோக்கில் தைப்பொங்கல் 

முன்னுரை:

கடந்த நூறு ஆண்டுகளுக்குள் பேரெழுச்சி பெற்றதொரு தமிழர் விழாவாகத் தைப்பொங்கல்விழாவை நாம் அடையாளம் காணமுடியும். தமிழர் தமது வரலாற்று நீட்சியின் வழியே பல்வேறு விழாக்களைக் கொண்டாடி வந்ததுள்ளனர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப்; பின் மெய்யியல் வழிபாட்டுநெறிகள் (சைவம், வைணவம்) தமிழரிடையே பரவத் தொடங்கிய பின்னர், பல தமிழர் விழாக்கள் மெய்யியல் வழிபாட்டுநெறிகளுடன் தம்மைப் பிணைத்துக் கொண்டன. எடுத்துக்காட்டாகச் சித்திரைப் புத்தாண்டைக் கருதலாம். வடஇந்தியர்களின் கொண்டாட்டமான தீபாவளியும் இக்காலத்திலேதான் தென்னிந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

செந்நெறி இறைநெறிகள் மக்களிடையே ஆளுமை செலுத்துவதில் தமக்குள் போட்டியிட்டுக்கொண்டன. அத்துடன் அரசுகளையும் தம்பக்கம் ஈர்த்துக்கொண்டன. அவை நடத்திய மதப்போட்டிகளின் வெற்றி தோல்விகளுக்கான பரிசுகளையும் தண்டனைகளையும் உடன்நின்ற அரசுகளே வழங்கின. அரச ஆதரவுகளுடன் கோலோச்சிய மதங்கள் தமிழர்களின் பண்பாட்டிலும் மொழியிலும் ஆளுமை செலுத்தின. 

இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட திராவிடச் சிந்தனை, தனித்தமிழ் விழிப்புணர்வு என்பன எழுச்சி பெறும்வரையில் மெய்யியல் மதநெறிகள் மக்களிடையே தமது மாற்றுக்குறையாது பாதுகாத்துக் கொண்டன. கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழில் தோன்றிய இலக்கியங்கள் கடவுளரையும் வேந்தரையும் மட்டுமே பாட்டுடைத்தலைவர்களாகக் கொண்டிருந்தன என்ற கருத்தை இதற்குச் சான்றாகக் கருதலாம். சிலப்பதிகாரம் என்ற இலக்கியம் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. 

ஆட்சியாளர் என்றவகையில் ஆங்கிலேயரும் தமிழ்மொழியில் சமஸ்கிருதமும் ஆளுமை செலுத்திக்கொண்டிருந்தவேளையில்தான் மறைமலையடிகள் போன்றோர் தனித்தமிழ் இயக்கத்தையும் ஈ.வெ.ராமசாமி போன்றோர் திராவிடச் சிந்தனையையும் தோற்றுவித்தனர்.

இதன்வழியே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வுவே தமிழர் தம்முடைய அடையாளங்களையும் வேர்களையும் முனைப்போடு தேடத் தொடங்கியமைக்குக் காரணமாயிற்று. இத்தேடல்களின் வழியேதான் நாட்டுப்புற மக்களின் வாழ்வியலுக்குள் அறுவடைவிழாவாகப் போற்றப்;பட்டுவந்த பொங்கல் தமிழினப் பெருவிழாவாகத் தோற்றம் கொண்டது. 

பொங்கல் பெருவிழா வெளிப்படுத்தும் பண்பாட்டு விழுமியங்களைத் தெரிந்துகொள்ள முன்னர் சில வரலாற்று உண்மைகளை நாம் புரிந்து கொள்வோம்.

நாட்டுப்புற வாழ்வியலில் பொங்கல்

வரலாற்றுக்காலந்தொட்டுப் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை தமிழச்சமூகத்தில் கல்வியறிவு கொண்ட சிறு விழுக்காட்டினரே ஏட்டு இலக்கியங்களைப் படைத்து வந்துள்ளனர். தொல்காப்பியர் உள்ளிட்ட சங்கப்புலவர்கள், அறநூல் அறிஞர்கள், இலக்கணிகள், சமயக் குரவர்கள் என இலக்கியம் இலக்கணம் படைத்த அனைவருமே கற்றறிந்தோருக்குள் அடங்குவர். ஏட்டு இலங்கியங்கள் பெரிதும் கல்வியறிவு கொண்டோராலேயே கொண்டாடப்பட்டன. உயர்ந்த மானுடச் சிந்தனைகளையும் தமிழருடைய பண்பாட்டுச் சிறப்புகளையும் காலந்தோறும் இலக்கியங்களில் பேணிவந்தோர் இவர்களே. ஆளுமையாளரோடு இணைந்தே இக்கற்றறிவாளர் சமூகம் இயங்கியது. தமிழ்நாட்டில் காலூன்றிய மெய்யியல் இறைநெறிகளும் இந்தக் கற்றறிந்தோர் குழுமத்தையும் ஆட்சியில் இருந்த ஆளுமையாளர்களையுமே இலக்கு வைத்தன.

அக்காலத்தில் வாழ்ந்த தமிழர் எண்ணிக்கையில், ஆளுமைச் சமூகம் உட்படக் கற்றறிந்தோர் சமூகம் பத்து விழுக்காட்டுக்கும் குறைவானதாகவே இருந்திருக்க வேண்டும். மெய்யியல் இறைநெறிகளும் இந்தப் பரப்புக்குள்ளேயே காலுன்றி வளர்ந்தன. 

தமிழர்தொகையில் மேற்குறித்த பத்து விழுக்காட்டினர் போக, ஏனைய தொண்னூறு விழுக்காடு தமிழர்கள் யாவர்? அவர்கள் எங்கே இருந்தனர்? அவர்களின் கல்விநிலை என்ன? வாழ்வியல் பின்னணி என்ன? என்ற வினாக்கள் எழுகின்றன.

இன்றுவரை தமிழர் நிலத்தில் கிராமங்கள் தோறும் வாழ்ந்து வருகின்ற நாட்டுப்புற மக்கள், பட்டிக்காட்டு மக்கள், பாமர மக்கள் எனக் கருதப்படுவோரே அன்றைய அந்தத் தொன்னூறு விழுக்காடு மக்களின் இன்றைய தொடர்ச்சிகள் ஆவர். 

கற்றறிவாளர் சமூகம் ஒருபுறத்தில் ஏட்டிலக்கியங்கள் வழியே இயங்க, மறுபுறத்தில் கற்றறிவில்லாதோர் நாட்டார் சமூகமாக இயங்கினர். ஏட்டுக்கல்வியறிவு பெற்றிராத இவர்களை ஏட்டிலக்கிய சமூகம் பெரிதும் கண்டுகொள்ளவில்லை. உழவு உட்பட பல்வேறு தொழில்களையும் கிராமங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கையையுமே இவர்கள் கொண்டிருந்தனர்.

மெய்யியல் இறைநெறிகள் தமிழருக்குள் காலூன்ற முன்னர், ஆளுமைச் சமூகத்துக்கும் ஆட்சிக்குட்பட்ட மக்களுக்குமிடையே நெருக்கம் இருந்தமைக்குச் சங்க இலக்கியங்கள் சான்றாக உள்ளன.

தமது மெய்யியல் கொள்கைகளையும் ஒழுக்கங்களையும் மக்களிடையே பரப்ப முயன்ற இறைநெறிகள் ஆளுமைச் சமூகத்தையும் கற்றறிந்தோரையுமே குறி வைத்தன. கல்வியறிவற்ற நாட்டார் சமூகத்தை அவை பெரிதும் கண்டுகொள்ளவில்லை. அதுமட்டுமன்றி, இந்து மதநெறிகள் வர்ணம் என்ற சாதியப்பிரிவை அறிமுகப்படுத்தித் தலித், தாழ்த்ப்பட்டோர் என்ற பெயர்களோடு பெரும்பாலான நாட்டுப்புற மக்களை தமது இறைநெறிக்கு வழிபாட்டுக்கு வெளியே வைத்தன. 1930களுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆலய நுழைவுப் போராட்டங்களுக்குப் பின்னரே நாட்டுப்புற மக்கள் மெய்யியல் வழிபாட்டு ஆலயங்களுக்குள் ஓரளவேனும் காலடி வைக்கத் தலைப்பட்டனர்.

நாட்டுப்புற மக்கள் கல்வியறிவு இல்லாதிருந்த பொழுதிலும் பல்வகைப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளில் பாதிப்புகளுக்குப் பெருமளவில் ஆளாகாவில்லை. இதனாலேயே பண்டைய தமிழரின் பண்பாட்டுத் தொடர்ச்சி இவர்களிடையே பாரியளவிலான மாற்றங்களுக்கு உட்படாமல் பேணப்பட்டு வந்திருக்கின்றது. ஓரினத்தின் பண்பாட்டு நிலைக்களன்களாகத் திகழ்பவை அவ்வனத்தாரின் நாட்டுப்புற வாழ்வியலே என வரலாற்று அறிஞர் பலர் குறிப்பிட்டிருக்கின்றனர். 
தமிழில் தோன்றிய இலக்கியங்கள் பலவும் தமிழ் வாழ்வியல் மரபுகளோடு, மெய்யியல் இறைநெறிக் கருத்துகளையும் பிறவினத்தோரது பண்பாட்டு மரபுகளையும் உள்ளடக்கிக் கூறியவற்றை செவ்வியல் மரபுகள் எனக் குறித்தன. 

கற்றறிந்தோர் வெளிகளுக்குள் மட்டுமே நின்றுலாவிய ஏட்டிலக்கிய மரபுகள், நாட்டார் மரபுகளைத் தவிர்த்தே வந்துள்ளன. மேட்டுக்குடியினர் (அறிவு - ஆளுமை) என்ற பரப்புக்குள் ஆளுமை செலுத்திய மெய்யியல் இறைநெறிகளோடு, இயைந்து இயங்கிய படைப்பாளிகள் பலரும் நாட்டார் வாழ்வியலைக் கண்டுகொள்ளாது விட்டனர். ஏறக்குறைய பதினைந்து நூற்றாண்டுகாலத் ஏட்டிலக்கிய வரலாறு,  நாட்டார் வழக்காற்றியலைப் பெரிதும் கண்டுகொள்ளவே இல்லை. குற்றாலக் குறவஞ்சி போன்ற ஓரிரு இலக்கியங்கள் மட்டுமே விதிவிலக்காக அமைந்தன.

தொன்மைக்காலந்தொட்டு நாட்டுப்புற மக்களே பழமை சான்ற பல்வேறு விழாக்களையும் சடங்குகளையும் பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் இன்றுவரை சுமந்து வந்தோராவர்.
ஆளுமைச் சமூகமும் அறிவுடைச் சமூகமும் பெரிதும் ஆரிய, ஆங்கில ஆளுமைக்குள்ளேயே அமிழ்ந்திருந்தன. தமிழரின் மொழி, சடங்கு, வழக்கம், இசை, ஆடல் போன்ற இனத்தின் தன்னியல்புச் சிறப்புகளை வெளிப்படுத்தவல்ல களங்கள் யாவற்றிலும் ஆங்கிலமும் ஆரியமும் ஊடுருவியிருந்தன. இவற்றின் வழியே மாற்றம்பெற்ற போக்குகளைச்; தமிழர் மரபுகள் என வெளிக்காட்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. நாட்டுப்புறத் தமிழர்கள் காலங்காலமாகக் கொண்டாடி வருகின்ற சிறப்புமிக்க பல விழாக்களையும் நடத்தைகளையும் மேட்டுக்குடி எனக் கருதிக்கொண்டோர் பெரிதும் கண்டுகொள்ளவில்லை. எனினும் பெரும்பாலான நாட்டுப்புற ஊரகங்கள் பிற பண்பாட்டுப் படையெடுப்புகளுக்கு உட்படாத தூய தமிழ்ப்பண்பாட்டுக் களங்களாகவே இருந்தன.

தமிழர் தேசிய விழாவான பொங்கல்: 

திராவிடச் சிந்தனையும் தனித்தமிழ் எழுச்சியும் ஏற்பட்டவேளை, தமிழர, தமது அடையாளங்களை இலக்கியங்களுக்குள் மட்டும் தேடவில்லை. தமிழரின் தனிச்சிறப்பு மிக்க பண்பாட்டுக் கூறுகள் மாசுமறுவின்றி பேணப்பட்டு வருகின்ற களங்கள் ஊரகங்களே எனக் கண்டுகொண்டனர். கலப்புறாத மரபுகளும் வேர்களும் நாட்டுப்புற ஊரகங்களில்தான் கண்டுகொள்ளப்பட்டன. இன்றளவில் தமிழர் பேர்றறம் பல பண்பாட்டுக்கூறுகள் அங்கிருந்து மீட்கப்பட்டவையே. 

தமிழர் நாட்டார் விழாக்கள் தனிச்சிறப்பு மிக்கவை. நாட்டார் வழக்காற்றியல் வாழ்வு, ஆடலும் பாடலும் நிறைந்த கொண்டாட்டமாகவே இருந்திருக்கின்றது. வாழ்வின் அனைத்துப் படிநிலைகளையும் பாடல்களாகவே பாடிக் கொண்டாடியிருக்கின்றனர். பல்வகைப்பட்ட ஆடற்கலைகளைக் ஆடி மகிழ்ந்திருக்கின்றனர். தாம் வழிபட்ட அனைத்து சிறுதெய்வங்களுக்கும் ஆண்டுதோறும் விழாவெடுத்துக் களிப்புற்றிருக்கின்றனர். உண்டி கொடுத்து உயிர்காக்கும் உழவுத்தொழிலை தெய்வத்துக்கு இணையாகப் போற்றிய தமிழர் அறுவடை நாட்களை வெகுசிறப்போடு கொண்டியிருப்பர் என்பதில் ஐயமில்லை.

நாட்டுப்புற மக்கள் எழுச்சியோடு கொண்டாடிய  தைப்பொங்கலான அறுவடைத் திருவிழாவின் சிறப்புகளைத் திராவிடச் சிந்தனையாளரும் தனித்தமிழ் இயக்கத்தோரும் நன்குணர்ந்தனர். பொங்கலின் சிறப்புகளை விரிவாக்கி, அதையே தமிழரின் தேசிய விழாவாக்கினர்.

மெய்யியல் இறைவழிபாட்டு நெறிகளிலிருந்து மாறுபட்ட, தமிரின் தனிச்சிறப்புகளை மட்டுமே சுமந்த ஒரு விழாவாகப் பொங்கல்விழாவைச் சிறப்புடையதாக்கினர். இதை அடியொற்றியே பாரதிதாசன்,

'தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள்
செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம்
பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய்
ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப்
பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்
எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்!
தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்!"  

என்ற பொங்கல் பாடலை எழுதினார். இப்பாடலில் ‘தலைமுறை தலைமுறை தவழ்ந்துவரும் நாள்’ எனப் பாவேந்தர் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

ஆவணித் திங்களில் விதை விதைத்து, அதை முளையாக்கிப் பயிராக்கி, வளர்த்து, இடர்களில் இருந்து காத்து விளைவித்துப் பயனை வீட்டுக்குக் கொண்டுவருதற்குச் சில திங்கள்களாகும். கடும் உழைப்பின் நிறைவில் உழவின் பயன் வீடு வந்தடையும்போது உழவர் சமூகம் பெறும்; மகிழ்வுக்கு அளவேயில்லை. அந்த மகிழ்வைத் தமிழர் அறுவடை விழாவாகவே கொண்டாடியிருக்கின்றனர். அதற்கான சான்றுகள் இலங்கியங்களில் நிறைவே உள்ளன. 'பொருபடை தரூஉம் கொற்றமும் உழவர் ஊன்றுகால் மருங்கின் ஈன்றதன் பயனே" எனப் புறநானூறு உழவைச் சிறப்பிக்கின்றது. பழந்தமிழ் இலக்கியங்கள் உழவுத்தொழிலுக்கு அடுத்தே போர்த்தொழிலைப் போற்றியிருக்கின்றன. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடு;த்தோர்’ என ஒரு புலவர் உழவர்களை உயர்த்துகின்றார்.

வாழ்வின் பல படிநிலைகளிலும் வேண்டுதல்களுக்காகவும் மனநிறைவுக்காகவும் பல்வேறு தெய்வங்களை வணங்கி விழாவெடுத்த தமிழர், அறுவடை நிறைவுற்ற நாளில் வயல் சிறக்கப் பேராதரவாய்த் திகழ்ந்த கதிரவனைப் போற்றி வணங்கியிருப்பர் என்பது இயல்பானதே.
மெய்யியல் இறைநெறிகள் வலுவாக வேரூன்றியிராத காலத்தில், சமணரான இளங்கோவடிகள், சிலப்பதிகாரத்தின் இறைவணக்கத்தில் 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்" எனக் கதிரவனையே வணங்குகின்றார். குடிமக்கள் காப்பியம் எனப் போற்றப்படும் சிலப்பதிகாரம் கூறும் கதிரவ வணக்கம் உழவுத்தொழிலோடு தொடர்புடையது என்பதையும் நாம் உணர வேண்டும்.

உழவைக் கொண்டாடும் உணர்வு மட்டுமன்றி, உழவு சிறக்க உதவிய இயற்கை இறையான கதிரவனையும் நன்றியோடு வணங்கும் பண்போடும் இணைந்து தோற்றம் கொண்டதே அறுவடைவிழாவென நாம் கருதலாம். தமிழர் வாழ்வில் உற்ற துணையாக விளங்கிய தோழமை உயிரி மாடு. உழவுத்தொழிலில் இணையற்ற பங்காற்றிய மாடுகளுக்கு நன்றிகூறும் உயரிய உள்ளம் கொண்டவர்களாகத் தமிழர் இருந்தனர். வாழ்வின் ஆதார இருப்பாக விளங்கும் உழவுத்தொழிலோடு இணைத்து பண்டைத்தமிழர்களால் படைக்கப்பட்ட கொண்டாட்டமாகவே அறுவடைவிழாவைக் கருதலாம்.

இன்று கொண்டாடப்படும் பொங்கல்விழா அறுவடைவிழாவின் தொடர்ச்சியே எனக் கடந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் இந்த விழா பல்வகை மாற்றங்களை உள்வாங்கியிருக்கக் கூடும் என்பதை நாம் மறுக்கவில்லை. பிறவினத்தோரின் கலப்பற்ற கிராமிய வாழ்வாக இருந்தபோதும் காலவோட்டத்தில் ஏற்படும் வாழ்வியல் மாற்றங்கள் இயல்பானதே. பண்பாடுகளும் மரபுகளும் கூட அசைவுகள் என்ற வகையில் மாற்றங்களை உள்வாங்கிச் செல்வது நடைமுறைக்கு ஏற்புடையது. தொன்மை சான்ற அறுவடைவிழாவானது, காலவோட்டத்தில் தைமாதத்துக்குரிய பொங்கல்விழாவெனப் பெயர் கொண்டு, தொடர்ந்து ஐந்து நாட்கள் நடத்தப்படுகின்ற கொண்டாட்டமாக விரிந்திருக்கின்றது.

ஐந்து நாட்களும் கொண்டாடப்படுகின்ற பொங்கல்விழா பற்றி விரிவாக நோக்குவோம்.

போகிப்பொங்கல்

போகி என்ற சொல் ‘போக்கி’ என்ற சொல்லின் திரிபாக வந்ததென்பர். பழையவற்றைப் போக்குதல் என்ற செயலின் வழியாகத் தோன்றியது போக்கி என்ற தொழிற்பெயர்ச் சொல். மார்கழி நிறைவு நாளன்று வீட்டைத் தூய்மைசெய்து பழைய பொருட்கள் யாவற்றையும் தீமூட்டி எரிக்கும் நிகழ்வே போகிப் பொங்கலாகும்.

கதிரவப்பொங்கலுக்காக வீட்டையும் சுற்றாடலையும் தூய்மை செய்வது வழமை. இடங்களைத் தூய்மைசெய்து, குப்பைகளையும் கழிவுகளையும் ஓரிடத்தில் குவிப்பர். அறுவடையின் வாயிலாகப் பயன்பெற்றுப் பல தேவையான புதிய பொருட்களை வாங்கக் கருதியிருப்பர். அவ்வேளை பல பயன்படாத பொருட்களையும் அகற்றி குப்பைகளோடு குவிப்பர். பின்னர் அவற்றுக்குத் தீமூட்டி எரித்து அந்த ஒளியில் ஆடி மகிழ்வர். வீட்டுக்கு வண்ணம் தீட்டுதல், மாடுகளைச் தூய்மைசெய்து பொங்கலுக்கு அணியம் செய்தல் என்பனவும் இந்த நாளில் நடைபெறுவன.

தமிழகக் ஊரகங்களில் பலவிடங்களில் இந்நாளன்று வைகறையில் நிலைப்பொங்கல் செய்வர். வீட்டின் முன்வாயில் நிலைக்கு மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச்செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வீட்டுத் தெய்வத்தை வணங்குவர். பெரும்பாலும் இவற்றைக் குடும்பத்தலைவி நடத்துவார்.
 
போகிப்பொங்கன்று இரவே வீட்டு முற்றத்தில் வட்டமாக சாணத்தால் மெழுகி வைப்பர். மறுநாள் பொங்கலுக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிப்பர்.

பழையவற்றை அகற்றும் இந்தநாளைக் கொண்டாட்ட நாளாகவே கருதினர் தமிழர். மறுநாட்களில் வரக்கூடிய விழா மகிழ்வின் தொடக்கமாகப் போகியைப் பொங்கலாகவே கருதிப் போற்றினர். ஆண்டின் நிறைவுநாள் என்பதால் கடந்த ஆண்டுக்கு நன்றிசொல்லும் விழா என்றும் சிலர் இதைக் கருதுவர்.
போகியன்று வேப்பிலை, ஆலாப்பூ, ஆவாரம்பூ போன்றவற்றை வீட்டுக்கூரையில் செருகுவர். இவை நோய்த்தொற்றைத் தடுக்கும் தன்மை கொண்டன.

வீட்டில் உள்ள குப்பை, கழிவுகளை எரித்தல் என்ற நிகழ்வை மெய்யியல் அடிப்படையிலும் சிலர் நோக்குகின்றனர். சிந்தையில் இருக்கும் துயரங்களையும் எதிர்காலம் பற்றிய அச்சங்களையும் அகற்றி, அவற்றையும் எரித்துப் புதிய ஆண்டைத் தொடங்குவோம் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விழாவாகவும் போகிப்பொங்கலைக் கருதுகின்றனர்.

இந்தநாளில் சிறுதானியங்களில் உணவு செய்வர். எள், பயறு, உழுந்து போன்ற தானியங்களில் உணவு செய்து சிறுதெய்வங்களுக்குப் படைத்துத் தாமும் உண்பர்.

இந்தப் போகித் திருநாளை வடநாட்டாரே அறிமுகப்படுத்தினர் என்றும் இதன் வழியாகப் பழைமை வாய்ந்த ஏடுகளையும் பாரம்பரிய பொருட்களையும் எரியூட்ட வழிவகுத்தனர் என்ற கருத்தும் உண்டு.

கதிரவப் பொங்கல். 

இந்நாளே தைத்திங்களின் முதல்நாளாகும். கதிரவன் வெப்பம் தரவல்ல வடதிசையை நோக்கி நகர்வதைப் போன்ற தோற்றத் தருகின்ற முதல்நாள். இதை வடமொழியில் சங்கராந்தி என்பர். மார்கழி மாதத்தில் பனியும் புகாருமாய் மூடிக்கிடந்த நிலம் கதிரவனின் வடசெலவோடு சற்ற வெளிக்க ஆரம்பிக்கும். தை முதல்நாள் தொட்டு, வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும். தைத்திங்களில் தொடக்கநாள் என்பதோடு, வெப்பகாலத்தின் தொடக்கநாளாகவும் அமைகின்ற நாளையே தமிழர் தம்முடைய அறுவடைவிழா நாளாகக் கொண்டாடினர்.

பண்டைக்காலத்தில் நெற்பயிர் முழுமையான பயனைத் தருவதற்கு நான்கு முதல் ஐந்து திங்கள்வரை செல்லும். ஆவணியில் விதையிட்டால் மார்கழித் திங்கள் இறுதியில் அறுவடை செய்வர். உழவின் வழியே பெற்ற பயனைக் கொண்டாடுவதற்கேற்ற காலமும் இதுவே. உழவர் பொருளாதார மேன்மை காணும் இத்திங்களின் சிறப்பைப் பலவழிகளிலும் போற்றியிருக்கின்றனர். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது பொதுவான பழமொழி.

உழவர்கள் வயலில் முதன்முதலில் அறுவடை முடித்து எடுத்துவந்த கதிர்களைப் ஓரிடத்தில் பேணிவைப்பர். பொங்கலன்று அந்தக் கதிர்களைக் குற்றி அரிசியாக்கி, அதில் பொங்கல் செய்து, அதைக் கதிரவனுக்குப் படைத்து தமது நன்றியுணர்வை வெளிப்படுத்துவர். 

கதிரப்பொங்கலன்று அதிகாலை வீட்டிலுள்ள அனைவரும் எழுந்து நீராடி புத்தாடை அணிவர். கதிரவன் தோன்றுவதற்கு முன்பாகவே முதல்நாள் மெழுகப்பட்ட சாணத்தரைமீது அரிசிமாவில் கோலமிடுவர். கோலத்தின் ஒருபுறத்தில் தலைவாலையிட்டு நிறைகுடம் வைப்பர். மங்கல விளக்குகளும் வைப்பர். கோலத்தின் நடுவே மூன்று கல் வைத்து அடுப்பு மூட்டுவர். மஞ்சளும்  இஞ்சியும் மாவிலையும் கட்டப்பட்ட புதிய பானையை அடுப்பிலே வைத்து தூயநீரூற்றிக் கொதிக்க வைப்பர். இதனிடையே கரும்பு, தோட்டத்தில் விளைந்த பல்வகைப் பழங்கள், விளைபொருட்கள் பலவற்றையும் பொங்கும் பானையைச் சுற்றி வைப்பர்.

நீர் கொதித்துவரும் வேளையில் பாலை ஊற்றுவர். பால் கொதிக்கும் நிலையில் பானையில் இருந்து பொங்கி வழியும். கதிரவன் தோன்றும் பொழுதில் இது நிகழ வேண்டும் என அனைவரும் விரும்புவர். அதுவும் கதிரவன் தோற்றும் திக்கை நோக்கிப் பால் பொங்கி வழியுமாயின் பொங்கலிடுவோர் பெருமகிழ்ச்சி கொள்வர். பால் பொங்கும் வேளைக்காகக் காத்துநின்ற குடும்பத்தார் அனைவரும் பால் பொங்கும் போது, ~பொங்கலோ பொங்கல்| எனச் சத்தமிட்டு மகிழ்வர்.

பின்னர் எடுத்து வைத்த அரிசியைக் குடும்பத்தலைவர் இருகைகளாலும் அள்ளியெடுத்து தெய்வீக உணர்வுநிலையில் பானையில் இடுவார். பின்னர் குடும்பத்தோர் அனைவரும் பானையில் அரிசி இடுவர். தொடர்ந்து ஏனைய பொங்களுக்குரிய பொருட்களும் வெல்லமும் சேர்க்கப்பட்டு, உரியவகையில் பொங்கல் ஆக்கப்படும். இதேவேளை ஏனையோர் அவல், கடலை, மோதகம் என்பவற்றையும் மற்றுமொரு அடுப்பில் செய்வர்.

இவையாவும் செய்யப்பட்டவுடன், நிறைகுடத்துக்கு முன்பாகத் தலைவாலையில் கதிரவன் எழுந்திருக்கும் திசை நோக்கி ஆக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் படைக்கப்படும். மங்கலவிளக்குகளைக் குடும்பத்தலைவி ஏற்றுவார்.  படைத்தவுடன் குடும்பத்தார் அனைவரும் சுற்றிநின்று கதிரவனை நன்றியோடு வணங்குவர். பலர் பாடல்களும் பாடுவர். உழவர்கள் கதிரவனை நோக்கி நிலத்தில் விழுந்து வழங்குவர்.

இவ்வேளை பெரும்பாலும் பிறதெய்வங்களை உழவர்கள் வணங்குவதில்லை. சாணத்தில் அறுகம்புல் செருகி வைத்து வணங்கும் வழக்கம் பின்னாளில் இடையிட்டுத் தோன்றியதாக இருக்க வேண்டும். பட்டாசு கொழுத்துதல் போன்றனவும் பின்னாட்களில் வணிக நோக்கத்தோடு அறிமுகமானவையாகும்.
பொங்கல் படைக்கப்பட்டு, கதிரவனை வழிபட்டபின், அனைவருமாகக் கூடியிருந்து பொங்கல் உண்டு மகிழ்வர்.  பின்னர் அயலோர் வீடுகளுக்கும் பொங்கலை எடுத்துச் சென்று வழங்குவர். தனித்து வாழ்வோருக்கும் துறவிகளுக்கும் இயலாதோருக்கும் பொங்கல் உட்பட பல்வகை உணவுப்பொருட்களைக் கொண்டுசென்று வழங்குவர்.

மாட்டுப்பொங்கல்

மாடு என்றால் செல்வம் என்பதே தமிழ் கூறும் உயர்பொருள். தமிழர்களின் மிக நீண்ட வாழ்வியலில் மாடுகள் பேரங்கமாகவே திகழ்ந்து வந்துள்ளன. மாடுகளுக்காகவே பெரும் போர்களும் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. தொல்காப்பியம் கூறும் புறத்திணையில் காணப்படும் போர் மரபுகள் ஆநிரை கவர்தலையும் காத்தலையும் அடிப்படையாகக் கொண்டவை.

மாடு என்ற விலங்கினம் உடலளவில் பலமானது என்ற போதிலும் மென்னியல்பு கொண்ட விலங்காக, மாந்தரோடு இயைந்து, இணைந்து வாழும் உயிரினமாகவே இருந்தது. தாம் வளர்க்கும் மாடுகளை உழவர்கள் குடும்ப உறுப்பினர்களாகவே கருதினர். பெண் மாடான பசு மாந்தரின் உணவுத் தேவைகளைக் பெருமளவில் நிறைவேற்றியது. ஆண் மாடான காளை உழவு, செலவு (பயணம்) போன்ற தேவைகளில் பெரும்பங்கு வகித்தது.

பண்டைய வாழ்வியலில், மக்களது செல்வத்தின் அளவு, மாடுகளை வைத்தே கணக்கிடப்பட்டது. மாடுகளைத் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றிய தமிழர், மாட்டிறைச்சி உண்பதை முற்காலம் முதலே தவிர்த்து வந்துள்ளனர்.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஆவினத்தைத் தமிழர் போற்றி வந்தமை மாடுகள் மீது அவர்கள் கொண்டிருந்த பேரன்பை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது.

உழவுத்தொழில் சிறக்க உதவியோர் அடுக்குகளில் கதிரவனுக்கு அடுத்த இடத்தை மாடுகள் பிடித்துக்கொள்கின்றன. இவை இரண்டுமே பயனை எதிர்பாராமல் மாந்தருக்கு உதவி வருகின்ற இயற்கையின் வளங்கள். அதனால் தமிழரின் உயர்ந்த நன்றிக்குரியவையாகிவிடுகின்றன. அந்த நன்றியறிதலைப் பெருங்கொண்டாட்டமாகவே நிகழ்த்தி வருகின்றனர் தமிழர்.
கதிரவப் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது. இதைப் பட்டிப் பொங்கல், கன்றுப்பொங்கல் என்றும் அழைப்பர். பொங்கல்நாளான்று காலை, மாடுகள் கட்டும் தொழுவத்தைத் தூய்மை செய்வர். மாடுகளை நன்றாகக் கழுவி அவற்றையும் தூய்மை செய்வர். கொம்புகளைச் சீவிக் கூராக்கி, பளபளக்கும் வண்ணங்கள் தீட்டுவர். கொம்புகளில் குஞ்சங்களும் கட்டுவர். கழுத்தில் தோல்பட்டைகள் அணிவித்து மணிகளும் கட்டிவிடுவர். மாடுகளில் நெற்றியில் பொட்டுகளும் வைப்பர். காளைகளுக்கு புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு போன்றவற்றையும் அணிவிப்பர்.

ஏர், கலப்பை போன்ற உழவுக்கருவிகளையும் தூய்மை செய்வர். எல்லாவற்றையும் ஓரிடத்தில் வைத்து பொட்டுகள் இட்டுச் சிறப்புச் செய்வர்.

பின்னர் மாலைப்பொழுதில் தொழுவத்துக்குள் அல்லது அதனருகே பொங்கல் செய்யத் தொடங்குவர். முதல்நாள் செய்த கதிரவப் பொங்கலைப் போலவே பல்வகைப் பழங்களும் தானியங்களும் மாட்டுப்பொங்கலின்போது படைக்கப்பட்டிருக்கும். மாடுகளுக்குப் பிடிக்கும் என்பதற்காக வெண்பொங்கல் செய்யும் வழக்கமும் உண்டு. பொங்கிய பின், விளக்கேற்றி, ஒளியேந்தி மாடுகளை வழிபடுவர். எல்லா மாடுகளுக்கும் பொங்கிய பொங்கலையும் பழங்களையும் காய்கறிகளையும் ஊட்டுவர்.
நிறைவில் 'பொங்கலோ பொங்கல், மாட்டு பொங்கல், பட்டி பெருகுக, பால் பானை பொங்குக, நோவும் பிணியும் தெருவோடு போக" என்று கூறி மாடுகள் பொங்கல் உண்டபின் அருந்திய மிகுதி நீரைத் தொழுவம் எங்கும் தெளிப்பர்.

ஐந்தறிவு கொண்ட விலங்குதானே, நன்றி சொன்னால் அதற்குப் புரியவா போகின்றது? என்றெண்ணி விட்டுவிடாமல் மாடுகளையும் மாந்தநேயத்தோடு போற்றும் பண்பு மானுடத்தின் உயர்ந்த இயல்பாகும். மாட்டுப்பொங்கல் இதையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

காணும் பொங்கல்:

பொங்கல் கொண்டாட்டங்களில் இது நான்காம்நாள் கொண்டாடமாகும். முதல் மூன்று நாட்களிலும் தமது குடும்பச் சூழலுக்குள் பொங்கலைக் கொண்டாடிய தமிழர், இந்த நான்காம்நாளைச் சமூகக் கொண்டாட்டமாக்கினர். ஊர்மக்களாக ஒன்றிணைந்து அன்பும் பண்பும் சிறக்க, இந்நாளைச் சமூகப் பெருவிழாவாகக் கொண்டாடுவர். இந்நாளிலே குடும்பமாகச் சென்று, பெரியோர்களைக் கண்டு, வாழ்த்துகள் பெறுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்நாளிலே கிடைக்கப்பெறும் பெரியோரின் வாழ்த்துகள் ஆண்டு முழுமைக்கும் நன்மை தரும் என்று நம்பினர்.

அன்றையநாள் ஊருக்கு நடுவே உள்ள திடலில் ஊர்மக்கள் கூடுவர். கொண்டுவந்த சிற்றுண்டிகளை ஊரவரோடு பரிமாறி உண்டு மகிழ்வர். ஒருவரையொருவர் கண்டு, அன்பு நெகிழப் பேசிக் உவகைகொள்வர். அந்தத் திடலில் பல்வகைக் கலைநிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருப்பர். பெரும்பாலும் நாட்டார்;கலைகள் யாவும் இங்கு வெளிப்படும். உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல், தலையணைச் சண்டை போன்ற விளையாட்டுகளுடன் பட்டிமன்றம், கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகளும் இந்நாளில் நடைபெறுவன.

இந்நாளிலேதான் ஏறுதழுவுதல் என்ற பழந்தமிழர் விளையாட்டான சல்லிக்கட்டும் இடம்பெறுகின்றது. தமிழர், காளை மாடுகளை எப்போதும் பலம் செறிந்ததாகவே வளர்ப்பர். உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் வலு மிகுந்த காளைகள் வேண்டும். இந்தக் காளைகள் சிலபொழுதுகளில் கட்டுக்கடங்காமல் திமிறிப் பாயவல்லவை. அவ்வேளை இக்ககாளைகளை அடக்கும் வல்லமைகளையும் நெறிமுறைகளையும் ஆண்கள் தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறான காளைகளை அடக்கவல்ல ஆண்கள் ஊர் நடுவே வீரர்களாகவே போற்றப்பட்டனர். காளைகளை அடக்கும் இளைஞர்களுக்கே தமது மகளைத் திருமணம் செய்து வைப்போம் என பல பெற்றோர் கருதி வந்துள்ளனர். போர்க்களத்தில் வீரர்களை அடையாளம் காணமுன், ஊரக மக்கள் ஏறுதழுவுதல் என்ற வீரவிளையாட்டின் வழியே தீரம்மிக்க இளையோரை அடையாளம் கண்டனர்.

மாடுகளை மந்தைகளாக மேய்க்கச் செல்லுமிடங்களில் மாடுகளைக் கவர்ந்து செல்லப் பகைவர்கள் வருவர். அவர்களை எதிர்த்து நின்று மாடுகளைக் காக்கவேண்டிய வீரமும் மேய்ப்போருக்கு இருக்கவேண்டும். மேய்ப்போரின் வீரத்தை அடையாளம் காணவும் ஏறுதழுவுதல் பயன்பட்டது. மேய்ப்போர் கொண்டுசெல்லும் நீண்டதடியைத் தற்பாதுகாபபுக்காகப் பயன்படுத்திச் சண்டையிடுவர். அதுவே பின்னாட்களில் சிலம்பாட்டம் என்றானது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏறுதழுவுதல் பற்றிய பல செய்திகள் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.

பிற்காலத்தில் மாடுகளின் கழுத்தில் பரிசுப்பொருட்களைக் கட்டி ஓடவிடுவர். அக்காளைகளை அடக்குவோர் அப்பரிசுகளை எடுத்துச் செல்வர். அதில் உலோகக் காசுகளைக் கட்டிவிடும் வழக்கமும் ஏற்பட்டது. கலகலக்கும் உலோகக் காசுகளைச் சல்லிக்காசு என்றழைக்கும் வழக்கம் இன்றும் ஊரகங்களில் உள்ளது. இதுவே சல்லிக்கட்டு என்றழைக்ப்பட்டு இன்று ஜல்லிக்கட்டாக மருவி நிற்கின்றது. இதனை ஒரு சாரார் மஞ்சுவிரட்டு என்றும் அழைத்து வருகின்றனர்.

நான்காம் நாளான காணும்பொங்கல், கலைநிகழ்ச்சிகளும் விளையாட்டுகளும் நிறைந்த விழாவாகவும் சமூக ஒருமைப்பாட்டை ஆழமாகவும் மீளவும் வலியுறுத்தும் பொதுமைக்களமாகவும் இன்றும் திகழ்ந்து வருகின்றது.

இந்நாளைக் கணுப்பொங்கல் என அழைக்கும் ஒரு வழக்கமும் இருக்கின்றது. இந்நாளில் கணுப்பிடி என்னும் ஒருவகை நோன்பைப் பெண்கள் கடைப்பிடிப்பர் என்றும் தம்மோடு உடன்பிறந்த ஆண்மக்கள் நலமாக இருக்க வேண்டும் என வேண்டி இந்த நோன்பு கடைப்பிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்நாளில் சல்லிக்கட்டு விளையாட்டில் ஈடுபடப்போகும் ஆண்கள், புண்படாது நலமாகத் திரும்ப வேண்டும் என்று பெண்கள் வேண்டுவது இயல்பானதே. இப்போது இந்த நோன்பு பெரிதும் வழக்கத்தில் இல்லை.

சிற்றில் பொங்கல்:

சிற்றில் பொங்கல் இப்போது பெருவழக்கில் இல்லையென்றே கூறலாம். தொடர்ந்து நான்குநாள் கொண்டாட்டத்தின் பின் வீட்டுப் பெண்கள் பலரும் சோர்வடைந்திருப்பர். இந்நிலையில் இந்த ஐந்தாம் நாளில் வீட்டிலுள்ள சிறுபெண்களே சமையல் செய்யப் பணிக்கப்படுவர். அதாவது விடலைப் பருவத்தினரான சிறுபெண்கள் பெரியோருடைய துணையுடன் தாமாகவே சமையல்செய்து பெரியோருக்குப் பரிமாறுவர். இச்சிறுபெண்கள் சமையலைக் கற்றுக்கொண்டு, ஏனையோருக்குப் பரிமாறும் முறைகளைத் தெரிந்து கொள்ளும் நாளாகவும் இது அமைகின்றது. இந்நாளில் இவர்களின் சமையல் திறனை ஊக்குவித்துப் போற்றுவர் பெரியோர்.

சிறிய இல் என்ற பொருள்பட, சிற்றில் என்ற சொல் இங்கு கையாளப்பட்டுள்ளது. சிறுமியர் மணலில் கட்டி விளையாடும் சிறு வீட்டையும் சிற்றில் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.
இவ்வாறாக பல்வேறு சிறப்புகளுடன் இந்த ஐந்து நாட்களும் தொடர்ச்சியாகக் கொண்டாடப்பட்டன. இதுபோன்று தொடர்ச்சியாகக் கொண்டாடும் இனஞ்சார்ந்த விழாக்கள் தமிழரிடையே வேறில்லை.

பொங்கல் வெளிப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகள்.

பொதுவாகப் பண்பாட்டுக் கூறுகளை அகச்சார்பு, புறச்சார்பு என இருவகையாகப் பிரிக்கலாம். ஓரு மானுடக் குழுமத்தின் தன்னியல்புச் சிறப்புமிக்க வாழ்வியலோடு இரண்டறக் கலந்து காலங்காலமாகப் பேணப்பட்டு வருகின்ற நடத்தைகளை அகச்சார்புக் கூறுகள் எனக் கருதலாம். விருந்தோம்பல், நன்றியறிதல் போன்றன அகத்திலிருந்து மலர்கின்ற பண்பாட்டுக் கூறுகளாகும். பொங்கல்விழா தமிழர் வாழ்வியலின் பல அகக்கூறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 

தீபாவளி என்ற பண்டிகையும் தமிழரால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இது வடநாட்டாரின் மெய்யியல் இறைநெறியைத் தழுவிய கொண்டாட்டம். தென்னிந்தியர் இந்தப் பண்டிகையை எவ்வித ஆழமான பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டிராமல், மகிழ்வுற்றுப் பொழுதுபோக்கும் விழாவாகவே கொண்டாடி வருகின்றனர். இவ்விழாவும் தமிழருடைய கொண்டாட்டக் கூறுகளில் ஒன்றாகிவிட்டது. இது தமிழருடைய தனிச்சிறப்பான அகக்கூறோடு ஒட்டாமல் புறத்தே நிகழ்கின்ற விழாவாகவே இருக்கின்றது. எனவே இது புறச்சார்பு பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டதாகும்.
தமிழ்மக்களுடைய அகவியலின் அதியுயர்ந்த வெளிப்பாடாகப் பொங்கல்விழாவைக் கருதலாம். இனி பொங்கல் வெளிப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகளை ஒவ்வொன்றாக நோக்குவோம்.

அன்புடை உள்ளம்

விலங்குநிலை வாழ்விலிருந்து மாந்தரை விடுவித்துப் பண்புடை உலகத்துக்கு இட்டுச் சென்றது அன்பு என்ற உயர்வுணர்வே. அன்பெனும் ஊற்றை உள்ளமெங்கும் நிறைத்து அதைப் பண்படுத்தி உயர்ந்தோர் மாந்தர். அன்புநிலை வழியாக பற்று, பக்தி, அருள், இரக்கம் என்ற நல்லுணர்வுகள் மனதிடையே விளைந்தன. குடும்பவாழ்வையும் கூட்டுவாழ்வையும் அன்பென்ற அகவுணர்வே கட்டமைத்தது. அன்பின் வழிநின்று கூடிவாழ்தலின் ஊடாகப் பற்றும் பக்தியும் விழாக்களும் உருவாகின. உள்ளத்தின் பெருக்கெடுத்த அன்பூற்றின் உயர்ந்த அடையாளமாக பொங்கல்விழாக் கருதலாம். தொழில் மீதும் அது சிறக்க உதவியோர் மீதும் கூடி வாழ்வோர் மீதும் கொண்டிருந்த பேரன்பின் வெளிப்பாடே பொங்கல்விழா. பொங்கல்விழா வாயிலாக வெளிப்படும் அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளுக்கும் இந்த அன்பே திறவுகோலாக அமைகின்றது.

அரிசிப் பண்பாடு:

தமிழர்களின் முதன்மை உணவு அரிசியே. 'வரப்புயர நெல் உயரும்" என்ற ஒளவையின் கூற்றே இதற்குச் சான்றாகும். உணவே உயிரிருப்பின் தளம். அத்தளத்தின் களம் நெல் விளையும் வயல். வயல் வழியே விளைந்து வருகின்றது அரிசி. இந்த அரிசியைக் கொண்டே பல்வகை உணவுக் பொருட்களை ஆக்கி, உண்டு மகிழ்ந்தனர் தமிழர். அரிசியைக் கொண்டு பல்வகை உணவுப் பொருட்களைச் செய்துண்ணும் பண்பாடு தென்னிந்தியர்களுக்கே உரியது. அரசியோடு வெல்லம், பால் சேர்த்து பொங்கும் மரபு தென்னிந்தியர்களிடம் மட்டுமே காணப்படுவதாகும்.

அரிந்துகால் குவித்த செந்நெல்' (அகநானூறு 116ம் பாடல்)
'பழஞ்செந்நெல்லின் முகவைக் கொள்ளாள்' (அகம்- 126)
'பால் பெய்செந்நெற் பாசவல் சேற்றோடு' (அகம்- 237)
'வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்' (அகம்- 40)
'வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை' (அகம்- 96)
'வெண்ணெல் வைப்பின் நல்நாடு பெறினும்' (அகம்- 201)

என்ற சங்கப்பாடல் வரிகள் நெல்லின் சிறப்பை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவாகக் கூறியிருக்கின்றன.

'உயர் நெல்லின் ஊர்கொண்ட உயர் கொற்றவ" (மது.83) என்று, நெல்லின் சிறப்பைக் கொண்டே பாண்டியன் நெடுஞ்செழியன் போற்றப்படுகின்றான்.

சங்க இலக்கி;யங்கள் நெல்லின் பல வகைகளைக் குறிப்பிடுகின்றன. குளத்தின் நீரைப் பெற்று விளையும் நெல்லை 'வெண்ணெல்' என்றும் வானம் பார்த்த பூமியில் மழையை நம்பி விளையும் நெல்லை 'ஐவன வெண்ணெல்' என்றும் குறிப்பிட்டனர். நெல்லில் இருந்து தோன்றுபவற்றை அரிசி, சோறு, வல்சி, அடிசில் எனப் பல்வகைப் பெயர்களால் அழைத்தனர்.

உலகில் பேசப்படும் பல மொழிகளுக்கும் அரிசி என்ற சொல்லைத் தமிழே வழங்கியிருக்கின்றது என்பதிலிருந்து தமிழருக்கும் அரிசிக்கும் உள்ள நெருக்கத்தைப் புரிந்து கொள்ளலாம். பின்னாட்களில் நிறைகுடத்தின் கீழே நெல் அல்லது அரிசி வைக்கும் வழக்கமும் ஆகம முறைப்படி நடக்கும் சடங்குகளில் அரிசி தூவி வாழ்த்தும் பண்பும் அரிசியைத் தமிழர் போற்றியiமைக்குச் சான்றாகின்றன.
தமிழருடைய உணவுகளில் அரசியாகத் திகழும் அரிசியை முதன்மையாகக் கொண்ட பொங்கல்விழா தமிழரின் உணவுப் பண்பாட்டின் உயரிய அடையாளமாகத் திகழ்கின்றது.

தொழிலைப் போற்றுதல்:

ஒவ்வொருவரும் செய்யும் தொழிலே அவரவர் வாழ்வுக்குத் தளமாக அமைகின்றது. வாழ்வாதாரமான தொழிலை மதித்துப் போற்றுவதும் மானுடப் பண்புமாகின்றது. இதையே பாரதியார் ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்றார். எனினும் உழவுத்தொழிலை மாந்தர் அனைவரும் போற்ற வேண்டும் என்பதைத் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் பெரிதும் வலியுறுத்தியுள்ளன.

உலகப்பொதுமை கொண்டு, மானுடத்துக்கான நன்நெறிகளை உரைத்த வள்ளுவர் தொழில்களில் உழவை மட்டுமே சிறப்பித்துள்ளார். உழவுக்கென ஓர் அதிகாரத்தை அவர் ஒதுக்கியிருப்பதே உழவின் சிறப்பை வெளிப்படுத்திவிடுகின்றது.

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை” (உழவு: குறள் 1031)

என்ற குறள் வாயிலாக, ‘உலகமே உழவை நம்பிச் சுழன்றுகொண்டிருக்கின்றது. அதனால் உழவே தலை’ என உழவை உயர்த்தி உரைக்கின்றார் வள்ளுவர். உண்டி தந்து உயிர்காக்கும் உழவுத்தொழிலைப் போற்றிக் கொண்டாடுவது உயர்வானதொரு மானுடப் பண்பு என்பதைப் பலரும் வலியுறுத்தியுள்ளனர். இராமாயணம் என்ற ஒப்பற்ற நூலை எழுதிய கம்பர், ஏர் எழுபது என்ற படைப்பினூடாக உழவைப் பெரிதும் போற்றியுள்ளார்.வரலாற்றுக் காலந்தொட்டே தமிழர் உழவுத்தொழிலைப் மிகவுயர்வாகப் போற்றி வந்துள்ளனர். 

பொங்கல்விழா உழவுத்தொழிலைக் கொண்டாடும் ஒப்பற்றதோர் விழா என்பதில் எவருக்கும் ஐயமில்லை. தொழில் போற்றும் மானுடப் பண்பைத் தமிழர் இ;வ்விழா வழியே வெளிப்படுத்துகின்றனர். இப்பண்பின் வழியே வளர்த்த தமிழர் தாம் செய்யும் ஏனைய தொழில்களையும் போற்றிவருவதைக் காணலாம்.

நன்றியுணர்வு: 

மானுடச் சிந்தையில் தோன்றும் ஒப்பற்ற பண்புணர்வுகளில் தலையாயது நன்றியுணர்வு. ஒருவருக்கு உதவுதல் பொதுமையான மானுடப் பண்பு. ஏற்கனவே உதவிய ஒருவருக்கு உதவுதல் ஒருவகைக் கடன். அதனால்த்தான்  'நன்றிக்கடன்' என்றார்கள்.

தொழிலில் உழவைச் சிறப்பித்த வள்ளுவர் பண்புகளில் நன்றியறிதலைச் சிறப்பிக்கின்றார்.

'எந்நன்றி  கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு' 

என்ற குறள் வாயிலாக, ‘நன்றி மறந்தவர்க்கு உய்வே இல்லை’ என்கின்றார் வள்ளுவர். வள்ளுவருக்கு முன்பாகவே சங்க இலக்கியங்களில் நன்றி தொடர்பான பண்புகள் கூறப்பட்டுள்ளன. தமிழர் நன்றியறிதல் என்ற பண்பொழுக்கத்தைக் கைக்கொண்டவர்களாக இருந்துள்ளனர். அவ்வொழுக்கத்தைப் பொங்கல்விழா வாயிலாகச் சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
உலகுக்கு மழையும் வெய்யிலும் தந்து காப்பவன் கதிரோன். கதிரவனின் செயற்றிறத்தாலே உலகம் இயங்குகின்றது. வாழ்வு பெறுகின்றது. தமிழர் இதை நன்குணர்ந்திருந்தனர். தமது வாழ்வின் ஏற்படும் நன்மைதீமைகளுக்காகப் பல்வேறு தெய்வங்களை வழிபட்ட தமிழர், உழவுத்தொழில் தொடர்பில் கதிரவனையே நன்றிக்குரிய முதற்பொருளாகக் கருதினர். இவர்கள் நன்றி கூறாவிடில், கதிவன் சினங்கொள்ளப் போவதில்லை, கதிரவனுக்குப் பழிவாங்கவும் தெரியாது. எனினும் ஒளிதந்து காத்த கதிரவன் மேல் இவர்கள் பேரன்பு கொண்டிருந்தனர். அந்த அன்பின் வழிநின்று கதிரவன் மீதான தமது நன்றிப் பெருக்கை வெளிப்படுத்தினர். இந்த நன்றி வெளிப்பாடு தமிழ் மாந்தருக்குப் பெரும் நிறைவைத் தந்தது. அந்த நிறைவே நன்றியுணர்வை வலுப்படுத்துவதாகவும் அமைந்தது.

தமிழரின் நன்றியறிதலின் மற்றுமொரு சிறப்பு, மாடுகளுக்கு நன்றி கூறும் பண்பு. இந்தப் பண்பொழுக்கத்தின் அகவுணர்வைப் புரியாமல் வெளியே நின்று நோக்குவோருக்கு, மாடுகளுக்கு நன்றி சொல்வது மூடநம்பிக்கையாகத் தோன்றக் கூடும். ஆனால் அதுவே நன்றி கூறும் மானுடப் பண்பின் உச்சநிலை என்பதை உணர வேண்டும். ஐந்தறிவு கொண்டதும் வாய் பேசாததுமான மாடுகள் உழவருக்கு ஆற்றிய உறுதுணையை மனதில் இருத்தி, அவற்றை தமது உறவுகளாகவே போற்றிய தமிழர் மாண்புநிறைப் பண்பு இது. பிறவுயர்களையும் தம்முயிர் போல் போற்றும் மாந்தநேயத்தை மாட்டுப்பொங்கல் நிகழ்வு வெளிப்படுத்துகின்றது.  

இந்நாளில் தமக்கு உதவியோருக்கு அன்பளிப்புகள் வழங்குவதையும் உழவர்கள் கொண்டுள்ளனர். உழவு சிறக்க உதவிய தொழிலாளர்களுக்கு நன்றியுணர்வுடன் புத்தாடைகள், பரிசுப்பொருட்களையும் வழங்குவர். இன்று உழவர்கள் மட்டுமல்ல, வணிகர்களும் இவ்வாறு பல அன்பளிப்புகளைத் தமது பணியாளருக்கு வழங்குவதுண்டு.

கூட்டுணர்வு

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறி வைத்தோர் தமிழர். பல்வேறு படிநிலைகளில் கூடிச் செயலாற்றும் பண்பு, பண்டைக்காலம் தொட்டே நிலவி வந்துள்ளது. தமிழர்கள் விருப்போடு மேற்கொண்ட விழாக்கள் அனைத்தும் கூட்டுணர்வின் வெளிப்பாடே. போர்களும் பிளவுகளும் இருந்தபோதும் சான்றோரும் சமூகமும் கூட்டுணர்வை வலியுறுத்தியே வந்துள்ளனர்.
'ஊரொடு பகைக்கின் வேரொடு கெடும்", 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" போன்ற முதுமொழிகள் கூட்டுணர்வுக்கு வலிமையூட்டும் நோக்கிலே தோன்றியவை. விழைவு என்ற சொல்லிலிருந்து பிறந்ததே விழா என்பதாகும். ஊரோடு கூடி உறவாடும் நோக்கோடு ஏற்பட்ட விழைவே விழாக்களானது.
அவ்வாறான விழாக்களில் பொங்கல்விழா முதன்மையிடத்தைப் பெறுகின்றது. பொங்கல்விழா நடைபெறுகின்ற ஐந்து நாட்களும் குடும்பமாகவும் சுற்றாடலாகவும் ஊராகவும் கூடியே கொண்டாடுகின்றனர். கருத்து வேறுபாடுகள் கொண்டோரும் இந்த நாட்களிலே வேற்றுமைகளைத் துறந்து ஒற்றுமையாகிவிடுகின்றனர். மாந்தநேயத்தின் அடித்தளம் இந்த கூட்டுணர்வே. பலமாகக் கட்டமைக்கப்பட்ட கூட்டுத்தளத்திலிருந்தே பண்பாடும் மரபுகளும் முழுமையை நோக்கி வளர்ந்து வடிவம் கொள்கின்றன. 

சமுதாயத்தின் கூட்டுணர்வை ஆண்டுதோறும் வலிமைப்படுத்துவதோடு, ஒருவரையொருவர் புரிந்தும் இணைந்தும் செயற்படுவதற்குரிய களங்களையும் பொங்கல்விழா உருவாக்கிக் கொடுக்கின்றது. காணும்பொங்கலன்று கூடுவோர் புதிய உறவுகளையும் அறிமுகமாக்கிக் கொள்கின்றனர். அன்பும் உறவும் நட்பும் இதன்வழியே வளம் பெறுகின்றன.

தலைமுறை தலைமுறையாகக் ‘கூட்டுக் குடும்பவாழ்வு’ என்ற பண்பொழுக்கத்தை இன்றும் கைக்கொண்டு வருபவர்களாகத் தமிழர் திகழ்கின்றனர். இதற்குத்  தளமிட்டுவரும் விழாக்களில் பொங்கலே முதன்மையானது.

விருந்தோம்பல்

மானுடப் பண்புகளில் விருந்தோம்பலுக்குத் தனியிடமுண்டு. தமிழர் இலக்கியங்கள் விருந்தோம்பலைப் போற்றிய அளவுக்கு வேறு எந்த பண்பையும் போற்றியதாகத் தெரியவில்லை. வீட்டுக்கு வருவோரையும் நல்ல உணவையும் ‘விருந்து’ என்ற ஒரு சொல்லால் அழைக்கும் பண்பு தமிழர்களுக்கே உரித்தானது.

'உண்டால் அம்ம, இவ் உலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதுஆயினும், 'இனிது' எனத்
தமியர் உண்டலும் இலரே..." 
எனப் புறநானுறு கூறுகின்றது.

~இந்திரருக்குரிய அமிழ்தம் தமக்கு வந்து கூடுவதாயினும் அதனை இனிதென்று கொண்டு தனித்து உண்டவர் இல்லை| என்கிறது இப்பாடல்.

பொங்கல்விழாவின் உயர்வானதொரு பண்பியல் அங்கம் விருந்தோம்பல். பொங்கல்விழா ஒரு குடும்பத்துக்குள் நிகழ்த்தப்பட்டாலும் அது, அச்சுற்றாடலின் வாழும் தனித்தோர், துறவியர், வறியோர், பிறவினத்தோர் எல்லோரையும் தேடிச்சென்று பொங்கலைக் கொடுத்து விருந்தோம்பும் பண்பையும் போற்றி நிற்கின்றது. கொடுத்துண்டு வாழும் பண்பை தலைமுறைதோறும் ஊட்டிச் செல்லும் பண்பறி களம் பொங்கல். 

ஆக்கம் போற்றுதல்

சமூகம் சார்ந்த விழாவொன்றைக் கொண்டாடுவதற்குப் பல நோக்கங்கள் உள்ளன. தமிழருக்கே உரித்தான பல நாட்டுப்புறச் சமூகவிழாக்கள் ஆக்கவுணர்வை அடிப்படையாகக் கொண்டன. ஆக்கவுணர்வைக் கொண்டாடுவதிலும் பொங்கல்விழாவே முதனிலை பெறுகின்றது. தமிழர் உற்பத்திச் சமூகமாகத் தம்மை உருவாக்கிக் கொண்டு, உணவுப்பொருளாக்கத்தில் தம்மை வெகுவாகவே ஈடுபடுத்திக் கொண்டனர். பயிர்செய்தலும் மந்தை வளர்தலும் அன்றாடவாழ்வின் அங்கங்களாயின. உற்பத்தியாக்கத்தில் வெற்றியும் நிறைவும் கண்ட தமிழர் ஆக்கிய பொருட்களைக் கொண்டாடிப் போற்றும் பண்பையும் பெற்றனர்.

தீபாவளி அழிவைப் போற்றும் விழாவாகும். திருமால் நரகாசுரனை அழித்தமைக்காகத் தீபாவளியைக் கொண்டாடுவதாக வடநாட்டார் கூறுகின்றனர். இது அழிவு தொடர்பான சாவுணர்வையே வெளிப்படுத்துகின்றது. வடநாட்டாரின் பல்வேறு விழாக்கள் அழிவின் வழியாக விளைந்தவையாகவே இருக்கின்றன. மகிஷாசுரன், சூரன், இரணியன், இராவணன் என, வேண்டாதவர்களை அழித்தமையையே விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

தமிழரோ பெரிதும் ஆக்கங்களைப் போற்றும் விழாக்களையே கொண்டாடி வருகின்றனர். ஆடிப்பிறப்பு, கார்த்திகை விளக்கீடு என்பன இதற்குச் சில சான்றுகள். பொங்கல்விழா அதியுயர்ந்த ஆக்கவுணர்வின் வெளிப்பாடாகும்.

பெரியோரைப் போற்றுதல்

பொங்கல்விழாவின்போது பெரியோர் அனைவரும் சுறுசுறுப்பாகப் பல பணிகளில் ஈடுபட்டுச் சுற்றிச் சுழன்று செயலாற்றுவர். பெரியோரின் இச்செயற்பாடுகளே சிறியோரின் வாழ்வுக்கான பாடங்களாகின்றன. பொங்கல் கொண்டாடுகின்ற முறைகளையும் காரணங்களையும் பெரியோரிடம் கேட்டறியும் சிறியோர், இயல்பாகவே பெரியோரிடம் பெருமதிப்புக் கொள்வர். அவர்களையே தமது வழிகாட்டியாக்கி ,அவர்களைப் போன்றே செயற்பட முனைவர்.  பொங்கல்விழா சிறியோருக்குப் பண்பறிவிக்கும் ஒருவகைப் பள்ளியே.

ஊரில் வாழும் பெரியோர்கள் பலரும் இந்தப் பொங்கல்விழாவை ஊர்விழாவாக முன்னின்று நடத்துவர். அவரிலும் மூத்தோர், கூடவேநின்று நல்ல அறிவுரைகளை வழங்குவர். அவ்வாறான பெரியோரை இளையோர் தேடிச்சென்று வாழ்த்துகள் பெறுவர். அப்பெரியோரை மனதிருத்தி உயர்வாகப் போற்றுவர். பொங்கல்விழா வாயிலாகப் பெரியோரைப் மதிக்கும் பண்பு சிறப்பாகவே போற்றப்பட்டு வருகின்றது.

கலை வெளிப்பாடுகள்:

நெடிய வாழ்வியலைக் கொண்ட இனத்தின் அனைத்து அசைவுகளிலும்  கலையின் இயக்கம் இரண்டறக் கலந்திருக்கும். அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நடத்தையிலும் அது இழையோடிக்கொண்டிருக்கும். உரலில் இடிக்கும்போதும் அம்மியில் அரைக்கும்போதும் எழும் தாளலயங்களைச் சுவைத்தவாறே பணிகளைச் செய்வர்.

நாட்டுப்புறத் தமிழர் வாழ்வு அளவிறந்த கலைகளால் நிறைந்தது. அவைகளில் கைவினைக் கலைகள், நிகழ்த்து கலைகள் என்பன முதன்மையானவை. விழாக்காலங்களில் கலைஞர்கள் அரங்கிலும் பொதுவிடங்களிலும் நிகழ்த்துபவை நிகழ்த்துகலைகள் எனப்படுவன. ஓரினத்தாரின் மரபுகளையும் பண்பாட்டையும் காலந்தோறும் பேணிச்செல்வதில் நிகழ்த்துகலைகளுக்கு முக்கியபங்கு உண்டு.
இவ்வாறான கலைவெளிப்பாடுளுக்கான சிறந்தவொரு களமாகவும் பொங்கல்விழா திகழ்கின்றது. தமிழகத்தின் ஊர்கள்தோறும் நடைபெறும் பொங்கல் கலைவிழாக்கள் ஒவ்வொன்றுமே தனிச்சிறப்புக் கொண்டவை. கலை நிகழ்த்தப்பெறும் மரபுகளும் அவை வெளிப்படுத்தும் பண்பாட்டுக்கூறுகளும் இடத்துக்கிடம் வேறுபட்டுக் காணப்படும். ஈழத்தில் கிழக்குப்பகுதிகளின் கூத்துமரபு வடமோடி எனில், வடக்கின் மரபு தென்மோடியாகும். தமிழகமெங்கும் இந்த வேறுபாடுகளைக் காணலாம். இவையாவுமே தமிழருக்குப் பொதுவான கலைமரபுகளே. 

இவ்வாறான மாறுபாடுடைக் கலைவடிவங்களை பொங்கல்விழாவின்போது ஊர்கள் தோறும் காணலாம். தமிழர்கள் பயன்படுத்தும் பெரும்பாலான மரபுசார் இசைக்கருவிகளும் இக்காலங்களிலே பயன்படுத்தப்படும்.

பரதம், கர்நாடக இசை போன்ற வைதீக நெறிகளோடு கலந்துவிட்ட தமிழர்கலைகளை விடவும் நாட்டுப்புற மக்கள் போற்றிவரும் கலைகளிலேயே தமிழரின் தொடர்ச்சிமிக்க மரபுகளையும் தன்னியல்புச் சிறப்பான அடையாளம் காணலாம். இதற்குப் பொங்கல்விழா விரிவான களங்களை அமைத்துக் கொடுக்கின்றது.

நாட்டார் விளையாட்டுகள்: 

இக்காலத்தில் அனைத்துலக விளையாட்டுகள் பல, மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றபோதும் தாயக ஊரகங்கள் எங்கும் மரபுசார் விளையாட்டுகள் பேணப்பட்டு வருகின்றன. காணும்பொங்கலன்று பொதுவெளிகளில் பல்வேறு நாட்டார் விளையாட்டுகளைச் சிறப்பாக நடத்துவர்.
உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல், கிளித்தட்டு, கபடி, சடுகுடு போன்றன நாட்டார் விளையாட்டுகளுள் சிலவாகும். பொங்கல்விழாவின்போது இவை பெரும்போட்டிகளாக நடத்தப்படும். இளைஞர்கள் ஆர்வத்தோடு இதில் கலந்துகொள்வர்.

இவ்வாறான மரபுவழி விளையாட்டுகளை உயிர்ப்போடு காத்துச் செல்வதிலும் பொங்கல்விழா பெருமளவில் பங்காற்றி வருகின்றது.


முடிவரை:

தமிழரின் மிக நீண்ட வரலாற்றோடு இணைந்து வலுவான தளத்தில் உயர்ந்த பண்பாட்டின் குறியீடாக இன்றளவும் இயங்கி வருகின்றது பொங்கல்விழா. தொடக்ககாலத்தில் அறுவடைவிழாவாகத் தோற்றங்கொண்டு, காலவோட்டத்தில் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளையும் ஏற்று, பொங்கல் என்ற பெயரோடு தமிழ்த் தேசியவிழாவாகப் பெருவளர்ச்சி கொண்டிருக்கின்றது இவ்விழா.
உலகளாவிய நிலையில் தன்னியல்புச் சிறப்புமிக்க இனங்கள் பலவும் ‘உலகமயமாதல்’ என்ற பேராயுதத்தால் தாக்குண்டு, மெல்லமெல்லத் தமது இயல்புகளை இழந்துவரும் பேரிடர்; நிகழ்ந்துவருகின்றது. இவ்வாறான இனங்கள் தமது தனிச்சிறப்பு மிக்க நடத்தைகளின் வேர்களைக் கண்டறிந்து, அவற்றைத் தலைமுறைதோறும் புகட்டுதல் முதன்மையானது.

தமிழரைப் பொறுத்தளவில் தைப்பொங்கல்விழாவை முழுமையாகப் புரிந்துகொண்டாலே போதுமானது. தமிழினத்தின் வாழ்வியல் சிறப்பியல்புகளை எளிதில் அடையாளங்காண அது வழிவகுத்துவிடும்.
தாயகங்களில்  மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் நிலையாக வாழத்தலைப்பட்டுவிட்ட தமிழர், தமது வாழ்தளங்களில் இனஞ்சார் பண்பாட்டு விழுமியங்களையும் மரபுகளையும் பேணிச்செல்லவல்ல களமாகவும் பொங்கல்விழாவே திகழ்கின்றது.

பொங்கலைப் போற்றி எமதெழில் காப்போம்.


துணை நின்ற தளங்களும் நூல்களும்
திராவிட மானுடவியல் - பக்தவத்சல பாரதி
பண்பாட்டு வேர்களைத் தேடி - நாட்டார் வழக்காற்றியல் மையம்
நாட்டுப்புறவியல் - முனைவர் சு. சண்முகசுந்தரம்
சங்க இலக்கியங்கள்
திருக்குறள்
பண்பாட்டு அசைவுகள் - தொ.பரமசிவன்
http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/23405/10/10_chapter%205.pdf