Friday, January 11, 2019

தைப்பொங்கல் வரலாறு

தைப்பொங்கல் -  ஒரு வரலாற்று நோக்கு

நீண்ட வரலாற்றையும் காலவோட்டத்தோடு நெருங்கிப் பிணைந்த தனித்துவமான பண்பாட்டு நீட்சியையும் கொண்ட தமிழர், காலந்தோறும் பல்வேறு விழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். அவற்றை வழிபாட்டு விழாக்கள், குடும்ப விழாக்கள், தொழில் விழாக்கள் என பருமட்டாகச் சில பகுப்புகளுக்குள் அடக்கலாம். ஓரினம் கொண்டாடிவருகின்ற அனைத்து விழாக்களுமே காலத்தின் வழியே நின்று நிலைத்து விடுவதில்லை. சில விழாக்கள் மறைந்துவிடக் கூடியவை, வேறு சில காலத்தை வென்று நிலைத்து நின்றுவிட வல்லவை.

இன்றைய காலத்தில் தமிழர் கொண்டாடி வருகின்ற தைப்பொங்கல் பன்னூறு ஆண்டுகளாகத் தமிழர் வாழ்வோடு நிலைத்து நிகழ்கின்ற விழாவாகச் சிறப்புற்றிருக்கின்றது. கதிரவனுக்கு நன்றியறிவித்து, உழவுத்தொழிலைச் சிறப்பிக்கும் விழாவாக மட்டுமன்றி, ஓரினத்தின் பண்பாட்டுக் கூறுகளையும் மரபுகளையும் மானுட விழுமியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது தைப்பொங்கல் விழா.

மானுடத்தின் வரலாற்றையும் வாழ்வையும் வடிவமைப்பதில் நிலவமைவு முதன்மை இடம் பெறுகின்றது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே நிலவமைப்பின் அடிப்படையில் தமது வாழ்வை நான்காக வகுத்து, ஒவ்வொன்றுக்குமான சிறப்புகளை வரையறுத்து அதற்கமைய வாழ்ந்தோர் தமிழர். இவ்வாறான நிலவகைப்பட்ட வாழ்விலிருந்தே தேவைக்கேற்ப, விழாக்களும் தோற்றம் கொள்கின்றன. நான்கு நிலத்து மக்களும் தமது அமைவுகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப, வேறுபட்ட விழாக்களையே கொண்டாடி வந்திருக்கின்றனர்.

பழந்தமிழர் வாழ்வு கொண்டாட்டங்களால் நிறைந்தது. ஆடுவோரும் பாடுவோரும் வாழ்வை அழகுமிக்கதாக்கினர். கூத்தர், பாணர், விறலியர் போன்ற இலக்கிய மாந்தரே இந்தக் கொண்டாடங்களுக்குச் சான்றாவர். ஒவ்வொரு நிலத்தவரும் பல்வகைப்பட்ட கூத்துகளை ஆடியுள்ளனர்.

நிலவமைவில் பொருளியல் வேறுபாடு:

மேற்குறித்த நில அமைவியல் வழி நின்றே தமிழரின் நிலவுடைமைச் சமூக வரலாறு தோற்றம் பெறுகின்றது. நிலவமைவைப் பொறுத்தே ஒரு சமூகத்தின் உறவுகள் வடிவமைக்கப்படுகின்றன வலிமை பெறுகின்றன. சமூக இருப்பின் தளமான பொருளாதார ஆக்கத்தையும் நிலவமைவே வடிவமைக்கின்றது.

"ஒரு சமூகத்தின் மேற்கட்டுமானத்தில் காணப்படும் பண்பாடு என்பது அடிக்கட்டுமானமான பொருளாதார உற்பத்தியைச் சார்ந்தே அமைகின்றது" என்கிறார் கார்ஸ் மார்க்ஸ். நால்வகை நிலத்தினுடைய பண்பாட்டு வேறுபாடுகளும் பொருளாதார வளர்ச்சியின் போக்குகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.

மலைகளைக் கொண்ட நிலவமைவான குறிஞ்சியும் மலைகளின் சாரல்களான காடுகளைக் கொண்ட முல்லை நிலமும் வேட்டை சமூக வாழ்வின் கூறுகளைக் கொண்டவையாக இருந்தன. அதேவேளை நிலவுடைமைச் சமூகத்தின் தொடக்கக் களங்களைக் கொண்டவையாகவும் இருந்தன. நெய்தல் நில மக்களின் பொருளாதார இருப்பு நிலத்தைச் சார்ந்திராது கடலைச் சார்ந்திருந்தது. இதுவே மாறுபட்ட பண்பாட்டு அடையாளங்களுக்குக் காரணமாயிற்று.
இந்நிலவமைவுகளில் மருதநிலமே வலிமையான நிலவுடைமைச் சமூகம் வேகமாக உருவாகவல்ல தளமாக இருந்தது. வரட்சியால் பெரிதும் அழிவுறும் நிலமாக இல்லாமலும் பரந்த விவசாய வயல்வெளிகளைக் கொண்ட தளமாகவும் இது அமைந்தது. நேர்த்தியான குடும்பக் கட்டமைப்பும் தலைமைத்துவத் தோற்றமும் இங்குதான் தோன்றியது என்பர். மக்கள் பாதுகாப்பாக வாழ வல்லதாகவும் தேவைகளை எளிதில் நிறைவேற்றக் கூடிய இடமாகவும் மருதம் அமைந்திருந்தது. மக்களின் வாழ்க்கை முறைரய மேலாண்மையை நோக்கி நகர்த்திய சமூகமாகவே மருதச் சமூகம் அடையாளம் காணப்படுகின்றது. இந்த நகர்வுகளின் வழியே நகர், நகரம், நகரியம் நாகரிகம் என்ற சொற்கள் தோன்றியதாகக் கூறுவர்.

ஒவ்வொரு நிலத்திலும் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. உற்பத்திகள் வழியே அறுவடை முடிந்து, விளைந்த பொருட்கள் வீடு வரும் நாட்களை மகிழ்வோடு கொண்டாடியிருக்கின்றனர். ஏனைய மூன்று நிலத்தோருக்கும் தலைமை நிலமாகவே மருதம் திகழ்ந்தது. தமிழ் நிலத்தின் பெரும் பரப்பு மருதநிலமாகவே இருந்தது. விவசாயம் சார்ந்த உற்பத்தி முறைக்கு அமைவாகவும் இருந்தது. இதன்வழியே தமிழ்ச் சமூகம் வேளாண்மை சார்ந்த நிலவுடைமைச் சமூகமாக உருப்பெற்றது.

விவசாய நிலங்களின் பண்பாடு மற்ற திணைக்குரிய சிறுபான்மை நிலப்பகுதிகளிலும் தாக்கம் செலுத்தியது. எனவே மருதத்திணையில் அறுவடைக்காலக் கொண்டாட்டங்கள் மற்ற திணை சார்ந்த மக்களிடம் பரவியது. இதனால் மருதநில மக்களின் அறுவடைக் கொண்டாட்டமான பொங்கல் விழா காலவோட்டத்தில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பண்பாட்டின் அடையாளமாக மாறியது. இப்பொங்கல் விழாவுடன் தொடர்புடைய பண்பாட்டுக் கூறுகள் தமிழர்களின் அடையாளங்களாக நிலைபெற்றன.

பொங்கல் விழாவின் தோற்றம்:

உழவு:

வேட்டைச் சமூக வாழ்வின் முடிவாகவும் வேளாண்மைச் சமூக வாழ்வின் தொடக்கமாகவும் அமைந்த காலமே மானுடத்தை வாழ்வியல் மேன்மையை நோக்கி நகர்த்திய காலமாகும். நீர்நிலையருகே நிரந்தரமாகத் தங்கி, உழவுத் தொழிலில் ஈடுபடத் தொடங்கிய மாந்தர் இயற்கை இடர், பிறவுயிரிகள் ஏற்படுத்திய தடைகளைக் கடந்தே விளைவுகளைப் பெற்றனர். நீண்டதும் கடுமையானதுமான உழைப்புக்குப் பின்னர் உழவின் பயனை வீட்டுக்கு எடுத்துவரும் வேளையில் மகிழ்ச்சி இயல்பாகவே ஏற்படும். அந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்துக்கு வித்திடும். பொங்கல் என்ற அறுவடைத் திருநாளுக்கு இந்த மகிழ்வே வித்தாக இருந்திருக்க வேண்டும்.

உழவுத்தொழில் சிறு பயிர் உற்பத்தியிலிருந்து வளர்ச்சி பெற்று, மாரிகால மழையை நம்பிய பெரும்பயிர்ச்செய்கையாக மாற்றம் கண்ட காலத்தில் நெல் பயிரிடல் முதன்மைத் தொழிலாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆவணியில் விதைத்த விதை பயிராகி தைமாதத்தில் அறுவடைக்காகக் காத்திருக்கும். தன்னிறைவுக்கு அப்பால் பிறருக்கும் வழங்கும் வணிகத்தன்மையோடு உழவுத் தொழில் மேன்மை பெறத் தொடங்கிய காலத்தில் உழவைப் போற்றும் விழா மற்றுமொரு வடிவத்தைக் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு.

உற்பத்திப் பொருட்களை வணிகம் செய்வதன் வாயிலாகப் பிற தேவைகளையும் நிறைவேற்றி மகிழும் காலமும் இதுவே என்பதால் இந்த அறுவடைக்காலம் கொண்டாட்ட காலமாகவே இருந்திருக்க வேண்டும்.

ஆனால் அறுவடைக்காலத்தில் புத்தரிசி இட்டு மக்கள் பொங்கல் கொண்டாடினர் என்பதற்குச் சங்க இலக்கியத்தில் எவ்வகைச் சான்றுகளும் இல்லை. அறுவடை சிறப்பாக நடைபெற்று, தாம் விரும்பியவை நிறைவேற வேண்டும் என பெண்கள் தை மாதத்தில் நோன்பு இருந்தார்கள் எனச் சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

"தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும் “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகையும் “தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும் “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும் கூறுகின்றன.

வானவியல்: 

ஆங்கில நாட்காட்டிக்கு அமைய ஜனவரி 14ம் நாள் தமிழ் நாட்காட்டியின்படி தை முதல்நாள் ஆகும். கதிரவனைச் சுற்றும் பூமின் நீள்வட்டப் பாதையில் கதிரவன் வடக்கு நோக்கி நகரத் தொடங்குவதைப் போன்ற நிலையில் பூமி தன் சுற்றுவட்டத்துக்குள் நகர்கின்றது. இதனை சூரியத் தோற்ற நகர்ச்சி என்பர். தை முதல் ஏற்படும் தோற்ற நகர்ச்சி ஆனி மாதம் வரை இருக்கும் இதை வட செலவு என்பர். வடமொழி உத்தர அயனம் எனப்படும். ஆடி மாதம் முதல் மார்கழி வரை தென்படும் தோற்ற நகர்ச்சியைத் தென் செலவு (தக்கண அயனம்) என்பர். தென் செலவில் இருந்து கதிரவத் தோற்ற நகர்ச்சி வட செலவுக்குள் நுழையும் நாளே தமிழர் நாட்காட்டிக்கமைய தை முதல் நாளாகும்.

இரவும் பகலும் எப்போதும் ஒத்த நேரங்களைக் கொண்டிருப்பதில்லை. ஆண்டில் இரு நாட்கள் மட்டும் இரவும் பகலும் ஒத்த நேரத்தைக் கொண்டிருக்கும். இதைத் தமிழர் ஒக்க நாட்கள் என அழைக்கின்றனர்.  மார்ச் 22 இல் இரவும் பகலும் 12 மணி நேரத்தைக் கொண்டிருப்பதைப் போல, செப்டெம்பர் 22ம் நாளும் கொண்டிருக்கும். மார்ச் 23 வசந்தகாலத்தில் தொடக்கமாக ( Spring equinox) அமைகின்றது. செம்ரெம்பர் 23 இலையுதிர்காலத்தின் தொடக்கமாக அமைகின்றது.


இதைப் போன்றே ஓராண்டில் அதிக நீளமான இரவைக் கொண்ட நாள் ஒன்றும், அதிக நீனமான பகலைக் கொண்ட நாள் ஒன்றும் உள்ளன. டிசம்பர் 22 நீளமான இரவைக் கொண்ட நாளாகவும் ஆனி 22 மிக நீளமான பகலைக் கொண்ட நாளாகவும் உள்ளன. பனிகாலத்தைக் கொண்ட நீண்ட இரவு குறைத் தொடங்குவதால் இதைப் தமிழர் பனி முடங்கல் என்பர். கடும் வெய்யிலைக் கொண்ட வேனில் காலத்தின் பகல் நேரம் குறையத் தொடங்குவதால் ஆனி 23ம் நாளை வேனில் முடங்கல் என்பர்.

மேற்குறித்த இந்த நான்கு நாட்களுமே நான்கு காலத்தினதும் தொடக்கங்களாக இருக்கின்றன. அத்தோடு பலவினத்தவரின் ஆண்டுத் தொடக்கங்களாகவும் இவை இருக்கின்றன.
பூமி தன் உருட்டம் (self-rotation) வலயம் (revolution) என்ற இரு இயக்கங்கள் போக, கிறுவாட்டம் (gyration) என்ற இயக்கத்தையும் கொண்டிருக்கின்றது. இந்த இயக்கங்கள் நீள்வட்டப்பாதையில் சுற்றும் பூமியை என்றும் ஒரே மாதிரியாக இயங்க விடுவதில்லை. நீண்டகால ஒழுங்கில் மேற்கூறிய நான்கு நாட்களிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இந்த இயக்கங்களை அடிப்படையாக் கொண்டு கணிக்கும் முறைக்கு சக அயன முறை (Sayana method) என இந்தியர் பெயர் வைத்திருக்கின்றனர். இந்த முற்செலவத்தைப் பொருட்படுத்தாமல் காலம் கணிக்கும் முறைக்கு, நில்லாயன அயன முறை (Nirayana method) என்று பெயர். மேலை நாட்டவர் சக அயன முறையைப் (Sayana method) பின்பற்றியே காலத்தைக் கணிக்கின்றனர். இந்த முறைக்கமைய எப்போதுமே நீண்ட இரவு டிசம்பர் 22ம் நாளில் இருந்ததும் இல்லை. நீண்டகாலத்தின் பின் இருக்கப் போவதும் இல்லை. பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேறு நாட்களில் இருந்திருக்கும் என்கிறது அறிவியல். சில ஆய்வாளர்களின் கருத்துக்கு அமைய,  பனி முடங்கல் என அழைக்கப்படும் இரவு கூடிய இறுதிநாள் ஜனவரி 14 அல்லது 15 நாளிலே முன்பு நடைபெற்றிருக்க வேண்டும் என்கின்றனர் சிலர். குளிர் தரும் இரவுப்பொழுது குறையத் தொடங்குகின்ற, பனி முடங்கல் எனப்படும் அந்த நாளை, தமிழர் பொங்கலாகக் கொண்டாடத் தொடங்கியிருப்பர் என்கின்றது இந்த ஆய்வு. தெற்கு நோக்கிச் சென்று குளிர் தந்த கதிரவன் இனி வடக்கு நோக்கிச் சென்று வெய்யில் தரப் போகின்றான், அவனுக்கு நன்றி கூறுவோம் எனத் தோன்றியதே தைப்பொங்கல் என மேலும் கூறுகின்றது இந்த ஆய்வு. இதுவே பண்டைத் தமிழரின் ஆண்டுத் தொடக்கமாகும் என்பதையும் இது குறிப்பிடத் தவறவில்லை.

பொங்கலின் தோற்றமும் ஊரக ஒருமைப்பாடும்

தைப்பொங்கல் விழாவின் தோற்றம் குறித்து பல்வகைக் கருத்துகள் கூறப்பட்டாலும் வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் இந்த விழா நீண்டகாலமாகவே கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது எனக் கருத இடமுண்டு.

சமூகப் பொருண்மை மிக்க விழாக்களின் வேர்கள் பாமரர்களை அதிகமாகக் கொண்ட ஊரக வாழ்க்கைமுறைகளிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஊரும் உறவுமாய் நெருங்கி வாழும் கிராமத்தோர், சமூக ஒருமைப்பாட்டையும் ஒருமித்த இலக்குகளையும் கொண்டதாக விழாக்களை உருவாக்கினர். இவர்களே குடும்ப விழாக்களைக் கூட ஊர் கூடி நடத்தும் விழாக்களாகக் கொண்டாடியோர் ஆவர். விழைவுற்று நிகழ்த்துவது விழா என வேர்ச்சொல் ஆய்வாளர் கூறுவர். கிராமத்தார் எப்போதுமே விழைவுகளால் உந்தப்பட்டவர்கள் என்பதை நாட்டுப்புற இலக்கியங்கள் கூறுகின்றன. பொங்கல் விழாவும் ஊரக வாழ்வியலின் பொதுமைச் சிறப்புகளைக் கொண்டதாக அவர்களாலேயே வடிவமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். வேதகால வழிபாட்டு நெறிகளை அறிந்திராத பாமர மக்கள், குழுக்களாக வழிபடும் கிராமியத் தெய்வ வழிபாடுகளை விடுத்து, அனைவருக்கும் பொதுவான கதிரவனுக்கு நன்றி செலுத்துவதைப் பொதுப் பண்பாகக் கொண்டிருக்க வாய்ப்புகள் உண்டு.

பொங்கல் விழா வெளிப்படுத்தும் உயர் கூறுகள் ஊரக வாழ்வியலுக்கே உரியவை. நகர மாந்தரால் வகுக்கப்பட முடியாத தனித்துவங்கள் பொங்கல் விழாவிலே உண்டு.

சங்க இலக்கியங்கள் உட்பட பல பெரும்பாலான ஏட்டு இலக்கியங்கள், நாட்டுப்புற வாழ்வியலை பெரிதும் பிரதிபலிக்கவில்லை என்பது உண்மையே. வேந்தரையும் கடவுளரையும் பாடுபொருளாகக் கொண்ட இலக்கியங்கள் பாரம மக்களின் வாழ்வைப் பதிவு செய்யத் தவறியிருக்கின்றன என்ற குற்றச்சாட்டு தமிழ் இலக்கியங்களுக்கு உண்டு. ஆனால் உழவுத்தொழில் குறித்துப் பல குறிப்புகளைச் சங்க இலக்கியங்கள் தருகின்றன. ஏறு தழுவுதல் குறித்தும் பல செய்திகள் சங்க இலக்கியங்களில் உள்ளன.

இவ்வகையில் பாமர மக்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பொங்கல் போன்ற பல ஊரக மக்களின் விழாக்களை ஏட்டு இலக்கியங்கள் கண்டுகொள்ளவில்லை. அவ்வாறே ஊரக அளவில் நடைபெற்று வந்த பொங்கல்விழாவும் இலக்கியங்களில் வேறு பதிவுகளிலும் இடம் பெறாது போயிருக்கலாம்.


பொங்கல் பற்றிய வரலாற்றுச் சான்றுகள்:

பழங்காலப் பெண்கள் தைமாதத்தில் நோன்பிருந்த செய்திகளை சங்க இலக்கியங்கள் சில குறிப்பிட்டிருக்கின்றன என்பதை முன்னர் பார்த்தோம்.
தைமாத்தில் நோன்பிருந்து, வையை ஆற்றில் நீராடி, சிறந்த கணவர் வாய்க்ப்பபெற வேண்டும் என பெண்கள் வேண்டியதாகப் பரிபாடல் (பாடல் 11) கூறுகின்றது.
‘வையை நினைக்கு மடை வாய்த்தன்று
மையாடல் ஆடன் மழப்புலவர் மாறெழுந்து
பொய்யாடலாடும் புணர்ப்பி ரைவர்
தீயெரிப் பாலுஞ் செறிந்த முன் பூற்றியோ
தாயருகா நின்று  தவத் தைந்நீராடல்
நீயுரைத்தி வையை நதி’
பண்டைக்காலத்தில் நெற்பயிர்ச்செய்கை செழித்துச் சிறந்திருந்ததைப் பல இலக்கியங்கள் அழகாக எடுத்துக் கூறுகின்றன. உழவுத் தொழிலின் அனைத்துப் படிநிலைகளையும் சங்கப் பாடல்களில் காணலாம்.

சேற்றில் நாற்றை அழுத்தி நடுவதை, 'நீர்உறு செறுவின் நாறுமுடி அழுத்த
நடுநரொடு சேறி ஆயின்..." என நற்றிணை கூறுகின்றது.

'பைதுஅற விளைந்த பெருஞ்செந் நெல்லின் தூம்புடைத் திரள்தான் துமிந்த வினைஞர்" என அறுவடை செய்யும் உழவரைப் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.

இவ்வாறு உழவைப் போற்றிய பண்டைத் தமிழர் அறுவடைவிழாவைக் கொண்டாடியிருப்பர் என்பதை உறுதியாக நம்பலாம்.

புறநானூறு என்ற சங்க இலக்கியத்தின் 22வது பாடலில், குறுங்கோழியூர்க் கிழார் என்ற புலவர், 'அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல.." எனக் குறிப்பிடுகின்றார்.
அதாவது  'நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும், கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன' என்று கூறுகின்றார். அறுவடைக்களங்களில் விழாக்கள் கொண்டாப்பட்டிருக்கின்றன என்ற செய்தி இதன் வாயிலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாற்சோறு செய்யும் வழக்கம் பழந்தமிழர் காலம் தொட்டே இருந்து வந்திருக்கின்றது. அதை புழுக்கல் என்றே இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.

சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவின் துவக்கத்தில், காவல்பூதத்திற்கு, புழுக்கலும் நோடையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து வழிபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் புழுக்கல் என்பதுதான் பொங்கல். சம்பந்தர், தன் மயிலாப்பூர் பதிகத்தில், 'நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்' எனச் சுட்டுகிறார். சங்ககாலத்திலும் பக்தி இயக்க காலத்திலும் புழுக்கல் என்பது தான், பொங்கலாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது.

அடுத்து, கிட்டத்தட்ட கி.பி 9ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்திலும் பொங்கல் பற்றிய  குறிப்பு இடம்பெறுகின்றது.

‘மதுக்குலாம் அலங்கல் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்’

என கூறுவதன் வாயிலாகப் பொங்கல் என்ற சொல்லை முதல் தடவையாக இலக்கியத்தில் பதிவு செய்கின்றது.

சோழர்காலத்தில் 'புதியேடு' பண்டிகை என்ற என்ற பெயரில் புதிய அரிசியிட்டுப் பொங்கும் விழா நடைபெற்றதாகத் திருவொற்றியூர் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. முதல் ராஜேந்திரனின் காளஹஸ்தி கல்வெட்டில் மகர சங்கராந்தி அன்று பெரும் திருவமுது படைக்கப்பட்ட தகவலைத் தொல்லியல் அறிஞர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ளார். தை முதல்நாளைக் கதிரவனின் வடசெலவு தொடங்கும் மகர சங்கராந்தி என்றே வட இந்தியர்கள் குறிப்பிடுகின்றனர். இங்கு படைக்கப்பட்ட திருவமுதை நாம் பொங்கலாகக் கொள்ளலாம்.

கண்டெடுக்கப்பட்ட மற்றுமொரு கல்வெட்டு கீழ்க்காணும் தகவலைத் தருகின்றது.

சோழர் காலத்தில் உத்தம சோழனுடைய இறுதி ஆட்சியாண்டில் அவனுடைய மனைவியருள் பட்டத்தரசியாக விளங்கியவவள் 'உரட்டை சரஅபயன்" எனப்படும் திரிபுவன மாதேவி கைலாசமுடைய மாகாதேவர் கற்கோவிலுக்கு ஒரு நிவந்தம் அளித்துள்ளாள்.

சங்கராந்தி நன்னாளில், கைலாசமுடைய மகாதேவருக்குத் திருமுழுக்கு (அபிஷேகம்) ஆட்டுவதற்கும், நந்தாவிளக்கு எரிப்பதற்கும், நூறு பிராமணர்களுக்குப் பொங்கல் சோறு அளிப்பதற்கும் தேவையான வருவாயை அளிக்கத் தக்க வகையில் நன்செய் நிலத்தை அக்கோயிலுக்கு அவ்வரசி தானமாகக் கொடுத்து இருக்கிறாள்.

இக்கல்வெட்டின் வாசகத்தில் 'உத்தராயண சங்கராந்தி" எனும் தொடரும், 'பொங்கல் சோறு" எனும் தொடரும் நம் கருத்தைக் கவருகின்றன. சமயப் போர்வையில் 'பொங்கல் விழா" கோயில்களில் கொண்டாடப்பட்டதற்கு இக்கல்வெட்டு சான்று பகருகிறது.

கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் அப்போ டூபாய் எனும் போத்துகல் நாட்டைச் சேர்ந்த பயணி இந்தியாவிற்கு வந்தார். அவர் தென்னிந்தியா முழுவதையும் சுற்றிப் பார்த்தார். இந்து மக்களிடையே அவர் கண்டவற்றையும் கேட்டவற்றையும் “இந்துக்களின் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையும்" (Manners and Customs of the Indus  ) எனும் நூலை எழுதியுள்ளார்.

உழவர்களுடைய அறுவடைத் திருநாளாகவும் சங்கராந்திப் பண்டிகையாகவும் ஊர்கள் தோறும் எவ்வாறு அது கொண்டாடப்பட்டது என்பதை அவர் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

பொங்கல் விழா தொடங்குவதற்குப் பல நாட்களுக்கு முன்னரே அதற்குரிய ஏற்பாடுகள் ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் மக்கள் செய்ததாகவும் வீடுகளைப் பழுது பார்த்தல் குடிசைகளில் புதிய கூரை வேய்தல், வெள்ளையடித்தல், வண்ணம் தீட்டுதல், அலங்கரித்தல் போன்ற பணிகளில் மக்கள் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பொங்கல் நாளன்று சூரியனுக்குச் செய்யப்படும் வழிபாட்டையும், பொங்கல் படையலையும் அவர் பாராட்டியுள்ளார். மறுநாள் மாடுகளுக்குச் செய்யப்பட்ட அலங்காரங்களையும், ஊர்ப் பொது இடத்தை மக்கள் கூடி, அவற்றிற்கு வழிபாடு செய்ததையும் கூடக் குறிப்பிட்டிருக்கின்றார். மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த மக்கள் காளையாட்டுப் போட்டிகளிலும் 'மஞ்சு விரட்டு" போன்ற வீர விளையாட்டுகளிலும் பேரார்வத்தோடு ஈடுபட்டதை அவர் பதிவு செய்துள்ளார்.


இருபதாம் நூற்றாண்டில் தைப்பொங்கல்:

விஜயநகரப் பேரரசு காலத்திலும் ஐரோப்பியர் காலத்திலும் தைப்பொங்கல் பற்றிய செய்திகள் பரவலாக எங்கும் காணப்படவில்லை. எனினும் தொடர்ச்சியாக நாட்டார் வாழ்வியல் அழுத்தமானதோர் விழாவாக பொங்கல் நடைபெற்று வந்திருக்கின்றது. தமிழகக் கிராமங்களில் கொண்டாடப்படுகின்ற பொங்கல் விழாக்களை உற்று நோக்கினால் அதன் ஆழமான நீண்ட தொடர்ச்சியையும் செழுமையையும் உணர முடியும்.

தமிழினத்தவரிடையே இருபதாம் நூற்றாண்டில் தைப்பொங்கல் பெற்ற எழுச்சி அதற்கு முன்னான காலங்களில் இருக்கவில்லை என்பது உண்மையே. பொங்கல் பற்றிய பிந்திய இலக்கியப் பதிவாக நமக்குக் கிடைப்பது பாரதிதாசன் பாடல்களே.

தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள்
செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம்
பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய்
ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப்
பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்
எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்!
தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்! என்கிறார் பாரதிதாசன்.

இக்காலத்தின் தோன்றிய திராவிட அமைப்புகளும் தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் ஊரக வாழ்வியலின் எல்லைகளுக்குள் மட்டுப்பட்டிருந்த பொங்கல்விழாவைத் தமிழ்த் தேசியத்தின் அடையாளமாக வெளிக்கொணர்ந்தனர். பொங்கல் விழாவினூடே விரவிக் கிடந்த தமிழரின் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தி விழாவின் சிறப்பை உலகறிச் செய்தனர். அதுவே தமிழரின் புத்தாண்டு எனவும் அறிவித்தனர்.

இன்றைய நாட்களில் உலகத் தமிழர் அனைவரும் பொங்கல் திருநாளைத் தமது தனித்துவமான பண்பாட்டு விழாவாகவே கருதத் தலைப்பட்டுவிட்டனர். மெய்யியற் சமய வழிபாடுகளுக்கப்பால் பழந்தமிழர் வழிபாட்டு முறையான இயற்கை வழிபாட்டின் எச்சமாகவே பொங்கல்விழா திகழ்கின்றது. இவ்விஉண்மையும் உணர்வும் மிக்கதாக இருக்கின்றது.

பொங்கல் விழா வெளிப்படுத்தும் நுட்பமும் ஆழமும் மிக்க பண்பாட்டுக் கூறுகள் குறித்து மற்றுமொரு கட்டுரையில் காண்போம்.




உதவியவை:
பரிபாடல்
புறநானூறு
தமிரின் மரபுச் செல்வங்கள் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
http://valavu.blogspot.com/2007/01/blog-post.html
http://nedumpunal.blogspot.com/2015/01/blog-post_99.html
https://ta.wikipedia.org/wiki/தைப்பொங்கல்
http://www.errimalai.com/?p=10051
http://www.keetru.com/anaruna/jan08/poonkothai.php



Thursday, April 5, 2018

சங்கத்தமிழர் விளையாட்டுகள்.


இயற்கை அழகு நிறைந்த பேரரங்கு அது.

அங்கே ஒரு எழில் உலாக் காட்சி (Fashion Show)  நடைபெறுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. அவையோர் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஒப்பனைகளால் தம்மை பேரழகாக்கியபடி அழைப்பை எதிர்நோக்கியிருக்கின்றனர் உலா மகளிர்.

அழகறிந்து அளவுணர்ந்து மதிப்பிட மங்கையரை மட்டுமே கொண்ட நடுவர் குழு காத்திருக்கின்றது.

இதோ உலா ஆரம்பமாகி விட்டது.


ஒரு பெண் ஒயிலாக நடந்து வருகின்றாள். அவள் சூடியிருக்கும் பூக்களும் ஆடையழகும் அவையோரை ஈர்த்திழுக்கின்றன.

ஒளி வீசும் தன்மை கொண்டதாக வண்ண வண்ணப் பூக்கள் ஐவகை அழகு நிறைந்த அவள் கூந்தலில் செருகப்பட்டிருக்கின்றன.

இரு கைகளிலும் நிறைந்த வளையல்கள். அழகு வழிய, எழிலாகக் கைகளை வீசி நடக்கின்றாள். ஒழுங்குபடுத்தப்பட்ட இனிய ஓசைகளை வளையல்கள் எழுப்பின. அவள் வீசி நடந்தது வெறுங்கையல்ல. தேன் சிந்தும் பேழகுப் பூக்களைக் கொண்ட பூங்கொத்தினை ஏந்திய கை.

நிலம் நோகா மெல்லிய நடைதான் நடந்தாள். ஆயினும் காற் சலங்கைகளின் எழிலோசை உயிர்வரை சென்று உரசியது.

பிசகாத காலஇடைவெளியில் கை வீசியும் கால் நடந்தும் இன்னிசை சிந்தி அவள் காட்டிய பேரழகு அங்கிருந்தோர் அனைவரையும் கட்டிப் போட்டது.

உலா மகளிரின் அழகை மதிப்பிட்டு, அவர்களது எழிலைப் பேணியவர்களான நடுவர், உலா வந்தவளுக்குப் புள்ளியிட்டு அடுத்தவருக்காகக் காத்திருக்கின்றனர்.

இது அண்மையில் நடைபெற்ற எழில் உலாக் காட்சி அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்ககாலத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி. இது இக்காலத்தில் புகழ் பெற்றுத் திகழ்கின்ற குயளாழைn ளூழற என்பதை ஒத்த விளையாட்டாகும்.

சங்ககாலத்தில் மகளிரின் அழகை மகளிரே ஆராய்ந்து மதிப்பிட்டனர் எனக் குறுந்தொகை கூறுகின்றது.

“கடலங்கானல் ஆயம் ஆய்ந்த என் நலம் இழந்;து”– குறுந்தொகை 245

இப்படி ஆராய்ந்து மதிப்பிடுவதற்கு ஏதுவாக மகளிர் தம்மை ஒப்பனை செய்துகொண்டு ஒய்யாரமாக நடந்து காட்டியிருக்கின்றனர். இச் செய்தியை அகநானூறு வெளிப்படுத்துகின்றது.

“கானப் பாதிரி கருந் தகட்டு ஒள்வீ
வேனில் அதிரலொடு விரைஇக் காண்வரச்
சில் ஐங் கூந்தல் அழுத்தி மெல் இணர்த்
தேம்பாய் மராஅம் அடைச்சி வான்கோல்
இயங்குவளை தெளிர்ப்ப வீசிச் சிலம்புநகச்
சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி”– அகம் 261


விளையாட்டு - சொல்லும் பொருளும்

விளையாட்டுகள் வேட்டைச் சமூக வாழ்தளங்களிலேயே தோற்றம் கொண்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.விலங்குகளை வேட்டையாடுதலும், ஆயுதங்களைக் கையாளுதலும், உடல் வலிமையைப் பேணுதலும் விளையாட்டுகளுக்கு வழிவகுத்திருக்கக் கூடும். எனினும்மனித குலம் பண்பாட்டுப் படிகளில் ஏறத் தொடங்கிய காலத்திலேயே விளையாட்டுகளும் முதன்மை பெற்றன எனலாம்.

ஓரினமானது மரபுத் தொடர்ச்சியின் வழியாகப் பின்பற்றிவரும் விளையாட்டுகள், அவ்வினத்தின் பண்பாட்டினைப் புரிந்து கொள்ளவும் அக்காலச் சமூகக் கொள்கைகளை வரையறுக்கவும் வல்ல இனம்;சார் அடையாளங்களாகவே திகழ்கின்றன.

விளையாட்டு என்பதற்கான விளக்கத்தைச் சங்கப்புலவோர் வரையறுத்துக் கூறவில்லை. உவகை என்னும் மெய்ப்பாடு தோன்றுவதற்குரிய நான்கு வகைக் களங்களைத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அதில் ஒன்று விளையாட்டு.  இதிலிருந்து மன மகிழ்ச்சியை விளைவிக்கும் ஒரு செயலே விளையாட்டு எனக் கருதலாம்.

மொழிப்புலவர் ஞா. தேவநேயப் பாவாணர் விளை என்றால் விருப்பம் எனப் பொருள் கொண்டு விரும்பியாடும் விளையாட்டு என்று விளக்குகிறார்.

தொல்காப்பியம் உரியியல் (தொல் 319) என்ற பகுதியில் கெடவரல், பண்ணை எனும் இரு சொற்களால் விளையாட்டைக் குறிக்கின்றது. இத்தொல்காப்பியக் குறிப்பு அக்காலத்தே விளையாட்டுகள் மக்களிடத்தே செல்வாக்குப் பெற்றிருந்தமையை உணர்த்துகின்றது. கெடவரல் என்பது நிலத்தில் விளையாடும் விளையாட்டையும் பண்ணை என்பது நீரில் விளையாடப்படும் விளையாட்டையும் குறிக்கும் என்பர்.

சங்க இலக்கியத்தில் விளையாட்டு என்பது பெரும்பாலும் நிலத்தில் ஆடப்படுகின்ற விளையாட்டுகளைக் குறித்தது. ஆடுதல் என்ற சொல்நீரோடு இணைந்த விளையாட்டுகளையே பெரிதும் குறித்தது.


சங்கத் தமிழரின் விளையாட்டுக் கொள்கைகள்.

சங்கத் தமிழர் பெரிதும் சமூகம் சார்ந்த செயற்பாடாகவே விளையாட்டைக் கருதினர். குழுநிலை விளையாட்டுகளும், மைதானங்களின் நடுவே இடம்பெற்ற வீர விளையாட்டுகளும் சமூகச் செயற்பாடுகளாகவே திகழ்ந்தன. அரசுகள், ஊர் மன்றங்கள், பெரு விளையாட்டுகளை நடத்தி வென்றோருக்கு மதிப்பளித்தன.

சமூக அங்கத்தவர் எல்லோரும் தத்தம் வயது, பால் என்பவற்றிற்கேற்பப் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டனர். பெண்களை ‘வீட்டுக்குள் வளர்த்தல்’ (இச்செறித்தல்)  என்னும் நிலை அக்காலத்தில் காணப்பட்டாலும் சிறுமியர், இளம் மகளிர் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆண்களைப் போலவே பெண்களும் பல விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளனர்.

‘சிறுமியர் வெளியிற் சென்று தம் தோழியரோடு விளையாடுவதே அறம். அவ்வாறு விளையாடுவதால் உடலும் உள்ளமும் ஆக்கம் பெறும். மாறாக வீட்டுக்குள் இருந்தால் அது அறமும் இல்லை, ஆக்கமும் தேய்ந்து விடும்’ என்ற செய்தி நற்றிணை என்னும் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது.

“விளையா டாயமொடு ஓரை யாடாது 
இளையோர் இல்லிடத் திற்செறிந் திருத்தல் 
அறனும் அன்றே ஆக்கமுந் தேய்ம்மெனக்.....”   (நற்றிணை 68)

வெற்றியையும் தோல்வியையும் ஒத்த உணர்வோடு நோக்கும் பாங்கு சங்க இலக்கியங்களில் உணரப்பபடுகின்றது.

உயிருக்குப் பேரிடர் ஏற்படுத்தும் விளையாட்டுகள் அக்காலத்தே இருந்திருக்கின்றன. எனினும் மனித உயிரை இலக்கு வைத்து விளையாட்டுகள் நிகழ்த்தப்பட்டதாகச் சான்றுகள் இல்லை.

‘உவகை ஊட்டுதல்’ என்னும் நிலையில் இருந்து பொருளியற் சார்புநிலைக்குச் சில விளையாட்டுக் கூறுகள் சங்ககாலத்திலேயே மாற்றங் கண்டன. வேளாண் சமூக அமைப்பினூடாகத் தனியுடமை உணர்வு அரும்பத் தொடங்கிய பின் சில விளையாட்டுகளின் வாயிலாக பொருள் இழப்பதுவும் பெறுவதும் இயல்பாயிற்று. காய்களை இழந்து பெறுகின்ற பல்லாங்குழி இத்தகைய ஒரு விளையாட்டே என்கிறார் தொ. பரமசிவன்.

அக்கால அரசுகளால் ஆதரிக்கப்பட்ட சதுரங்கமே பின்னாளில் சூதாட்டமாயிற்று என்பர்.

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகெங்கும் காணப்பட்ட வளர்ச்சியடைந்த சமூகங்கள் பலவகையான விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தன. அவர்களைப் போலவே தமிழரும் பல்வகை விளையாட்டுகளை உருவாக்கி விளையாடிய செய்திகளை சங்க இலக்கியங்கள் தருகின்றன. விளையாட்டுகள் பற்றிய விபரங்களைப் பெற்றுக்கொள்ள சங்க இலக்கியங்களைத் தவிர பிற சான்றுகள் பெரிதும் கிடைக்கவில்லை. சங்கச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டே இக் கட்டுரை எழுதப்படுகின்றது. பெரும்பாலான விளையாட்டுகள் பற்றிய குறி;ப்புகள் இவ்விலக்கியங்கள் வாயிலாகக் கிடைத்துள்ளன. ஆயினும் கட்டுரைச் சுருக்கம் கருதிச் சிலவே இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.


விளையாட்டு வகைகள்:

சங்க இலக்கியங்கள் பல வகையான விளையாட்டுகளைக் குறிப்பிடுகின்றன. சங்கால விளையாட்டுகள் நில விளையாட்டு, நீர் விளையாட்டு என இருவகையாகக் கருதப்பட்டன.

நில விளையாட்டுகளை,

சிறுவர் விளையாட்டு
சிறுமியர் விளையாட்டு
மகளிர் விளையாட்டு
காளையர் விளையாட்டு
முதியோர் விளையாட்டு
காதலர் விளையாட்டு
மொழி விளையாட்டு
திளைப்பு விளையாட்டு
காட்சி விளையாட்டு
என வகைப்படுத்தியுள்ளனர். இப் பகுப்புகளுக்குள் பல்வகை விளையாட்டுகள் அடங்கும்.


அசதியாடல், அம்புலி அழைத்தல், அலவன் ஆட்டல்,உலாவல், ஊசல், எண்ணி விளையாடல், எதிரொலி கேட்டல், ஏறுகோள், கண் புதைத்து விளையாடல்,கவண்,கழங்கு,குதிரையேற்றமும், யானையேற்றமும், குரவை, சாம விளையாட்டுகள், குறும்பு விளையாட்டுகள், சிறுசோறு, சிறுதேர், சிறுபறை, சிற்றில் சிதைத்தல், சுண்ண விளையாட்டு, சூது, செடி கொடி வளர்ப்பு, பந்து விளையாட்டு,பறவைகளைக் காணுதலும் அவற்றைப் போலச் செய்தலும்,பறவை வளர்ப்பும் விலங்கு வளர்ப்பும்,பாவை விளையாட்டு,பிசி நொடி விளையாட்டு,மணற்குவியலில் மறைந்து விளையாடல்,மலர் கொய்தலும் மாலை தொடுத்தலும்,மல்,வட்டு,வள்ளை, வில், வேட்டை என்பன அக்காலத்தே விளையாடப்பட்ட விளையாட்டுகள் சிலவாகும்.

நீர் விளையாட்டுகளாவன,தைநீராடல், நீச்சல் நடனம், நீச்சல், பந்து,பின்படகு,முன்படகு, வளிப்படகு பண்ணை, பாய்ச்சல், புனலாடல், மிதவை,மூழ்கல் போன்றவை ஆகும்.

இவற்றில் சில விளையாட்டுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.


உடல் வித்தை விளையாட்டு:

இந்த விளையாட்டு இப்போது புலஅயௌவiஉ என உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.

ஒரு மயில் மாம்பழத்தை உண்டுகொண்டிருக்கையில்  அது தவறி ஒரு சிறு சுனையில் வீழ்ந்துவிடுகின்றது. அதை எடுப்பதற்காகச் சுனையில் இறங்கும் மயில் அச்சுனைநீரைப் பருகுகின்றது. அந்தச் சுனையில் பழுத்த மிளகும், பலாவும் விழுந்து ஊறிவிட்டிருக்கின்றது. அதனால் அச்சுனை நீரோ போதையூட்டும் கள்ளாகிவிட்டது. அச்சுனை நீரை அருந்திய மயில்,வியலூர் என்னும் ஊரில் இன்னிசை முழக்கத்தோடு ஆடுமகள் ஒருத்தி கயிற்றில் ஏறி ஆடுவது போல் இருந்தது என்கிறது குறிஞ்சிப்பாட்டு (191-194);.

வைகை ஆற்றில் நீராடிய மகளிர் இசைக்கருவிகள் முழங்க ஒருவர் தலைமேல் ஒருவர் நின்று உடல் வளைத்து வித்தை காட்டியிருக்கின்றனர். இதைச் ‘சென்னியர்’ ஆடல் என்கிறது பரிபாடல் (77-80)

ஊன்றித் தாண்டல்

இதுஇக்கால உலக விளையாட்டுகளில் சிறந்துவிளங்கும் விளையாட்டு. சங்ககாலத்தில் குன்றக் குறவர்களின் சிறுவர்கள் இந்த விளையாட்டை விளையாடியிருக்கின்றார்கள்.

மந்தி தன் வயிற்றில் குட்டியைப் பற்றிக்கொண்டு, மூங்கில் நுனியைப் பற்றி வளைந்தாடித் தவ்வுவது கண்ட குன்றத்துக் குறவரின் புதல்வர் தாமும் மூங்கில் கொம்பைப் பற்றி வளைந்து ஆடி, வெற்றி கண்டு, அந்த வெற்றியை வெளிப்படுத்தக் கைகொட்டி மகிழ்ந்தனர் என நற்றிணை (95) கூறுகின்றது.

செம்முகத் துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்க்க்
கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்தெழுந்து
குறக்குறு மாக்கள் தாளம் கொட்டும்குன்றகம் – நற்றிணை 95

வல்லாட்டம்:

வல்லாட்டம் ஒரு முதியோர் விளையாட்டாகும். ஊர்ப் பொதுமன்றத்தில் இதற்கான வல்லப் பலகை இருந்திருக்கின்றது. முதியோர் மிகுந்தகவனத்தோடு ஆடியிருக்கின்றனர். இவ்வல்லாட்டம் போட்டி விளையாட்டாகவும் ஆடப்பட்டிருக்கின்றது.

“கொழுங் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து,
நரை மூதாளர் அதிர் தலை இறக்கி,
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய,
வரி நிறச் சிதலை அரித்தலின்,” (அகநானூறு 377);.


வட்டு விளையாட்டுகள்:  (Hockey

வட்டு என்பது ஒருவகைப் பந்தை ஒத்த பொருளாகும். பல வகையான வட்டு விளையாட்டுகள் சங்ககாலத்திலே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் வட்டு விளையாட்டுகளை ஆண்களே விளையாடினர்.

 - குணில் வட்டு (ர்ழஉமநல) :

குணி;ல் என்பது நுனியில் வளைந்த தடியாகும். உருளும் மணிவட்டைத் குணில் கொண்டு அடித்தனர். அது மேலும் வேகம் கொண்டு ஓடியது. இந்த விளையாட்டு இக்காலத்தில் விளையாடப்படும் கொக்கி விளையாட்டுக்கு ஒப்பானது. இச் செய்தியை,

“உருள்கின்ற மணி வட்டைக்
குணில் கொண்டு துரந்ததுபோல்” என்ற வரியால் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது.

 - வட்டு நா விளையாட்டு (புழடக):

வட்டை நாக்குப் போன்ற தடியால் அடிக்கும் விளையாட்டு ‘வட்டுநா விளையாட்டு’ எனப்பட்டது. அரக்கினால் சிவப்பு புள்ளிகள் இடப்பட்ட வட்டினை நாக்குப் போல் வளைந்த நுனி கொண்ட கோலால் அடித்தனர். உலகப் புகழ் பெற்ற விளையாட்டான கோல்ப் (புழடக ) விளையாட்டில் பயன்படுத்தப்படும் கோலும் நாக்குப் போன்றே வளைந்துள்ளது. நற்றிணை இவ்விளையாட்டு பற்றிய குறிப்பைத் தருகின்றது.

“வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின்,
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன் நகை” (நற்றிணை 341)


பந்தாட்டம்:

சங்ககாலத்தில் பெரிதும் விரும்பி விளையாடப்பட்ட விளையாட்டு பந்தாட்டம் ஆகும். பெரும்பாலும் பெண்களே இவ்விளையாட்டை விளையாடினர். இவ்விளையாட்டு வீட்டு முற்றத்திலும், மாடங்களிலும், மணல் மேடுகளிலும் ஆடப்பட்டது. நூலினால் செய்யப்பபட்;ட இந்தப் பந்தில் பல வேலைப்பாடுகள் இருந்தன. வானைத் தொடுமளவுக்கு பந்தை எறிந்தனர் என்ற செய்தியை குறிஞ்சிக் கலி (4:22-23, 21ஃ6-7) குறிப்பிடுகிறது.காலால் பந்தை உதைத்து விளையாடினர் என்பதை  நற்றினை (324:7-9) சொல்கிறது.

“தந்தை இடனுடை வரைப்பின்
ஆடுபந்து உருட்டுநள் போல ஓடி” - நற்றிணை 324-7

இது நீரில் விளையாடப்பட்ட பந்தாட்டத்தை நீர்ப்பந்தாட்டம் என அழைத்திருக்கின்றனர்.


மொழி விளையாட்டு:

பல்வகை மொழி விளையாட்டுகள் அக்காலத்தில் விளையாடப்பட்டிருக்கின்றன. நன்கு வளர்ச்சியடைந்த
மொழிகளிடையேதான் மொழி விளையாட்டுகள் காணப்படும். பொதுமக்கள் பேசும் மொழி பொதுமொழி எனப்பட்டது. புலவர்கள் மதிநலத்தால் பேசும் மொழி மதிமொழி எனப்பட்டது. மதிமொழியில் செதுமொழி, முதுமொழி, புதுமொழி என்னும் வகைகள் உண்டு.

புலவோர் செந்தமிழில் எழுதிய பாடல்கள் செதுமொழி எனப்பட்டன. பழங்காலப் புலவோர் மூதறிவால் எழுதிவைத்த பாடல்கள் முதுமொழி ஆயின. பின்னாளில்தோன்றிய புலவோர் திரிசொல்லும் கலந்து எழுதிய பாடல்கள் புதுமொழி எனப்பட்டன.

“பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு
மதி மொழி இடல் மாலை வினைவர் போல், வல்லவர்
செது மொழி சீத்த செவி செறு ஆக,
முது மொழி நீரா, புலன் நா உழவர்
புது மொழி கூட்டுண்ணும், புரிசை சூழ், புனல் ஊர! (கலித்தொகை 68)

மொழிக்கு விழாக் கொண்டாடிய முன்னோர் மொழி வழி விளையாட்டுகளையும் உருவாக்கினர். சிறியோரும் பெரியோரும் இவ்விளையாட்டுகளால் மகிழ்ந்தனர். அதன்வழி மொழியை வளர்த்தனர்.


  - பிசிமொழி விளையாட்டு:

பிசி என்பது விடுகதை. தொல்காப்பியம் இதனை இரு வகையாகக் கூறகின்றது.

“ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும் தோன்றுவது கிளந்த துணிவினானும் என்றிரு வகைத்தே பிசிநிலை வகையே” - தொல்காப்பியம் 3-478

ஒருவர் விடுகதை சொல்வார். மற்றொருவர் அதனை விடுவிப்பார். அல்லது எதிர் விடுகதை சொல்லி, அவரவர் விடுகதையை அவரவரே விடுவித்துச் சமனாக்குவார்.


 -  பிணைமொழி விளையாட்டு:

புதிதாகப் பிணைத்து இட்டுக்கட்டிச் சொல்வது பிணைமொழி. இதனைத் தொல்காப்பியம் பண்ணத்தி எனக் குறிப்பிடுகிறது.

“பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்
பாட்டின் இயல பண்ணத்தி இயல்பே” செய்யுளியல், 180.

இதற்கு,‘பழம்பாட்டினூடு கலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி என்றவாறு’ என்று பேராசிரியர் உரை எழுதியிருக்கிறார்.

இக்காலப் பிணைமொழிக்கு ஓர் எடுத்துக்காட்டு,

எங்கே போகிறாய் - ஊருக்குப் போகிறேன்
என்ன ஊர் - மயிலாப்பூர்
என்ன மயில் - காட்டு மயில்
என்ன காடு - ஆர்க்காடு
என்ன ஆர் - அடையார்
என்ன வடை - ஆமை வடை
என்ன ஆமை - குளத்து ஆமை
என்ன குளம் - செட்டிகுளம்

விடை கிடைக்கும்வரை இப்படியே தொடர்ந்து விளையாடுவர்.


 - நாப்பயிற்சி விளையாட்டு:

நாவுக்கு உச்சரிப்புப் பயிற்சி தரும் விளையாட்டுகளைப் பேசுமொழி விளையாட்டாகக் கொள்ளலாம். இவற்றைச் சேர்ந்தாற்போல் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும்.

“ஓடுற நரியிலை ஒருநரி சிறுநரி, சிறுநரி முதுகிலே ஒருபிடி நரைமயிர்”

“மலையிலே ஒருகல் உருளுது புரளுது”

“கடலையிலே ஒருகல் உருளுது புரளுது, தத்தளிக்குது தாளம் போடுது”

“இது யாரு தச்ச சட்டை, எங்க தாத்தா தைச்ச சட்டை”

“ஊர் பூவரச மரமெல்லாம் என் பூவரச மரம்”இதைத் திரும்பத் திரும்ப விரைவாகச் சொல்லும்போது 'ஊர்ப் புருசனெல்லாம் என் புருசன்' என வாய் குழறிவிடும் என்பர்.


ஓரையாடுதல்:

ஓரை என்பது சங்ககால இளம் மகளிர்; விளையாடிய விளையாட்டுகளில் ஒன்றாகும். ஓரை என்றால் ஒலி எழுப்புதல் என்று பொருள். இது
ஆரவாரம் எழுமாறு ஆடப்படும் ஆட்டங்களைக் குறித்ததாகக் கொள்ளலாம்.

கடல் அலை பாயும் மணலிலும், ஆற்று மணலிலும், சேற்று நிலத்திலும், முற்றத்தில் பரப்பப்பட்ட மணலிலும் இது விளையாடப்பட்டதாகச் சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

ஆமை, நண்டு ஆகியவற்றைக் கோல் கொண்டு அலைத்து விளையாடுவது ஓரையாடுதல் என்ற விளையாட்டில் ஒருவகையாகும். இவ்விளையாட்டை ‘அலவனாட்டல்’ என்று பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது.

‘‘ஓரையாயத் தொண்டொடி மகளிர்’’என ஓரையாடும் மகளிரை புறநானூறு 176 குறிப்பிடுகின்றது.

வண்டலிழைத்தல்:

வண்டலிழைத்தல் என்பது பழங்கால விளையாட்டுகளில் ஒன்றாகும். மணலை நீளமாகக் குவித்து அதில் ஒரு குச்சியையோ அல்லது விதையையோ மறைத்து வைப்பர்.மற்றொருவர் இருகைகளையும் கொண்டு மூடிய மணலுக்குள்மறைக்கப்பட்டதைத் தேடி எடுப்பர். அவ்வாறு எடுத்துவிட்டால் எடுத்தவர் வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார்.

இவ்வாறு வண்டல் இழைத்த ஒருத்தி, வண்டலுக்குள் ஒரு புன்னை விதையைப் புதைக்கையில் தாய் அழைக்க, ஓடிவிடுகிறாள். பின் அவ்விதை முளைத்து மரமாகிறது. பின்னாளில் அதே மரத்தருகில் காதற் தலைவன் அணைக்க முற்படுகிறான். அவள் புன்னை மரத்தைக் காட்டி,‘இதோ என் தங்கை, அவள் முன் இவ்வாறு செய்யலாகாது’ எனத் தடுக்கிறாள். இது நற்றிணை கூறும் ஓர் அழகிய காட்சி.

இவ்விளையாட்டு இப்போது “கிச்சுக் கிச்சுத் தாம்பளம்’’எனக் கிராமப்புற மக்களால் அழைக்கப்படுகின்றது.



நீர் விளையாட்டுகள்.

பழங்காலத்தோர் நீர் விளையாட்டுகளுக்குப் பேரிடம் வழங்கியிருக்கின்றனர். இவ்விளையாட்டுகளைக்‘களிநீராடல்’ என அழைத்திருக்கின்றனர். நீர் விளையாட்டுகள் பல,கட்டுரையின் தொடக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. சில நீர் விளையாட்டுகள் பற்றி நோக்குவோம்.


 - புனல் நயந்து ஆடல்  (synchronized swimming  நீச்சல் நடனம்  ):

இந்நீர் விளையாட்டு அக்காலத்தில் சிறப்புற்று விளங்கியிருக்கின்றது.கழார் என்னும் ஊரிலுள்ள காவிரியாற்று நீர்த்துறையில், அரசன் கரிகாலன், அவன் மகள் ஆதிமந்தி முன்னிலையில், ஆட்டனத்தி என்ற நீச்சல் வீரனும், காவிரி என்னும் நீச்சல்மகளும் இணைந்து நீச்சல் நடனம் ஆடிக் காட்டினர் என அகநானூறு கூறுகின்றது.

“அத்தி தன் காலில் அணிந்திருந்த கழல் அணியை நீரில் மூழ்கிக்கொண்டு காலை நீருக்குமேல் தூக்கி ஆட்டிப் புரட்டிக் காட்டினான்.வயிற்றில் கட்டிய ஆடை நழுவாமல் இருக்கக் கச்சம் கட்டியிருந்தான். அத்துடன் பாண்டில் என்னும் அணிகலனும் அணிந்திருந்தான். அந்தப் பாண்டில் அணியில் மணிகள் கோக்கப்பட்டிருந்தன. அந்த மணிகள் ஒலிக்கும்படி வயிறு மட்டும் மேலே தெரியும்படி உருண்டு ஆட்டிக் காட்டினான். இப்படி ஆடிய அத்தியோடு கூடி ஆடியவள்  காவிரி. அத்தியை விரும்பிய காவேரி நீரோட்டத்துடன் அவனை ஒளித்துக் கொண்டு சென்றாள்” என அகநானூறு மேலும் கூறுகின்றது.

“கல்லா யானை கடி புனல் கற்றென,
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை,
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை,
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண,
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப,
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து,
காவிரி கொண்டு ஒளித்தாங்கு” (அகம் 376)


 - பண்ணை:

மகளிர் நீரில் பாயும் விளையாட்டுக்குப் பண்ணை என்று பெயர்.

சங்க காலத்தில் ஆற்றங்கரையிலிருந்த மருதமரத்தில் ஏறி ஒருத்தி பண்ணை பாய்ந்தாள்.அதுமயில் ஒன்று விண்ணிலிருந்து மண்ணுக்குத் தோகை விரித்தபடி இறங்குவதைப் போன்றிருந்தது. அவள் அணிந்திருந்த அணிகலன்கள் மயிலின் தோகையில் காணப்பட்ட வண்ணப்புள்ளிகளைப் போன்றிருந்தன என ஐங்குநூறு கூறுகின்றது.

“விசும்பிழி தோகை சீர் போன்றிசினே
பசும்பொன் அவிரிழை பைய நிழற்ற
கரைசேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே”– ஐங்குறுநூறு 74.

மரந்தை என்னும் ஊரில் சங்ககால மகளிர் கடலிற் பாய்ந்து விளையாடினர். அப்போது அவர்கள் அணிந்திருந்த பூக்கள் கடலலையில் மிதந்துவந்தன என நற்றிணை (395) கூறுகின்றது.

 - படகு விளையாட்டுகள்:

சங்ககாலத்தோர் பலவகையான படகு விளையாட்டுகளை விளையாடியிருக்கின்றனர். பின்படகு (சழறiபெ)இமுன்படகு (உயழெநiபெ)இவளிப்படகு (றiனெ-ளரசகiபெ) என்பன முதன்மையான படகு விளையாட்டுகளாக இருந்தன. படகை அக்காலத்தோர் புணை என்றும் அழைத்தனர்.

படகை முன்புறமாகச் செலுத்துவதும், பின்புறமாகச் செலுத்துவதும் இக்காலத்திலும் உண்டு. முன்படகைத் தலைப்புணை என்றும், பின்படகைக் கடைப்புணை என்றும்அழைத்திருக்கின்றனர்.

“பலர் புணை செலுத்தி நீரில் விளையாடினர். தலைவன் செலுத்திய புணையை ஒருத்தி பின் தொடர்ந்தாள். அவன் தலைப்புணையில் முன்னோக்கிச் சென்றால் அவளும் தலைப்புணையில் முன்னோக்கி வந்து அவனைப் பின் தொடர்ந்தாள். அவன் கடைப்புணையில் பின்னோக்கிச் சென்றால் அவளும் கடைப்புணையில் பின்னோக்கிச் சென்று அவனைத் தொடர்ந்தாள். அவன் புணையைக் கைவிட்டு நீரோடு மிதந்து சென்றால், அவளும் அவ்வாறே செய்து அவனைத் தொடர்ந்தாள்” என்ற செய்தியைக் குறுந்தொகைப்பாடல் தருகின்றது.

“தலைப் புணைக் கொளினே, தலைப் புணைக் கொள்ளும்;
கடைப் புணைக் கொளினே, கடைப் புணைக் கொள்ளும்;
புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின்,
ஆண்டும் வருகுவள் போலும்” (குறுந்தொகை 222)


 - நீச்சல் பந்தாட்டம்:

இவ்விளையாட்டைக் காதலர் பெரிதும் விளையாடியிருக்கின்றனர். நீராடும் காதலர் ஒருவர்மீது ஒருவர் பந்தை வீசி விளையாடுவர்.‘பூநீர் பெய் வட்டம்’என்று அந்தப் பந்து அழைக்கப்பட்டிருக்கின்றது. பலவகை வண்ண நீரினால் நிரப்பப்பட்ட பந்துகளை ஒருவர்மீது ஒருவர் வீசிக்கொள்வர். பந்து மோதியதும் உடைந்து வண்ண நீர் சிந்தும். இக்காலத்தில் வட இந்தியாவில் கொண்டாடப்படும் ‘கோலி’ விழாவை ஒத்ததாக இது காணப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக இன்றும் மாமன் முறை கொண்டோர் மீது மஞ்சள் நீர் ஊற்றும் வழக்கம் காணப்படுகின்றது. இச்செய்தியைப் பரிபாடல் தெரிவிக்கின்றது.

“கண் ஆரும் சாயற் கழித் துரப்போரை
வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும்” (பரிபாடல் 11)

“உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானைப்
புல்லாது ஊடிப் புலந்து நின்றவள்
பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய..” (பரிபாடல் 12)


நிறைவுரை:

சங்ககால மக்கள் விளையாட்டின் வழியாகப் பெருமகிழ்வு கொண்டனர். ஒருவரோடு ஒருவர் இணக்கமாகக் கூடி வாழ விளையாட்டு பெருந்துணை செய்தது. நல்ல தோழியரையும் பாங்கர்களையும் (நண்பர்) விளையாட்டுகளே உருவாக்கின. போர் நிறைந்த அக்காலத்தில் உள்ளம், உடல் ஆகிவற்றின் வலிமைகளைப் பேண விளையாட்டுகள் பெரிதும் பயன்பட்டன. ஏறு தழுவல், மற்போர், வாட்போர் யானை, ஏற்றங்கள் என்பன சிறந்த வீரரை அரசருக்கும், மணப்பெண்களுக்கும் அடையாளம் காட்டின.

இக்காலத்தில் உலகெங்கும் போற்றப்படுகின்ற பல விளையாட்டுகள் வேற்றுலகத் தொடர்புகள் பெரிதும் அற்றிருந்த சங்ககாலத்திலும் விளையாடப்பட்டிருக்கின்றன என்பது ஆச்சரியம் தருகின்ற உண்மையாகும். குறிப்பாக பெரும் செல்வாக்கும் பெற்றிருக்கும் எழில் உலாவரங்கு (குயளாழைn ளூழற) சங்ககாலப் பெண்களால் நடத்தப்பட்டது என்பது பெருவியப்பளிக்கின்றது.

தற்போதைய உலகப்புகழ் பெற்ற விளையாட்டுகள் பல அக்காலத்தில் எம்மாலும் விளையாடப்பட்டுள்ளன என்ற தகவல்கள் இனம் சார்ந்துஎம்மைப் பெருமைப்படுத்துபவனவாக உள்ளன.

ஒத்த தன்மை நிலவிய பண்டைய சமூகத்தில் வேளாண் சமூகநிலை ஏற்றத்தாழ்வுகளுக்கு வித்திட்டது என்பர். இச்சமூக மாற்றங்கள் விளையாட்டிலும் தாக்கங்களை ஏற்படுத்தின. ‘உள்ளத்தில் உவகை ஏற்படுத்துதல்’ என்ற சமூகச் சமதன்மை நிலையில் இருந்து பொருளியல் தாக்கத்தினூடாக விளையாட்டு முறைகள் மாறத்தொடங்கின. பொருள் இழத்தலும் ஈட்டலும் சில விளையாட்டுகள் புகுந்துகொண்டன. வன்முறையின்றி சொத்துகளைக் கவரவும் சூது போன்ற விளையாட்டுகள் பயன்படுத்தப்பபட்டன. இந்த மாற்றங்களுக்கு அதிகாரமும் பொருளியற் சமச்சீரின்மையும் உதவின.

எம் பண்பாட்டு விழுமியங்கள் பலவற்றையும் சுமந்து சமூக ஒருமைப்பாட்டைப் பேணப் பயன்பட்ட பல விளையாட்டுகளை நாம் தெலைத்துக்கொண்டிருக்கின்றோம்.பல தொலைந்தே போய்விட்டன. பெரும் பண விளையாட்டுகளும், உலகமயமாதலும் தனித்துவமான விளையாட்டு வடிவங்களை மெல்ல மெல்ல அழித்து வருகின்றன.

எம் தொன்மங்கள் சுமந்த இவ்விளையாட்டுகளை மீண்டும் மீட்டெடுக்க முடியுமா?என்பது ஐயமேயாயினும் அவற்றைப் பற்றிய வரலாற்றை அழியவிடாது பேணிக்காப்பது எமது கடன்.


க்கத்திற்கு உதவிய நூல்களும் இணையத்தளங்களும்: 

தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்: கே. கே. பிள்ளை
பண்பாட்டு அசைவுகள்: தொ பரமசிவன்
தமிழர் நாகரிகமும் பண்பாடும்: முனைவர் அ. தட்சினாமூர்த்தி
பழந்தமிழர் விளையாட்டுகள்: முனைவர் இரா. குணசீலன்
சங்க இலக்கிய விளையாட்டுக் களஞ்சியம்: சு.சிவகாமசுந்தரி  
புறநானூறு
பரிபாடல்
நற்றிணை
பட்டினப்பாலை
அகநானூறு
குறுந்தொகை
புறநானூறு

http://ta.wikipedia.org/wiki/தமிழர்_விளையாட்டுகள்_(சங்ககாலம்)
http://www.tamilvu.org/library/libindex.htm
http://ta.wikipedia.org/wiki/சங்ககால_விளையாட்டு


சங்கத் தமிழரின் ‘குடிப்’ பெருமை


ஒரு விருந்து நடந்து கொண்டிருந்தது. ஒரு பிரபலமான பெண் கவிஞர் அங்கு வந்திருந்தார். எவ்வகையாய்ப்; பட்டியலிட்டாலும் தமிழின் முக்கிய மற்றும் தவிர்க்க முடியாத பெண் கவிஞர் அவர்தான். இலக்கியம், அரசியல் என அங்கிருந்தவர்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.

நிகழ்வை ஏற்பாடு செய்தவர் ஒரு அரசியற் தலைவர். கவிஞர்கள் இருக்குமிடத்தில் மது இல்லாமலா? போதையை நிரப்பியபடி சிறியதும் பெரியதுமாகப் பல்வகைப் புட்டிகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

முதலில் சிறிய அளவில் போதை ஏற்றக்கூடிய மதுவகைகள் பரிமாறப்பட்டன. ஆயினும் கூடியிருந்தோரின் தாகம் தீர்ந்தபாடில்லை. பாம்புக்கடிபோல் போதையேற்றக் காத்திருந்தோருக்கு மெது‘மது’ எறும்புக்கடியாக இருந்தது.

ஏற்பாட்டாளர் கள நிலவரத்தைப் புரிந்து கொண்டு பெரும் போதைதரும் மதுப் புட்டிகளைத் திறந்தார். விருந்து அமர்க்களப்பட்டது. பலவாறாக ஆக்கப்பட்ட சோற்றுவகைகளும் அங்கு நிறைந்திருந்தன.

கவிஞரும் அரசியல் தலைவரும் ஒன்றாக மதுவருந்தியபடி பேசிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு முன் தணலில் வாட்டிய இறைச்சி (டீ டீ ஞ அநநவ) இருக்கிறது. எலும்போடு கூடிய இறைச்சித்துண்டுகளை தலைவர் பெண் கவிஞருக்குக் கொடுக்கின்றார்.

இறைச்சியைச் சுவைத்தபடியும் மது அருந்திக்கொண்டும் இருவரும் இலக்கியம் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

கதையோடு கதையாகக் கைகளில் படிந்த இறைச்சி சற்றே கவிஞரின் கூந்தலிலும் படிகின்றது. இறைச்சியின் மணம் வீசிய அக்கூந்தலைக் கோதி விடுகின்றார் அரசியல் தலைவர். 

இது அண்மையில் நடந்த முற்போக்கு இலக்கியச் சந்திப்பின் பினனர்; ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தல்ல.

ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த விருந்து.

விருந்துக்கு வந்திருந்த அந்தப் பிரபல கவிஞர் ஒளவையார். விருந்தை ஏற்பாடு செய்த அவருடைய நண்பர், அரசர் அதியமான்.


சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே
சிறுசோற் றானு நனிபல கலத்தன்மன்னே
பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன்மன்னே
என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே
அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே
நரந்த நாறுந் தன்கையாற்
புலவு நாறு மென்றலை தைவரு மன்னே” (235 புறுநானூறு)

என்ற ஒளவையின் புறநானூற்றுப் பாடலே மேற்கூறப்பட்ட நிகழ்ச்சிக்காக இலக்கியச் சாட்சி.

அதியமான் இறந்தபோது அவனது பிரிவுத்துயரால் வருந்திய ஒளவையார் அதியமானோடு தொடர்புபட்ட நிகழ்வுகளைத்  தொடுத்து இப்பாடலைப் பாடியிருக்கின்றார்.

“சிறிய அளவில் போதை ஏற்றுகின்ற கள் கிடைக்கின்றபோதும் எமக்குத் தருபவன். பெரும் போதை ஏற்றுகின்ற கள் கிடைத்தபோதும் எமக்குத் தந்து நாம் பாடக் கேட்டுத் தானும் அருந்துபவன். சிறிய அளவில் சோறு கிடைத்தாலும் பெருமளவில் சோறு கிடைத்தாலும் தந்துதுண்பவன். என்போடு கிடைக்கும் இறைச்சித்துண்டுகளையும் எமக்காகத் தருபவன். அம்பும் வேலும்கொண்ட போரக்;களத்திலும் போய் நிற்பவன். நாரத்தம் பூ மணக்கும் தன் கையால் புலால் மணம் வீசும் எம் கூந்தலையும் கோதி விடுபவன்” என்பதே இப்பாட்டின் பொருளாகும்.

இச் செய்தியில் நாம் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அக்காலத்தில் மன்னரைப் போலவே மதுவும் மக்களோடு இரண்டறக் கலந்ததாகவே இருந்தது.

பல்வேறு இலக்கியச் செய்திகள், கட்டுரைகள் வழியாகப் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகின்றது. இக்கட்டுரையின் நோக்கம் நம் முன்னோரது மதுப்பயன்பாடு பற்றிய அறிவை வெளிப்படுத்துவதேயன்றி மது விரும்பிகளுக்கு மகிழ்ச்சியூட்டுவதல்ல. சிலவேளை இக்கட்டுரையின் பக்கவிளைவாக அது அமையலாம். அவ்வாறாயின் அது எம் தவறல்லவே.

பல தளங்களிலும் உயர்நிலை பெற்றிருந்த சங்ககாலத் தமிழர் போதை ஏற்றவல்ல மதுவகைகளைப் பெருமளவில் பயன்படுத்தியிருக்கின்றனர். அவர்களது மதுப்பயன்பாடு இதுவரை நாம் அறிந்திராத பல புதிய செய்திகளை வெளிப்படுத்துகின்றது. மது பற்றி எம் முன்னோர் கொண்டிருந்த பேரறிவு எம்மை வியக்கச் செய்கின்றது.

பழந்தமிழர் வாழ்வில் மது அன்றாடப் பயன்பாட்டுக்குரிய பொருளாவே கருதப்பட்டிருக்கின்றது. சங்க இலக்கியங்களான புறநானூறு, அகநானூறு, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மலைபடுகடாம், நற்றிணை, பதிற்றுப்பத்து, மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் தமிழர் பயன்படுத்திய மதுக்கள் குறித்துப் பல செய்திகள் விரிவாகக் காணப்படுகின்றன. அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பலவகையான மதுச்சாடிகளும் குடிப்பழக்கப் பழமைக்குச் சான்று தருகின்றன.

மக்களது வாழ்வில் ஒரு பொருளுக்குப் பலவகையான சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்குமானால் அப்பொருள் மக்கள் நடுவே பெருஞ்செல்வாக்குப் பெற்றிருக்கவேண்டும் என்பர் அறிஞர்.  பண்டைத் தமிழர் வாழ்வியலில் மதுவகைகளும் அவற்றிற்கான பெயர்களும்பலவாறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மதுவுக்கு நம் முன்னோர் வழங்கிய பெயர்ப்பட்டியல் இதோ,

தேக்கள்
தேறல்
நறவு
மட்டு
சொல்விளம்பி
தோப்பி
கள்
நறும்பிழி
பூக்கமழ் தேறல்
மணங்கமழ் தேறல்
கலங்கல் கள்
மது

இச்சொற்கள் அனைத்துமே மதுவைக் குறிப்பதாயினும், ஒவ்வொரு பெயரும் தனித்துவமான ஒரு வகை மதுவையே குறித்து நின்றது என்ற செய்தி வியப்பை ஏற்படுத்துகின்றது.

மது வகையறாக்களைத் தாமே வடித்துத் தனித்துவம் விளங்கப் பெயரிட்டிருக்கும் தமிழரது மது பற்றிய தெளிவான அறிவைக் கீழ்க்
காணும் செய்திகளால் அறியலாம்.

நெல்லாற் சமைத்த கள் வகைகள் நறவு எனவும்,வடிக்கப்பட்ட கள் வகைகள் தேறல் எனவும்  அழைக்கப்பட்டன.மரங்களில் இருந்து பெறப்பட்டவை பிழி எனப்பட்டன. கள் என்பதை எல்லா வகையான மதுக்களுக்குமுரிய பொதுச்சொல்லாகவே பயன்படுத்தினர்.

தேக்கள்

சிறந்த தேனைப் பெற்று அதை மூங்கில் அரிசியோடு கலந்து மூங்கில் குழாய்களில் இட்டு நிலத்தடியில் புதைத்து வைப்பர். நாட்கள் செல்லச் செல்ல பதனப்படுத்திய இத்தேனில் சுவையேறும். தீஞ்சுவையோடு போதையையும் கொண்ட இத்தேனே தேக்கள் என்றழைக்கப்பட்டது. குறிஞ்சி நிலத்தோர் இத் தேறலை அருந்தி முருகனை வழிபட்டார்கள் எனத்திருமுருகாற்றுப் படை (அடி 195) கூறுகின்றது.

நறும்பிழி அல்லது நறவு

குற்றாத கொழியில் அரிசியைக் களி போன்று துழாவிக் கூழாக்குவர். பின் அதனை வாயகன்ற தாம்பாளம் போன்ற தட்டுப் பிழாவில் ஊற்றி ஆற்றுவர். பின் நெல் முனையை இடித்து அக்கூழிற் கலப்பர். கலந்த இக்கூழினைக்குடத்தில் வைத்து இரு இரவும், இரு பகலும்தொடாமல் பாதுகாத்து வைப்பர்.  நன்கு ஊறிய பின்பு விரலாலே அரிப்பர். இவ்வாறு அரிக்கப்படும் கள் மிகுந்த சுவையினை உடையதாக இருக்கும். நறும்பிழி எனப்படும் இக்கள்ளினை வலையர்கள் உண்டு மகிழ்ந்தனர் என்னும் செய்தியினைப் பெரும்பாணாற்றுப்படையில் காணலாம்.

பெண்ணைப் பிழி

அக்காலத்தே பனை மரங்களையே பெண்ணை மரம் என அழைத்தனர். பனையில் இருந்து பெறப்பட்ட கள்ளே ‘பெண்ணைக் பிழி’ எனப்பட்டது.  காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த பரதவர்கள் பனங்கள்ளைப் பருகிய செய்தியைப் பட்டினப்பாலை கூறுகின்றது.

மதுக்குழம்பு

பலவகை மதுக்களைத் தயாரிப்பதற்கு மூலக்கலவையாக மதுக்குழம்பு என்னும் பொருள் பயன்படுத்துப்பட்டிருக்கின்றது.
கூறு மிக்க அரிசியையும் பனை மரத்தின் பெருங்குரும்பையையும்; (நுங்குக்கு முந்தைய நிலை) கொண்டு8 லிட்டர் அளவான கூழ் காய்ச்சிப் பின்,21.5 லிட்டர் அளவான உளுந்தை ஊற வைத்த தண்ணீரோடு கலப்பர். இதுவே மதுக்குழம்பு எனப்பட்டது.

தோப்பி

முன்னோர் வீடுகளிலேயே வெகு இயல்பாகக் கள் வடித்திருக்கின்றனர். இக்கள் ‘தோப்பிக்கள்’ என்று என அழைக்கப்பட்டது. ‘தொப்பி நெல்’என இன்றும் அழைக்கப்படுகின்ற நெல் கொண்டு இக்கள் உருவாக்கப்பட்டது.
‘ஒரு தூணி நீர்(21.5 லிட்டர்) அரை மரக்கால்(4 படி) அரிசி, மூன்று படி
மதுக்குழம்பு ஆகியவற்றின் கலவை கொண்டே தோப்பி வடிக்கப்படல் வேண்டும்’ என பெரும்பாணாற்றுப்பபடை (அடி 42) குறிப்பிடுகின்றது.

தேறல்

பல்வகையான தேறல்களை அக்காலத்தில் தயாரித்தனர். பன்னிரண்டு மரக்கால் மா, ஐந்து படி மதுக்குழம்பு புத்திரகமரத்தின் பட்டை,கனிகள்,மணக்கூட்டு போன்றவற்றின் கலவையிருந்து தேறல் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

பிழி

பிழி எனப்படும் ஒருவகை மதுவைச் சுவைபடக் காய்ச்சியிருக்கின்றனர்.
ஒரு துலை விளம்பழம், ஐந்து துலை பாகு (செறிவாகக் காய்ச்சப்பட்ட சர்க்கரை) ஒரு படி தேன் இவைகளுடைய கலவையால்பிழி உருவாக்கப்பட்டிருக்கின்றது.

சாராயம்

பிற்கால இலக்கியமொன்றில் சாராயம் வடிக்கும் முறையும் குறிக்கப்ட்டிருக்கின்றது.ஆடு திண்ணாப்பாளை, திப்பிலி ஆகியவற்றின் சாற்றைக் கொதிக்க வைத்து,அதனோடு கருப்பஞ்சாறு, வெல்லம், தேன்பாகு, நாவற்பழச்சாறு பலாப்பழச்சாறு என்பவற்றுள்; ஒன்றைக் கலந்து அதை ஆறு மாதமோஓராண்டோ பாதுகாத்து வைத்துப் பின்னர்  அதனோடு வெள்ளரிப் பழம், கரும்பு,மாம்பழம், நெல்லிக்கனி என்னுமிவற்றின் சாற்றோடு கலந்தேனும் கலவாமலேனும் உருவாக்கப்பபடுவன சாரயாய வகைகளாகும்.

பூக்கமழ் தேறல்:

செல்வந்தர்களின் மாளிகைகளிலும் அரண்மனைகளிலும் பூக்கமழ் தேறல்பறிமாறப்பட்டிருக்கின்றது. பொற்கிண்ணங்களில் தேக்கள், தேறல் போன்றவற்றில் இஞ்சி, குங்குமப்பூ போன்ற மணங்கமழும் பூக்களை இட்டுத் உருவாக்கப்படுவதே ‘பூங்கமழ் தேறல்’ ஆகும். அரசர்கள் இத்தகைய தேறலை உண்டு மகிழ்ந்த வரலாற்றை மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் குறிப்பிடுகிறார்.

ஒராண்டு வரை ஊற வைக்கப்படும் மது வகைகள் தலையாயது என்றும், ஆறு மாதங்கள் வரை ஊற வைக்கப்படும் மது வகைகள் இடையாயது என்றும், ஒரு மாதம் வரைஊற வைக்கப்படும் மது வகைகள் கடையாயது என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றன.

இரவுப்பொழுதில் ஆடவரும் பெண்டிரும் இணைந்து அருந்துகின்ற கள் காம பானம் எனப்பட்டிருக்கின்றது. மணங்கமழ் தேறல், பூக்கமழ் தேறல் என்பன இரவுப்பொழுதுக்குரிய மது வகைகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

தென்னை, பனை போன்றவற்றில் இருந்து பெறப்பட்ட கள் ‘கலங்கல் கள்’ எனவும் அழைக்கப்பட்டிருக்கின்றது. இக்கலங்களில் இருந்து வடிக்கப்பட்ட கள்iயும் தேறல் என அழைத்தனர். கலங்கல் கள் போதை அதிகம் கொண்டதாகவும்,அதிலிருந்து வடிக்கப்பட்ட தேறல் போதை குறைவானதாகவும் இருந்திருக்கின்றது.

‘அரசன் தமக்குப் போதை மிக்க கலங்கல் கள்ளைத் தந்தும், தேறலைத் தான் அருந்தியும் தம்மை மகிழ்வித்தான்’ எனப் போர்வீரர்கள் கூறும் செய்தியை,

“எமக்கே கலங்கல் தருமே! தானே தேறல் உண்ணு மன்னே”(புறம் 298)

என்ற புறநானூற்றுப் பாடல் ஒன்றால் அறிலாம்.  மன்னன் கலங்கல் கள்ளை வீரர்களுக்கு வழங்கிய அதேவேளை போதை குறைந்த தேறலைப் புலவர்களுக்கும் பாணர்களுக்கும் வழங்கியிருக்கின்றான் என்ற செய்தியைப் பதிற்றுப்பத்து தெரிவிக்கின்றது. அறிவு நிலை குன்றாது பாடல்களை இயற்வல்ல புலவர்களுக்கும், உணர்நிலை திரியாது பாட வேண்டிய பாணர்களுக்கும் காரணம் கருதியே மன்னன் தேறலை வழங்கினான் எனப் பதிற்றுப்பத்து பாடலுக்கு (40) உரை எழுதுகின்றார் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை.

தோப்பி, நறவு போன்றவை தற்கால பியர்(டீநநச) வகையைச் சார்ந்ததாகவும், மணங்கமழ் தேறல், பூக்கமழ் தேறல் என்பன வைன்(றுiநெ) வகையோடு ஒத்ததாகவும், தேக்கள் போன்றவை தற்போதைய விஸ்கி வகைகளுக்கு ஒத்ததாகவும் இருந்திருக்கின்றன.

முன்னோரது வாழ்வில் மது இரண்டற இணைந்து கொண்டமைக்குக் காரணம் அவர்கள் மதுவைப் பயன்படுத்திய முறைகளும் நோக்கங்களுமே.

போர் வீரர்கள் கள்ளைப் பெரிதும் விரும்பி உண்டிருக்கின்றனர். கள் அருந்திய பின் ஏற்படும் புளிப்புச் சுவையைப் போக்க, களாம்பழம் துடரிப்பழம், கருநாவற் பழம் போன்றவற்றை உண்டிருக்கின்றனர். இப்பழங்கள் நீர் வேட்கையைப் போக்கியதுடன் வலிமையை வழங்கின.

படைத்தலைவன் ஒருவன் போருக்குச் செல்லத் தயாராகின்றான். அது ஒரு குளிர்காலம். நடுக்கம் தரும் குளிரில் இருந்து உடலைப் பாதுகாக்கக் கள் அருந்துகின்றான். அது உடலுக்கு வெம்மையளித்துக் குளிரைப் போக்குகின்றது.

அக்காலப் பயணங்கள் பெரும்பாலும் வழி நடையாகவே இருந்தன. பாணர் பொருநர் என்போர் ஊரூராக நடந்து சென்று பாடிப் பரிசில் பெறுவர். அவ்வாறு சென்ற பாணர்களுக்கு ஏவல் மகளிர் கள் வழங்கி வழிநடைக் களைப்பைப் போக்குவர்.

பரிசில் பெற வழிநடையாகச் சென்ற பாணர்களுக்கு ஏவல் மகளிர் பொன்னாற் செய்த வட்டில் நிறையக் கள்ளினை அளித்தனர். அக் கள்ளினைப் பாணர்; பருகி வழிநடையால் ஏற்பட்ட உடல் வலியைப் போக்கிக் கொண்டனர். போதைக்கு மட்டுமின்றி உடல் வலியைப் போக்குவதற்கும் அக்கால மக்கள் கள் பருகினர்.

வைகை ஆற்றில் நீராடிய பெண்ணொருத்தியின்உடல் ஈரம் நிறைந்து குளிர்மை பெற்றிருந்தது. உடற் குளிர்மையைப் போக்க வெப்பம் தரும் கள்ளை அருந்தினாள். ‘நெய்தற் பூ போன்று கருமையாக இருந்த கண்கள் கள்ளுண்ட பின், நறவம் பூப்போல் சிவந்தன’ எனப் பரிபாடல் கூறுகின்றது.

சங்ககால மாந்தரின் வாழ்வுச் சிறப்பிற்கான முதன்மைக் காரணம் மன்னனுக்கும் மக்களுக்கும் இடையிருந்த அன்புறவே. தகைசான்ற புவலர்களும் கலைஞர்களும் இந்த அன்புப் பாலத்தை அமைத்துக் காத்தனர். இந்த அன்புறவின் அடையாளமாக மன்னரும் மக்களும் கூடியிருந்து குடித்துண்டு களித்திருக்கின்றனர். அக்காலத்தில் மன்னருக்கும் மக்களுக்குமிடையான அதிகார இடைவெளிகளைப் போக்கியதில் மதுவுக்கும் ஒரு மகத்தான பங்கிருந்திருக்கின்றது.

இலக்கியங்கள் கள்ளோடு தொடர்புபட்ட பல செய்திகளைச் சுவைபட வெளிப்படுத்துகின்றன.

பட்டினப்பாலை என்ற இலக்கியம் இல் வாழ்வோடு இணைந்த கள் பற்றிய ஓர் ஓவியத்தை அழகுறத் தீட்டியிருக்கின்றது.

முன்னிரவுப் பொழுதில் வளைந்த கட்டுமரங்களில் மீன் பிடிக்கச் சென்ற பரதவர் நேரத்தைக் கணித்த விதம் புதுமையானதாக இருந்தது. கரைகளில் எழுந்து நிற்கும் வீட்டு மாடங்களில் ஒளிரும் விளக்குகளை எண்ணிக்கொள்வர். இரவு கடந்து செல்லச் செல்ல அணைக்கப்பட்ட விளக்குகளின் அளவைக் கொண்டுநேரத்தைக் கணிப்பராம். ஆயினும் சில விளக்குகள் கடையாமம் கடந்தும் அணையாதிருக்குமாம்.

ஏன் தெரியுமா?

செல்வச் செழிப்பு மிக்க கடற்கரை மாடி வீடுகளில் வாழ்ந்த மங்கையர் பாடல் கேட்டும், நாடகங்கள் பார்த்தும் வெண்ணிலவில் மகிழ்ந்தனர். துணைவரோடு கூடி இன்புறுவதற்காக அணிந்திருந்திருந்த பட்டாடைகளை நீக்கி மென்மையான நூலாடைகளை அணிந்தனர். இன்ப உணர்வு உச்சி தொட மென்மையான போதை தருகின்ற மட்டு என்ற பானத்தை அருந்தாது, அதிக மயக்கம் தரவல்ல ‘மது’ வை அருந்தினர். மதுவில் மதி நிலைதடுமாறி கணவரது மாலைகளை அணிந்தனர். கணவன்மார் ஒன்றும் நிதானத்தில் இருக்கவில்லை. பெண்கள் அணியும் மாலைகளை அவர்கள் சூடிக் கொண்டனர். கடையாமம் கடந்தும் விளக்குகளை அணைக்க மறந்து இன்ப மயக்கத்தில் மூழ்கி உறங்கினர்.

“துணைப் புணர்ந்த மட மங்கையர்
பட்டு நீக்கித் துகில் உடுத்தும்
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்
மகளிர் கோதை மைந்தர் மலையவும்
நெடுங்கால் மாடத்து ஒள்எரி நோக்கிக்
கொடுந் திமில் பரதவர் குருஉச்சுடர் எண்ணவும்
பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும்
வெண் நிலவின் பயன் துய்த்தும்
கண் அடைஇய கடைக் கங்குலான்”(பட்டினப்பாலை 106- 115)

சங்கத்தமிழரின் ‘மதுமகிழ்’ வாழ்விற்கு அழகிய சாட்சியாகின்றது  இப்பட்டினப்பாலைப ;;பாடல். மட்டு என்பதற்குக் ‘காமபானம்’ என விளக்கம் தருகின்றார் நச்சினார்க்கினியர்.

ஆமூர் என்ற ஊரைக் குறிப்பிட வேண்டிய சாத்தந்தையார் என்ற புலவர் ஊரினது வேறு எந்த அழகினையும் அடைமொழியாகக் கொள்ளாமல்,

“இன் கடும் கள்ளின் ஆமூர்” (புறம் 80)

என்கின்றார். இனிமை தருகின்ற கடும் போதையேற்றுகின்ற கள்ளினைக் கொண்ட ஊர் என்று ஆமூர் சிறப்பிக்கப்படுவது அக்காலத்தில் கள்ளுக்கிருந்த கௌரவத்தைப் புலப்படுத்துகின்றது.

பாலை பாடிய பெருங்கடுக்கோ என்பார், சோழ மன்னனின் சிறப்பைக் குறிப்பிடுகையில்,

“இன்கடுங் கள்ளின் இழையணி நெடுந்தேர்க் கொற்றச் சோழர்..”(நற்றிணை 10)

என்கிறார். ‘இனிப்புடையதும் கடு;ப்புடையதுமாகிய கள்ளுணவைக் கொண்டோர்’ என்ற அடைமொழிகளால் சோழர் பெருமைப்படுத்தப்படுவதுடன் கள்ளும் பெருமையுறுகின்றது.

பாண்டியன் நெடுஞ்செழியனை வாழ்த்திய மாங்குடி மருதனார் என்னும் புலவர்,

“ஒண்டொடி மகளிர் பொலங்கலந் தேந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகுமதி”(மதுரைக்காஞ்சி 24)

எனக் குறிப்பிடுகின்றார்.

நாட்பட்ட கள் கடும் போதைத்தன்மை கொண்டதாக இருக்கும். அக்கள் தேள் கொட்டுவதைப் போன்ற தன்மை கொண்டது என்பதையும், பாம்பின் நச்சுக்கடிக்கு ஒப்பான போதையைத் தரவல்லது என்பதையும்,

“தேட் கடுப்பன்ன நாட்படு தேறல்”(புறம் 392)
“அரவு வெகுண்டன்ன தேறல்”(புறம் 376)

என்ற வரிகளால் புறநானூறு கூறுகின்றது.

கொடைவள்ளலான பாரி மதுவை வாரி வழங்குவதிலும் சளைத்தவன் அல்ல. பாரி இறந்தபின் புலவர் கபிலர் பல கையறுநிலைப் பாடல்களைப் பாடுகின்றார்.

பாரி இருந்தபோது,மதுவூற்றும் சாடிகள் எப்போதும் திறந்தே கிடக்கும் எனவும், ஆட்டு ஊன் சோறும் இடையறாது கிடைக்கும் என்பதையும்,

“மட்டு வாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பதும்’
அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும்..”(புறநானூறு. 113) என்ற வரிகளால் கூறுகின்றார்.

‘பாரியின் பறம்புமலையில் வடிக்கப்பட்ட கள்ளின் கழிவுகள் யானையின் சாணம் போல் குவிந்து கிடக்கும்’ எனக் கபிலர் மேலும் குறிப்பிடுகின்றார்.

“களிறுமென் றிட்ட கவளம் போல
நறவுப்பிழிந் திட்ட கோதுடைச் சிதறல் (புறா. 114)

சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் புலவர்க்கும் பாணர்க்கும் மழை பொழிவதுபோல் கள்ளை வழங்கினான் என்ற செய்தியை பதிற்றுப்பத்து எனும் இலக்கியத்தின் 65ம் பாட்ல கூறுகின்றது.

‘சேரன் செங்குட்டுவனது அரண்மனையில் கோக்காலியில் வைக்கப்பட்டிருக்கும் பானையில் கள் எப்போதும் குறையாதிருக்கும்’ எனப் பதிற்றுப்பத்தின் ஏறாவேணி பாடற்பகுதி கூறுகின்றது.

கட்பானையின் மேற்புறத்திற் சந்தனம் பூசப்பட்டிருந்தது. இஞ்சியும் நறும்பூவும் சேர்த்துத் தொடுத்த மாலை கட்டப்பட்டிருந்தது. இதனைப் பரணர் தன் பாடலில் ‘மணிநிற மட்டம்’ எனக் குறிப்பிடுகின்றார்.

உள்நாட்டு மதுவகைகள் மட்டுமன்றி,‘வெளிநாட்டுச் சரக்கு’ களும் நம் முன்னோரால் பயன்படுத்தப்பட்டுள்ளன. அக்காலத்தே யவனர் என அழைக்கப்பட்ட கிரேக்க நாட்டவர் தமிழரோடு பெரும் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இந்த வணிக உறவுகளின்போது மது வகையாறாக்களும் குறிப்பிடத்தக்களவு இடம் பெற்றிருந்தன என்பதை,
“யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்”  (புறம் 56) என்ற புறநானூற்று வரியால் அறியலாம்.

மேல்நாட்டுக் குடிவகைகள் ஒருபுறமிருக்க, இத்துணைச் சிறப்பு மிக்க உள்நாட்டுக் குடிவகைகளைப் படைத்துக் காட்டிய எம் பழங்குடி மக்களின் ‘கள்’ அறிவு பெரு வியப்பை ஏற்படுத்துகின்றது.

பண்டைத் தமிழரின் பல்வகைச் சிறப்புகளில் மதுப்பயன்பாடு பெருவளர்ச்சியுற்றிருந்தமையை மேற்கண்ட இலக்கியச் சான்றுகளால் நாம் அறிந்துகொள்ள முடியும்.

அரசர் குடிமக்கள், ஆடவர் பெண்டிர், கற்றோர் கல்லாதார் என்ற வேறுபாடுகள் இன்றி மதுவுண்டு மகிழ்ந்த காலமாகச் சங்ககாலம் திகழ்ந்திருக்கின்றது. களித்தல் என்கின்ற மனநிலையைப் பெறவே கள்ளுண்டனர். பெரும்பாலும் கூடியே குடித்துக் களித்திருக்கின்றனர்.  குடிப்பழக்கத்தின் தீமையால் சமூகம் பாதிக்கப்பட்டதான செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை.

எனினும் பாரியின் நண்பரான கபிலர் மதுப்பயன்பாட்டிற்கு மாறான தன் உணர்வைச் சில இடங்களில் புலப்படுத்தியிருக்கின்றார். பாரியின் மது வள்ளமை பற்றிக் குறிப்பிட்ட கபிலர் அதனைப் போற்றியதாகத் தெரியவில்லை. பறம்புமலை அரசின் மதுக்கழிவுகளை யானையின் சாணத்திற்கு ஒப்பிட்டமை மது பற்றிய அவரது வெறுப்புணர்வின் அடையாளமாக இருக்கலாம்.

குடிப்பழக்கத்திற்கு எதிராகத் தன் கருத்தைப் புறநானூற்றின் 123வது பாடலில் பதிவு செய்திருக்கின்றார்.

“நாட்கள் உண்டு நாண்மகிழ் மகிழின்
          யார்க்கும் எளிதே தேர்ஈதல்லே
          தொலையா நல்லிசை விளக்கும் மலையன்
          மகிழா தீத்த இழையணி நெடுந்தேர்
          பயன்கெழு முள்ளுர் மீமிசைப்
          பட்ட மாரி உறையினும் பலவே”    (புறம். 123)

மலையமான் திருமுடிக்காரி என்ற மற்றுமொரு கொடை வள்ளலைச் சந்தித்த கபிலர்,“ நாட்பட்ட போதை மிக்க கள்ளைப் பருகி ஏற்பட்ட மதிமயக்கத்தினால் தேரினைஈதல் எல்லோருக்கும் எளிது. அவ்வாறு மது அருந்தாது வருவோரின் தேவையறிந்து வழங்கும் மலையமானின் கொடையே முள்ளுர் மலைகளில் பெய்த மழைத்துளிகளிலும் பெரிது” என்கிறார்.

பற்றிப் படரக் கொம்பின்றித் தவித்த முல்லைக்குத் தேர் கொடுத்து ஈகைக்கு இலக்கணமானவன் பாரி என்ற வரலாற்று வழி வந்த செய்தியை ஐயுறச் செய்கிறது பாரியின் உற்ற நண்பரான கபிலரின் இப்பாடல்.

‘பல நாட்கள் பாதுகாக்கப்பட்டு போதையேற்றப்பட்ட மது அருந்திய மயக்கத்ததினாற்றான் பாரி முல்லைக்குமணிகளால் அழகுபடுத்தப்பட்டநெடிய தேரினைக் கொடுத்தான். அவ்வாறு போதையிற் கொடுத்த கொடை பெரிதன்று’ என்கிறார் கபிலர்.

எனினும் புறநானூற்றின் 200வது பாடலில்,

“இவரே, பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர்...”

                               எனப் பாரியின் கொடைத்திறத்தைப் புகழ்ந்தவரும் கபிலரேயாவார்.

மது பற்றித் திருமுடிக்காரிக்கு மற்றுமொரு விளக்கமும் தருகின்றார் கபிலர்.

“உழுத நோன்பகடு அழிதின்றாங்கு
நல்அமிழ்தாகநீ நயந்துண்ணு நறவே’’ (புறம். 125)

‘நாள் முழுவதும் உழவனோடு பணியாற்றிய காளை மாலைப்பொழுதில் ஒய்வாக இரை மீட்பதைப் போல, பகற்பொழுதின் பணியெல்லாம் முடிந்த பிறகு மாலையில் ஒய்வாக மது அருந்தலாம்’ என்கின்றார்.

கபிலருக்கு அடுத்து, மதுப்பழக்கத்திற்கு எதிராகவும் வலுவாகவும் எழுந்த குரல் வள்ளுவருடையது.

சங்ககாலத்தின் பிற்பகுதிகளில் குடிப்பழக்கம் பல்கிப்பெருகிச் சமூகச் சீர்கேடுகளுக்கு வழிவகுத்திருக்க வாய்ப்பு உண்டு. வள்ளுவரின் குடிக்கெதிரான கடும்போக்கிற்கு இச்சீர்கேடுகளே காரணமாகவிருக்கலாம்.

சங்ககாலப் பிற்பகுதிகளில் தமிழகத்தில் காலூன்றிய சமண, பௌத்த மதங்கள் மக்களின் வாழ்வை ஒழுங்குபடுத்த முயன்றன. அதன்விளைவாகச் சமூகச் சீர்கேடுகளில் ஒன்றாக மதுப்பழக்கம் கருதப்படலாயிற்று.

எனினும் சங்ககால மாந்தரது மதுப்பயன்பாடு பெருந்தீமைகளை விளைவிக்காத ஒன்றாக,உடற்களைப்பைப் போக்கும் வகையிலும் களிப்புணர்வைத் தூண்டிக் கூடி மகிழும் நோக்கிலுமே இருந்தது என்பதைச் சங்கப்பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன.     


துணை நின்ற நூல்களும் இணையத்தளங்களும்:

தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும் -  டாக்டர் கே. கே. பிள்ளை  
தமிழர் நாகரிகமும் பண்பாடும் -  முனைவர் இ. தட்சணாமூர்த்தி
சங்ககாலத்து உணவும் உடையும்: மா.இராசமாணிக்கனார்.
புறநானூறு
பெரும்பாணாற்றுப்படை
பரிபாடல்
மதுரைக்காஞ்சி
நற்றிணை
பதிற்றுப்பத்து
பட்டினப்பாலை

gl;bdg;ghiy
http://omsakthionline.com/?katturai=சிறியகள்-பெறினே&publish=3889 http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=543





Sunday, January 29, 2017

தமிழர் மரபியல்




தமிழர் மரபியல்

உலகில் தற்போது பேசப்படுகின்ற மொழிகளில் மிகப் பழைய மொழியாகத் தமிழ் கருதப்படுகின்றது. உலகெங்கும் ஏறக்குறைய 100 மில்லியன் மக்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தமிழருடைய பூர்வீகத் தாயகங்கள், இந்தியாவின் தென் மாநிலமான தமிழகமும் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுமாகும். இந்தத் தாயகங்களிலிருந்து புலம் பெயர்ந்தோர் உலகெங்கும் ஏறக்குறைய ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழர் மொழி வழிப்பட்ட இனமாவர். இவர்கள் பல்வேறு மதங்களைச் சார்ந்தும் பல நாடுகளில் நிரந்தரமாக வாழ்ந்தும் வருகின்றனர். இவ்வனத்தோர் அனைவரும் தமிழ்மொழி பேசுவோர் என்ற உறவிலேயே ஓரினமான இணைந்துள்ளனர்.

பன்னெடுங்காலத்துக்கு முன்பே இந்தியத் துணைக்கண்டத்திலும் இந்தியாவுக்குத் தெற்கே கடல் கொண்ட குமரிக்கண்டத்திலும் வாழ்ந்த பழம்பெரும் இனம் தமிழர் எனக் கருதப்படுகின்றது. இவை பற்றிய ஆய்வுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

5000 ஆண்டுகளுக்கு முன் பெருவளர்ச்சி பெற்றதாகக் கருதப்படுகின்ற சிந்துவெளி நாகரிகக் கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்தோர், அங்கு வாழ்ந்தோர் பெரிதும் தமிழர் பண்பாட்டை ஒத்துள்ளனர் எனக் குறிப்பிடுகின்றனர்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கணநூல் 3000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதாகும். மொழியின் பகுப்புகளான எழுத்து, சொல் என்ற இரண்டுக்கும் இலக்கணம் எழுதிய இந்த நூல், தமிழருடைய வாழ்வியலுக்கும் இலக்கணம் எழுதி வைத்துள்ளது. மக்களுடைய வாழ்வை அகம், புறம் என இரண்டாகவும் வாழ்நிலங்களில் அடிப்படையிலும் வாழ்க்கைக்கான இலக்கணங்களை வகுத்துள்ளது. உலகில் வாழ்வுக்கு இலக்கணம் எழுதிய ஒரேயொரு நூல் இதுவே. பண்டைத் தமிழருடைய பண்பாட்டு மரபுகளையும் விழுமியங்களையும் அழகுற எடுத்துரைக்கும் பண்பாட்டுக் களஞ்சியமாக இந்த நூல் திகழ்கின்றது.

தமிழில் எழுதப்பட்ட மற்றுமொரு நீதி நூல் திருக்குறளாகும். இது கிறிஸ்த்துவுக்குப் பின் 2ம் நூற்றாண்டில் திருவள்ளுவர் என்பவரால் எழுதப்பட்டது. நாடு, மொழி, மதம் என்ற எல்லைகளைக் கடந்து மனிதருக்காக மனிதரால் ஆக்கப்பட்ட ஒப்பற்ற நீதிநூல் இதுவாகும். தனிமனித ஓழுக்கம், வாழும் சமூகம் சார்ந்த வினைத்திறன், பண்பாடு மிக்க அகவொழுக்கம் என்பவற்றைத் தமிழர் மரபொழுக்க வழி நின்று எடுத்துரைக்கின்றது இந்த நூல். இதுவரை 65க்கு மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காகத் தமிழ்நாட்டுச் சென்ற கிறிஸ்தவப் பாதிரியார்களான ஜோசப் பெஸ்கி (இத்தாலி), ஜி.யு. போப் (பிரித்தானியா), ரொபேட் கார்டுவெல் (அயர்லாந்து) போன்றோர் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ந்து அதைப் போற்றியுள்ளனர்.

தமிழ் இனத்தவருடைய தொன்மைமிக்க வாழ்வியலை நூற்றுக்கணக்கான தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. ஒவ்வொரு தலைமுறையினரும் தொடர்ச்சியான வாழ்வியல் வழியாகவும் இலக்கியங்கள் வாயிலாககவும் பண்பாட்டு விழுமியங்களையும் மரபுகளையும் கற்றுணர்ந்து போற்றி வருகின்றனர்.

தமிழர் சிறந்த கலைமரபுகளைக் கொண்டுள்ளனர். இசை, ஆடல், ஓவியம், சிற்பம், கட்டடக்கலை எனத் தனித்துவமான பல கலைமரபுகளைப் பேணி வருகின்றனர். இந்தியாவின் புகழ்பெற்ற இசைமரபான கர்நாடக இசை தமிழிசை மரபுகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.

உலகலாவிய வகையில் புகழ் பெற்றிருக்கும் பரத நாட்டியம் தமிழர்களின் சிறந்த ஆடற்கலையாகும். தமிழரின்; சிறந்த கட்டடக்கலைக்குத் தஞ்சைப் பெரிய கோவிலும், மாமல்லபுர சிற்பக் கோவில்களும் சான்றாக உள்ளன.

பண்டைக்காலம் தொட்டு தமிழர் நிலம் மூவேந்தர்களால் ஆளப்பட்டு வந்திருக்கின்றது. 1700களின் பின்னர் பிரித்தானியரின் ஆட்சிக்குட்பட்டுத் தமிழர் தமது தன்னாட்சியை இழந்தனர். அதன்பின் இன்றுவரை தமிழர்கள் தன்னாட்சி கொண்ட அரசொன்றை நிறுவ முடியாதிருப்பது வேதனைக்குரியதே.

9ம் நூற்றாண்டில் கிழக்காசியாவின் பெரும்பகுதியை ஆண்டவர்கள் தமிழராவர். வலிமையான கடற்படையும் போரில் சிறந்த வீரர்களையும் கொண்டிருந்த தமிழரசு இந்து சமுத்திரத்தைப் 13ம் நூற்றாண்டுவரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

விவசாயத் தொழிலில் சிறந்தவர்களான தமிழர் மழைநீரைத் தேக்கியும் ஆற்றுநீரை வழிமறித்தும் வயல்களுக்குப் பாசனம் செய்து உலகிற்கு புதிய நீர்ப்பாசன முறையை அறிமுகப்படுத்தியவர்களாவர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் நடைபெற்றுவந்த இனவழிப்பிலும் உள்நாட்டுப் போரிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழர், தாய்நாடு விட்டகன்று பிறநாடுகளில் குடியேறினர். அவ்வாறு குடியேறியோர் தாம் வாழும் நாடுகளின் சட்ட ஒழுங்குகளை மதித்து அந்நாட்டின் வளர்ச்சியில் பங்குகொள்வதோடு, தமது பண்பாட்டு மரபுகளையும் பேணி வருகின்றனர்.

இந்தவகையிலேயே கனடா அரசு தமிழருடைய பண்பாட்டு மரபுரிமைக்கு மதிப்பளித்துத் தைமாதத்தைத் தமிழரின் மரபுரிமை மாதமாக அங்கீகரித்துள்ளது.

பலவழிகளிலும் தமிழர் வாழ்வில் சிறப்புப் பெற்றிருக்கும் மாதம் தையாகும். தாயகங்களில் விவசாயத்தின் பயன்கள் வீடு வந்து சேரும் காலம் தையாகும். தமது வாழ்வுக்கு உதவுகின்ற கதிரவன், மாடு போன்றவற்றுக்கு நன்றி கூறுகின்ற தைப்பொங்கல் என்ற விழாவும் தை மாதத்திலேயே நடைபெறுகின்றது. பண்டைத் தமிழர் தமது புத்தாண்டையும் தைமாத்திலேயே கொண்டாடியுள்ளனர். எனவேதான் தமிழர் தமது மரபுரிமைகளைப் போற்றுவதற்குரிய மாதமாகத் தையைத் தமிழர் தேர்ந்தெடுத்தனர்.

தைமாத்தில் கனடாவாழ் தமிழர் பல்வேறு மரபுரிமை நிகழ்வுகளை நடத்தி, இனஞ்சார் பெறுமானங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.



Tamil Heritage


Of the hundreds of languages spoken around the world, the Dravidian dialect of Tamil stands as the world’s eldest language. The ancient language originates from India’s southern province of Tamil Nadu and the tropical island of Sri Lanka, located south of India. Approximately 100 million people around the world speak Tamil - with the Tamil Diaspora concentrated in more than 50 foreign countries.

Unlike the many cultures that are centred around religion, the Tamil culture is one that is influenced by the language itself. Despite following various religious paths, Tamils stand as a united and distinct nation, because of their ability to preserve ties through their mother tongue.

Evidence has shown that from the birth of [hu]man, Tamils inhabited what was referred to as “Kumari Kandam,” (a lost continent to the Indian Ocean, composed of a joint present-day India and Sri Lanka) before the dismantlement of Pangea during the Paleozoic and early Mesozoic eras.

To further support this theory, archeologists have also drawn close cultural links between the inhabitants of the ancient Indus Valley civilization and cultural values practiced by the Tamil people for generations.

The Tamil language stands as the world’s eldest dialect, not merely by chance, but by its strategic ability to evolve with time. Like its invaluable culture, the Dravidian language is well known for its contribution to literature. Of the many unique compositions that have come from within the language, “Tholkaapiyam,” is without a doubt one of the most ingenious Tamil epics.

Although considered a treasure for its richness and guidance in the grammatical aspects of the language. The 3000-year-old epic has been written in a manner in which it may also be applied to the lifestyle and culture of its followers. Similar to how the saga divides the grammatical parts of the language into “Ezhuthu” (letters) and “Sol” (words). The chronicle also divides life into “Aham” (personal life) and “Puram” (social life). “Tholkaapiyam,” stands an epic that not only depicts the literary greatness of the ancient language, but also its aestheticism.

In a like manner, “Thirukkural” is another master piece to have come from the Tamil language. Written by “Thiruvalluvar” in the second century, the tome has been praised for its ability to withstand the test of time, defying influences such as language, religion and status. It seeks to ensure that an individual lives his or her life in the most righteous way, by instilling values from the Tamil culture within themselves.
The thousands of literature pieces that can be found within the ancient Dravidian language, portray the morals and values which have been passed down by the Tamil society for generations.
Having said that, the ancient language also depicts its rich culture through its various art forms. Dance, music, painting and sculpting are just a few of the many art forms that can be found within the Dravidian culture. The ancient and well known dance form of Bharathanatyam originates from Tamil culture. Even Indian classical Carnatic music takes its roots from ancient Tamil art forms. The rich architecture of temples in India, like the Thanjai Perung Kovil and Mamallapuram are also proof of the sophistication encompassed within the Tamil language.

Tamils were also great cultivators. They were able to reuse sources such as rain water and build cross sectional structures to enhance the yields of their crops with very minimal mechanisms. Tamils also invented river canal irrigation which is now used by thousands of farmers around the world.

During the ancient times, the Dravidian nation was led under the rule of the “Mooventhargal,” which roughly translates to the “three kings or kingdoms.” They were famously known as the “Chera Arasu (kingdom),” “Chola Arasu (kingdom)” and the “Pandiya Arasu (kingdom).” But with colonial rule that came with the 17th century, the Tamil nation lost its privilege as an independent populace and state. Since then, it has yet to regain sovereignty.

But the rule of Tamil kings was nothing short of epic. In the 9th century, the Tamil kingdom had expanded to capture almost all of East Asia. With a strong navy and even more robust army, the Tamil Kingdom held its reign over East Asia until the 13th century.

As a result of the civil war that occurred in Sri Lanka and the genocide against Tamils, many have fled their homeland to protect themselves and their families. Despite living abroad, the Tamil Diaspora continues to indulge in its culture and resumes to pass on its culture to its next generation.

Because of such efforts and its ancient setting, the Canadian government has officially recognized the month of January as Tamil Heritage Month. The month of January holds great significance in the Tamil culture. The results of many months of rigorous farming come home in the month of “Thai” (January). In this month, Tamils also show gratitude to the sun and animals which make it possible for them to farm and sustain their lifestyles.

This is grandly celebrated on the 14th of January and is famously known as “Thai Pongal.” This festival can be considered as the equivalent to the Canadian Thanksgiving. Tamils also celebrates their new year in the month of January. Coincidentally, both “Thai Pongal” and the Tamil New Year fall on the same day. Thus, making it apt to celebrate the month of January as Tamil Heritage Month. During this month, Tamils around Canada conduct several events to showcase their culture to their fellow Canadians.
                                                                                                                                     

                                                                                                                                      -  Ponniah Vivekanandan