Monday, October 17, 2011

மண்



மண்.....


அழுத்தங்கள்
மூடி மூடி
மறைத்தாலும்
மீண்டும்
அசுர உருக்கொண்டு
முளைத்துவிடுகின்றன.

மண்ணிருந்து
நான் வாழ்ந்த நினைவுகள்.

பொன் எனப் பொலிந்த
அந்தப் பொழுதுகள்
என் உயிர் பூத்துப் பொழில் கொண்ட
நாட்கள்.

வெயிற்காலப் புழுதிகளில்
அளைந்து,
விதானையார் வீட்டு
எருமைகளோடு கலந்து,
காடேறிகளாய்
கூடு கலைத்து குருவி பிடித்து,
பாம்பைத் துரத்தி மகிழ்ந்து
பாம்பு துரத்தப் பயந்து,
புற்றின் பின் மறைந்து
திருட்டுப் புகை பிடித்து,

அந்திக் கருக்கலில்
புளியமரக் கொப்பேறி,
கொம்பேறி மூக்கர்களாய்
பாதைப் பயணிகளைப்
பயங்காட்டிக் களித்து,

கர்வத்தோடு
பள்ளி போகும்
வெள்ளைக் கமலாவின்
வெண் சீருடை மீது
சேறடித்துச் சிரித்து,
பின்
வீட்டாரிடம் சிக்கித் தவித்து,

இப்படித்தான்

தீச்சுடினும் தீய்ந்து போகாத
கல்வெட்டுகள்
உணர்வெங்கும் இறைந்து
கிடக்கின்றன.

நிலம் பெயர்ந்து
புலம் வாழ்வதை விட,
அங்கம் சில
இழந்தாயினும்
அங்கேயே வாழ்ந்திருக்கலாம். 

No comments:

Post a Comment