Thursday, February 6, 2014

காமன் விழா தமிழரது காதற் பெருவிழா


பெப்ரவரி 14ம் நாளில் காதலர் தினத்தைக் கொண்டாடக் காத்திருக்கும் அன்பாளர்களே! 
இக்கட்டுரை உங்கள் கொண்டாட்டக் குதூகலத்தை மேலும் வலுப்படுத்த உதவலாம். 










































ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பேரிலக்கண நூல் தொல்காப்பியம். எழுத்து, சொல் எனும் இருபெரும் மொழிப்பகுப்புகளுக்கு மட்டும் இலக்கணம் எழுதாமல் மனித வாழ்வுக்கும் இலக்கணம் எழுதிய நூல் எனுஞ் சிறப்பு தொல்காப்பியத்திற்கு உண்டு. 

தொல்காப்பியத்தில் இடம்பெறும் எழுத்து, சொல், பொருள் எனும் பகுப்புகளில் பொருளிலக்கணம் மொழியுலகிற்குப் புதுமையாகவிருந்தது. 

மொழி இவ்வாறுதான் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான இலக்கணங்கள் பெரும்பாலான மொழிகளில் இருக்க, மனிதர் வாழ்வுக்கு இலக்கணம் வகுத்துப்; போயிருக்கின்றனர் தமிழ் முன்னோர். 

பொருளதிகாரத்தின் அகம், புறம் எனும் இரு பிரிவுகளில் அகப்பொருளுக்குள் களவியல் என்னும் ஒரு பகுதியுண்டு. தொல்காப்பியர் குறிப்பிடும் களவு என்பது, ‘ஆண், பெண் எனும் ஒத்த இயல்புடைய காதலர் இருவர் மனமொருமித்து மறைந்தொழுகும் ஒழுக்கம்’ என்பதாகும்.

பெற்றோர் கொடுக்கக் கொள்ளாது தாமே எதிர்ப்பட்டு விரும்பிய உள்ளத்தோடு மறைந்து உறவாடுவதினால்,  இது களவு எனப்பட்டது என்கின்றனர் உரையாசிரியர்கள்.

வடமொழியாளர் வகுத்த எட்டு வகையான திருமண முறைகளில் ஒன்றான காந்தர்வ திருமணமுறைக்கு ஒப்பானது இந்தக் களவு என்பதை,

‘....மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையாமை நல்லியாழ்த் துணைமையோர் இயல்பே’       தொ. பொ. களவியல் 92 
                                                                                   என்று தொல்காப்பியர் குறிப்படுகின்றார்.

இதைத்தான் ஒளவையாரும் ‘களவையும் கற்று மற’ என்கின்றார்.

பொருளதிகாரத்தில் 92 முதல் 141 வரையிலான சூத்திரங்களால் களவியல் வாழ்வின் இலக்கணங்களைக் கூறியிருக்கின்றார் தொல்காப்பியர்.

அகத்தியம் போன்ற பழம்பெரும் இலக்கண நூல்களின் தொடர்ச்சியான தொல்காப்பியம், காதல் ஒழுக்கத்தைப் பெரிதும் போற்றி இலக்கணம் வகுத்திருக்கின்றது.

சங்க இலக்கியங்கள் பதினெட்டில் பெரும்பாலானவை காதற்சுவை மிக்க அக இலக்கியங்களே. உலகப்புகழ் பெற்ற அறநூலான திருக்குறளை எழுதிய வள்ளுவர் காதலைப் போற்றியதைப் போன்று எவரும் போற்றவில்லை.

மலரினும் மெல்லியது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படுவார்.                                                 குறள்  1289

'காதல் மலைவிட மென்மையானது. அதன் முழுமையறிந்து பயன் பெறுவோர் மிகச் சிலரே' என்கிறார் வள்ளுவர். 

முன்னைத் தமிழர் வாழ்வில் காதல் பெற்றிருந்த முதன்மைத்துவத்தை விளக்கச் சான்றுகளைத் தேடவேண்டியதில்லை. தமிழ் இலக்கியங்களில் அவை வெள்ளிடைமலையாய்த் திகழ்கின்றன.

இவ்வாறு போற்றப்பட்ட காதலைத் தமிழர் எவ்வாறு கொண்டாடியிருப்பர் என நோக்கினால் வியக்கத்தக்க பல தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன.

காதல் என்ற சொல்வழக்கு பிற்காலத்தேதான் தோன்றியது. காமம் என்ற சொல் கொண்டே முன்னோர் காதலைக் குறித்தனர். திருக்குறளின் மூன்றாம் பகுப்பு காமத்துப்பால் என்றே அழைக்கப்பட்டது.

காதலுக்குரிய கடவுள் காமன் என்றே அழைக்கப்பட்டான். காமனுக்கான கோவில் காமக்கோட்டம் என்றே அழைக்கப்பட்டது. தமிழர் வரலாற்றுக் காலந்தொட்டே காமனுக்கு விழாவெடுத்து காதலைக் கொண்டாடி வந்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் இலக்கியங்களில் மலிந்து கிடக்கின்றன. பின்பனிக்காலத்தின் இறுதியான மாசி மாதம் தொடக்கம் இளவேனிற்காலத்தின் தொடக்கமான பங்குனிவரை 28 நாட்கள் காதற்பெருவிழா நடைபெற்றிருக்கின்றது. எங்கும் பூக்கள் அரும்பி மண் மலர்ச்சோலைகளாக மாறுகின்ற காலம் இதுவென்பதால் இதையே காதலுக்குரிய காலமாகக் கணித்துக்கொண்டனர் தமிழர்.

"எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர் "                            பரி 18:28    
                                         என்று காமவேள் பற்றிக் குறிக்கின்றது பரிபாடல் எனும் இலக்கியம்.

வில்லவன் விழா, வேனில் விழா, உள்ளி விழா, இந்திரவிழா, பங்குனி விழா போன்ற விழாக்களை, காமவேளைப் போற்றியும் காதலை ஏற்றியும் தமிழர் கொண்டாடியிருக்கின்றனர்.

இளவேனிற் காலம் காமனுக்குரியதாகக் கருதப்பட்டது. இக்காலத்தே காமவேளுக்காக எடுக்கப்படும் விழாவை 'வேனில் விழா' என்றழைத்தனர்.  கரும்பு வில்லைக் கையிற்' கொண்ட கடவுள் காமன் என்பதால் 'வில்லவன்' விழா என்றும் இது போற்றப்பட்டுள்ளது.

‘ஊரிலே காமவேள் விழா நடப்பதைத் தலைவி கண்டால் கலங்குவாளே’ எனக் கருதித் தலைவன் திண்மையான தேரேறி வந்ததாகக்  கலித்தொகைப் பாடல் குறிப்பிடுகின்றது.

"காமவேள் விழாவாயின் கலங்குவள் பெரிதென
ஏமுறு கடுந்திண்டேர் கடவி 
நாம்அமர் காதலர் தணைதந்தார் விரைந்தே"                                     கலி 27

காமவேள் விழாவின் போது காதலர் மகிழ்ந்துலாவி களி கொண்டு விளையாடுவர் என்பதை மற்றுமொரு பாடல் புலப்படுத்துகின்றது.

"மல்கிய துருத்தியுள் மகிழ்ந்துணைப் புணர்ந்தவர் 
வில்லவன் விழாவில் விளையாடும் பொழுதன்றோ."                              கலி 35

கணவனைப் பிரிந்த மனைவியர் இவ்விழாவின் போது வருந்துவர். இதேவேளை ஆடவர் கணிகையரோடு சேர்ந்தும் ஆடி மகிழ்வர் என்பதையும் கலித்தொகை கூறுகின்றது.

‘உறலியாம் ஒளிவாட உயர்ந்தவன் விழாவினுள் 
 விறலிழை யவரோடு விளையாடுவான் மன்றே’                                    கலி 30

கரிகால்வளவன் எனும் சோழனின் மகள் ஆட்டனத்தி சேரனாகிய ஆதிமந்தியைக் காதலித்தாள். புனலாடும்வேளை நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஆதிமந்தியைத் தேடிச் செல்லும் ஆட்டனத்தி போகும் வழியில் காமன் விழாவைக் கண்டு காதலனைக் காணாப் பெருந்துயரம் கொள்கிறாள்.

‘மள்ளர் குழீஇய விழவி னானும், 
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டும் காணேன் மாண்தக் கோனை’                                            குறு 30

தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு வடிவங்களில் இக்காமன் விழா கொண்டாடப்பட்டிருக்கின்றது.

சோழ அரசனான தூங்கெயில் எறிந்த நெடுங்கோட் செம்பியன் என்பான் பொதிகை மலையில் தங்கியிருந்த அகத்தியரின் வேண்டுகோளுக்கிணங்க காமன் விழாவை அரச விழாவாக நடத்த ஆரம்பித்தான் என்ற செய்தியும் உண்டு. இந்த மன்னன் ‘சங்ககாலச் சோழ மன்னருள் ஒருவனாகிய குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் முன்னோன்’ என புறநானூறு (49) கூறுகின்றது.

தூங்கெயில் எறிந்த நெடுங்கோட் செம்பியன் மாசித்திங்களில் கால்கோல் இட்டு பங்குனித் திங்கள் சித்திரைநாள் வரை 28 நாட்கள் இந்த விழாவைக் கொண்டாடினான் என மணிமேகலை கூறுகின்றது.

பின்பனிக்கால நிறைவில் இளவேனிற் காலத்தின் தொடக்கத்தில் நாடு புதுப்பொலிவுறத் தொடங்கும். மரஞ்செடி கொடிகள் தளிர்த்துப் பூக்க ஆரம்பிக்கும். இதனை வசந்தகாலம் என்றும் கூறுவர். வசந்தன் என்பது காமனின் மறுபெயர். ஆணும் பெண்ணும் காதற்பெரு விருப்போடு களிகொள்ளும் காமன் காலம் இதுவென உறுதிபடத் தெரிகின்றது.

‘உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழில்
பங்குனி முயக்கம் கழிந்த நாள்’                                                 அகம் 137 

                         என, அகநானூறு உறையூரில் நடந்த பங்குனி விழா பற்றிக் குறிக்கின்றது.

பெரும் துறைமுகமாகத் திகழ்ந்த பூம்புகாரிலே சிறப்புற நடைபெற்று வந்த காமன்விழா பின்னாளில் மருதக்கடவுளான இந்திரன் பெயரால் பெருவிழாவாக உருக்கொண்டது.  இந்திரவிழா பெருஞ்சிறப்போடு நடைபெற்றதனைச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் விரிவாகக் கூறுகின்றன.

‘இந்திரவிழாவைக் கொண்டாடும்போது என்னென்ன செய்ய வேண்டும்? எவ்வாறெல்லாம் மக்கள் நடந்துகொள்ள வேண்டும்? என, நெடுங்கோட் செம்பியன் குறிப்பிட்டதாக மணிமேகலை தெரிவிக்கின்றது.

"காதலர்கள் கூடிக் களிக்கும் பந்தல்களில் மணல் பரப்புங்கள்,
ஊர் அம்பலங்களை மரங்களினால் மூடி நிழல் பரப்புங்கள்,
விழா அரங்கங்களில் இன்பம் பொங்கும் நல்லுரைகளை ஆற்றுங்கள்,
உரையாற்றும் வல்லமை கொண்டோரெல்லாம் உரையாற்றுங்கள்,
சமயங்கள் கூறும் தத்துவங்களைக் காதலர்களுக்கு விளக்கிக் கூறுங்கள்,
கருத்துகளுக்குக் கருத்துகளை எடுத்துக் கூறி வாதிடுங்கள்,
வாதத்தை வாதத்தால் வாதிட்டு வாதத்தைத் தீர்த்து வையுங்கள்,
பகைவர்களைக் கண்டால் அவர்களுடன் பகையும் பூசலும் கொள்ளாதீர்கள், அவர் இருக்கும் இடத்தை விட்டு அகன்று போய்விடுங்கள்,
வெண்மையான மணற் குன்றுகளில் மலர்ச்சோலைகளில் குளிர்ந்த மணலை உடைய ஆற்றங்கரையில் மரம் தாழ்ந்து நிழல் செய்திருக்கும் நீர்த்துறையில் கூடும் மக்கள் அனைவரும் தம்முள் பேதம் இன்றி ஒற்றுமையாகச் சேர்ந்து இருப்பதற்கு வேண்டிய காவல் ஏற்பாடுகளைச் செய்யுங்கள்”

என்று செம்பியன் ஆணை பிறப்பிக்கிறான்.

இச்செய்திகளைத் தொகுத்துக் கூறும் மணிமேகலைப் பாடல்கள் வழியாகக் காதற் பெருவிழாவுக்கு இருந்த பெருமையை நாம் உணர்கின்றோம்.

விழாக்காலத்தில் காதலர் தங்குவதற்காக ‘மூதூர்ப் பொழில்” என்ற சிறப்பிடம் அமைக்கப்பட்டிருந்ததாக மணிமேகலை கூறுகின்றது. அந்த இடத்திற்கு ‘இளவந்திகை’ என்ற பெயரும் இருந்திருக்கின்றது. இந்தப் பூங்கா அழகிய பெருஞ் சோலையாக அமைக்கப்பட்டிருந்திருக்கின்றது.

இளவேனிற்காலத்தில் மலரும் மலர்களான நுணவம் (நுணா), கோங்கம், குரா, அதிரல், பாதிரி, புங்கம், வலஞ்சுரி மராஅம் (வெண்கடம்பு),  வேம்பு, செருந்தி, காஞ்சி, ஞாழல் ஆகிய பூக்களைப் பூக்கும் மரங்களையும் மலர்க்கொடிகளையும் பூங்காவில் வளர்த்திருந்தனர் என்ற செய்தியையும் மணிமேகலை பகிர்கின்றது.

பதின்மூன்று ஆண்டுகளாக இந்திரவிழாவில் கலந்து மகிழ்ந்து கொண்டாடிய கோவலனும் மாதவியும் தமது பதின்மூன்றாவது ஆண்டு இந்திரவிழாவின் போதே பிரிவுறுகின்றனர்.

கடைச்சங்கத்திற்கு முன்னவனான செம்பியன் காலத்திருந்தே கொண்டாப்பட்ட இப்பெருவிழா சோழன் நெடுமுடிக்கிள்ளி காலத்தில் கைவிடப்பட்டதாக மணிமேகலை குறிப்பிடுகின்றது.

தன் குழந்தையைத் தவற விட்டுவிட்ட நெடுமுடிக்கிள்ளி, குழந்தையைக் தேடுவதில் மூழ்கியிருந்ததாலும், குழந்தையைப் பிரிந்த ஏக்கத்தாலும், விழாக்களில் விருப்பற்று இருந்ததாலும்,  காமன் விழாவைக் கொண்டாட மறந்துவிட்டான் என மணிமேகலைப் பாடல் (29:33:36) ஒன்று கூறுகின்றது.

சிலப்பதிகார காலத்திற்கும் மணிமேகலை காலத்திற்கும் இடையே ஒரு கடற்கோள் இடம்பெற்று புகார் நகரம் அழிந்திருக்கின்றது. இந்திரவிழா நடைபெறாமற் போனதால் இந்திரன் கோபமுற்று விடுத்த சாபத்தாலேயே கடற்கோள் எழுந்து புகார் நகரை அழித்தது என, அறவண அடிகள் மணிமேகலைக்குக் கூறுகின்றார்.

பின்னாளில் காதல், மணவாழ்வு என்பவற்றைப் புறந்தள்ளி துறவறத்தைப் பெரிதும் போற்றிய சமண, பௌத்த மதங்கள் தமிழகத்திலே வலுவாகக் காலூன்றியதாலும் ஆட்சியாளர் அம்மதங்களைத் தழுவி நின்றதாலும் அரசு தழுவிய காதல் விழாக்கள் வழக்கற்றுப் போயின. எனினும் தமிழகத்தின் பலபாகங்களிலும் காமன் வழிபாடுகள்   இப்போதும் மாசித் திங்களில் நடைபெற்றுக்கொண்டுதானிருக்கின்றன.

காமன் விழா பெருமெடுப்பில் கொண்டாடப்பட்ட சங்ககாலத்தில் யவனர் எனப்பட்ட வெளிநாட்டோர் வணிகம், தொழில் நிமித்தம் வந்துபோன செய்திகள் இலக்கியங்களில் பதியப்பட்டுள்ளன. இந்த யவனர் உரோம நாட்டவரே என்பது வரலாற்று ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அக்காலத்தே பேரரசாகத் திகழ்ந்த உரோம அரசுகளைச் சார்ந்தோர் தமிழர் அரசுகளோடு நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தனர். தமிழ் அரசர்களின் மெய்ப்பாதுகாவலராகவும் இருந்திருக்கின்றனர். தமிழ் பேசத்தெரியாத உரோம வீரர்கள் அரசரது அந்தரங்கப் பாசறைகளைக் காவல் காத்தனர் என முல்லைப்பாட்டு (63- 66) கூறுகின்றது.

தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட முத்துகளை உரோம அரசிகளும் சீமாட்டிகளும் பெரிதும் விரும்பினர். முத்துகளை அணிவது மட்டுமல்ல, மதுவில்  (Wine) முத்துக்களைக் கரைத்தும் அருந்தியிருக்கின்றனர். இதனால் உரோம நாட்டின் செல்வம் வற்றுவதாகக் கருதி அந்நாட்டில் தமிழக முத்துகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது என்ற செய்தியும் உண்டு. முத்துகளைப் பயன்படுத்திய பெண்களுக்குத் தண்டனையும் வழங்கப்பட்டிருக்கின்றது.

யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி”                                      அகநூறு 139

உரோம நாட்டவர்கள் முசிறித் துறைமுகத்தில் பொன்னைக் கொடுத்து மிளகு மூட்டைகளை ஏற்றிச் சென்ற செய்தியை அகநானூறு கூறுகின்றது. கருவூர், அரிககமேடு, கொடுமணல் போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட உரோமரது செப்பு நாணயங்கள் உரோமர் தொடர்புக்குப் பெருஞ்சான்றுகளாகின்றன.

இவ்வாறு தமிழகத்தோடு தொடர்பு கொண்டிருந்த உரோமர் தமிழர்களின் காதற் பெருவிழா சிறப்புகளைக் கண்டுணர்ந்து அதைத் தமது நாட்டிற்கும் கொண்டு செல்ல வாய்ப்பிருந்திருக்கின்றது என்று கருத இடமுண்டு.

மாலுமி  ஒருவர்  'Periplus of the Erythraean Sea' என்ற பயண நூலை கி.பி- 60 இல் எழுதியுள்ளார். உரோமருக்கும் தமிழருக்குமிடையேயான வணிகம் பற்றிய பல செய்திகள் அதில் உள்ளன.

தற்போதைய  Valentine நாள் கிறித்துவுக்குப் பின்னர் உரோமாபுரியில் தொடங்கப்பட்டு மாசி  மாதத்திலேயே கொண்டாடப்பட்டு வருவதை நாம் அறிவோம். மனதிற்கு இதம் தரும் தாய்மண்ணின் மாசிமாதம், குளிர்மிக்க உரோம் நாட்டிலும் காதற் காலமாய்க் கருதப்படக் காரணம் என்ன? தமிழ் நாட்காட்டிக்கமைய மாசித்திங்கள் தொடக்கத்திலேயே காமன் விழாவுக்கு கால்கோள் இடப்பட்டதாக அறிகின்றோம். ஆங்கில நாட்காட்டிக்கமைய மாசி 14 இல்  Valentine நாள் வருவதும், தமிழர் கணிப்பில் மாசித்திங்கள் முதல்நாளோடு இக்காதல் நாள் ஒத்துப்போவதும் பெருவியப்பைத் தருகின்றது.

எமது காமன் விழா உரோமரைப் பாதித்திருக்கலாம் எனக் கருதுவதற்கு இது போன்ற பல காரணங்கள் உள்ளன.

உரோமாபுரி கொண்டாடத் தொடங்கிய காதல் விழாவுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழர் காதல் விழாவைக் கொண்டாடி வந்துள்ளனர். உலக அளவில் காதல் விழா முன்னோடிகளாகவும் தமிழர் திகழ்ந்துள்ளனர் எனக் கருதலாம்.

இக்காலத்தே உலகெங்கும், குறிப்பாகத் தமிழர் புலங்களில்  மேற்குலகப் பாதிப்புகள் வழியாகப் பெப்ரவரி 14ம் நாள்  (Valentine)  காதல் நாளாகக் கொண்டாப்பட்டு வருகின்றது. எம் இளையதலைமுறை இதிற் தோய்ந்து கிடப்பதை நாம் காணலாம்.

எமது தடங்களின் வழியே பின்னோக்கிப் பயணித்து எம்மை நாமே உணர்வோமாயின் காமன் விழாவை மட்டுமல்ல, எமது விழுமிய மரபுகள் பலவற்றையும் மீட்டெடுக்க முடியும்.

மற்றுமொருமுறை நாம் காதலர் நாளைச் சந்திக்கின்றபோது,  இந்தநாள் நாம் முன்னோர் போற்றிக் கொண்டாடிய காமன் விழா என்ற உணர்வு எமக்கிருக்க வேண்டும். இல்லையாயின், இதுபோன்றதொரு ஒப்பற்ற விழாவை நம் முன்னோர் கொண்டாடியிருந்தனர் என்ற உணர்வாவது நமக்குள் ஏற்படட்டும்.

                                                                     பொன்னையா விவேகானந்தன். 

தாய்வீடு - கனடா இதழில் வெளியான கட்டுரை. 

இக்கட்டுரைக்கென ஓவியம் வரைந்த ஓவியர் ஜீவா அவர்களுக்கும் வரைகலையால் அழகூட்டிய கருணா  அவர்களுக்கும் நன்றி. 





Thursday, January 23, 2014

சிந்து வெளி அரசு தமிழரசா?

ஆய்வின் வழி அறியப்பட்ட உண்மைகள் 


தமிழர் அரசுகள் குறித்துத் தொடராக எழுதப்பட்டுவரும் இக்கட்டுரைத் தொடரின் முதற் பகுதியில் கடற்கோளில் அமிழ்ந்துபோன குமரிப் பெருநிலப்பரப்பில் நிலவிய தமிழ் அரசுகள் பற்றிப் பார்த்தோம். இத்தொடரில் சிந்துவெளி நாகரிகத்திற்கும் தமிழருக்கும் உள்ள தொடர்புகள் குறித்து நோக்குவோம்.

இமயமலைத்தொடரில் ஊற்றெடுத்து, அழகிய பெருநதியாக அரபிக் கடலில் கலப்பது (Indus River) சிந்துநதியாகும். இந்த நதி இப்போதும் பாகிஸ்தான் நாட்டடில் பாய்ந்துகொண்டிருக்கின்றது.  ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த நதியின் கரைகளில் பெருநகரங்கள் அமைக்கப்பட்டு சிறந்த நாகரிகங்களோடு மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் எல்லைக்குள் கண்டறியப்பட்ட நகரங்களுக்கு ஹரப்பா, கனரிவாலா, மொகஞ்சதாரோ  (Harappa, Ganeriwala, Mohenjo-Daro)  எனப் பெயரிட்டுள்ளனர். இந்திய எல்லைக்குள் இனங்காணப்பட்ட நகரங்கள்  Dholavira, Kalibangan, Rakhigarhi, Rupar, Lothal     என அழைக்கப்படுகின்றன. ஏறக்குறைய 1.3 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகவும் ஆறு பெரிய நகரங்களும் 200க்கு மேற்பட்ட ஊர்களையும் கொண்டிருப்பதாக ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளனர்.

கி.மு 3000க்கும் 2500க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த நகரங்கள் நாகரிகத்தின் உச்சத்தில் இருந்ததாக ஆய்வாளர் கருதுகின்றனர்.

உலகில் மிகத் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றாகத் திகழ்ந்த இப்புலத்தில் மிகவுயர்ந்த நாகரிக விழுமியங்களைக் கொண்டவர்களாக வாழ்ந்த இந்த மக்கள் யார் என்பதே பெறுமதி மிக்க வினாவாக எழுந்து நிற்கின்றது. இந்த வினாவுக்கு விடைகளாக ஆய்வாளர்  பல முடிவுகளை முன்வைத்த போதும், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவுகளாக இன்றுவரை எதுவும் பெறப்படவில்லை.

அங்கு வாழ்ந்தோர் யாராக இருக்கக் கூடும் என்ற வினாவுக்கு விடைகாண முயன்றோரின் முடிவுகள் சிலவற்றைப் பார்ப்போம்.

மொழியியல் சார்ந்து சிந்துவெளி பற்றி ஆய்வுசெய்தவர் ஆய்வாளர் பர்ரோ. இவர் ஆரிய மொழியான ரிக் வேதத்தை (ஆரியர் இந்தியாவுக்குள் நுழைந்தபோது முதலில் எழுதிய நூல்) நன்கு ஆய்வுசெய்து 20க்கு மேற்பட்ட திராவிடச் சொற்களைக் கண்டறிந்துள்ளார். (திராவிடம் என்ற சொல்லின் விளக்கம் இறுதியில் தரப்பட்டுள்ளது.) வடமொழியை ஆழமாக ஆய்வுசெய்தபின் இவர், ஆரியர் இந்தியாவுக்கு வருகை தரமுன் திராவிடர்கள் சிந்துவெளியில் வாழ்ந்திருக்கக்கூடும் என்கிறார்.

ஆரியர் கைபர் கணவாய் (heber valley) வழியாக சிந்துவெளிப்பரப்புக்குள் நுழைந்தபோது இங்கு வாழ்ந்த மக்களோடு போரிட்டனர். பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த இந்த போர்க்காலப் பொழுதில்  எழுதப்பட்டதே ரிக்வேதம். எனவே ரிக்வேதத்தில் வடமொழி தவிர்ந்த பிறசொற்கள் கலப்புற்றிருந்தால் அந்தச் சொற்கள் சார்ந்த மொழிக்குரியவர்களே சிந்துவெளியில் வாழ்ந்திருக்கக்கூடும் என்பது இவர் கருத்து.

சிந்துவெளி பற்றி ஆய்வு செய்து கருத்துகளை வெளியிட்டோரில் லஹோவரி குறிப்பிடத்தக்கவர். மேற்காசியப் பகுதியில் சிறப்புற்ற விளங்கிய சுமேரியர், மெசப்பத்தோமியர் போன்றோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஈரான் வழியாகப் பெயர்ந்து சிந்துவெளியில் குடியேறியிருக்கலாம் என்கிறார் லஹோரி. இவர்களே திராவிடர் எனக்கூறும் இவர் திராவிடருக்கும் சிந்துவெளி மக்களுக்கும் சுமேரியர்களுக்குமுள்ள நெருக்கமான தொடர்புகளை ஆய்வின் வழி முன்வைக்கின்றார்.

சிந்துவெளி அகழ்வின்போது கண்டெடுக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் இன்றுவரை வாசித்தறியப்படாதுள்ளது. எனினும் மொகஞ்சதாரோ முத்திரைகளின மேல் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளுக்கும் கிமு இரண்டாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டதாக அறியப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகளுக்குமிடையில் இயைபு இருப்பதாக ஹிராஸ் பாதிரியார் குறிப்பிடுகின்றார். அகழ்வாய்வின் போது தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்களுக்கும் சிந்துவெளி ஓவியங்களுக்குமிடையே பெரும் ஒற்றுமைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு மொழியியல், கலைப்புலங்களோடு ஒப்பிட்டு சிந்துவெளி நாகரிகத்திற்கும் தென்னிந்தியத் திராவிடருக்குமிடையே ஒற்றுமை காண முயன்றோரில் குறிப்பிடத்தக்கவர்கள் ஹிராஸ் பாதிரியார், ஐ. மகாதேவன் போன்றோர் ஆவர்.

‘சிந்துவெளி நாகரிகம் திராவிடர்களுக்குரியதே’ என வலிந்து கூற முற்படுவது வரலாற்று ஆய்வுமுறைக்கு முரண்’ எனக்கூறும் பேராசிரியர் கே. கே பிள்ளையவர்கள் ‘சிந்துவெளி நாகரிகம் ஆரியர்களுடையதல்ல’ எனத் தெளிவாகக் குறிப்பிட்டுப் பல ஆதாரங்களை முன்வைத்துள்ளார்.

2007இல் மயிலாடுதுறையில் ஒரு கற்கோடாரி கண்டெடுக்கப்பபட்டுள்ளது. இது கிமு 2000 – 1500களில் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வாளர் கருதுகின்றனர். சிந்துவெளியில் காணப்பட்ட அதே எழுத்துகள் இந்தக் கோடாரியில் பொறிக்கப்பட்டுள்ளன. இதனால் பண்டைய தமிழகத்திற்கும் சிந்துவெளிக்குமுள்ள தொடர்புகள் தொடர்பான ஆய்வுகள் வலுவடைந்துள்ளதாக ஐராவதம் மகாதேவன் தெரிவித்துள்ளார். இதேபோன்று காவிரி கழிமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் பொறிக்கப்பட்ட எழுத்துகளுக்கும் சிந்துவெளி எழுத்துகளுக்குமுள்ள ஒற்றுமைகளையும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் உருவாக்கிய இந்தியா தொடர்பான வரலாற்று ஆவணத்தில் ‘ஆரியருக்கு முன் இந்தியாவெங்கும் வாழ்ந்த மக்கள் திராவிடரே’ என்று கூறப்பட்டிருக்கின்றது.

திராவிடர் என்ற சொல்லுக்கு விளக்கம் தர முற்பட்ட கார்டுவெல் எனும் அறிஞர் பின்வருமாறு தெரிவிக்கின்றார். குறித்தவொரு மக்கள் குழுவிற்குப் பெயரிடுவது அந்த மக்களல்ல. இவர்களை அழைப்போரே குறித்த இனமக்களுக்கு பெயரிடுகின்றனர். தமிழ்மொழி பேசியோரை அழைக்க முற்பட்ட வேற்றினத்தார் Dravid என்றே அழைத்தனர்.  'தமிழ்' என்பதைத் துல்லியமாக உச்சரிக்கத் தெரியாதோர் 'ற்மில்' என உச்சரிக்க முற்பட்டு அதுவே திரவிட் என்றானது என்கிறார் கார்டுவெல். ( தமிழ் - றமிழ் - றமிட் - டர்மிட் - டிரமிட் - டிராவிட் என மாற்றமடைந்தது.) எனவே தொடக்ககாலத்தில் தமிழ் பேசியோரே திராவிட் என அழைக்கப்பட்டனர். கார்டுவெல் வெளியிட்ட இக்கருத்து சிந்தனைக்குட்படுத்தப்பட வேண்டியதொன்று.

தொடர்ந்தும் அறிவியல் வழிநின்று சிந்துவெளி தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரச மட்டங்களில் போதிய ஆதரவு இல்லையென்றபோதும் தனிப்பட்ட முறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடல்கோள் கொண்ட குமரிக்கண்டத்திற்கும் சிந்துவெளிக்கும் கூடத் தொடர்புகள் இருந்திருக்கலாம். ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் நிலவிய உயர்ந்த அரசுகளாக இவை இருந்திருக்கின்றன. தொடர்ச்சியான வலுவான ஆய்வுகளின் வழியேதான் இவை தொடர்பான உண்மைகளைக் கண்டறிய முடியும்.

இந்த ஆய்வுகளின் வழி, சிந்துவெளி நாகரிகம் தமிழர்களினுடையதுதான் என நிறுவப்பட்டால் பண்டைய தமிழர் அரசுகளில் உயர்வாதொரு அரசாக சிந்துவெளி திகழும்.

திருவேங்கடம் தென்குமரி ஆயிடைத் திகழ்ந்த தமிழர் அரசுகள் குறித்தும், ஈழத்தமிழர் அரசுகள் குறித்தும் தொடர்ந்து பார்ப்போம்.

                                                                                     பொன்னையா விவேகானந்தன்

தாய்வீடு கனடா - தைத்திங்கள் இதழில் வெளிவந்த கட்டுரை. 

Sunday, January 19, 2014

தமிழர் அரசுகள்- குமரிக்கண்டம்


                                          
உலகின் பழமை வாய்ந்த இனங்களில் ஒன்றாகத் தமிழர் திகழ்ந்து வருவதை பலரும் அறிவர். உலகின் மிகப் பழமையானதாகக் கருதப்படும் சில மொழிகளில் ஒன்றாகத் தமிழும் திகழ்ந்து வருகின்றது.

இனமும் மொழியும் தோன்றிய காலம் எதுவென அறுதியிட்டுக் கூறமுடியாதளவுக்கு தோற்றகாலம் வரலாற்றுக் காலங்களுக்கப்பால் நீண்டு செல்வதாக அறிஞர் கருதுகின்றனர்.

மொழியின் பழமை குறித்து அறிஞர் கி. பெ ஆ விசுவநாதம் பின்வருமாறு கூறுகின்றார்.

“எமது பழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் கிறித்துவுக்கு முன் 300 ஆண்டளவில் எழுதப்பட்டது என்கிறார்கள். இந்நூலில் தொல்காப்பியர் 257 இடங்களில் என்மனார் புலவர், என்ப என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது இக்கருத்தை ஏற்னவே கூறியுள்ளார்கள் என்பது இதன் பொருளாகும். ஆகவே தொல்காப்பியத்துக்கு முன்பாகவும் இலக்கணங்கள் இருந்திருக்கின்றன என்பது தெளிவாகின்றது. இலக்கியங்கள் தோன்றிய பின்பே இலக்கணம் தோன்றும் என்பது பொது விதி. எனவே இலக்கணம் தோன்றுவதற்கு முன்பாக இலக்கியங்கள் தோன்றியுள்ளன என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இலக்கியங்கள் தோன்றுவதாக இருந்தால் திருத்தமான எழுத்து வழக்கு இருந்திருக்க வேண்டும். திருத்தமான எழுத்து வழக்கானது பல நூற்றாண்டுகளாக பேசப்பட்டு வரும் மொழியிலிருந்துதான் தோன்றும். மொழி தோன்றி திருத்தமான பேச்சு வழக்கினைப் பெறுவதற்கு பல்லாண்டு காலம் செல்லும். இவ்வாறு மொழியின் தோற்றுவாய் தேடிப் பின்னோக்கிச் சென்றால் காலம் நீள்கின்றதேயன்றி விடையறிய முடியவில்லை. இதுவே எமது மொழியின் பழமைக்குச் சான்று” என்கின்றார் முத்தமிழறிஞர் கி. பெ ஆ விசுவநாதம் அவர்கள்.

இந்துணைப் பழமை வாய்ந்த தமிழர் எந்த நிலத்திலே வாழ்ந்தனர்? எவ்வாறான அரசாட்சிகளை எங்கெல்லாம் கொண்டிருந்தனர்? என்ற ஆய்வுகளுக்கு முழுமையான விடைகள் கிடைத்துவிட்டதாகக் கருதமுடியாது எனினும் ஆய்வு முன்னோட்டமாகவும், ஆய்வுச் சிந்தனைகளை தூண்டவல்லதாகவும் பல கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பல கருத்துகள் முடிந்த முடிபாகவன்றி ஆய்வை நோக்கிக் செல்லும் வலுவான ஆதாரங்களாத் திகழ்கின்றன.

இவ்வாறான கருத்துகளைத் தொகுத்து, வரலாற்றுக்காலம் முதல் இன்றுவரை தமிழர் அரசுகள் எங்கெல்லாம் எவ்வாறு திகழ்திருக்கின்றன? அவற்றின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறிருந்தன? என்ற செய்திகளைப் பகிர்ந்து கொள்வதாக இக்கட்டுரைத் தொடர் அமைகின்றது.

குமரிக்கண்டம்

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுந்த பெரும் கடற்கோளில் குமரிக்கண்டம் என்ற பெருநிலத்தின் பெரும் பகுதி  அமிழ்தழிந்து போனதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. இந்த நிலப்பரப்பெங்கும் தமிழர் வாழ்ந்;தனர் என சில ஆய்வுகள் கூறுகின்றன.

கலித்தொகை எனும் தமிழ் இலக்கியத்தில் இடம்பெறும் செய்யுள் வரிகள் கடல்கோள் பற்றிக் குறிப்பிடுகின்றன.

மலிதிரையூர்ந்துதன் மணிகடல் வெளவலில்
மெலிவின்றி மேற்சென்று மேவார் நபடிடம்படப்
புலியோடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடச்சீர்த் தென்னவன்     -  கலித்தொகை 104

பாண்டி நாட்டைக் கடல்கொள்ள தென்னவனாகிய பாண்டிய மன்னன் பெரும் அலைகடல் நீந்தி கரைசேர்ந்து சேரன் சோழன் ஆகிய இருவரது நிலத்தின் சில பகதிகளை வென்று அரசமைத்தான் என்கிறது இப்பாடல்.

பஃறுளி ஆற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள.....   – நாடுகாண் காதை 19-20 - சிலப்பதிகாரம்

என்னும் சிலப்பதிகார அடிகளால் பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கம் முதல் கடல்கோளிலும், குமரிக்கோடு இரண்டாம் கடல்கோளிலும் அழிவுற்றன எனக் கொள்ள வேண்டும் என்கின்றனர் அறிஞர்.

பாண்டியரின் மிகப்பழமையான அரசாகத் திகழ்ந்த தென்மதுரையில் பஃறுளியாறு இருந்ததை,

முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலிலும் பலவே.         புறம் 9

நன்னீரை எடுத்து வருகின்ற பஃறுளியாற்றினது மணலின் எண்ணிக்கையை விடப் பாண்டியன் கீர்த்தி பெரியது என்கிறது இந்தப்பாடல்.

கடல்கோளிற்கு முன்பாகப் பாண்டியர் தென்மதுரையில் அரசமைத்திருந்தனர் என்பது வரலாற்றுக் குறிப்பு. தென்மதுரை பற்றிய பிற குறிப்புகள் ஆய்வுக்குட்பட்தாக இதுவரை தெரியவில்லை. இதே காலகட்டத்தில் தென்மதுரைக்கு வடக்கிலும் சோழ சேர அரசுகள் இருந்திருக்கலாம். அவற்றுக்கான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சங்ககாலத்தில் (கிமு 300 – கி;பி 300) பெறப்பட்ட இவ்வரசுகள் பற்றிய குறிப்புகள் இவை நீண்டகால அரசுகளாகத் திகழ்திருக்க வேண்டும் என்பதையே உணர்த்துகின்றன.

முதற்கடற்கோளில் பஃறுளியாற்றுடன் தென்மதுரை அழிவுற்றதையடுத்து கபாடபுரம் எனும் நகர் அரசாகத் திகழ்ந்தமைக்குச் சான்றுகள் உள்ளன.

பாண்டியனின் தலைநகராகத் திகழ்ந்த கபாடபரம் மணிமுத்துகளுடன் அணிசெய்யப்பட்டுச் சிறப்புடன் விளங்கியதாக வால்மீகி இராமாயாணம் குறிப்பிடுகின்றது.

பப்ருவாகனன் என்னும் மன்னன் கபாடபுரம் நோக்கிப் படையெடுத்ததாக வியாயர் எழுதிய மகாபாரதம் குறிப்பிடப்படுகின்றது. முதல் படையெடுப்பை கண்ணன் அடக்கியதாகவும், பின் மீண்டும் பப்ருவாகனன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தபோது பாண்டியனைச் சுற்றி நல்லறிஞர் சூழ்ந்திருந்தனர் எனவும் மகாபாரதம் கூறுகின்றது.

தமிழ் வளர்த்த முதற்சங்கம் தென்மதுரையிலும் இடைச்சங்கம் கபாடபுரத்திலும் இருந்ததாகப் புலவர் கோவிந்தன் கூறுகின்றார்.

சிலப்பதிகாரம் குறிப்பிடுவதைப் போன்று குமரிக்கோடு என்ற நிலப்பகுதி கடற்கோளில் கொள்ளப்பட்டபோது கபாடபுரம் எனும் பாண்டிய நகரமும் அழிவுற்றிருக்கலாம் எனக் கொள்ளலாம்.

1900 ஆண்டில் வெளியான ‘மனித அறிவியல்’ என்ற திங்களோடு மக்கள் இனம் தோன்றிய இடம் இந்துமாகடலுக்குள் மூழ்கிக்கிடக்கின்றது எனக் குறிப்பிட்டிருப்பதாக டாக்டர் ஆ. இராமகிருட்டிணன் குறிப்பிடுகின்றார்.

குமரிக்கண்டம் பற்றி ஆய்வை நடத்திய வெளிநாட்டறிஞர்களான வோல்டர் ராலே, ஹெக்கல், சேர் கோல்டன்ஸ் ஸ்காட், எலியட் போன்றோர் குமரி இனமக்கள் தென்னிந்தியா, இலங்கை, கிழக்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து போன்ற நாடுகளில் வாழ்ந்து வருதாககக் குறிப்பிட்டுள்ளனர்.

குமரிக்கண்டம் எனும் பழம்பெரும் நிலம் இருந்தமையும், அந்த நிலத்தில் வாழ்ந்த மக்கள் தமிழரே எனவும், அவர்களது அரசுகளாகத் தென்மதுரை, கபாடபுரம் என்பன திகழ்ந்திருக்கின்றன என்பதையும் வரலாற்று ஆதாரங்கள் வாயிலாக நாம் தெரிந்துகொள்ள முடியும். எனினும் இக்கருத்துகளை மறுப்போரும் உளர்.

குமரிக்கண்டம் தொடர்பான ஒரு விரிவான ஆய்வு தேவையென அறிஞர் பலரும் கருதுகின்றனர்.

சிந்துவெளி அரசும் தமிழரும்.

உலகின் மிகப்பழமையான நாகரிகங்களைக் கண்டறியும் ஆய்வுகளில் சிந்துவெளி முக்கியமான இடம் பெறுகின்றது. கி;மு 5000 ஆண்டுகளுக்கு முன் வேதகால மக்கள் என அழைக்கப்படுகின்ற ஆரியர் கைபர் கணவாய் வழியாகப் பயணித்துச் சிந்துவெளி நகரங்களைக் கண்டனர். அங்கு கண்ட நகரவாழ்வும் நாகரிக வளர்ச்சியும் சிந்துநதி நீரால் விளைந்த பசுமையும் அவர்களுக்குப் புதிதாக இருந்தன. சாரைசாரையாக வந்த ஆரியர் இந்த நகரங்களைக் கைப்பற்றும் நோக்கோடு சிந்துவெளி மக்களோடு போராடத் தொடங்கினர் என்கிறது ஆரியர்கள் எழுதி வைத்த ரிக்வேதம்.

ஆரியர் வருகைக்கு முன்பாக உயர்ந்த நாகரிக பண்பாட்டுச் சிந்தனை கொண்டவர்களாக வாழ்ந்த சிந்துவெளி மக்கள் யார்? என்பதுதான் பெறுமதி மிக்க வினாவாக எழுந்து நிற்கின்றது.

அங்கு வாழ்ந்தோர் ஆரியரே என்கின்ற கருத்தும்
அவர்கள் தற்போது தென்னிந்தியாவில் வாழும் திராவிடரே என்ற ஆய்வுகளும்,
இந்த இருவினத்தாரும் இல்லாமல் பிறிதோரினம் வாழ்ந்திருக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகின்றது.

வியத்தகு அறிவாற்றலுடன் வாழ்ந்த சிந்துவெளி மக்கள் தென்னிந்தியராக இருந்தால் சிந்துவெளியரசும் தமிழர்களுக்குரியதே.

சிந்துவெளி யாருடையது என்பதை அடுத்த கட்டுரையில் தொடர்வோம்.

                                                                                         பொன்னையா விவேகானந்தன்

தாய்வீடு - கனடா டிசம்பர் 2013 இதழில் வெளிவந்த கட்டுரை. 


Saturday, January 11, 2014

பொங்கல் நிறம் தீட்டுவோம்

இப்படங்களைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.                                                   


















Friday, December 6, 2013

கறுத்தறியா கறுப்புத் தங்கம்



இருண்ட கண்டத்தின் இதய நிலாவே!
போய் வருக!

இருபதாம் நூற்றாண்டின்
இணையிலா தீபமே!
சென்று வருக!

ஆழியிலும் பெரியதாய்
ஆழப் பதிந்திருக்கும் உன் சுவடுகளை
ஊழி ஊற்றெடுத்து வந்தாலும்
அழித்துவிட முடியுமா!

பூமி உள்ளளவும் யாவிலும்
நீ உள்ளாய்.

செயற்கரிய செய்த செயலோனே
விழிநீர் வழிய விடைதருகின்றோம்

போய் வா!

இருண்ட கண்டத்தில்
மனிதரைக் கண்டெடுத்த கடவுள்

இருபதாம் நூற்றாண்டின்
இரண்டாம் சூரியன்

வதைபடும் இனம் ஒன்றிற்காய்
மீண்டும்
வரமாய் வந்துதிப்பீர்கள்.

போய் வாருங்கள்.

வளம் சுரண்ட உலகெங்கும்
வலம் வந்து நிலம் கொண்ட
ஆதிக்க வெறியர்
பேராசைப்பட்ட நிலம் ஆபிரிக்கா.

வற்றாத வளத்தோடு
வலிமையான அடிமைகளும்
அங்கு கிடைக்க
விலக மறுத்து வேரூன்றியது
ஆக்கிரமிப்பு.

சூரியன் மறையாப் பேரரசு மெல்லச் சரிந்து
சுதந்திரக்காற்றை உலகம்
சுவாசித்த போதும்
ஆபிரிக்க இருள் மட்டும்
கரைய மறுத்தது.

நிலவெறி நிறவெறி இரண்டுமாய்
கறுப்பின மக்களின்
குருதி குடித்தது குரூரம் கொண்டது
ஆபிரிக்க அரசு.

பள்ளியறியா கறுப்பினத்துக்குள்
துள்ளிக் குதித்தது ஒரு
ஓளிப்புள்ளி.

வழி வந்த எம் நிலத்தை
வளம் சுரண்ட வந்தவன்
ஆள்வதா?
எமை வதைத்து வாழ்வதா?

பொறுமைக்குச் சாவுமணியடித்து
சாதிக்கப் புறப்பட்டது
கறுப்பிளஞ் சூரியன்.

தனியாகி பின் அணியாகி
சந்திகள் தோறும் சத்தங்களாகி
வேட்டுகளுக்கு வீழா
விடுதலையானது
இந்தக்
கறுத்தறியா
கறுப்புத் தங்கம்.

சுட்டார்கள் மின்னியது
துவைத்தார்கள் துலங்கியது
வதைதத்hர்கள் வளர்ந்தது.

பேயாளும் அரசில்
பிணம் தின்னும் சட்டங்கள்.

ஆபிரக்கப் பேரவை அழியும்
எனக் கருதி,
ஒளிபுகா சிறையில்
சிங்கத்தைச் சிறையிட்டது
வெறிகுறையா அரசு.

கால்நூற்றாண்டு காலம்

தங்கம் தகரமாகுமென்றுதான்
அந்தத் தலைமுறை நம்பியது.

தங்கம் வைரமாகி விடுதலையானது.

ஆபிரிக்க வெளியெங்கும்
சிங்கத்தின் கர்ச்சனை சீறிப் பாய்ந்து.

நரிகளின் நாடிநரம்புகள் ஒடுங்க
வனமெங்கும் வலம் வந்தது சிங்கம்.

வழியறியா அரசு வழிவிட்டகன்றது
இருண்ட கண்டத்தில்
ஒளி உதயமானது.

மண்டேலா
மகோன்னதம் கொண்டார்.

லண்டன் மையத்தில்
மண்டேலாவின்  சிலை

பகைவன் பணிந்ததும்,
வழிவிட்டு வணங்கியதும்
உலகில்
இவர் ஒருவரைத்தான்.

ஈழத்தின் வீரப்பயிருக்கும்
நீர் பாய்ச்சிய பங்கு
நெல்சனுக்கு உண்டு.

கடற்கோளாய் காலம்
காவு கொண்ட போதிலும்
குலையாத உறுதி கொண்டால்
கொள்கை வெல்லும்

இது வார்த்தை அல்ல
மண்டேலாவின் வாழ்வு.

மண்டேலா
ஆபிரிக்க ஆண்மை மட்டுமல்ல,

ஐந்த கண்டங்களையும்
கவர்ந்த பேராண்மை.

நீண்ட இடைவெளிக்குப் பின்
உலகம் ஒற்றுமையாய்
ஒருவருக்காய் தலைவணங்குகின்றது.

இவர் நிழல்பட்டு
நெருப்பானோரில் நாமும் உள்ளோம்.

எம் நெஞ்சார்ந்த நெருப்பு
இவருக்காய் ஒருதடவை
பிழம்பாகித் தணியட்டும்.

மார்கழி  06ம் நாள் உலகத்தமிழர் இதழில் வெளியான கவிதை. 

Monday, November 18, 2013

துப்பாக்கியும் கணையாழியும்

துப்பாக்கியும் கணையாழியும்


1000க்கு மேல் இருக்கைகள் கொண்ட நான்கு திரையரங்குகள். சீட்டு ஒன்றின் விலை 50 டொலர்கள். ஓரேநேரத்தில் அத்தனை அரங்குகளும் நிறைந்து வழிய,
வரலாற்றுச் சாதனை படைத்து வெளியாகியிருக்கின்றது A Gun & A Ring (துப்பாக்கியும் கணையாழியும்) திரைப்படம்.

கடந்த சனிக்கிழமை செப்ரெம்பர் 28ம் நாள் யோர்க் சினிமா திரையரங்குகளிற்றான் இந்த வரலாற்றுப்
பதிவு நிகழ்ந்தது.

கால்நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட புலத்தமிழர் திரைப்படப் பதிவுகளின் வாயிலாக உருவாக்கப்பட்டிருந்த சில எடுகோள்கள் தகர்த்தெறியப்பட்ட நாளாகவும் இது திகழ்ந்தது.

கனடாவில் தமிழர் உருவாக்கிய பெரும்பாலான திரைபடங்கள் வருவாய் ஈட்டியவையல்ல. ஒரு முயற்சி, பதிவு, வளர்ச்சிப்பாதையின் படிகள் என்ற அளவில் அவை வெளியாகியிருந்தன. இத்துறை பெருவளர்ச்சி பெறாமைக்குக் காரணம் மக்களின் ஆதரவின்மையே என்று கூறப்பட்டது. தமிழகத் திரைப்படங்களுக்குக் கொட்டிக்கொடுக்கும் தமிழர் தம்மை வாழவைக்கவில்லையே என்று திரைத்துறைப் படைப்பாளிகள் அங்கலாய்ந்திருந்தனர். பலரும் இவ்வாறு கருதும் அளவுக்கே புலத்தமிழர்களது ஆதரவும் அமைந்திருந்தது.

தரமாக ஒரு திரைப்படத்தை உருவாக்கி, நேர்த்தியான முறையில் சந்தைப்படுத்தலும் செய்தால் எம்மக்கள் அளவிறந்த ஆதரவை வழங்குவார்கள் என்ற கருத்தை வலிமையாக்கி, கடந்தகாலக் கருதுகோள்களைத் தகர்த்திருக்கின்றனர் புலத்தமிழர்.      

ஏறக்குறைய 1000 பேர் இத்திரைப்படத்துக்கான சீட்டுகளை வெளியிலும் அரங்கிலும் வாங்கியிருந்தனர். ஒருசில விருந்தினரைத் தவிர எல்லோருக்குமே சீட்டுகள் விற்கப்பட்டிருந்தன. 3 அரங்குகளை மட்டுமே பதிவு செய்திருந்த ஏற்பாட்டாளர் மக்களின் வருகையறிந்து கடைசிநேரத்தில் நான்காவது திரையரங்கையும் பதிவு செய்தனர். சீட்டு வாங்கிய பெரும்பாலானோர் காட்சிக்கு வந்திருந்தனர். அரங்குகள் நிறைந்து வழிந்தமையே இதற்குச் சான்று.

வணிகர்கள், சமூகப் பிரமுகர்கள், ஊடகவியலாளர், பல்துறைக்கலைஞர்கள் எனப்பலரும் ஒன்றுதிரண்டு கூடியிருந்தமை ஏற்பாட்டாளர்களின் சந்தைப்படுத்தலுக்குச் சான்றாகத் திகழ்ந்தது. அனைத்துலக அளவில் பல திரைப்பட விழாக்களுக்கும் விருதுகளுக்கும் இத்திரைப்படம் தெரிவாகி வருகின்றது என்பது மட்டுமே மக்கள் பெருவாரியாகத் திரண்டமைக்குக் காரணமாகிவிடாது.

ஊடகங்களை நேர்த்தியாகப் பயன்படுத்தி, போதிய காலவளவெடுத்து மிக நுட்பமாகத் திட்டமிடப்பட்ட சந்தைப்படுத்தலினூடாக எல்லாத்தரப்பு மக்களையும் அணுகி திரைப்படம் பற்றிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினர் சந்தைப்படுத்தற் பிரிவினர். நட்புகளுக்காகச் சீட்டுப் பெற்றோரை விட, அழைப்புக்காக வந்தோரை விட, இத்திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வந்தோரே அதிகம். இதுவே சந்தைப்படுத்தலின் மகத்தான வெற்றி.

‘தளபதி’ ‘தல’ என எவர் நடித்தாலும் ஒரு தமிழகத் திரைபடத்தின் முதற் காட்சிகளை 50 டொலருக்குச் சீட்டுப் பெற்று 4 அரங்குகளை நம்மவர் ஒருபோதும் நிறைக்க மாட்டார்கள்.

எம்படைப்பு ஒன்றிற்கு மக்கள் வழங்கிய பேராதரவே இத்திரட்சி.

கனடாத்தமிழர் திரைப்பட வரலாற்றில் இத்திரைப்படத்திற்காக உத்திகள் சந்தைப்படுத்தலில் புதிய வழிமுறைகளை உருவாக்கியுள்ளன. தரமான படைப்புகளை உருவாக்கி, நேர்த்தியான வழிகளினூடாக மக்களை அணுகினால் அவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என்பதற்கு A Gun & A Ring திரைப்படத்தின் முதற்காட்சிகளே சாட்சிகள்.

இதுவரை நான்கு அனைத்துலகத் திரைப்பட விழாக்களுக்குத் தெரிவாகி, ஒரு விழாவில் இரு விருதுகளையும் பெற்று வேறு பல திரைப்பட விழாக்களுக்கும் தயாராகி வருகின்றது A Gun & A Ring.

இந்நிலையில் இத்திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்பு பலரது உணர்விலும் எகிறிக் கிடந்திருப்பது இயல்பானதே.

திரைப்படம் முடிந்து வெளியேறுகையில் காதில் விழுந்த வார்த்தைகள்..

“இது விருதுகளுக்காக எடுக்கப்பட்டிருக்கு”

“நல்ல படம்... முழுசா விளங்க இன்னொருக்கா பார்க்க வேணும்”

“இது ஆவணப்படம்.. எங்கட பிரச்சனையள வேற இனத்துக்குக் கொண்டு போயிருக்கு.”

“எங்கட ஆக்களுக்கு இது விளங்குமோ தெரியாது.”

“ஒண்டுக்கொண்டு தொடர்பில்லாமல் கிடக்கு.”

                        இப்படிப் பல கருத்துகள் காதில் விழுந்தன.

உலகளாவிய கவனத்தை ஈர்க்கக்கூடிய வாழ்வு மறுக்கப்படுகின்ற இனத்தின் அவலங்களை பின்னணியாகக் கொண்ட கதைகளின் பிணைப்பு,

அனைத்துலகத் தரத்தை இலக்கு வைத்துப் பின்னப்பட்ட திரைக்கதை,

நறுக்குத் தெறித்தாற்போல் வந்துபோகும் வார்த்தைகள்,

மௌனங்களாலும், பாவங்களாலும், ஒளிப்படக் கருவிகளாலும் சில ஆழங்களை வெளிப்படுத்த முயன்றிருக்கும் நுட்பம்,

உச்சக்கட்டத்தில் கணையாழியும் துப்பாக்கியும் கைமாறும்போது கதைப் பிணைப்புகளின் கனமான முடிச்சை கச்சிதமாய் அவிழ்க்கும் நேர்த்தி,
இவையெல்லாம் A Gun & A Ring  திரைப்படம் என்னைக் கவரக் காரணங்களாக அமைந்தன. இப்படத்தை ஆக்கியளித்த லெனினுக்கும், பெரும் செலவில் தயாரித்த விஷ்ணுவுக்கும் மனம் திறந்த பாராட்டுகள்.


திரைப்படம் எங்கிலும் ஆறு கதைகள் தனித்தும் பிணைந்தும் காட்சிகளில் கலந்து பயணிக்கின்றன.

விடுதலை இயக்கமொன்றின் வதை முகாமிலிருந்து தப்பித்த இளைஞனின் புலவாழ்வுத் தோல்வி.

இளைஞனிடம் தகவல்களைக் பிடுங்கி இளைஞனைத் தப்பவிட்டு ஏனையோரை அடித்துக்கொல்லும் கொடூரனின் கனடா வாழ்வு

போரினால் பாதிக்கப்பட்டு, மறுவாழ்வு தேடி கனடா வந்து அல்லறும் ஒரு பெண்ணும் இழப்புகளே உருவான ஒரு சூடான் அபலையும்.

தாயகத்தில் மக்கள் சேவைக்காக வாழும் மனைவியைப் பிரிந்து கனடாவில் வாழும் தந்தையும் மகளும்.

இளையதலைமுறையின் இதயங்களைப் புரிந்துகொள்ளாமல் முடிவுகள் எடுக்கும் போர்ச்சூழல் பாதிப்பும் பிற்போக்குத்தனமும் கொண்ட பெற்றோருடன் ஏற்படும் முரண்பாடு.

தொழிலுக்காகக் காதலை இழந்த புலனாய்வாளனின் தொழில்சார்ந்த பற்றும் துயரமும்.

இந்த ஆறு கதைகளும் காட்சிப்பின்னல்கள் ஊடாக எவ்வாறு நகர்கின்றன என்பதுதான் கணையாழியும் துப்பாக்கியும். போரியல் வாழ்வின் தொடர்ச்சியில் கட்டுமானம் செய்யப்பட்ட தளங்களில் தடம் பதித்துச் செல்லும் புல வாழ்வியலின் சில யதார்த்தங்களை அம்மணமாக்கியிருக்கின்றது துப்பாக்கியும் கணையாழியும்.

இந்த ஆறு கதைகளைகளின் காட்சிகளையும் கலந்து, இடை நிகழ்ச்சிகள் சிலவற்றை முன்காட்சிகளாக்கி எதிர்பார்ப்பைத் தூண்டி, பின் ஒன்றோடு ஒன்று பொருத்தும் திரைக்கதை தமிழர் திரைக்கதை வரலாற்றுக்குப் புதிது. சாதாரண திரைப்பட ரசிகர்களுக்கு இத்திரைக்கதை, புரிதல் தொடர்பான சிக்கல்களைத் தோற்றுவிக்கக்கூடும் என்பது லெனினுக்குத் தெரியாததல்ல. ஆனால் இத்திரைக்கதையமைப்பே அனைத்துலக அங்கீகாரம் பெறக் காரணம் என்பதை உய்த்துணர்வோர் எவரும் மறுக்கார்.

கதைகளினூடாக நகரும் துப்பாக்கியும் கணையாழியும் புலவாழ்வின் இருவேறு பக்கங்களின் சாட்சிகளாகத் திகழ்கின்றன. கதையோட்டத்தின் கருப்பொருட்களையும் கதைமாந்தரையும் இவையே இணைக்கின்றன.

இராணுவ அடக்குமுறைகளினால் பாதிக்கப்பட்டுப் புலம் பெயர்ந்த, தாயக வாழ்வின் பிற்போக்குத்தளைகளில் இருந்து விடுபடாத பெற்றோரின் கடும் முடிவுகளுக்குத் துணைபோக மறுத்து கோபமுறும் இளையதலைமுறைக்கு வன்முறை வடிகால் சமைக்கிறது தாயகப் போரியலின் தீய பக்கம். துப்பாக்கி இதன் குறியீடு.
கொல்லும் தொழிலை குலத்தொழிலாகக் கொண்டே இறுதிவரை பயணிக்கிறது துப்பாக்கி.

ஒரு இனம் சார்ந்த இழப்புகளின் எல்லைகளைக் கடந்து, உலகளாவிய மனித இனத்தின் இழப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்டு புது வாழ்வியல் நெறியோடு பயணிக்கத்தொடங்கும் மனிதப் பொதுமையின் குறியீடு கணையாழி.
விற்கப்பட்டும் வீசப்பட்டும் இறுதியில் அர்த்தம் பெறுகின்றது இந்தக் கணையாழி.

இவையிரண்டுமே கதையின் முக்கிய கதாபாத்திரங்கள். இந்த இரண்டோடும் இணைந்து பயணித்தாற்றான் கதையோடு ஒன்றி உச்சப்பயன் பெறமுடியும்.

திரைப்படம் முழுவதும் கனகச்சிதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் மிகையற்ற நடிப்பு மிகச் சிறப்பு. ஒவ்வொரு கதாபாத்திரமும் புலம்பெயர்வாழ்வியல் யதார்த்தங்களின் குறியீடு.

இத்திரைப்படம் விரைவில் தொடர்ச்சியாகத் திரையிடப்படவுள்ளது. அவ்வேளை கதாபாத்திரங்களின் சிறப்புகள் குறித்து விரிவாக எழுதலாம்.

அப்படியானால், இப்படத்தில் குறைகளே இல்லையா எனக் கேள்விகள் எழுவது கேட்கிறது.

பலநூறு மில்லியன் டொலர் செலவழித்து உருவாக்கப்பட்ட அவதார் திரைப்படத்தோடு நூறாயிரம் (ஓர் இலட்சம்) டொலர் செலவில் உருவாக்கப்பட்ட இப்படத்தை ஒப்பிட்டுக் குறைநிறை எழுத முற்படுவது அறிவுடமையாகாது என்பதை அனைவரும் அறிவீர்கள்.

தொழில்நுட்பம் சார்ந்து சில குறைகள் இல்லாமல் இல்லை. அவை பொருளாதாரப் பின்னணி கொண்டவை என்பதால் அவற்றைச் இதில் சுட்டிச் செல்வது பொருத்தமாகாது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச்சமூகத்தின் உயர்படைப்பாக வெளிவந்திருக்கும் இத்திரைப்படம் ‘கதை சொல்லும் உத்தி’ ஊடாக உலகக் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. கதையெங்கும் இழையோடும் ஓர் இனத்தின் அவலம் உலக உணர்வுகளில் நிச்சயமாய் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும்.

விருதுகளுக்கப்பால் எமக்குக் கிடைத்திருக்கும் பெருவெற்றி இதுதான்.

அடுத்த திரையிடுகைக்காய் உங்களோடு நானும் காத்திருக்கின்றேன்.

                                                                   பொன்னையா விவேகானந்தன்

                                        (தாய்வீடு - ஒக்ரோபர் 2013 இதழில் வெளியான விமர்சனம்)


Monday, October 17, 2011

மண்



மண்.....


அழுத்தங்கள்
மூடி மூடி
மறைத்தாலும்
மீண்டும்
அசுர உருக்கொண்டு
முளைத்துவிடுகின்றன.

மண்ணிருந்து
நான் வாழ்ந்த நினைவுகள்.

பொன் எனப் பொலிந்த
அந்தப் பொழுதுகள்
என் உயிர் பூத்துப் பொழில் கொண்ட
நாட்கள்.

வெயிற்காலப் புழுதிகளில்
அளைந்து,
விதானையார் வீட்டு
எருமைகளோடு கலந்து,
காடேறிகளாய்
கூடு கலைத்து குருவி பிடித்து,
பாம்பைத் துரத்தி மகிழ்ந்து
பாம்பு துரத்தப் பயந்து,
புற்றின் பின் மறைந்து
திருட்டுப் புகை பிடித்து,

அந்திக் கருக்கலில்
புளியமரக் கொப்பேறி,
கொம்பேறி மூக்கர்களாய்
பாதைப் பயணிகளைப்
பயங்காட்டிக் களித்து,

கர்வத்தோடு
பள்ளி போகும்
வெள்ளைக் கமலாவின்
வெண் சீருடை மீது
சேறடித்துச் சிரித்து,
பின்
வீட்டாரிடம் சிக்கித் தவித்து,

இப்படித்தான்

தீச்சுடினும் தீய்ந்து போகாத
கல்வெட்டுகள்
உணர்வெங்கும் இறைந்து
கிடக்கின்றன.

நிலம் பெயர்ந்து
புலம் வாழ்வதை விட,
அங்கம் சில
இழந்தாயினும்
அங்கேயே வாழ்ந்திருக்கலாம்.