Saturday, May 28, 2011

அகதியின் சுவடுகள்















உள்ளுர மெதுவாய் எழுகின்றது
அச்சம்..

என் மண்ணை அகன்றெழ முடியா ஆதங்கம்
நொறுங்கிச் சிதற..

வேர்கள் இழுவுண்டு அறுபட பிடுங்கியெறியப்பட்டேன்..

இனி எத்திசை நோக்கிச் சிதறினால்த்தான் என்ன..?

அவலம் நிறைந்து வழிந்த உடலத்திற்கு
உலகம் இட்ட பெயர்

அகதி..

அறுக்கப்பட்ட வேரின் நுனிகளை
உறைபனிக்குள் புதைத்தபோதும்
நின்று விடவில்லை இரத்தப் பெருக்கு..

உணர்வுகளை விளையாட்டாய்
விலைபேசிச் செல்லும்  காலம்..
வாசனை எசுத்தர்களை சுவாச வாசலுக்குத்
தூய்மையற்றுக் கொண்டு வரும் காற்று.

என் சுவாசம் உள்ளிழுத்த முதல் காற்றின்
வாசனைக்காக ஏங்கும் இதயம்..

ஒளியைச் சிதறடிக்கும் அப்பிள் குவியலின்
பளபளப்பில் மேலும் வரண்டு போகும் நாக்கு..

கறுத்தக் கொழும்பானின் கற்பனைச் சுவையில்
ஊற்றெடுக்கும் எச்சில்,
உணர்வின் வரட்சிக்குத் தண்ணி காட்டும்..

மேபிள் மர நிழலிலும், பச்சைப் புல் விரிப்பிலும்
உருண்டு திரிந்தன உணர்வுகள் தாமரை இலை தண்ணீர் போல..

மீண்டும் உணர்வுகளை விளையாட்டாய்
விலைபேசிச் செல்லும்  காலம்..

உயிர்ப்பின் அவசியம்
இறுகிக் கிடந்த திராவகத்துக்குள்ளிருந்தும்
என் வேர்களைத் துளிர்க்கத் தூண்டும்.

கடுங்குளிரிலும் தன் இலைகளை
இழக்கச் சம்மதிக்காத
பைன் மரங்களின் உறுதியில் பாதியேனும்
இல்லையெனில்
உயிர்ப்து என்பது இங்கு சாத்தியமில்லை..

உயிர்ப்பின் எழுச்சியிலும் எதிர்ப்புகள்.

போருக்குள்ளேயே தேரோட்டியவை
என் உணர்வுகள்.

எதிர்ப்பை எதிர்கொள்ளும் இன்பத்தில்
மேலும் துளிர்கள் தளிராகி எழுந்தன

வானத்தைத் தொடுவதல்ல, என் இலக்கு.

வசப்பட்டட பின்பும் வாழத் தெரியா
வாழ்க்கையில்,
இழப்புகளும் எதிர்ப்புகளும் வெற்றிகளும்
எழுதப்படும் வரையில்

எழுந்தபடி இருக்கும் என் வாழ்வு.


                           பொன்னையா விவேகானந்தன்





No comments:

Post a Comment