அழகழகாய்க் கட்டவிழ்ந்த
வண்ண மலர்கள்.
மது உண்டு மயங்க
வண்டுகளாயும்
சுகந்தம் சுவைக்கத் தென்றலாயும்
மலரெனப் பறித்து
மணந்து பின் எரிக்கவும்
எங்கள் வனத்துக்குள்
வந்துபோன கால்களின் காலம்
அந்தக்காலம்.
வேங்கையர் வாழ்ந்த காலம்
வீர மங்கையர் கொண்டனர் புதுக்கோலம்.
வேலிக்குள் வாழ்வை வைத்து,
சுவருக்குள் சிறை இருந்து
வேர்வையால் உறவை வளர்த்து,
வேகி வெந்த வரலாறு
மறந்து போகுமா எமக்கு.
ஆடவர் கூடி ஆக்கிய விதிகள்
அடக்கி ஆள எழுதிய சதிகள்
முடங்கி மூலையில் அழுத விழிகள்
எழுத முயன்றால் முடியாத கதைகள்.
கண்ணகி சீதை எனும்
கண்ணீர்க் கதா பாத்திரங்கள்
அடக்குமுறைகளின்
வரலாற்று ஆதாரங்கள்,
அழிந்து போகாத
அடையாளங்கள்.
அடுப்பறையில் புகையோடு
ஆவியான கனவுகள்.
அழுதழுது அவிந்து போன
உணர்வுகள்.
எழுத்தறிய,
எழுந்துலாவ,
ஏன் என்று கேட்க
எதற்கும் இல்லை
எமக்கு அனுமதி.
பேசும் மொழியைத் தாய் என்பர்
வாழும் மண்ணைத் தாய் எனத் தொழுவர்.
பெண்ணாகிப் பின்
உயிர்காக்கும் உறவாகி
உடனிருக்கும் உணர்வாகி
உறவெனும் உண்மையாகி
உலகே அவளாகி
உயர்ந்த வாழ்வாகும் பெண்ணை
நாயெனக்கருதிய நாட்கள்
அன்று.
குறையில்லாப்
புலன் ஐந்தொடு.
ஆடவருக்கு இணையாய்
அத்தனை உணர்வுகளும் உண்டு
அவருக்கும் மேலாய் அழகும் கொண்டோம்.
இறை ஈந்த வரமாய்
தாய்மை கொண்டு
நாம் இங்கு வாழ்தல் கண்டு
இகழந்தெம்மை உரைப்பார்
ஈனப் பிறவியன்றி வேறு யார்?
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடைமைதன்னைக் கொளுத்துவோம்
என்ற
பாரதி பாட்டுக்குப் பின்னாலும்
பாரெங்கும் அதே கொடுமை
நாம் திரண்டு எழுந்தால் அன்றி
எமக்காய்
எந்த நீதியும் எழாது.
மாதராய்ப் பிறந்திட
மாதவம் செய்திடல் வேண்டும்.
என்றொலித்த ஆண் அதிகாரம்
இதுவரை தந்ததில்லை
எந்த வரமும்.
சபிக்கப்பட்டு
கல்லாகிக் கிடந்த நம்வாழ்வு
ஆடவர் கால்பட்டுக் கனிந்தது
கதையில் மட்டுமே.
கால்பட்டுச் சிதைந்த கதைகள்தானே
எங்கும் ஏராளம்.
எழுதல் இன்றி எதுவும் நிகழாது.
அழுதல் தொடர்ந்தால் பாதை அகலாது.
இனி எம் விதிகளை
நம் கைகளே எழுதட்டும்
புது விதி செய்வோம்
தடுத்தெவர் எழுந்தாலும்
பகை முடித்துப் பயணம் தொடர்வோம்.
- பொன்னையா விவேகானந்தன்
No comments:
Post a Comment