காற்றுத்திசைகளில் அலைக்கழிந்தபடி காலடி ஓரமாய்க் கடந்தது ஒரு வெற்றுத்தாள். எதுவும் எழுதப்பட்டிருக்காத தாள். இனியும் எழுதமுடியாத தாள். வெறுமைத்தாள்.
வெறுமைத்தாளா….?
ஆகா வெறுமை… வெற்றிடமாய் இருப்பது… எவ்வளவு அழகானது. எல்லா நிறைவுகளும் நிறைவு பெறுகின்ற இடம் வெறுமையல்லவா.. குப்பைகூழங்களால் நிறைந்து கிடக்கும் இதயத்தை வெறுமையாக்க முயன்று முடியாமல் தோற்றுக் குவிந்து கிடக்கின்றன தோல்விகள்.
தூய்மையின் முழுமை வெண்மை என்கிறனர். வெற்றுத்தாள் வெண்மையல்லவா.. நிறங்களை ஏற்றுக் கொண்டாலேயே வெற்றுத்தாள் நிறத்தாள் ஆகிவிடுகின்றது. தாள்களிலேயே தூய்மையான தாள் வெற்றுத்தாளா…? எழுதப்பட்ட தாள்கள் தூய்மை குறித்து அதிகமாய்ப் பேசியிருக்கின்றனவே… வெறுந்தாள்களை விடவும்.
அதிகமாகப் பேசுபவனை விட, அமைதியானவன்தான் ஆழமாய் இருக்கின்றான். வரையப்பட்ட வரிகளை விடவும், மிக அதிகமான தகவல்களைக் கொண்டிருக்கின்றதோ வெற்றுத்தாள்கள். எதுவுமே இல்லை என்பதிற்றான் எல்லாமும் இருக்கின்றன என்கின்றது மெய்மை. வெற்றுத்தாள்களுக்குள் எல்லாமும் இருக்கிறதா..?
கபடமில்லாத குழந்தையின் அழகு அதன் வெள்ளை உள்ளத்தின் வெளிப்பாடு என்கிறதா..?
எல்லாச் சாயங்களும் வெளிறிப்போகையில் வெளிப்படுகின்ற வெண்iமையே மெய்மை என்கிறதா..?
தேடல்கள் யாவும் முற்றுப் பெறுகின்ற ஒற்றைப்புள்ளி வெறுமை என்கின்றதா…?
சாயங்களில் தோய்ந்து தேய்ந்து மாய்ந்து போகாமல் சுயமாய் இருங்கள் என்கிறதா..?
எதுவுமே இல்லாமல் இருப்பதுதான் முழுமை என்கிறதா?
தப்புத் தப்பான எழுததுகளுக்குக் களமாக இருப்பதைவிட கன்னியாக இருந்துவிடுவதே சிறப்பு என்கிறதா?
பட்டியலிட்டால் விரிகிறதே…. வெற்றுத்தாளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் ஒளிக்கீற்றுகள்.
உன்னை வெறுமையாக்கிக் கொண்டு வா.. உனக்கு உன்னைக் காட்டுகின்றேன் எனறான் ஒரு ஞானி.
வெறுமையான புல்லாங்குழலாக இரு… உனக்குள் இருந்து இனிய இசை பிறக்கும் என்றான் மற்றொருவன்.
கட்டற்ற வெறுமைக்குள் தொலைந்து போ.. நீ சொர்க்கத்தில் கண்டெடுக்கப்படுவாய் என்றான் எப்போதோ காணாமற் போன ஒரு சொர்க்கவாசி.
வெறுமைக்குப் பொருள் தேடி அலைந்தான் ஒருவன். வெறிச்சோடிக் கிடந்த தெருவேரர மரத்தடியில் படுத்திருந்த சாமியாரை நோக்கி நீண்டன சுட்டு விரல்கள்.
தட்டி எழுப்பிää தாடியைப் பிடித்திழுத்துக் கேட்டான்.. வெறுமைக்குப் பொருள் என்ன?
வெறுமையாய் ஒரு பொருள் கொண்டு வா…
இதோ குடம் வெறும் குடம்… வெற்றுக்குடம்..
இல்லை.. இது நிறைகுடம்.. காற்றால் நிறைந்திருக்கும் குடம்… வெற்றுப் பொருள் கொண்டு வா..
இல்லை… என்னால் முடியாது.
முடியும்… நீயே வெற்றுப் பொருளாகி விடு.
வெறுமையின் பூரணம் வெறுமையாகதவரை புரியாது.
வெறுமை.. வெண்மை… வெற்றுத்தாள்..
உலகம் ஓதிக்கொண்டிருக்கும் நிறைவுக்கான அர்த்தங்கள் உதிர்ந்து போகின்றன.
வெற்றுப் பொட்டலில் வீசும் காற்றால் எதையும் வீழ்த்த முடியாது.
வெற்றுத்தாளைப் பார்க்கின்றேன். காற்றின் தாளத்திற்கேற்ப பாடிக்கொண்டே பறக்கிறது.
இனி மை கொண்டு ஏதேனும் வெற்றுத்தாள் மீது எழுத முடியுமா?
அவ்வாறே எழுதினாலும் வெற்றுத்தாளின் ஆழம் கடந்து எழுத முடியுமா?
இதுவரை இல்லாத ஒரு தனி மதிப்பு வெற்றுத்தாள்களின் மீது ஏற்படுகின்றது.
பொன்னையா விவேகானந்தன்.