Follow by Email

Thursday, February 6, 2014

காமன் விழா தமிழரது காதற் பெருவிழா


பெப்ரவரி 14ம் நாளில் காதலர் தினத்தைக் கொண்டாடக் காத்திருக்கும் அன்பாளர்களே! 
இக்கட்டுரை உங்கள் கொண்டாட்டக் குதூகலத்தை மேலும் வலுப்படுத்த உதவலாம். 


ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பேரிலக்கண நூல் தொல்காப்பியம். எழுத்து, சொல் எனும் இருபெரும் மொழிப்பகுப்புகளுக்கு மட்டும் இலக்கணம் எழுதாமல் மனித வாழ்வுக்கும் இலக்கணம் எழுதிய நூல் எனுஞ் சிறப்பு தொல்காப்பியத்திற்கு உண்டு. 

தொல்காப்பியத்தில் இடம்பெறும் எழுத்து, சொல், பொருள் எனும் பகுப்புகளில் பொருளிலக்கணம் மொழியுலகிற்குப் புதுமையாகவிருந்தது. 

மொழி இவ்வாறுதான் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான இலக்கணங்கள் பெரும்பாலான மொழிகளில் இருக்க, மனிதர் வாழ்வுக்கு இலக்கணம் வகுத்துப்; போயிருக்கின்றனர் தமிழ் முன்னோர். 

பொருளதிகாரத்தின் அகம், புறம் எனும் இரு பிரிவுகளில் அகப்பொருளுக்குள் களவியல் என்னும் ஒரு பகுதியுண்டு. தொல்காப்பியர் குறிப்பிடும் களவு என்பது, ‘ஆண், பெண் எனும் ஒத்த இயல்புடைய காதலர் இருவர் மனமொருமித்து மறைந்தொழுகும் ஒழுக்கம்’ என்பதாகும்.

பெற்றோர் கொடுக்கக் கொள்ளாது தாமே எதிர்ப்பட்டு விரும்பிய உள்ளத்தோடு மறைந்து உறவாடுவதினால்,  இது களவு எனப்பட்டது என்கின்றனர் உரையாசிரியர்கள்.

வடமொழியாளர் வகுத்த எட்டு வகையான திருமண முறைகளில் ஒன்றான காந்தர்வ திருமணமுறைக்கு ஒப்பானது இந்தக் களவு என்பதை,

‘....மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையாமை நல்லியாழ்த் துணைமையோர் இயல்பே’       தொ. பொ. களவியல் 92 
                                                                                   என்று தொல்காப்பியர் குறிப்படுகின்றார்.

இதைத்தான் ஒளவையாரும் ‘களவையும் கற்று மற’ என்கின்றார்.

பொருளதிகாரத்தில் 92 முதல் 141 வரையிலான சூத்திரங்களால் களவியல் வாழ்வின் இலக்கணங்களைக் கூறியிருக்கின்றார் தொல்காப்பியர்.

அகத்தியம் போன்ற பழம்பெரும் இலக்கண நூல்களின் தொடர்ச்சியான தொல்காப்பியம், காதல் ஒழுக்கத்தைப் பெரிதும் போற்றி இலக்கணம் வகுத்திருக்கின்றது.

சங்க இலக்கியங்கள் பதினெட்டில் பெரும்பாலானவை காதற்சுவை மிக்க அக இலக்கியங்களே. உலகப்புகழ் பெற்ற அறநூலான திருக்குறளை எழுதிய வள்ளுவர் காதலைப் போற்றியதைப் போன்று எவரும் போற்றவில்லை.

மலரினும் மெல்லியது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படுவார்.                                                 குறள்  1289

'காதல் மலைவிட மென்மையானது. அதன் முழுமையறிந்து பயன் பெறுவோர் மிகச் சிலரே' என்கிறார் வள்ளுவர். 

முன்னைத் தமிழர் வாழ்வில் காதல் பெற்றிருந்த முதன்மைத்துவத்தை விளக்கச் சான்றுகளைத் தேடவேண்டியதில்லை. தமிழ் இலக்கியங்களில் அவை வெள்ளிடைமலையாய்த் திகழ்கின்றன.

இவ்வாறு போற்றப்பட்ட காதலைத் தமிழர் எவ்வாறு கொண்டாடியிருப்பர் என நோக்கினால் வியக்கத்தக்க பல தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன.

காதல் என்ற சொல்வழக்கு பிற்காலத்தேதான் தோன்றியது. காமம் என்ற சொல் கொண்டே முன்னோர் காதலைக் குறித்தனர். திருக்குறளின் மூன்றாம் பகுப்பு காமத்துப்பால் என்றே அழைக்கப்பட்டது.

காதலுக்குரிய கடவுள் காமன் என்றே அழைக்கப்பட்டான். காமனுக்கான கோவில் காமக்கோட்டம் என்றே அழைக்கப்பட்டது. தமிழர் வரலாற்றுக் காலந்தொட்டே காமனுக்கு விழாவெடுத்து காதலைக் கொண்டாடி வந்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் இலக்கியங்களில் மலிந்து கிடக்கின்றன. பின்பனிக்காலத்தின் இறுதியான மாசி மாதம் தொடக்கம் இளவேனிற்காலத்தின் தொடக்கமான பங்குனிவரை 28 நாட்கள் காதற்பெருவிழா நடைபெற்றிருக்கின்றது. எங்கும் பூக்கள் அரும்பி மண் மலர்ச்சோலைகளாக மாறுகின்ற காலம் இதுவென்பதால் இதையே காதலுக்குரிய காலமாகக் கணித்துக்கொண்டனர் தமிழர்.

"எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர் "                            பரி 18:28    
                                         என்று காமவேள் பற்றிக் குறிக்கின்றது பரிபாடல் எனும் இலக்கியம்.

வில்லவன் விழா, வேனில் விழா, உள்ளி விழா, இந்திரவிழா, பங்குனி விழா போன்ற விழாக்களை, காமவேளைப் போற்றியும் காதலை ஏற்றியும் தமிழர் கொண்டாடியிருக்கின்றனர்.

இளவேனிற் காலம் காமனுக்குரியதாகக் கருதப்பட்டது. இக்காலத்தே காமவேளுக்காக எடுக்கப்படும் விழாவை 'வேனில் விழா' என்றழைத்தனர்.  கரும்பு வில்லைக் கையிற்' கொண்ட கடவுள் காமன் என்பதால் 'வில்லவன்' விழா என்றும் இது போற்றப்பட்டுள்ளது.

‘ஊரிலே காமவேள் விழா நடப்பதைத் தலைவி கண்டால் கலங்குவாளே’ எனக் கருதித் தலைவன் திண்மையான தேரேறி வந்ததாகக்  கலித்தொகைப் பாடல் குறிப்பிடுகின்றது.

"காமவேள் விழாவாயின் கலங்குவள் பெரிதென
ஏமுறு கடுந்திண்டேர் கடவி 
நாம்அமர் காதலர் தணைதந்தார் விரைந்தே"                                     கலி 27

காமவேள் விழாவின் போது காதலர் மகிழ்ந்துலாவி களி கொண்டு விளையாடுவர் என்பதை மற்றுமொரு பாடல் புலப்படுத்துகின்றது.

"மல்கிய துருத்தியுள் மகிழ்ந்துணைப் புணர்ந்தவர் 
வில்லவன் விழாவில் விளையாடும் பொழுதன்றோ."                              கலி 35

கணவனைப் பிரிந்த மனைவியர் இவ்விழாவின் போது வருந்துவர். இதேவேளை ஆடவர் கணிகையரோடு சேர்ந்தும் ஆடி மகிழ்வர் என்பதையும் கலித்தொகை கூறுகின்றது.

‘உறலியாம் ஒளிவாட உயர்ந்தவன் விழாவினுள் 
 விறலிழை யவரோடு விளையாடுவான் மன்றே’                                    கலி 30

கரிகால்வளவன் எனும் சோழனின் மகள் ஆட்டனத்தி சேரனாகிய ஆதிமந்தியைக் காதலித்தாள். புனலாடும்வேளை நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஆதிமந்தியைத் தேடிச் செல்லும் ஆட்டனத்தி போகும் வழியில் காமன் விழாவைக் கண்டு காதலனைக் காணாப் பெருந்துயரம் கொள்கிறாள்.

‘மள்ளர் குழீஇய விழவி னானும், 
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டும் காணேன் மாண்தக் கோனை’                                            குறு 30

தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு வடிவங்களில் இக்காமன் விழா கொண்டாடப்பட்டிருக்கின்றது.

சோழ அரசனான தூங்கெயில் எறிந்த நெடுங்கோட் செம்பியன் என்பான் பொதிகை மலையில் தங்கியிருந்த அகத்தியரின் வேண்டுகோளுக்கிணங்க காமன் விழாவை அரச விழாவாக நடத்த ஆரம்பித்தான் என்ற செய்தியும் உண்டு. இந்த மன்னன் ‘சங்ககாலச் சோழ மன்னருள் ஒருவனாகிய குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் முன்னோன்’ என புறநானூறு (49) கூறுகின்றது.

தூங்கெயில் எறிந்த நெடுங்கோட் செம்பியன் மாசித்திங்களில் கால்கோல் இட்டு பங்குனித் திங்கள் சித்திரைநாள் வரை 28 நாட்கள் இந்த விழாவைக் கொண்டாடினான் என மணிமேகலை கூறுகின்றது.

பின்பனிக்கால நிறைவில் இளவேனிற் காலத்தின் தொடக்கத்தில் நாடு புதுப்பொலிவுறத் தொடங்கும். மரஞ்செடி கொடிகள் தளிர்த்துப் பூக்க ஆரம்பிக்கும். இதனை வசந்தகாலம் என்றும் கூறுவர். வசந்தன் என்பது காமனின் மறுபெயர். ஆணும் பெண்ணும் காதற்பெரு விருப்போடு களிகொள்ளும் காமன் காலம் இதுவென உறுதிபடத் தெரிகின்றது.

‘உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழில்
பங்குனி முயக்கம் கழிந்த நாள்’                                                 அகம் 137 

                         என, அகநானூறு உறையூரில் நடந்த பங்குனி விழா பற்றிக் குறிக்கின்றது.

பெரும் துறைமுகமாகத் திகழ்ந்த பூம்புகாரிலே சிறப்புற நடைபெற்று வந்த காமன் விழா பின்னாளில் மருதக்கடவுளான இந்திரன் பெயரால் பெருவிழாவாக உருக்கொண்டது.  இந்திரவிழா பெருஞ்சிறப்போடு நடைபெற்றதனைச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் விரிவாகக் கூறுகின்றன.

‘இந்திரவிழாவைக் கொண்டாடும்போது என்னென்ன செய்ய வேண்டும்? எவ்வாறெல்லாம் மக்கள் நடந்துகொள்ள வேண்டும்? என, நெடுங்கோட் செம்பியன் குறிப்பிட்டதாக மணிமேகலை தெரிவிக்கின்றது.

"காதலர்கள் கூடிக் களிக்கும் பந்தல்களில் மணல் பரப்புங்கள்,
ஊர் அம்பலங்களை மரங்களினால் மூடி நிழல் பரப்புங்கள்,
விழா அரங்கங்களில் இன்பம் பொங்கும் நல்லுரைகளை ஆற்றுங்கள்,
உரையாற்றும் வல்லமை கொண்டோரெல்லாம் உரையாற்றுங்கள்,
சமயங்கள் கூறும் தத்துவங்களைக் காதலர்களுக்கு விளக்கிக் கூறுங்கள்,
கருத்துகளுக்குக் கருத்துகளை எடுத்துக் கூறி வாதிடுங்கள்,
வாதத்தை வாதத்தால் வாதிட்டு வாதத்தைத் தீர்த்து வையுங்கள்,
பகைவர்களைக் கண்டால் அவர்களுடன் பகையும் பூசலும் கொள்ளாதீர்கள், அவர் இருக்கும் இடத்தை விட்டு அகன்று போய்விடுங்கள்,
வெண்மையான மணற் குன்றுகளில் மலர்ச்சோலைகளில் குளிர்ந்த மணலை உடைய ஆற்றங்கரையில் மரம் தாழ்ந்து நிழல் செய்திருக்கும் நீர்த்துறையில் கூடும் மக்கள் அனைவரும் தம்முள் பேதம் இன்றி ஒற்றுமையாகச் சேர்ந்து இருப்பதற்கு வேண்டிய காவல் ஏற்பாடுகளைச் செய்யுங்கள்”

என்று செம்பியன் ஆணை பிறப்பிக்கிறான்.

இச்செய்திகளைத் தொகுத்துக் கூறும் மணிமேகலைப் பாடல்கள் வழியாகக் காதற் பெருவிழாவுக்கு இருந்த பெருமையை நாம் உணர்கின்றோம்.

விழாக்காலத்தில் காதலர் தங்குவதற்காக ‘மூதூர்ப் பொழில்” என்ற சிறப்பிடம் அமைக்கப்பட்டிருந்ததாக மணிமேகலை கூறுகின்றது. அந்த இடத்திற்கு ‘இளவந்திகை’ என்ற பெயரும் இருந்திருக்கின்றது. இந்தப் பூங்கா அழகிய பெருஞ் சோலையாக அமைக்கப்பட்டிருந்திருக்கின்றது.

இளவேனிற்காலத்தில் மலரும் மலர்களான நுணவம் (நுணா), கோங்கம், குரா, அதிரல், பாதிரி, புங்கம், வலஞ்சுரி மராஅம் (வெண்கடம்பு),  வேம்பு, செருந்தி, காஞ்சி, ஞாழல் ஆகிய பூக்களைப் பூக்கும் மரங்களையும் மலர்க்கொடிகளையும் பூங்காவில் வளர்த்திருந்தனர் என்ற செய்தியையும் மணிமேகலை பகிர்கின்றது.

பதின்மூன்று ஆண்டுகளாக இந்திரவிழாவில் கலந்து மகிழ்ந்து கொண்டாடிய கோவலனும் மாதவியும் தமது பதின்மூன்றாவது ஆண்டு இந்திரவிழாவின் போதே பிரிவுறுகின்றனர்.

கடைச்சங்கத்திற்கு முன்னவனான செம்பியன் காலத்திருந்தே கொண்டாப்பட்ட இப்பெருவிழா சோழன் நெடுமுடிக்கிள்ளி காலத்தில் கைவிடப்பட்டதாக மணிமேகலை குறிப்பிடுகின்றது.

தன் குழந்தையைத் தவற விட்டுவிட்ட நெடுமுடிக்கிள்ளி, குழந்தையைக் தேடுவதில் மூழ்கியிருந்ததாலும், குழந்தையைப் பிரிந்த ஏக்கத்தாலும், விழாக்களில் விருப்பற்று இருந்ததாலும்,  காமன் விழாவைக் கொண்டாட மறந்துவிட்டான் என மணிமேகலைப் பாடல் (29:33:36) ஒன்று கூறுகின்றது.

சிலப்பதிகார காலத்திற்கும் மணிமேகலை காலத்திற்கும் இடையே ஒரு கடற்கோள் இடம் பெற்று புகார் நகரம் அழிந்திருக்கின்றது. இந்திரவிழா நடைபெறாமற் போனதால் இந்திரன் கோபமுற்று விடுத்த சாபத்தாலேயே கடற்கோள் எழுந்து புகார் நகரை அழித்தது என, அறவண அடிகள் மணிமேகலைக்குக் கூறுகின்றார்.

பின்னாளில் காதல், மணவாழ்வு என்பவற்றைப் புறந்தள்ளி துறவறத்தைப் பெரிதும் போற்றிய சமண, பௌத்த மதங்கள் தமிழகத்திலே வலுவாகக் காலூன்றியதாலும், ஆட்சியாளர் அம்மதங்களைத் தழுவி நின்றதாலும் அரசு தழுவிய காதல் விழாக்கள் வழக்கற்றுப் போயின. எனினும் தமிழகத்தின் பலபாகங்களிலும் காமன் வழிபாடுகள்   இப்போதும் மாசித் திங்களில் நடைபெற்றுக்கொண்டுதானிருக்கின்றன.

காமன் விழா பெருமெடுப்பில் கொண்டாடப்பட்ட சங்ககாலத்தில் யவனர் எனப்பட்ட வெளிநாட்டோர் வணிகம், தொழில் நிமித்தம் வந்துபோன செய்திகள் இலக்கியங்களில் பதியப்பட்டுள்ளன. இந்த யவனர் உரோம நாட்டவரே என்பது வரலாற்று ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அக்காலத்தே பேரரசாகத் திகழ்ந்த உரோம அரசுகளைச் சார்ந்தோர் தமிழர் அரசுகளோடு நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தனர். தமிழ் அரசர்களின் மெய்ப்பாதுகாவலராகவும் இருந்திருக்கின்றனர். தமிழ் பேசத்தெரியாத உரோம வீரர்கள் அரசரது அந்தரங்கப் பாசறைகளைக் காவல் காத்தனர் என முல்லைப்பாட்டு (63- 66) கூறுகின்றது.

தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட முத்துகளை உரோம அரசிகளும் சீமாட்டிகளும் பெரிதும் விரும்பினர். முத்துகளை அணிவது மட்டுமல்ல, மதுவில்  (Wine) முத்துக்களைக் கரைத்தும் அருந்தியிருக்கின்றனர். இதனால் உரோம நாட்டின் செல்வம் வற்றுவதாகக் கருதி அந்நாட்டில் தமிழக முத்துகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது என்ற செய்தியும் உண்டு. முத்துகளைப் பயன்படுத்திய பெண்களுக்குத் தண்டனையும் வழங்கப்பட்டிருக்கின்றது.

யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி”                                      அகநூறு 139

உரோம நாட்டவர்கள் முசிறித் துறைமுகத்தில் பொன்னைக் கொடுத்து மிளகு மூட்டைகளை ஏற்றிச் சென்ற செய்தியை அகநானூறு கூறுகின்றது. கருவூர், அரிககமேடு, கொடுமணல் போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட உரோமரது செப்பு நாணயங்கள் உரோமர் தொடர்புக்குப் பெருஞ்சான்றுகளாகின்றன.

இவ்வாறு தமிழகத்தோடு தொடர்பு கொண்டிருந்த உரோமர் தமிழர்களின் காதற் பெருவிழா சிறப்புகளைக் கண்டுணர்ந்து அதைத் தமது நாட்டிற்கும் கொண்டு செல்ல வாய்ப்பிருந்திருக்கின்றது என்று கருத இடமுண்டு.

மாலுமி  ஒருவர்  'Periplus of the Erythraean Sea' என்ற பயண நூலை கி.பி 60 இல் எழுதியுள்ளார். உரோமருக்கும் தமிழருக்குமிடையேயான வணிகம் பற்றிய பல செய்திகள் அதில் உள்ளன.

தற்போதைய  Valentine நாள் கிறித்துவுக்குப் பின்னர் உரோமாபுரியில் தொடங்கப்பட்டு மாசி  மாதத்திலேயே கொண்டாடப்பட்டு வருவதை நாம் அறிவோம். மனதிற்கு இதம் தரும் தாய்மண்ணின் மாசிமாதம், குளிர்மிக்க உரோம் நாட்டிலும் காதற் காலமாய்க் கருதப்படக் காரணம் என்ன? தமிழ் நாட்காட்டிக்கமைய மாசித்திங்கள் தொடக்கத்திலேயே காமன் விழாவுக்கு கால்கோள் இடப்பட்டதாக அறிகின்றோம். ஆங்கில நாட்காட்டிக்கமைய மாசி 14 இல்  Valentine நாள் வருவதும், தமிழர் கணிப்பில் மாசித்திங்கள் முதல்நாளோடு இக்காதல் நாள் ஒத்துப்போவதும் பெருவியப்பைத் தருகின்றது.

எமது காமன் விழா உரோமரைப் பாதித்திருக்கலாம் எனக் கருதுவதற்கு இது போன்ற பல காரணங்கள் உள்ளன.

உரோமாபுரி கொண்டாடத் தொடங்கிய காதல் விழாவுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழர் காதல் விழாவைக் கொண்டாடி வந்துள்ளனர். உலக அளவில் காதல் விழா முன்னோடிகளாகவும் தமிழர் திகழ்ந்துள்ளனர் எனக் கருதலாம்.

இக்காலத்தே உலகெங்கும், குறிப்பாகத் தமிழர் புலங்களில்  மேற்குலகப் பாதிப்புகள் வழியாகப் பெப்ரவரி 14ம் நாள்  (Valentine)  காதல் நாளாகக் கொண்டாப்பட்டு வருகின்றது. எம் இளையதலைமுறை இதிற் தோய்ந்து கிடப்பதை நாம் காணலாம்.

எமது தடங்களின் வழியே பின்னோக்கிப் பயணித்து எம்மை நாமே உணர்வோமாயின் காமன் விழாவை மட்டுமல்ல, எமது விழுமிய மரபுகள் பலவற்றையும் மீட்டெடுக்க முடியும்.

மற்றுமொருமுறை நாம் காதலர் நாளைச் சந்திக்கின்றபோது,  இந்தநாள் நாம் முன்னோர் போற்றிக் கொண்டாடிய காமன் விழா என்ற உணர்வு எமக்கிருக்க வேண்டும். இல்லையாயின், இதுபோன்றதொரு ஒப்பற்ற விழாவை நம் முன்னோர் கொண்டாடியிருந்தனர் என்ற உணர்வாவது நமக்குள் ஏற்படட்டும்.

                                                                     பொன்னையா விவேகானந்தன். 

தாய்வீடு - கனடா இதழில் வெளியான கட்டுரை. 

இக்கட்டுரைக்கென ஓவியம் வரைந்த ஓவியர் ஜீவா அவர்களுக்கும் வரைகலையால் அழகூட்டிய கருணா  அவர்களுக்கும் நன்றி. 

No comments:

Post a Comment