Monday, September 26, 2011

வரத்தோடு வாழ்ந்த வாழ்வு



வரத்தோடு வாழ்ந்த வாழ்வு 

மேலைத் திசையிருந்து
கிளம்பித் தரையெங்கும்
திமிரேற்றித் திரியத் தொடங்கும் சோளகம்.

நீர் தேங்கிக் காய்ந்த தரைநுனியில்
இறுகிக் கிடந்த
சேற்றுத் திட்டுகள் உலர்ந்து உதிர்ந்து>
சோளகத் தோளில்
உலாப் போகத் தொடங்கும்
சேற்றுப் புழுதி.

தரை தொட்ட வெளியெங்கும்
வீசி நிறைகின்றது சோளகம்.

பச்சை இலைகளுக்குள்
பயங்கொண்டு பதுங்கும்
சருகுகள் தேடி உதிர்த்து விளையாடும்.

தெங்குத் குருத்தேறி
தெம்மாங்கு பாடி
காவோலை சிலவற்றைக் கவிழ்த்துக் கீழிறங்கும்.

பனையின் தலையாட்டிப்
பழம் சில உதிர்த்துத்
‘தொப்’ என்ற ஒலியை
பொக்கைவாய்ப் பாட்டி
செவியில் சேர்க்கும்.

பள்ளிப் பிள்ளைகளின்
வெள்ளைச் சீருடையில்
கொஞ்சமாய்ப் புழுதி பூசி
செல்லமாய்த் திட்டுகள் வாங்கும்.

மீன் விற்றுத் திரும்பும்
பொன்னம்மாவின் மாராப்புடன் மோதி
சந்தைத் தமிழில் சந்தங்கள் கேட்கும்.

பாதி போதையில்
காத்தவராயன் கூத்தை
தப்புப் தப்பாய்ப் பாடியபடி
உலாசிப் போகும்
சின்னப்புவின் நாலு முழ வேட்டி உருவி
வண்டோடு கொஞ்சி மகிழும்
எருக்கலம் பூவின் நாணம் மறைக்கும்.

தாமரைக் குளம் மீதேறி
அலையாடி விளையாடி புழுதி கழுவும்.

குளத்தின் குளிர் சுமந்து
உள்ளிடம் தொட்டுச் சூடேற்ற
வாலைக் குமரி ஒருத்தியின் கண் சொருகும்.
சும்மா இருந்த சங்கை ஊதி
மங்கைக்குள் சத்தம் எழுப்பும்.

தீராப் பகை கொண்ட
பொன்னப்பர் காணிப் புழுதியை
கன்னையர் வளவுக்குள் வீசி எறியும்.

ஆவக்காய் செய்யவென
அழகக்கா அண்ணாந்து பார்த்திருக்க>
அத்தனை மாம்பிஞ்சுகளையும்
மதில் வீட்டு வளவுக்குள் வீழ்த்தி
வேடிக்கை பார்க்கும்.

வீதியோர வேப்பமர உச்சியில்
கொக்கிருந்து இடும் எச்சத்தை>
அளவறிந்து அண்ணாச்சியார்
தலையில் வீழ்த்தும்.

சோளகக் குறும்பின்
வாரி இறைத்த புழுதி
ஊரின் மேனி எங்கும் பரவிக் கிடக்க>

பொழுதொன்று பார்த்து>
மண்ணாளின் மனதறிந்து
விண்ணகக் காதல் மெல்லக் கீழிறங்கும்.

மண்ணுயிர் யாவும் கூடிப் புரிந்த
அத்தனை தவத்திற்குமான
ஒற்றை வரமாய்
விழுகின்ற துளிகள் தொட>
மண்ணியலாள் மனதெங்கும் மணப்பாள்.

தொட்டால் சிணுங்கிச் செடி கூட
இந்த மழைத்துளி பட்டால் மகிழும்.

வரத்தோடு பிறந்த வாழ்வு
புலத்தோடு இழந்து போக>

சோளகச் சுகத்தை
வாடகைக்கு வாங்கி
வாழ்வதெம் வாழ்வு.