Monday, November 18, 2013

துப்பாக்கியும் கணையாழியும்

துப்பாக்கியும் கணையாழியும்


1000க்கு மேல் இருக்கைகள் கொண்ட நான்கு திரையரங்குகள். சீட்டு ஒன்றின் விலை 50 டொலர்கள். ஓரேநேரத்தில் அத்தனை அரங்குகளும் நிறைந்து வழிய,
வரலாற்றுச் சாதனை படைத்து வெளியாகியிருக்கின்றது A Gun & A Ring (துப்பாக்கியும் கணையாழியும்) திரைப்படம்.

கடந்த சனிக்கிழமை செப்ரெம்பர் 28ம் நாள் யோர்க் சினிமா திரையரங்குகளிற்றான் இந்த வரலாற்றுப்
பதிவு நிகழ்ந்தது.

கால்நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட புலத்தமிழர் திரைப்படப் பதிவுகளின் வாயிலாக உருவாக்கப்பட்டிருந்த சில எடுகோள்கள் தகர்த்தெறியப்பட்ட நாளாகவும் இது திகழ்ந்தது.

கனடாவில் தமிழர் உருவாக்கிய பெரும்பாலான திரைபடங்கள் வருவாய் ஈட்டியவையல்ல. ஒரு முயற்சி, பதிவு, வளர்ச்சிப்பாதையின் படிகள் என்ற அளவில் அவை வெளியாகியிருந்தன. இத்துறை பெருவளர்ச்சி பெறாமைக்குக் காரணம் மக்களின் ஆதரவின்மையே என்று கூறப்பட்டது. தமிழகத் திரைப்படங்களுக்குக் கொட்டிக்கொடுக்கும் தமிழர் தம்மை வாழவைக்கவில்லையே என்று திரைத்துறைப் படைப்பாளிகள் அங்கலாய்ந்திருந்தனர். பலரும் இவ்வாறு கருதும் அளவுக்கே புலத்தமிழர்களது ஆதரவும் அமைந்திருந்தது.

தரமாக ஒரு திரைப்படத்தை உருவாக்கி, நேர்த்தியான முறையில் சந்தைப்படுத்தலும் செய்தால் எம்மக்கள் அளவிறந்த ஆதரவை வழங்குவார்கள் என்ற கருத்தை வலிமையாக்கி, கடந்தகாலக் கருதுகோள்களைத் தகர்த்திருக்கின்றனர் புலத்தமிழர்.      

ஏறக்குறைய 1000 பேர் இத்திரைப்படத்துக்கான சீட்டுகளை வெளியிலும் அரங்கிலும் வாங்கியிருந்தனர். ஒருசில விருந்தினரைத் தவிர எல்லோருக்குமே சீட்டுகள் விற்கப்பட்டிருந்தன. 3 அரங்குகளை மட்டுமே பதிவு செய்திருந்த ஏற்பாட்டாளர் மக்களின் வருகையறிந்து கடைசிநேரத்தில் நான்காவது திரையரங்கையும் பதிவு செய்தனர். சீட்டு வாங்கிய பெரும்பாலானோர் காட்சிக்கு வந்திருந்தனர். அரங்குகள் நிறைந்து வழிந்தமையே இதற்குச் சான்று.

வணிகர்கள், சமூகப் பிரமுகர்கள், ஊடகவியலாளர், பல்துறைக்கலைஞர்கள் எனப்பலரும் ஒன்றுதிரண்டு கூடியிருந்தமை ஏற்பாட்டாளர்களின் சந்தைப்படுத்தலுக்குச் சான்றாகத் திகழ்ந்தது. அனைத்துலக அளவில் பல திரைப்பட விழாக்களுக்கும் விருதுகளுக்கும் இத்திரைப்படம் தெரிவாகி வருகின்றது என்பது மட்டுமே மக்கள் பெருவாரியாகத் திரண்டமைக்குக் காரணமாகிவிடாது.

ஊடகங்களை நேர்த்தியாகப் பயன்படுத்தி, போதிய காலவளவெடுத்து மிக நுட்பமாகத் திட்டமிடப்பட்ட சந்தைப்படுத்தலினூடாக எல்லாத்தரப்பு மக்களையும் அணுகி திரைப்படம் பற்றிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினர் சந்தைப்படுத்தற் பிரிவினர். நட்புகளுக்காகச் சீட்டுப் பெற்றோரை விட, அழைப்புக்காக வந்தோரை விட, இத்திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வந்தோரே அதிகம். இதுவே சந்தைப்படுத்தலின் மகத்தான வெற்றி.

‘தளபதி’ ‘தல’ என எவர் நடித்தாலும் ஒரு தமிழகத் திரைபடத்தின் முதற் காட்சிகளை 50 டொலருக்குச் சீட்டுப் பெற்று 4 அரங்குகளை நம்மவர் ஒருபோதும் நிறைக்க மாட்டார்கள்.

எம்படைப்பு ஒன்றிற்கு மக்கள் வழங்கிய பேராதரவே இத்திரட்சி.

கனடாத்தமிழர் திரைப்பட வரலாற்றில் இத்திரைப்படத்திற்காக உத்திகள் சந்தைப்படுத்தலில் புதிய வழிமுறைகளை உருவாக்கியுள்ளன. தரமான படைப்புகளை உருவாக்கி, நேர்த்தியான வழிகளினூடாக மக்களை அணுகினால் அவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என்பதற்கு A Gun & A Ring திரைப்படத்தின் முதற்காட்சிகளே சாட்சிகள்.

இதுவரை நான்கு அனைத்துலகத் திரைப்பட விழாக்களுக்குத் தெரிவாகி, ஒரு விழாவில் இரு விருதுகளையும் பெற்று வேறு பல திரைப்பட விழாக்களுக்கும் தயாராகி வருகின்றது A Gun & A Ring.

இந்நிலையில் இத்திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்பு பலரது உணர்விலும் எகிறிக் கிடந்திருப்பது இயல்பானதே.

திரைப்படம் முடிந்து வெளியேறுகையில் காதில் விழுந்த வார்த்தைகள்..

“இது விருதுகளுக்காக எடுக்கப்பட்டிருக்கு”

“நல்ல படம்... முழுசா விளங்க இன்னொருக்கா பார்க்க வேணும்”

“இது ஆவணப்படம்.. எங்கட பிரச்சனையள வேற இனத்துக்குக் கொண்டு போயிருக்கு.”

“எங்கட ஆக்களுக்கு இது விளங்குமோ தெரியாது.”

“ஒண்டுக்கொண்டு தொடர்பில்லாமல் கிடக்கு.”

                        இப்படிப் பல கருத்துகள் காதில் விழுந்தன.

உலகளாவிய கவனத்தை ஈர்க்கக்கூடிய வாழ்வு மறுக்கப்படுகின்ற இனத்தின் அவலங்களை பின்னணியாகக் கொண்ட கதைகளின் பிணைப்பு,

அனைத்துலகத் தரத்தை இலக்கு வைத்துப் பின்னப்பட்ட திரைக்கதை,

நறுக்குத் தெறித்தாற்போல் வந்துபோகும் வார்த்தைகள்,

மௌனங்களாலும், பாவங்களாலும், ஒளிப்படக் கருவிகளாலும் சில ஆழங்களை வெளிப்படுத்த முயன்றிருக்கும் நுட்பம்,

உச்சக்கட்டத்தில் கணையாழியும் துப்பாக்கியும் கைமாறும்போது கதைப் பிணைப்புகளின் கனமான முடிச்சை கச்சிதமாய் அவிழ்க்கும் நேர்த்தி,
இவையெல்லாம் A Gun & A Ring  திரைப்படம் என்னைக் கவரக் காரணங்களாக அமைந்தன. இப்படத்தை ஆக்கியளித்த லெனினுக்கும், பெரும் செலவில் தயாரித்த விஷ்ணுவுக்கும் மனம் திறந்த பாராட்டுகள்.


திரைப்படம் எங்கிலும் ஆறு கதைகள் தனித்தும் பிணைந்தும் காட்சிகளில் கலந்து பயணிக்கின்றன.

விடுதலை இயக்கமொன்றின் வதை முகாமிலிருந்து தப்பித்த இளைஞனின் புலவாழ்வுத் தோல்வி.

இளைஞனிடம் தகவல்களைக் பிடுங்கி இளைஞனைத் தப்பவிட்டு ஏனையோரை அடித்துக்கொல்லும் கொடூரனின் கனடா வாழ்வு

போரினால் பாதிக்கப்பட்டு, மறுவாழ்வு தேடி கனடா வந்து அல்லறும் ஒரு பெண்ணும் இழப்புகளே உருவான ஒரு சூடான் அபலையும்.

தாயகத்தில் மக்கள் சேவைக்காக வாழும் மனைவியைப் பிரிந்து கனடாவில் வாழும் தந்தையும் மகளும்.

இளையதலைமுறையின் இதயங்களைப் புரிந்துகொள்ளாமல் முடிவுகள் எடுக்கும் போர்ச்சூழல் பாதிப்பும் பிற்போக்குத்தனமும் கொண்ட பெற்றோருடன் ஏற்படும் முரண்பாடு.

தொழிலுக்காகக் காதலை இழந்த புலனாய்வாளனின் தொழில்சார்ந்த பற்றும் துயரமும்.

இந்த ஆறு கதைகளும் காட்சிப்பின்னல்கள் ஊடாக எவ்வாறு நகர்கின்றன என்பதுதான் கணையாழியும் துப்பாக்கியும். போரியல் வாழ்வின் தொடர்ச்சியில் கட்டுமானம் செய்யப்பட்ட தளங்களில் தடம் பதித்துச் செல்லும் புல வாழ்வியலின் சில யதார்த்தங்களை அம்மணமாக்கியிருக்கின்றது துப்பாக்கியும் கணையாழியும்.

இந்த ஆறு கதைகளைகளின் காட்சிகளையும் கலந்து, இடை நிகழ்ச்சிகள் சிலவற்றை முன்காட்சிகளாக்கி எதிர்பார்ப்பைத் தூண்டி, பின் ஒன்றோடு ஒன்று பொருத்தும் திரைக்கதை தமிழர் திரைக்கதை வரலாற்றுக்குப் புதிது. சாதாரண திரைப்பட ரசிகர்களுக்கு இத்திரைக்கதை, புரிதல் தொடர்பான சிக்கல்களைத் தோற்றுவிக்கக்கூடும் என்பது லெனினுக்குத் தெரியாததல்ல. ஆனால் இத்திரைக்கதையமைப்பே அனைத்துலக அங்கீகாரம் பெறக் காரணம் என்பதை உய்த்துணர்வோர் எவரும் மறுக்கார்.

கதைகளினூடாக நகரும் துப்பாக்கியும் கணையாழியும் புலவாழ்வின் இருவேறு பக்கங்களின் சாட்சிகளாகத் திகழ்கின்றன. கதையோட்டத்தின் கருப்பொருட்களையும் கதைமாந்தரையும் இவையே இணைக்கின்றன.

இராணுவ அடக்குமுறைகளினால் பாதிக்கப்பட்டுப் புலம் பெயர்ந்த, தாயக வாழ்வின் பிற்போக்குத்தளைகளில் இருந்து விடுபடாத பெற்றோரின் கடும் முடிவுகளுக்குத் துணைபோக மறுத்து கோபமுறும் இளையதலைமுறைக்கு வன்முறை வடிகால் சமைக்கிறது தாயகப் போரியலின் தீய பக்கம். துப்பாக்கி இதன் குறியீடு.
கொல்லும் தொழிலை குலத்தொழிலாகக் கொண்டே இறுதிவரை பயணிக்கிறது துப்பாக்கி.

ஒரு இனம் சார்ந்த இழப்புகளின் எல்லைகளைக் கடந்து, உலகளாவிய மனித இனத்தின் இழப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்டு புது வாழ்வியல் நெறியோடு பயணிக்கத்தொடங்கும் மனிதப் பொதுமையின் குறியீடு கணையாழி.
விற்கப்பட்டும் வீசப்பட்டும் இறுதியில் அர்த்தம் பெறுகின்றது இந்தக் கணையாழி.

இவையிரண்டுமே கதையின் முக்கிய கதாபாத்திரங்கள். இந்த இரண்டோடும் இணைந்து பயணித்தாற்றான் கதையோடு ஒன்றி உச்சப்பயன் பெறமுடியும்.

திரைப்படம் முழுவதும் கனகச்சிதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் மிகையற்ற நடிப்பு மிகச் சிறப்பு. ஒவ்வொரு கதாபாத்திரமும் புலம்பெயர்வாழ்வியல் யதார்த்தங்களின் குறியீடு.

இத்திரைப்படம் விரைவில் தொடர்ச்சியாகத் திரையிடப்படவுள்ளது. அவ்வேளை கதாபாத்திரங்களின் சிறப்புகள் குறித்து விரிவாக எழுதலாம்.

அப்படியானால், இப்படத்தில் குறைகளே இல்லையா எனக் கேள்விகள் எழுவது கேட்கிறது.

பலநூறு மில்லியன் டொலர் செலவழித்து உருவாக்கப்பட்ட அவதார் திரைப்படத்தோடு நூறாயிரம் (ஓர் இலட்சம்) டொலர் செலவில் உருவாக்கப்பட்ட இப்படத்தை ஒப்பிட்டுக் குறைநிறை எழுத முற்படுவது அறிவுடமையாகாது என்பதை அனைவரும் அறிவீர்கள்.

தொழில்நுட்பம் சார்ந்து சில குறைகள் இல்லாமல் இல்லை. அவை பொருளாதாரப் பின்னணி கொண்டவை என்பதால் அவற்றைச் இதில் சுட்டிச் செல்வது பொருத்தமாகாது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச்சமூகத்தின் உயர்படைப்பாக வெளிவந்திருக்கும் இத்திரைப்படம் ‘கதை சொல்லும் உத்தி’ ஊடாக உலகக் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. கதையெங்கும் இழையோடும் ஓர் இனத்தின் அவலம் உலக உணர்வுகளில் நிச்சயமாய் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும்.

விருதுகளுக்கப்பால் எமக்குக் கிடைத்திருக்கும் பெருவெற்றி இதுதான்.

அடுத்த திரையிடுகைக்காய் உங்களோடு நானும் காத்திருக்கின்றேன்.

                                                                   பொன்னையா விவேகானந்தன்

                                        (தாய்வீடு - ஒக்ரோபர் 2013 இதழில் வெளியான விமர்சனம்)