இருண்ட கண்டத்தின் இதய நிலாவே!
போய் வருக!
இருபதாம் நூற்றாண்டின்
இணையிலா தீபமே!
சென்று வருக!
ஆழியிலும் பெரியதாய்
ஆழப் பதிந்திருக்கும் உன் சுவடுகளை
ஊழி ஊற்றெடுத்து வந்தாலும்
அழித்துவிட முடியுமா!
பூமி உள்ளளவும் யாவிலும்
நீ உள்ளாய்.
செயற்கரிய செய்த செயலோனே
விழிநீர் வழிய விடைதருகின்றோம்
போய் வா!
இருண்ட கண்டத்தில்
மனிதரைக் கண்டெடுத்த கடவுள்
இருபதாம் நூற்றாண்டின்
இரண்டாம் சூரியன்
வதைபடும் இனம் ஒன்றிற்காய்
மீண்டும்
வரமாய் வந்துதிப்பீர்கள்.
போய் வாருங்கள்.
வளம் சுரண்ட உலகெங்கும்
வலம் வந்து நிலம் கொண்ட
ஆதிக்க வெறியர்
பேராசைப்பட்ட நிலம் ஆபிரிக்கா.
வற்றாத வளத்தோடு
வலிமையான அடிமைகளும்
அங்கு கிடைக்க
விலக மறுத்து வேரூன்றியது
ஆக்கிரமிப்பு.
சூரியன் மறையாப் பேரரசு மெல்லச் சரிந்து
சுதந்திரக்காற்றை உலகம்
சுவாசித்த போதும்
ஆபிரிக்க இருள் மட்டும்
கரைய மறுத்தது.
நிலவெறி நிறவெறி இரண்டுமாய்
கறுப்பின மக்களின்
குருதி குடித்தது குரூரம் கொண்டது
ஆபிரிக்க அரசு.
பள்ளியறியா கறுப்பினத்துக்குள்
துள்ளிக் குதித்தது ஒரு
ஓளிப்புள்ளி.
வழி வந்த எம் நிலத்தை
வளம் சுரண்ட வந்தவன்
ஆள்வதா?
எமை வதைத்து வாழ்வதா?
பொறுமைக்குச் சாவுமணியடித்து
சாதிக்கப் புறப்பட்டது
கறுப்பிளஞ் சூரியன்.
தனியாகி பின் அணியாகி
சந்திகள் தோறும் சத்தங்களாகி
வேட்டுகளுக்கு வீழா
விடுதலையானது
இந்தக்
கறுத்தறியா
கறுப்புத் தங்கம்.
சுட்டார்கள் மின்னியது
துவைத்தார்கள் துலங்கியது
வதைதத்hர்கள் வளர்ந்தது.
பேயாளும் அரசில்
பிணம் தின்னும் சட்டங்கள்.
ஆபிரக்கப் பேரவை அழியும்
எனக் கருதி,
ஒளிபுகா சிறையில்
சிங்கத்தைச் சிறையிட்டது
வெறிகுறையா அரசு.
கால்நூற்றாண்டு காலம்
தங்கம் தகரமாகுமென்றுதான்
அந்தத் தலைமுறை நம்பியது.
தங்கம் வைரமாகி விடுதலையானது.
ஆபிரிக்க வெளியெங்கும்
சிங்கத்தின் கர்ச்சனை சீறிப் பாய்ந்து.
நரிகளின் நாடிநரம்புகள் ஒடுங்க
வனமெங்கும் வலம் வந்தது சிங்கம்.
வழியறியா அரசு வழிவிட்டகன்றது
இருண்ட கண்டத்தில்
ஒளி உதயமானது.
மண்டேலா
மகோன்னதம் கொண்டார்.
மண்டேலாவின் சிலை
பகைவன் பணிந்ததும்,
வழிவிட்டு வணங்கியதும்
உலகில்
இவர் ஒருவரைத்தான்.
ஈழத்தின் வீரப்பயிருக்கும்
நீர் பாய்ச்சிய பங்கு
நெல்சனுக்கு உண்டு.
கடற்கோளாய் காலம்
காவு கொண்ட போதிலும்
குலையாத உறுதி கொண்டால்
கொள்கை வெல்லும்
இது வார்த்தை அல்ல
மண்டேலாவின் வாழ்வு.
மண்டேலா
ஆபிரிக்க ஆண்மை மட்டுமல்ல,
ஐந்த கண்டங்களையும்
கவர்ந்த பேராண்மை.
நீண்ட இடைவெளிக்குப் பின்
உலகம் ஒற்றுமையாய்
ஒருவருக்காய் தலைவணங்குகின்றது.
இவர் நிழல்பட்டு
நெருப்பானோரில் நாமும் உள்ளோம்.
எம் நெஞ்சார்ந்த நெருப்பு
இவருக்காய் ஒருதடவை
பிழம்பாகித் தணியட்டும்.
மார்கழி 06ம் நாள் உலகத்தமிழர் இதழில் வெளியான கவிதை.