Saturday, June 28, 2014

சங்கத்தமிழரின் வணிக வளம்




அது 1836ம் ஆண்டு.

கப்ரன் (ஜேம்ஸ்) குக் என்ற ஐரோப்பியர் அங்கு கால் பதித்து 66 ஆண்டுகள் ஆகியிருந்தன.

நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள மாவோரி ப+ர்வீகக்குடியினர் வாழும் கிராமம்.

அந்தக்கிராமத்துக்கு ‘வில்லியம் கொலின்சே’ என்ற கிறிஸ்தவ திருச்சபை ஊழியர் வருகிறார். அங்கு கண்ட ஒரு காட்சி அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. உலோகப் பாவனையை அதிகம் அறிந்திராத அந்தப் பழங்குடி மக்கள் ஒரு வெண்கலப் பாத்திரத்தில் உருளைக்கிழங்கை வேகவைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாத்திரத்திற்கும் அவர்களது வாழ்வியலுக்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை அவர் உணர்கிறார். அந்தப் பாத்திரத்தைப் பற்றி அவர்களிடம் கேட்கிறார். அவர்கள் தமது மூதாதையர் வழியே அந்தப் பாத்திரம் வந்ததாகச் சொல்கிறார்கள். கொலின்சே வேறொரு இரும்புப் பாத்திரத்தைக் கொடுத்து அந்த வெண்கலப் பாத்திரத்தைப் பெற்றுக் கொள்கிறார்.

கொலின்சே அந்தப் பாத்திரத்தை ஆராய்ந்தபோது அது ஒரு வணிகக் கப்பலினுடைய மணி என்பது தெரியவருகிறது. அந்த மணியில் அந்தப் பிரதேசத்துக்குத் தொடர்பில்லாத எழுத்துகள் இருக்கின்றன. அவ்வாறாயின் அங்கு ஐரோப்பியருக்கு முன்பே யாரோ வந்து போயிருக்க வேண்டும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த மணி நியூசிலாந்து அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படுகிறது. அவர்களுக்கும் அதிலிருந்த எழுத்துகள் எந்த மொழியைச் சேர்ந்தவை என்பது தெரியவில்லை. அவர்கள் அதைப் புகைப்படம் எடுத்து இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கிறார்கள். இங்கிலாந்தில் ஆய்வாளர்கள் அது ஒர் இந்திய மொழி என்பதை எழுத்து வடிவத்திலிருந்து கண்டறிகிறார்கள். அந்தப் படத்தை இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள்.

இந்தியாவில் அதைப் பார்த்ததும் அது என்ன மொழி என்பது தெரியவருகிறது. அத்தோடு அந்த எழுத்துகள் எழுதப்பட்டிருந்த விதத்திலிருந்து அது கி.பி 1450ம் ஆண்டைச் சேர்ந்தது என்பதையும் அறிகிறார்கள். இது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அந்த மொழியைப் பேசுபவர்கள் கப்ரன் குக் கால் பதிப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னரேயே நிய+சிலாந்துக்குப் போயிருக்க வேண்டும்.

அந்த மொழி “தமிழ்” அதில் எழுதப்பட்டிருந்த வசனம் “முகையிதீன் பக்ஸ் கப்பல் மணி” என்பதாகும்.

பெருஞ்சிறப்புக்குரியதான தமிழரது கடல் வணிகம் நீண்டகாலத்திற்கு முன்பே கிழக்கே மாவோரி மக்களுடனும் தொடர்புபட்டிருந்தமையி;ன் சான்றாக இம் மணியைக் கருதலாம் என்கின்றனர் ஆய்வாளர். மாவோரி மக்கள் பேசும் மொழிக்கும் தமிழுக்கும் பலவித தொடர்புகள் இருப்பதாக டெய்லர் என்னும் மற்றுமொரு துறவியார் குறிப்பிட்டிருக்கின்றார் என ந.சி. கந்தையாபிள்ளை தமது நூலொன்றில் எழுதியிருக்கின்றார்.

இது போன்ற தமிழரது கடல் கடந்த வணிகச் சான்றுகள் பல அண்மைக்காலத்திலே கிடைத்துள்ளன. அவற்றை அறிவதற்கு முன்பாக பண்டைக்காலத் தமிழரது வணிக மேலாண்மையைச் சற்றே விரிவாக நோக்குவோம்.

அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்வதில் தன்னறைவு கண்ட ஒரு சமூகத்தின்  அடுத்த நிலை வளர்ச்சியானது வணிகத்தை நோக்கி நகர்ந்ததாக இருக்கலாம் என்பதற்கமைய தமிழர் வரலாறு பல்வேறு வணிகச் சிறப்புகளைத் தாங்கி நிற்கின்றது. பொருட்களை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளுதல், கொடுத்து வாங்குதல் என்ற பண்புநலன்களின் அடிப்படையில் தோற்றங்கொண்ட வாணிப இயல்பைத் தமிழ் இலக்கியங்கள் போற்றி நிற்கின்றன.

பொருள் ஈட்டுவது என்ற குறிக்கோள் மட்டுமின்றி, உலக நன்மைக்காகவே வணிகம் நடைபெற்றதாக முன்னோர் கருதினர். பல இடங்களில் விளையும் பொருட்களை ஓரிடத்தில் சேர்த்து அவை கிடைக்காத வேறிடங்களுக்கு அனுப்பி யாவரும் வறுமையற்றிருக்க வணிகர் வழி தேடினர். அத்தகைய வணிகரின் பண்பைப் பண்டைய இலக்கியங்களிலே காணலாம்.

“நெடுநுகத்துப் பகல் போல
நடுவுநின்ற நன்நெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் மொப்பநாடிக்
கொள்வதூஉ மிகைகொள்ளாது
கொடுப்பதூங் குறைபடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்”

‘சமன்செய்யும் கோல் போல் நடுநிலை தவறாத நெஞ்சோடு, குற்றங்களுக்கு அஞ்சி கனிவாகப் பேசி, உறவினர், பிறர் என வேறுபாடின்றி ஒப்ப நோக்கி, பெறுவதை அதிகமாகப் பெறாமலும் கொடுப்பதைக் குறைவின்றிக் கொடுப்பதாயும் பல்பண்டங்களையும் பகிர்ந்து கொடுப்போரே நல்வணிகர்’ என்கிறது பட்டினப்பாலை.

திவாகரம் என்னும் நிகண்டு வணிகர் இயல்பை மேலும் சிறப்புறக் கூறுகின்றது.

“தனிமை யாதல் முனிவி லனாதல்
இடனறிந் தொழுகல் பொழுதொடு புணர்தல்
உறுவது தெரிதல் இறுவதஞ் சாமை
ஈட்டல் பகுத்தல் என்றிவை யெட்டும்
வாட்டம் இல்லா வணிகர தியற்குணம்”

தமிழர் சிறப்பாகப் போற்றிய அறுவகைத் தொழில்களான உழவு வணிகம், நெசவு, தச்சு, மட்பாண்டஞ் செய்தல், கொல்லர் என்பவற்றுள் வணிகம் உழவுக்கு அடுத்து இரண்டாம் இடம் பெறுவதைக் காணலாம்.

வள்ளுவரும்,
“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தம்போற் செயின்”  என்கின்றார்.

“இருவகையா னிசைசான்ற
இருகுடிப் பெருந்தொழுவர்” என்ற மதுரைக்காஞ்சி எனும் இலக்கிய வரிகளுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் “ உலகத்துத் தொழில்களில் மேலாகச்; சொல்லும் உழவு, வணிகம் என்ற இரண்டு கூற்றாலே...” என்கின்றார்.

பழம்பெரும் இலக்கணமான தொல்காப்பியம் கடல் கடந்த வணிகத்தை ‘முந்நீர் வழக்கம்’ என்கின்றது. பெரும் மரக்கலங்களைக் கட்டுவோர் ‘கலம்புணர் கம்மியர்’ என இலக்கியங்களால் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

தமிழர்களால் பெரிதும் போற்றப்பட்ட வணிகத்தொழில் உள்நாட்டிலும், கடல் கடந்தும் பெருஞ்சிறப்புப் பெற்றிருந்தது என்பதைத் தமிழ் இலக்கியங்களும், வெளிநாட்டார் குறிப்புகளும், செப்பேடுகள், கல்வெட்டுகள் எனபனவும், அண்மைக்கால அகழ்வாராய்ச்சிகளும் ஆழ்கடல் கண்டுபிடிப்புகளும் வெளிப்படுத்தி நிற்கின்றன.

கடல் கடந்த வணிகம்

இயேசு பிறப்பதற்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் மேற்குத் திசையில் பபிலோனியா, எகிப்து, பாலஸ்தினியம், மெசபத்தோமியா, உரோமாபுரி, கிரேக்கம் போன்ற நாடுகளுடனும், கிழக்கே சீனம் சாவகம், ஜாவா போன்றவற்றுடனும் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்திருக்கின்றனர்.

ஏலம், இலவங்கம், மிளகு போன்ற தமிழகத்துப் பொருட்கள் பிற நாடுகளில் பெரும் விலைக்கு வாங்கப்பட்டன. கி.மு.1490இல் யூதர்களின் தலைவராகிய மோஈசன் தமது வழிபாட்டின் போது ஏலக்காயைப் பயன்படுத்தியிருக்கின்றார்.

மேற்காசிய நாடுகளான பபிலோனியா, மெசப்பத்தோமியா போற்றவற்றோடு தமிழர் நெருக்கமான வணிகத் தொடர்புகளை வைத்திருந்தமைக்கான சான்றுகள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. பபிலோனியாவில் நிப்பூர் இடத்தில் நாணயம் பரிமாறப்பட்டு வணிகம் நடந்நதாகவும், களிமண் தட்டுகளில் வரவு செலவுக் கணக்குகள் பதியப்பட்டிருந்தததாகவும், அதில் தமிழ் வணிகக் கணக்குகளும் இடம் பெற்றிருப்பதாகவும் முனைவர் அ. தட்சணாமூர்த்தி குறிப்பிடுகிகின்றார்.

கி. மு எட்டாம் நூற்றாண்டில் இசுரேல் நாட்டை ஆட்சி செய்த சொலமன் என்னும் மன்னனது கப்பல்கள் வணிகத்தில் ஈடுபட்டிருந்தன.  மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை, அகில் தோகை, குரங்கு, தங்கம், வெள்ளி போன்ற பல அரிய  பொருட்களை இக்கப்பல்கள் கொண்டு வந்தன என்ற செய்தி பைபிளின் பழைய ஏற்பாட்டில் முதலாம் அரசர் ஆகமத்தில் 10ம் அதிகாரத்தில்  குறிக்கப்பட்டுள்ளது. எபிரேபிய மொழியில் காணப்படுகின்ற குரங்கினைக்(கவி); குறிக்கும் ‘கபிம்’, தோகையைக் குறிக்கும் ‘துகிம்’, அகிலினது நறுமணத்தைக் குறிக்கும் ‘ஆல்மக்’ என்ற என்ற சொற்கள் தமிழில் இருந்து சென்றவையே என்று கூறும் டாக்டர் கே. கே. பிள்ளை இப் பரிசுப் பொருட்கள் தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவையே எனத் தென்னிந்திய வரலாறு எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

சொலமனைக் காணச் சென்ற தென் அரேபிய அரசியான சோபா என்பவள் கையுறையாக ஏகப்பட்ட வாசனைப் பொருட்களை  எடுத்துச் சென்றதாக பைபிள் மேலும் கூறுகின்றது. இந்த வாசனைப்பொருட்கள் யாவும் தமிழகத்திலிருந்து சென்றவையே முனைவர் அ. தட்சணாமூர்த்தி பண்பாடும் நாகரிகமும் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.


Pசipடரள என்ற கப்பற் பயணவழி நூலை மீள்பதிப்புச் செய்த றுடைகசநன ர்யசஎநல ளுஉhழகக  என்பவர் “கிரேக்க மக்கள் அநாகரிகத்திலிருந்து விழித்தெழுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தும் பண்டைய இந்திய நாடுகளும் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தன. பாரசீக வளைகுடாவுக்கு வடக்கே இந்நாடுகள் ஒன்றோடு ஒன்று பண்டமாற்றுச் செய்துகொண்டன” எனக் கூறியுள்ளதாக முனைவர் அ. தட்சணாமூர்த்தி தன நூலில் ஆமலும் குறிப்பிடுகின்றார்.


தமிழகத்திற்கும் சுமேரியருக்குமான வணிகத் தொடர்புகள் குறித்தும் பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ன. சுமேரியரின் தலைநகரின் பெயர் ‘ஊர்’ ஆகும். அங்கே காணப்படுகின்ற சிதைவுகளில் சேரநாட்டுத் தேக்கு மரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கி.மு. மூவாயிரத்திற்கு முன்னர் அழிவுற்றமையால் இம்;மரத்துண்டுகள் ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை எனக் கருதுகின்றனர்.


தமிழர் எகிப்தியரோடு கொண்டிருந்த வணிகம் மிகவும் தொன்மையானது. கி.பி 15ம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்டதாகக் கருதப்படும் எகிப்திய கல்வெட்டொன்றில் இலவங்கப்பட்டை பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது. இது சேரநாட்டுப் பொருள் என்பதில் ஐயமில்லை. எகிப்திய மன்னர் மெல்லிய மசுலின் துணி வகைகளையும் கருங்காலிக்கட்டைகளையும் இலவங்கம் பட்டைகளையும் தமிழகத்திலிருந்து பெற்றதாகத் தென்னிந்திய வரலாறு என்னும் நூல் கூறுகின்றது.


கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதப்டும் தமிழ் பிராமி எழுத்துகளைக் கொண்ட சிதைந்த களஞ்சியச் சாடி ஒன்று எகிப்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ‘இந்த எழுத்துகள் கி;.மு. முதலாம் நூற்றாண்டுக்குரிய தமிழ் லிபி எழுத்துகளே’ என ஐராவதம் மகாதேவன் உறுதியிட்டுக் கூறியுள்ளார். இந்த எழுத்துகள் ‘பானை ஓரி’ என்ற பொருள் தருகின்றது. ஓரி என்பது உரியைக் குறிக்கும் என்பர். இது போன்ற இரு சாடிகள் 30 ஆண்டுகளுக்கு முன்பும் செங்கடலின் கரையோரம் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சாடிகள் தமிழர் வணிகத்தொடர்புகளுக்குப் பெருஞ்சான்றாகத் திகழ்கின்றன.

தமிழகம் வந்த எகிப்தியர் கரிகாலன் கட்டிய கல்லணையைக் கண்டு வியந்ததாகவும், கரிகாலனின் பொறியியலாளரே நைல்நதிக்குக் குறுக்கே அணை கட்ட உதவியதாகவும், சிக்காக்கோ பல்கலைக்கழகக் குறிப்புகளை ஆதாரம் காட்டி ஐக்கிய நாடுகள் மன்றம் வெளியிட்டு வரும் கூரியர் இதழின் முன்னாள் ஆசிரியர் மணவை முஸ்தபா தெரிவித்திருக்கின்றார். நைல் ஆற்றின் துறைமுகப் பட்டினமான அலெக்சாந்திரியாவில் நூற்றுக்கணக்கான இந்தியர் குடியேறியிருந்தனர் என்ற செய்தியையும் தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூல் தெரிவிக்கின்றது.


தென்னாபிக்காவுக்கும் தமிழருக்குமாக பண்டைய வணிகத் தொடர்புகள் குறித்துத் தற்போது வெளிவரும் தகவல்கள் வியப்பைத் தருகின்றன. தென்னாபிக்க வரலாற்றாசிரியர் னுச. ர்சழஅnமை என்பார் பண்டைய ஆபிரிக்க வரலாற்று உண்மைகளைக் கண்டறிந்த போதும் நிறவெறி ஆட்சியின் முடிவுக்குப் பின்னரே அவற்றை வெளியிட முடிந்தது என்கின்றார். இவர் வெளிப்படுத்தும் பல உண்மைகள் ஆபிரிக்கா குறித்து நிலவிவந்த பல கருத்துகளைத் தகர்த்து வருகின்றன.

அங்கு கண்டெடுக்கப்பட்ட சிற்பம் ஒன்றில் செதுக்கப்பட்டிருக்கும் கடற்பயணக்காட்சி தென்னிந்தியர்களின் வருகையை உறுதிப்படுத்துவதாக ஆய்வாளர் குறிப்பிடுகின்றார். தங்கம், தந்தம் போன்றவற்றைத் தமிழ் வணிகர் மொசாம்பிக், சிம்பாவே போன்ற இடங்களில் இருந்து பெற்றதாக இச்செய்திகள் தெரிவிக்கின்றன. தங்கச் சுரங்கங்களைக் கண்டறிந்து அவற்றைக் குடைந்து தங்கம் பெறுவதற்காகத் தமிழர் தனித்துவமான குடியிருப்புகளை ஏற்படுத்தி அங்கு தங்கியிருந்தனர் எனவும் இவர் தெரிவிக்கின்றார். hவவி:ஃஃதழாடெடிசயனகநைடன.உழஅ என்ற இணைத்தளம் இச் செய்திகளை வெளியிட்டிருக்கின்றது.

கி.மு எட்டாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர் மேலைநாடுகளோடு வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். எனினும் கி.மு. 500 க்குப் பின்னரே ஐரோப்பியரோடான வணிக உறவுகள் ஏற்பட்டன. தமிழக வணிகர் பொருட்களை மேற்காசியாவரை எடுத்துச் செல்ல, கிரேக்கர்களே அவற்றை ஐரோப்பாவுக்கு எடுத்துச் சென்றனர். தென்னிந்தியப் பொருட்கள் பலவற்றின் பெயர்கள் இன்றும் கிரேக்க மொழியி;ல் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பின்னர் கடற்பயண வழிகளைக் கண்டறிந்த கிரேக்கர் தமிழகத்திற்கு வந்து பொருட்களைக் கொள்வனவு செய்யத் தொடங்;கினர். பொருளாதாரம் மட்டுமன்றி இரு தரப்பாருக்கும் இடையே அரசியல் உறவுகளும் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

தமிழகப்பொருட்கள் பற்றி உரோமர் கிரேக்கர்களிடமே தெரிந்துகொண்டனர். கிரேக்க மன்னன் ஒகஸ்டஸ் கி.பி. 30இல் எகிப்தை வெற்றிகொண்டான். அதன் பின்னரே தமிழகத்தோடான வணிகத் தொடர்பை உரோமர்கள் ஏற்படுத்தினர். ஒகஸ்டஸ் காலத்தைச் சார்ந்தவரான ‘ஸ்டிராபோ’ என்பார் கி.பி. 60இல் எழுதிய பெரிப்புளுஸ் என்னும் பயணவழிநூல் தமிழக வணிகத் தொடர்புகளை மிக விரிவாகக் கூறுகின்றது. பிளைனி கி.பி. 70இல் எழுதிய ‘இயற்கை வரலாறு’, தொலமி எழுதிய ‘பூகோள விவரணம்’ போன்ற நூல்களும் தமிழகத்திற்கும் ஐரோப்பியருக்கும் இடையே நடைபெற்ற வணிகத் தொடர்புகளுக்குச் சான்றாகத் திகழ்கின்றன.

அரிக்கமேடு என்னுமிடத்தில் இடம்பெற்ற அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த பல பொருட்களோடு, கண்டெடுக்கப்பட்ட உரோம நாணயங்களும் இவ்வணிகத் தொடர்புகளை உறுதிசெய்கின்றன.

அரேபிய, கிரேக்கக் கப்பல்கள் முசிறி என்னும் துறைமுகத்தில் நிறைந்து நின்றதாகப் பெரிப்புளுஸ் தெரிவிக்கின்றது. பாண்டிய மன்னனின் தூதுவர் ஒகஸ்டஸ் மன்னிடத்தே சென்றதாகவும், உரோமக் குடியிருப்புகள் மதுரையில் அமைந்திருந்ததாகவும் இவர் குறிப்பிட்டிருக்கின்றார். உரோம வணிகத்தின் விளைவாக ஆண்டுதோறும் 6 இலட்சம் பவுண் தங்கம் தமிழகத்திற்குக் கிடைத்ததாகக் குறி;ப்புகள் கூறுகின்றன. கி.பி 68க்குப் ‘பின்வெஸ்பேசியன்’ என்னும் மன்னன் உரோமிற்கு அரசனானான் எனவும், அவன் ஆடம்பர வாழ்க்கையை வெறுத்ததன் விளைவாகத் தமிழகத்தோடான வணிகம் வீழ்ச்சியடைந்ததாகவும் முனைவர் தட்சணாமூர்த்தி எழுதுகின்றார். கி.பி. 3க்குப் பின் வெளியான உரோம நாயணங்கள் தமிழகத்தில் கிடைக்கவில்லை. 4ம் நூற்றாண்டுக்குப் பின்னான நாணயங்கள் கிடைத்துள்ளன. ஐரோப்பியர்களைத் தமிழர் ‘யவனர்’ என்றே இலக்கியங்களில் குறித்துள்ளனர்.

இவ்வாறான வெளிநாட்டார் குறிப்புகளோடு ஒத்திசைந்து பல்வகைச் சான்றுகளை வெளிப்படுத்துகின்றன சங்க இலக்கியங்கள்.

வெளிநாட்டார் பொன்னோடு வந்து மிளகோடு சென்ற செய்தியை,

“யவனர் தந்த வினைமான் நன்கலம்
பொன்னொடு வந்து கறியோடு பெயரும்” என அகநானூறு தெரிவிக்கின்றது.

தமிழகத்தில் பொன் பெருகுவதற்குக் காரணமான சிறந்த பண்டங்களை பெரிய மரக்கலங்களில் ஏற்றிச் சென்றனர் என்ற செய்தியை,

“பொன்மலிந்த விழுப்பண்டம்
நாடார நன்கிழிதரும்
ஆடியற் பெருநாவாய்” எனக் கூறுகின்றது மதுரைக் காஞ்சி.

யவனர் குளிர்மையான மது வகையறாக்களை எடுத்து வந்தனர் என்னும் செய்தியை,

“யவனர் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத் தேந்தி நாளும்
ஒண்டொடி மகளிர் மடுக்க” எனப் புறநானூறு கூறுகின்றது.

மேலாடை அணிந்து ஐரோப்பியர் காவல் காத்த செய்தியை,

“மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கவர் யவனர்” என மற்றுமொரு புறநானூற்றுப் பாடல் தெரிவிக்கின்றது.

மேலை நாடுகளைப் போன்றே கீழைநாடுகளுடனும் தமிழர் பெருவணிகம் நடத்தினர். சீனாவுடனான வணிகம் குறித்துப் பல சான்றுகள் கிடைத்துள்ளன. கி.மு. 1000 ஆண்டுகளு;ககு முன்பே சீன வணிகம் வளர்ச்சி பெற்றிருந்ததாகக் கருதுகின்றனர். கி;மு. 7ம்நூற்றாண்டில் தமிழகத்துப் பொருட்கள் சீனாவில் விற்கப்பட்டிருப்தாகவும், சீனப் பொருட்களான சீனப்பட்டும், சீனியும் தமிழகத்திற்கு வந்தன என்றும் முனைவர் தட்சணாமூர்த்தி கூறுகின்றார். சீனாவில் இருந்து வந்தமையினாலேயே சக்கரைக்குச் சீனி என்ற பெயர் வழங்கப்பட்டதாகக் கூறுவர். கி.மு. 2ம் நூற்றாண்டுக்குரிய சீன நாணயங்கள் தாலிக்கோட்டை என்னும் கிராமத்திலும், ‘ஒலயக் குன்னம்’ என்னும் ஊரிலும் அதிகளவில் கிடைத்துள்ளன. தமிழர் கீழைத்தேய நாடுகளிற் பொருட்களைப் பெற்று வந்து மேலைநாடுகளுக்கு அனுப்பினர் என்ற குறிப்புகளும் உண்டு.

சாவகம், ஜாவா, வடபோர்னியா போன்ற அக்காலக் கீழைத்தேய நாடுகளுடன் பெருவணிகம் நடைபெற்றுள்ளது. பிலிப்பைன் தீவுகளில் கி.மு 1000 காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பழமையான தமிழர் கோடாரிகள், ஈட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழகத்திற்கும் வடநாட்டுக்கும் இடையேயான வணிகம் கி.மு மூன்றாம் நூற்றாணடிலேயே மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கின்றது. மெகதனிஸ் என்பார் பாண்டிய நாட்டு முத்துகளைப் போற்றியிருக்கின்றார். கௌடில்யரின் அர்த்தசாத்திரம் என்னும் நூல் தாமிர வருணி, பாண்டிய கவாடம் போன்ற இடங்களின் முத்துக்கள் பற்றியும், மதுரை பருத்தி ஆடைகள் பற்றியும் பேசியுள்ளது.

வடநாட்டார் கடல்கடந்து வணிகம் செய்வதை வேதங்கள் அனுமதிக்கவில்லை. ஆரியரின் கடல் வணிகத்தைப் போதாயனர் என்பார் கண்டித்துள்ளார். சாணக்கியர் என்பார் தமிழர் விலையுயர்ந்த பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுளள்ளார். தமிழக மரக்கலங்கள் மேற்கு கிழக்குக் கரையோரங்கள் வழியாக வடக்கு நோக்கிச் சென்றன.

பண்டைத் தமிழரது வெளிநாட்டு வணிகம் சங்ககாலத்தில் பெருஞ்சிறப்புற்றிருந்ததை மேற்கூறப்பட்டுள்ள சான்றுகள் வழியாக நாம் அறியலாம். தமிழர் மேற்கு, கிழக்கு, வடக்கு என முத்திசைகளுக்கும் சென்று வணிகத்தில் வரலாறு படைத்துள்ளனர். பிறநாட்டாரைக் கவர்ந்த தமிழகப் பொருட்களாக முத்து, பவளம், ஆரம், அகில், வெண்துகில், சங்கு, மிளகு, இலவங்கம், ஏலம் போன்றவை விளங்கின. தங்கம், குதிரை, இரும்பு, கம்பளி போன்றவற்றைத் தமிழகம் பெற்றுக்கொண்டது.

துறைமுகங்கள்.

தமிழகத்தின் பண்டைய துறைமுகங்கள் பற்றிய செய்திகள் பலவாறாக் கிடைக்கின்றன. மேற்குக்கரையோரமான சேரநாட்டுத் துறைமுகங்களாக நயவு, முசிறி, தொண்டி, பொற்காடு என்பவை திகழ்ந்துள்ளன. தெற்கே குமரியும், கிழக்கே கொற்கை, காவிரிப்பூம் பட்டினம், எயிற்பட்டினம், அழகன்குளம், அரிக்கமேடு, மருங்கூர்பட்டணம் மசுலிப் பட்டினம், மரக்காணம் போன்றவை திகழ்ந்துள்ளன. ஈழத்தில் மாந்தை பெருந் துறைமுகமாகத் திகழ்ந்துள்ளது.

காவிரி;பபூம் பட்டடினத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் இடையறாது நிகழ்ந்தன. அது எவ்வாறு இருந்ததெனில், மலையில் பெய்த நீர் கடலில் கலப்பது போலவும், வான் கொண்ட நீர் மலையில் பொழிவதைப் போன்றும் இருந்ததாகப் பட்டினப்பாலை கூறுகின்றது.

துறைமுகங்கள் தோறும் பண்டகசாலைகள் இருந்திருக்கின்றன. அப்பண்டக சாலைகளில் இறக்குமதி, ஏற்றுமதிப் பொருட்கள் மீது அரச அலுவர்கள் முத்திரையிட்டிருக்கின்றனர். அங்கு சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனை,

“அளந்தறியாப் பல்பண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி
அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கியும்
மலிநிறைந்த மலிபண்டம்” எனப் பட்டினப்பாலை கூறுகின்றது.

துறைமுகங்கள் அருகே  பொருட்கள் பொதிகளாகக் கட்டப்ப்டடு அடுக்கப்பட்டிருந்தன.  அவற்றின் மேல் நாய்களும் ஆட்டுக்கடாக்களும்  ஏறிக்குதி;த்து விளையாடின. இது  மலைச்சரிவுகளில் வருடை மான்கள் துள்ளி விளையாடுவதை ஒத்திருப்பதாக மற்றுமொரு பாடலில் பட்டடினப்பாலை தெரிவிக்கின்றது.

“பொதிமூட்டைப் போரேறி
மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன்
வரையாடு வருடைத் தோற்றம் போலக்
கூருகிர் ஞமலிக் கொடுந்தான் எற்றை
ஏழகத் தகரொடு உகளும் முன்றில்”

பாண்டிய அரசின் ஆட்சி;க்குட்பட்ட கொற்கைத் துறைமுகம் பெரும் செல்வாக்கோடு விளங்கியது. முத்து, சங்கு விளைகின்ற இடமாகவும் இது திகழ்ந்தது என அகநானூறு கூறுகின்றது.

வெளிநாட்டார் குறிப்புகளில் பெரிதும் இடம் பெற்ற முசிறித்துறையில் மேற்கு நாடுகளுடனான வணிகம் பெருமளவில் நடைபெற்றிருக்கின்றது. வெளிநாட்டார் வணிகத்திற்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகக் கடற்கொள்ளையரை அடக்கி ‘கடற்பிறக்கோட்டிய’ என்னும் பட்டத்தைப் பெற்றான் செங்குட்டுவன். சேரநாட்டு மலைவளங்களில் பெருமளவில் மிளகு விளைந்தது. ஐரோப்பியர்களால் பெரிதும் விரும்பப்பட்ட மிளகே இங்கு முதன்மையான ஏற்றுமதிப் பொருளாகியது.

இத்துறையில் நடைபெற்ற ஏற்றுமதி இறக்குமதி வணிகம் பற்றிப் புறநானூறு (பாடல் 343) விரிவாகக் கூறுகின்றது. பொன்னும், இரத்தினமும், மென்மையான புடவைகளும், சித்திர வேலைப்பாடமைந்த  ஆடைகளும், பவளமும், செம்பும், ஈயமும், கோதுமையும் இங்கு இறக்குமதி செய்யப்பட்டதாகப் ‘பெரிப்புளுஸ்’ நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

சிறுபாணாற்றுப்படை என்னும் சங்க இலக்கியம் ‘எயிற்பட்டினம்’ என்ற கடற்கரைப் பட்டினம் பற்றிக் குறிப்பிடுகின்றது. ஒய்மாநாட்டு நல்லியங்கோடன் இதனை ஆண்டதாக இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் கூறுகின்றார். இதன் பின்னராக துறைமுக வரலாறுகளில் எயிற்பட்டனம் காணப்பெறவில்லை.

அண்மையில் அரவிந்த் என்ற ஆழ்கடல் நீச்சல் வீரர் புதுச்சேரிக்கு அருகே கடலில் நீண்ட மதில் போன்ற ஒன்றைக் கண்டுள்ளார். தொடர்ந்து, பெருங்கடற் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்தி வரும் ஒரிசா பாலுவிற்குத் தெரிவிக்க, அவர் குறிப்பிட்ட பகுதியில் கடல் ஆய்வுகளை மேற்கொண்டார்.

ஆய்வுகளின் முடிவில் இது பழங்கால எயிற்பட்டினமாக இருக்கலாம் என ஒரிசா பாலு தெரிவித்திருக்கின்றார். எயில் என்பது மதில் எனப் பொருள் படும்.  மரங்கலங்கள் உள்ளே பாதுகாப்பாக வருவதற்காகவோ அல்லது கடற்கோள் போன்ற பேரழிவுகளைத் தடுப்பதற்காகவோ இம்மதில் கட்டப்பட்டிருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்.

கடற்கோளினால் கொள்ளப்பட்ட இப்பட்டினம் குறி;த்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈழத்தில் பெரும் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடம் மாந்தை துறைமுகப் பகுதியாகும். வங்கம் மலிந்து நி;ன்ற மாதோட்டப் பகுதி ஈழ வணிகத்தின் வாசலாகும். பல வரலாற்றுக் குறிப்புகளில் மாந்தைத் துறைமுகத் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்போது இன்னொரு காட்சியைப் பார்ப்போம். தமிழ்நாட்டின் வடமேற்கில்  கொடுமணல் என்றொரு நகரம். அங்கு ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மாணிக்கக்கற்களைப் பட்டை தீட்டுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். அருகிலிருந்த தொழிற்சாலைகளில் இன்னும் பலர் செம்பு, இரும்பு போன்ற உலோகங்களை உருக்கி பல்வேறு பொருட்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பலர் நூல் நூற்று ஆடைகளைத் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். யானைத் தந்தத்திலான அணிகலன்களை ஒரு பகுதியினர் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில் சங்குகள் அழகாக அறுபட்டு எழில் மிக்க வளையல்களாகிக்கொண்டிருக்கின்றன.

இன்னொரு பகுதியில் தமிழ் வணிகர்கள் வேறு நாடுகளிலிருந்து வந்த வணிகர்களுடன் எந்த இலக்கணப் பிழையுமற்ற மொழியில் வர்த்தக ஒப்பந்தங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். உருவாக்கப்பட்ட பொருட்கள் பொதி செய்யப்பட்டு ஏற்றுமதிக்காக வண்டிகளில் ஏற்றப்படுகின்றன. ஒரு வணிக நகரத்துக்குரிய சுறுசுறுப்புடன் கொடுமணல் நகரம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இது நடந்தது அண்மையில் அல்ல. 2500 வருடங்களுக்கு முன்பு. இது நடந்து கொண்டிருந்தபோது இங்கிலாந்து ஒரு பேரரசாகவல்ல ஒரு நாடாகவே உருவாகியிருக்கவில்லை. ஐரோப்பாவின் பெரும்பகுதியில் காட்டுமிராண்டிகளே வாழ்ந்துகொண்டிருந்தனர். இப்போது வல்லரசாக இருக்கின்ற பல நாடுகளில் இரும்பின் பாவனை கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. கிறிஸ்தவ மதம் உருவாவதற்கு இன்னும் இயேசுநாதரே பிறந்திருக்கவில்லை.

பெருவியப்பை ஏற்படுத்திய இச்செய்திக்கு களமான கொடுமணல் நகரம் மண்ணுக்குக் கீழிருந்து மீண்டும் கண்டறியப்பட்டது 2013இல்தான்.

அங்கு தொன்மையான பொருட்கள்  சில கிடைக்கின்றன எனச் செய்;தி வரவே,  பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கா. ராஜன் தலைமையில் ஓரு குழு கொடுமணல் ஆய்வில் ஈடுபட்டது. அங்கே 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு தொழிற்கூடம் இயங்கியதற்கான சான்றுகளும் ஓரு ஈமச்சின்னமும் கண்டறியப்பட்டன.

விலையுயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு உருக்கப்பட்தற்கான தொழிங்கூடங்களும் இனங்காணப்பட்டன. நூல் நூற்கப் பயன்படுத்தப்பட்ட தக்களி மூலமும், சங்கறுத்து வளையல் செய்யப்பட்ட சான்றுகளும், யானைத் தந்தத்தாலான  அணிகலன்களும் கிடைத்துள்ளன. 500க்கு மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துகளும் இங்கு பெறப்பட்டுள்ளன. அதிந்தை, ஆதன் சுமணன், பன்னன் பாகன் போன்ற பெயர்கள் அங்கு காணப்பட்டுள்ளன.

கண்டறியப்பட்ட பொருட்கள் நில கரியமிலக் காலக்கணிப்புக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு அவை கி.மு. 5ம் நூற்றாண்டைச் சார்ந்தவை என உறுதிப்படுத்தப்பட்டது.

வெளிநாட்டு வணிகம் ஓங்கியிருந்த காலத்தே ஏற்றுமதிக்காகவும் உள்நாட்டுப் பயன்பாட்டிற்காகவும் உயர்ந்த அணிகலன்கள் இங்கே உருவாக்கப்ட்டுள்ளதாக ஆய்வாளர் கருதுகின்றனர்.

சேரரின் தலைநகரான கரூரையும் முசிறித் துறைமுகத்தையும் இணைக்கும் பெருவழியில் இது அமைந்துள்ளது. இது ‘கொங்கப் பெருவழி’ என அழைக்கப்பட்டிருக்கின்றது. இவ்வழியில் கிடைக்கப்பெற்ற ஏராளமான வெள்ளி, தங்க, உரோம நாயணங்கள் இத்தொழிற்கூட வாணிபத்தை உறுதிப்படுத்துகின்றன.

பதிற்றுப்பத்து என்னும் இலக்கியத்தில் கபிலர் “கொடுமணல்பட்ட..... நன்கலம்” என்றும், அரிசில்கிழார் “கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம்” என்றும் கொடுமணல் எனும் ஊர்ச் சிறப்பைக் குறிப்பிடுகின்றனர்.

ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தைப் பெருமளவில் கொண்டிருந்த தமிழகம் ஏற்றுமதிக்குரிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்களையும் கொண்டிருத்தல் இயல்பு. அவ்வாறான தொழிற்கூடங்கள் பற்றிய ஆதாரங்கள் ஆங்காங்;கே இலக்கியங்களில் காணப்பட்டாலும் தனித்துவத் தலைப்பாக இது நோக்கப்படவில்லை என்றே தோன்றுகின்றது.

தமிழக நாளிதழான தினமலர் மே17, 2013 இதழில் இவ்வாய்வு குறித்துக் கட்டுரை வெளிளிட்டுள்ளது.

தமிழர் வணிகத்தில் நாணயங்கள்.

உலகலாவிய பண்டைய வணிகத்தில் தனியிடம் பெற்றிருந்த தமிழகம் நாணயப் பயன்பாட்டிலும் சிறப்புற்றிருக்கின்றது. உள்நாட்டு வணிகம் பெருமளவு பண்டமாற்று முறையில் தொடர்ந்தாலும் வெளிநாட்டு வணிகங்கள் பெரும்பாலும் நாணயங்களை அடிப்படையாகக் கொண்டே நடைபெற்றன. மூவேந்தர்களும் தனித்தனியாகத் தம் இலச்சனைகள் பொறித்த நாணயங்களைப் பயன்படுத்தினர். குறுநில மன்னர் சிலரும் நாணயங்களைப் பயன்படுத்தியுள்ளனர். முதன்முதலாக முத்திரை நாணயங்களை வெளியிட்டவர் பாண்டியர் ஆவர். அதில் பெருவழுதி என பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இவை கி.மு 3ம் நூற்றாண்டைச் சார்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
சோழர் நாணயங்களும் கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கின்றன.

இவ்வேந்தர் நாணயசாலைகள் வைத்துத் தாமே நாணயங்களை வார்த்துள்ளனர். செப்பு போன்ற உலோகங்களை உருக்கி சதுர, வட்ட வடிவில் நாணயங்களை வார்ப்பதோடு, முத்திரைகளையும் எழுத்துகளையும் பொறிக்கத் தெரிந்து கொண்டிருந்தனர்.

கிரேக்க, உரோம, சீன நாணயங்கள் பெருமளவில் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன. அதே போன்று தமிழக நாணயங்கள் பிறநாடுகளிலும் கிடைத்துள்ளன.

வடநாட்டார் பயன்படுத்திய நாணயங்கள் தமிழகத்தில் கிடைத்தமை பற்றிய சான்றுகள் எதுவும் இதுவரை இல்லை.

நிறைவில்...

உலகின் பெரும்பாலான பகுதிகள் பண்பாட்டு வளர்ச்சி பெற்றிராத காலப்பகுதிகளில், வளர்ச்சி பெற்றிருந்த நாடுகள் அனைத்தோடும் தமிழகம் வாணிபம் செய்திருக்கின்றது. கடலையும் பயண வழிகளையும் நன்கறிந்த தமிழர் காற்றின் துணை கொண்டே பெருங்கடல்களைக் கடந்தனர்.

வணிகர்ளுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. சிறந்த வணிகர்கள் அரசர்களால் ‘எட்டி’ என பட்டமளி;த்து மதிப்பளிக்கப்பட்டனர்.

உலகளவிலான பண்டைய வணிக வரலாற்றில் தமிழகத்தின் அமைவிடம் முக்கியத்துவம் வாய்ந்திருந்தது. கிழக்கு நாடுகளுக்கும்  மேற்கு நாடுகளுக்கும் இடையே சிறப்பான கடல் வழிப்பாதைகளைக் கொண்டிலங்கிய தமிழகம் உலகம் தழுவிய வணிகத்தில் உச்சம் தொட்டிருந்தது எனலாம்.

இஸ்லாமிய - கிறி;த்தவப் போர் தொடங்கிய பின்னர் பாரசீக வளைகுடாப் பாதைகள் பாதுகாப்பற்றுப் போயின. இதனால் ஐரோப்பியரது தமிழக வணிகம் துண்டிக்கப்படவே, ஐரோப்பியர் தமிழகத்திற்கான புதிய கடற்பாதைகளைத் தேடினர். தமிழகத்தோடான வணிகம் அவர்களுக்கு அத்தியாவசியத் தேவையாக இருந்தது. எனவேதான் கொலம்பஸ் மேற்கு வழியாகவும், கொடகஸ்காமா கிழக்கு வழியாகவும் இந்தியாவைத் தேடிப் புறப்பட்டனர். ஐரோப்பியர் இந்தியா எனக் கருதியது தென்னிந்தியாவையே என்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும்.

மேற்கு நாடுகளுடான வணிகம் துண்டிக்கப்பட்டமையைத் தொடர்ந்து தமிழர் கீழைத்தேய நாடுகள் மீது பேரார்வம் காட்டினர். கீழைத்தேய நாடுகள் மீதான சோழப் படையெடுப்புகளும் இதையே உறுதி செய்கின்றன.

வாழ்வியலில் பெருவளர்ச்சி கண்ட இனத்தோராற்றான் இத்தகைய வணிக வளர்ச்சியைப் பெற முடியும். சிறந்த அரசியல் அறமும் சமூக வளமும் இயைபுற்றிருக்கும் காலத்தில்தான் பொருளாதாரம் உயர்வு பெறும். அவ்வாறான உயர்ந்த உலகத் தரம்மிக்க வாழ்வை என் முன்னோர் கொண்டிருந்தனர் என்பது பெருமைக்குரிய வரலாற்றுண்மையாகும்.

பொன்னையா விவேகானந்தன் 
உதவிய நூல்களும் இணையத்தளங்களும்:


தென்னிந்திய வரலாறு -  டாக்டர் கே. கே. பிள்ளை  
தமிழர் நாகரிகமும் பண்பாடும் -  முனைவர் அ. தட்சணாமூர்த்தி
சங்ககாலம்  -  முனைவர் முத்துராசன். 
பண்பாட்டுப் படையெடுப்புகள் - முனைவர் க.ப. அறவாணன்
பட்டனப்பாலை
புறநானூறு
அகநானூறு
மதுரைக்காஞ்சி 
தினமலர் (மே 17, 2013)  
 http://lakkiyam.nakkheeran.in


யூன்  2014  - தாய்வீடு (கனடா) இதழில் வெளியான கட்டுரை. 

இக்கட்டுரைக்கென ஓவியம் வரைந்த ஓவியர் மருது அவர்களுக்கும் வரைகலையால் அழகூட்டிய கருணா  அவர்களுக்கும் நன்றி.