Monday, December 22, 2014

சங்ககாலத்தில் நட்பு


இலக்கியங்கள் வகைப்படுத்தியிருக்கும் உறவுகளில் நட்பு சிறப்பிடம் பெறுகின்றது. தாய் - பிள்ளை, கணவன்- மனைவி  என்ற உறவுகளுக்கு ஈடாகப் போற்றப்படுகின்ற உயர் உறவு நட்பாகும். நட்புக்காகத் திருக்குறள் நான்கு அதிகாரங்களை ஒதுக்கியிருக்கின்றது.

“நெஞ்சத்து அகநக நட்பது நட்பு' என்றும், "அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு" என்றும், "இடுக்கண் களைவதாம் நட்பு" என்றும், "கொட்புன்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை' என்றும் நட்புப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார் வள்ளுவர்.

உறவுகளை ஒதுக்கும் சமண முனிவர்களால் எழுதப்பட்ட நாலடியாரால் கூட நட்பை விட்டுவிட முடியவில்லை. நட்பிற்காக நாலடியார் மூன்று அதிகாரங்களை வழங்கியிருக்கின்றது.

இந்த அற இலக்கியங்கள் கூறும் நட்பிற்கு முன்னோடியாக அமைந்தவை சங்க இலக்கியங்களே. மன்னனுக்கும் மக்களுக்கும் நெருக்கமான உறவிருந்த அக்காலத்தில் பெரிதும் புலவர்களே மக்களின் பிரதிநிதிகளாக இருந்தனர். அரசருக்கு அறிவுரை வழங்குவோராயும், நல்லறிவு சான்ற தூதாகவும் இயங்கினர். இவ்வகையால் மன்னருக்கும் புலவர்க்கும் இருந்த உறவுகள் நெருக்கமடைந்து நல்நட்பாயின. சங்கப் புலவோர் பலர் தம் நட்பை இலக்கியங்களில் அழகுறப் பதிவு செய்துள்ளனர்.

இப்பதிவுகள் வாயிலாகச் சங்ககாலத்து நட்புணர்வை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அவ்வை - அதியமான்

தமிழ்நாட்டின் வடமேற்காக அமைந்திருந்த தகடூர் என்ற பகுதியை அதியமான் அஞ்சி என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்தான்.

அதேபோன்று தமிழ்நாட்டின் வடகிழக்கில் காஞ்சியைத் தலைநகராக் கொண்டு தொண்டைமான் இளந்திரையன் ஆட்சி செய்து வந்தான்.

அதியமானுடன் போரிட்டு வென்று அவன் மண்ணைக் கைப்பற்ற வேண்டும் என்பது தொண்டைமானின் பலநாள் கனவு. போருக்கான ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்துவிட்டான்.

புலனாய்வாளர் வழியாக அதியமானுக்கு இச்செய்தி எட்டி விடுகின்றது. பெருவீரனாயினும் போரில் விருப்பற்றவன் அதியமான். போரைத் தவிர்க்கவே அதியன் விரும்பினான். அவையைக் கூட்டி கருத்துகள் கேட்டான். தொண்டைமானுக்குத் தூது அனுப்புவது என அவையில் முடிவாயிற்று.

அதியமானுடன் நெருக்கமான நட்புபைக் கொண்டிருந்த அவ்வை எழுந்தாள். காஞ்சிக்குச் சென்று இளந்திரையனைக் கண்டு அமைதிக்கு வழிவகுத்து வருகின்றேன் என்றாள்.

தொண்டைமான் அவையிலும் அவ்வைக்குப் பெருஞ்செல்வாக்கு. அவ்வையை வரவேற்று சிறப்புச் செய்த தொண்டைமான் தன் படைபலத்தை அவ்வைக்குக் காட்ட விரும்பினான். அவ்வை அதியனுக்கு மிக நெருக்கமானவள் என்பதை தொண்டைமான் நன்கறிவான். அவ்வை வழியாகத் தன் படைகளின் பலத்தை அதியனுக்கு உணர்த்தவே இந்த முயற்சி.

தொண்டைமானின் படைக்ககலங்களைப் பார்த்தாள் அவ்வை. போர் ஆயுதங்கள் பலவும் அங்கே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த ஆயுதங்கள் புதிதாகவும் நெய் தடவி மினுமினுப்பாகவும் காணப்பட்டன. மயில் இறகும், ப+மாலைகளும் கொண்டு அழகுபடுத்தப்பட்டிருந்தன. இவ்வாயுதங்களைப் பெருமிதத்தோடு அவ்வைக்குக் காட்டினான் திரையன்.

திரையனின் திமிர் அவ்வைக்குப் புரிந்தது. அவ்விடத்தே ஒரு செய்யுளை இயற்றினாள். திரையனின் உணர்வுக்குள் உறையும்படி பாடிக்காட்டினாள்.

“பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி செய் அணிந்து
கடியுடை வியன்நகர் அவ்வே , அவ்வே
பகைவர் குத்திக் கொடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில்..”

இங்கே உன் ஆயுதங்கள் எல்லாம் மயில் இறகாலும் பூக்களாலும் அழகாக்கப்பட்டுள்ளன. துருப்பிடிக்கா வண்ணம் நெய் தடவி பளபளப்பாகவும் உள்ளன. ஆனால் பார், அதியனது ஆயுதங்கள் குருதியில் நனைந்து பகைவர்களின் சதைகள் ஒட்டி நிறம் மாறிக்கிடக்கின்றன. அவை முனை மழுங்கிக் கொல்லனின் பட்டறையில் சரிசெய்வதற்காகக் குவிக்கப்பட்டிருக்கின்றன.

பல களம் கண்ட அதியனின் வீரத்தை இதைவிடச் சுருக்கமாக திரையனுக்கு விளக்கியிருக்க முடியாது. தன்னைப் புகழ்வது போல் இகழ்ந்தும் அதியனை இகழ்வதுபோல் புகழ்ந்தும் அவ்வை உணர்த்திய் குறிப்பைத் திரையன் புரிந்து கொண்டான்.

அவ்வைக்கும் அவள் கருத்துக்கும் மதிப்பளித்தான் தொண்டைமான். சிறப்புகள் செய்து அவளைத் தகடூருக்கு அனுப்பி வைத்தான். அதியனோடு போரைத் தவிர்த்து நட்புக் கொண்டான்.

அதியமானுடன் மிக ஆழமான நட்பைக் கொண்டிருந்த அவ்வை நட்பின் உரிமையோடு ஒரு போரைத் தவிர்த்தாள். மண்ணையும் மக்களையும் காத்தாள்.

உயிர்காக்கவல்ல நெல்லிக்கனியைத் தான் உண்ணாது தமிழால் ஆகியிருந்த அவ்வைக்குத் தந்த நட்புரிமை அதியமானுக்கு உரியது. போரொன்றில் அதியன் இறந்தபோது அவ்வை பாடிய “சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே...” என்ற பாடல் பெரும் துயரம் செறிந்தது. அவ்வையும் அதியனும் கொண்டிருந்த நட்பின் ஆழத்தை வெளிப்படுத்த வல்லது.



கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையர்

இலக்கியங்கள் இன்றுவரை போற்றிக் கொண்டாடும் நட்பு பிசிராந்தையர் என்ற புலவருக்கும் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னனுக்கும் இடையிலானது.

பாண்டிய நாட்டிலே பிசிர் என்ற ஓர் ஊர் இருந்தது. இந்த ஊரிலே வாழ்ந்த ஒரு புலவரின் பெயர் ஆந்தையார். ஊரின் பெயரைக் கூடவே இணைத்து தன் பெயர் கொள்வது அக்கால புலவோர் வழக்கம். இவரும் பிசிராந்தையர் ஆனார்.

இவரது நாடு பாண்டிநாடு ஆயினும் சோழ மன்னனான கோப்பெருஞ்சோழனின் நல்லியல்புகளைக் கேள்வியுற்று அவன் மேல் பேரன்பு கொண்டார். தமிழ்மேல் பெருங்காதல் கொண்ட சோழன் செய்யுள் இயற்றுவதிலும் வல்லவன். புலவோரைப் போற்றுவதிலும் உயர்ந்தவன். இத்தகைய ஒரு மன்னன் மீது தமிழ்ச்சான்றோர் பேரன்பு கொள்வது இயல்பே.

பிசிர் என்ற ஊரிலிருந்து நெடுந்தொலைவில் இருந்தது சோழனின் உறையூர். சோழனைக் கண்டு வர பிசிராந்தையரால் முடியவில்லை.

அக்காலத்தில் சிறந்த செய்யுள்களை இயற்றிப் புகழ்பெற்றிருந்தார் பிசிராந்தையர்.

“யாண்டு  பலவாக  நரையில வாகுதல்
 யாங்காகியர்  என வினவுதிராயின், .....”

என்று தொடங்கும் இவரது செய்யுள் பெரும் புகழ் பெற்றது. இவை யாவற்றையும் செவியற்ற சோழனும் பிசிராந்தையர் மீது பெரும் அன்பு கொண்டான். பாண்டி நாட்டுக்குச் செல்வோர் வாயிலாகத் தன் அன்பைப் புலவருக்குத் தெரிவித்துவந்தான்.

இந்நிலையில் கோப்பெருஞ்கோழனது கொடையும் புலவரைப் போற்றும் மாண்பும் அவனது புதல்வர்களுக்கு எரிச்சலை மூட்டியது. தந்தையோடு போரிட்டு அரசைக் கைப்பற்றத் தயாராயினர். சூழ்ச்சிகளோடு கலந்து மூண்ட போரில் தன் புதல்வரைக் எதிர்க்கத் தயாரான கோப்பெருஞ்சோழனை புலவர் எயிற்றியனார் தடுத்தார். ‘மன்னா நீ மறைந்த பிறகு இந்த நாடு யாருக்கு? அவர்களுக்குத்தானே’ என உணர்த்தினார்.

புதல்வர்களை மன்னித்து அவர்களுக்கு அரசை வழங்கிவிட்டு வடக்கிருந்து உயிர்நீக்கப் புறப்பட்டான் சோழன்.

இந்த செய்திகள் எதுவும் பிசிராந்தையருக்குத் தெரியாது.

வடக்கிருக்கச் சென்ற சோழன் உடன் சென்ற பலவர் பொத்தியாரை நோக்கி, பொத்தியாரே, என் நண்பர் பிசிராந்தையார் என்னைக் காண வருவார். அவரிடம் என் அன்பைத் தெரிவித்துவிடுங்கள் என்றான்.
“மன்னா அது எப்படிச் சாத்தியம்? இங்கு நடந்த எதுவும் அவருக்குத் தெரியாதே?”
“அவர் நிச்சயம் என்னைக் காண வருவார்” என்றான் சோழன் உறுதியுடன்.

நட்பின் மிகுதியால் மன்னர் கருத்திழந்து பேசுகின்றார் என அருகிருந்த சான்றோர் தமக்குள் பேசிக்கொண்டனர். இது மன்னன் செவியில் விழுந்தது.

“பிசிரோ னென்பவென் னுயிரோம் புநனே
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே.”  (புறம் 215)

“பிசிர் எனும் ஊரைக் கொண்டோன் நான் செல்வச் செழிப்போடு இருந்தவேளை என்னைக் காண வருபவன் அல்லன். நான் துன்பமுற்றிருக்கும் வேளையிலேயே வரக் கூடியவன். நிச்சயமாக வருவான்” என்றான் மன்னன்.

கூட இருந்தோர் அனைவரும் அதை நம்பவில்லை ஆயினும் மன்னன் வேண்டுகோளை ஏற்றனர்.

நீரும் உணவும் இன்றி வடக்கிருந்து உயிர்நீத்தான் சோழன். அரசன். இறந்த ஓரிரு நாட்களில் அவன் கூறியதைப் போன்றே பிசிராந்தையர் அங்கு வந்தார். அவர் வரவு கண்டு எல்லோரும் வியந்தனர். நடந்ததைக் கூறினர். ஆறாத் துயர் கொண்டார் பிசிராந்தையர். மரணத் தறுவாயிலும் மன்னன் கொண்டிருந்த நடபின் ஆழம் அவரைத் துயரத்தின் எல்லைக்கு இட்டுச் சென்றது.

மன்னன் வடக்கிருந்து உயிர்நீத்த இடத்திற்கு இருகே தானும் வடக்கிருந்து உயிர்நீத்தார்.

கண் கொண்டு காணாத இருவரின் நெஞ்சார்ந்த நட்பின் ஆழத்தை பொத்தியார் துயரம் சொரியப் பாடினார்.

“இசைமரபு  ஆக  நட்பு  கந்தாக
இனியதோர்   காலை  ஈங்கு  வருதல்
வருவன்  என்ற  கோனது  பெருமையும்
அது  பழுதின்றி  வந்தவன்   அறிவும்
வியத்தொறும்  வியத்தொறும்   வியப்பிறந்தன்றே." (புறம் 217)

புகழ் மேம்பாடு அடையும்படியாக நட்பையே பற்றுக்கோடாகக் கொண்ட “மன்னன் நல்லதொரு பொழுதில் என் நண்பரான பிசிராந்தையர் இங்கு வருவார்” என்றான். இவ்வாறு உரைத்த மன்னனமு பெருமையும், மன்னன் கூற்று பொய்க்காவண்ணம் வந்துசேர்ந்த பிசிராந்தையரின் அறிவும் பெரு வியப்பைத் தருகின்றது.

காலம் உள்ளவரை போற்றப்படவல்ல இலக்கிய நட்பு இதுவெனச் சான்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

பாரி – கபிலர் 

பாரியின் அரசவை. பாரின் கொடை வேண்டி உழவர் மூவர் அவைக்கு வருகின்றனர். அவர்கள் குறை கேட்டு கொடை வழங்க ஆணையிடுகின்றான் பாரி. வந்தோர் மூவரும் மூவேந்தர். பறம்புமலையேறிப் பாரியை வெல்லமுடியாதிருந்த மூவரும் போலி வேடதாரிகளாய் அவைக்குள் நுழைந்திருந்தனர். மூவரும் மறைத்து வைத்திருந்த கைவாளால் பாரியை நெருங்கிக் குத்தி விடுகின்றனர். மூவரையும் சூழ்ந்த வீரரை விலக்கி, “கொடை கேட்டு வந்தவர்கள், கொல்லுதல் ஆகாது. பத்திரமாய் வழியனுப்பி வையுங்கள்” என மரணத் தறுவாயிலும் தன் வீரர்களுக்கு ஆணையிடுகின்றான் பாரி.

இத்துயர் காணப் பொறுக்காது அருகிருந்த அருமை நண்பர் கபிலர் குத்துவாள் கொண்டு தன்னைத்தானே மாய்த்துக்கொள்ள முற்படுகின்றார். கையசைத்து ‘ஓழிக’ (தற்கொலை செய்வதைத் தவிர்க்க.) எனக் கூறிக் கபிலரைத் தடுத்து அவரது கடமைகளை உணர்த்தி அவையிலேயே தன் உயிரை விடுகின்றான் பாரி.

பாரியோடு தானும் மாண்டு போகவில்லையே என்று மனமுடைந்து போகின்றார்  கபிலர்.

பறம்புமலையை ஆண்ட குறுநில மன்னன் பாரியின் கொடைத்திறன் அவன் காலத்திலேயே தமிழகம் முழுவதும் பேசுபொருளாக இருந்தது. ஒரு குறுநில மன்னன் தம்மிலும் புகழ் பெறுவதைப் பொறுக்காத சேர, சோழ, பாண்டியர் பாரியை போருக்கழைத்தனர். மலைமேல் இருந்த பாரியை முற்றுகையிட முடிந்ததே தவிர நெருங்க முடியவில்லை.

பாரியைத் தவிர யாரையும் பாடாத பாரியின் நண்பரான கபிலர் மூவரையும் சந்திக்கின்றார். “பாரி பெருங் கொடைவள்ளல், இரந்து கேட்டால் பறம்பையே தாரை வார்த்து விடுவான். இதற்கு ஏன் இவ்வளவு முற்றுகை” என இச் செய்யுள் வழி கூறுகின்றார்.

கடந்து அடுதானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே,
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே    (புறம்-110)

நீங்கள் மூவரும் கூடி நின்றாலும் பறம்பு நாட்டைக் கைப்பற்றுவது அரிதான செயல். இப்போது பாரியிடம் நாடு இல்லை. ஊரெல்லாம் பரிசாகக் கொடுத்து விட்டான். மலைதான் உண்டு. மலை நிகர்த்த பாரி உண்டு. இடையில் தான் உண்டு. யார் வேண்டுமானாலும் ஆடுநர் பாடுநராகச் சென்று வேண்டினால் பாரி தன்னையே ஈவான். மலையே வேண்டினும் நல்குவான். என்றார்.

பாரியின் கொடைக் குணத்தையே அவன் கொலைக்குப் பயன்படுத்தி விடுகின்றனர் மூவரும்.

பாரி இறந்தபிறகு பாரியின் பிள்ளைகளான அங்கவையையும் சங்கவையையும் பாதுகாக்கும் பொறுப்பு கபிலருக்கு வந்துவிடுகின்றது. பாரியைத் தவிர பிறரைப் பாடாத வாயால் இந்த மகளிருக்காக பிற வேந்தரையும் பாடுகின்றார் கபிலர்.

பல வேந்தர் பாரியின் புதல்வியரை மணம் முடிக்க மறுத்து விடுகின்றனர். அவர்கள் துயரம் நீண்டுகொண்டிருந்தது.

“அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில் வென்று எறிமுரசின் வேந்தர்
எம் குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே”

அன்றொரு நாள் முழுநிலவில் எம் தந்தையும் இருந்தார். எம் குன்றும் எம்மோடிருந்தது. இன்றைய நாள் இந்நிலவில் முரசறைந்த வேந்தர் எம் குன்றைக் கொண்டார். எம் தந்தையும் இப்போது இல்லை.

பாரி மகளிரின் குரலாகக் கபிலரே இப்பாடலைப் பாடுகின்றார்.

இந்த இரு பெண்களையும் அழைத்துக்கொண்டு குறுநில மன்னனான இருங்கோவேளிடம் செல்கின்றார். தான் பாரியின் தோழன் எனக் குறிப்பிட்டு, மகளிரை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றார்.

“..............................................................
படுமணி யானைப் பறம்பின் கோமான்
நெடுமாமப் பாரி மகளிர் யானே
தந்தை தோழன் இவர்என் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே!”  (புறம் 201)

மூவேந்தரோடும் முரண்பட விரும்பாத இருங்கோவேள் மகளிரை ஏற்க மறுத்து விட்டான்.

பாரியின் மகளிரை யாருக்குத் திருமணம் செய்து வைத்தார் என்பதற்குப் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. ‘பகைவர் எளிதில் அணுகாத பார்ப்பனர் இடத்தே பாரியின் பெண்களைப் பாதுகாப்பாக ஒப்படைத்து விட்டு, மனச்சுமை நீங்கினார் கபிலர்’ எனத் தன் புறநானூற்று உரையில் ஒளவை துரைசாமிப்பின்ளை குறிப்பிடுகின்றார்.


திருக்கோவலூரில் உள்ள கீழையூர் வீரட்டானேசுவரர் கோயிலில் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட முதலாம் இராசராசனின் கல்வெட்டு உள்ளது. அதில், கபிலர் அங்கு வந்து மலையமானிடம் பாரியின் பெண்களை அடைக்கலப் படுத்திவிட்டு, அங்கு (கீழையூர் பெண்ணையாற்றுத் துறைக்கருகில் ஆற்றிலுள்ள) கல்லொன்றில் தீ வளர்த்து உயிர் நீத்தார் என்ற செய்தி குறிக்கப்பட்டுள்ளது.

தன் கடமைகளை முடித்த பிறகு பாரியை மனதிற் கொண்டு உயிர் விடத் துணிகின்றார் கபிலர். திருக்கோவிலூர் அருகே உள்ள வடபெண்ணை ஆற்றுக்கருகில் சிறு குன்றைக் கண்டு அதில் தீ மூட்டி  உயிர் துறக்க முடிவு செய்கின்றார்  அவ்வேளை அவரது மரண வாக்குமூலமாக எழுகின்றது இப்பாடல்.

“கலை உணக் கிழிந்த ......
........................................
யான் மேயினேன் அன்மையானே  ஆயினும்,
இம்மைபோலக் காட்டி, உம்மை
இடைஇல் காட்சி நின்னோடு
உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே” (புறம்-236)

என் இனிய பாரியே, என்னை நீ பல ஆண்டுகள் பேணிப்
பாதுகாத்தாய்;. அக்காலமெல்லாம் நீ என்னோடு உயிரோடு கலந்த  நட்புக்கொண்டிருந்தாய்.  ஆயினும், நீ இவ்வுலகை விட்டுப் பிரியும் வேளை
என்னையும் உன்னோடு உடன்வரவிடாது “இருந்து வருக”
எனக் கூறிப் பிரிந்தாய்;.  இதனால் நீ என்னிடமிருந்து வேறுபட்டாய்.  நான்  உனக்குப் பொருந்தாதவன் போலும்;. எவ்வாறாயினும் ஆகட்டும்.  இனி,
இப் பிறப்பில் நம்மிருவரையும் கூட்டி ஒன்றிய நட்பால் உயர் வாழ்வு
வாழச்செய்த நல்லூழ், மறுமையிலும் உன்னோடு உடனுறையும் வாழ்வை
நல்குவதாக”  எனக் கூறிவிட்டு தீயிற் கலந்து உயிர் நீத்தார் கபிலர்.

இன்றும் பெண்ணையாற்றில் ஒரு சிறு குன்றும், குன்றின்மேல் ஏறிச் செல்ல படிக்கட்டுகளும் குன்றின் மேலே, கோயில் போன்ற அமைப்பும் அக் கோயிலைச் சுற்றிவர வழியும் உள்ளதைக் காணலாம். இதனை ஊர் மக்கள் ‘கபிலர் குன்று’ என்றும் ‘கபிலக் கல்’ என்றும் கூறுகின்றனர்.

பல இலக்கியக் குறிப்புகள் கபிலர் பிராணம குலத்தவர் எனக் குறிப்பிட்ட போதும், வருண பாகுபாடுகளுக்து அப்பாற்பட்ட தூய்மையான தமிழ்ச் சான்றோனாகவே கபிலர் வாழ்ந்திருக்கின்றார். பாரியோடு உயிர் துறக்க முயன்று முடியாது போகவே,  தன் பணிகளை நிறைவு செய்யும் வரை காத்திருந்து பிறகு பாரிக்காகவே உயிர் துறக்கும் அவரது நட்புணர்பு மிக உயர்வானதாகப் போற்றப்படுகின்றது.

மேற்கூறப்பட்ட செய்திகள் யாவும் புலவோருக்கும் அரசருக்குமிடையேயான நட்புறவை மட்டுமே சுட்டுகின்றன. இலக்கியங்களை ஆக்கியவர்கள் புலவர்கள் என்பதால் அவர்களைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகள் மட்டுமே பெரிதும் பதிவு செய்யப்பட்டுள்ன. மன்னர்களுக்கிடையே ஆழமான நட்புறவு இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடவில்லை. போரை முன்னிட்டும், அரசியலை முன்னிறுத்தியும் சில அரச உறவுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

தலைவியும் தோழியும்

சங்க இலக்கியத்தில் நட்புக்கு இலக்கணமாகத் திகழும் மற்றுமொரு உறவு தலைவிக்கும் தோழிக்கும் உரியதாகும். சங்ககால இலக்கியங்களில் அக இலக்கியங்கள் தனிச்சிறப்புப் பெறுவன. காதல் உணர்வு சான்ற தலைவன் தலைவி என்னும் இரு பாத்திரங்களுக்கிடையேயான உணர்ச்சிப் பெருக்கின் பல்வகை வெளிப்பாடே அக இலக்கியத்தின் கருப்பொருள் ஆகின்றது. வாழிடத்திற்கேற்ப, தொடர்புபடுகின்ற பொருட்களும் காட்சிகளும் வேறுபடுகின்றனவே அன்றி, கருப்பொருளாகிய காதலில் மாற்றமில்லை.

காதல் வயப்பட்ட ஆண் பெண் இருவரையும் தலைவன் தலைவி என அழைப்பது அக இலக்கிய மரபாகும். இவர்கள் பொதுமக்களாகவோ அரச குலத்தவராகவோ இருக்கலாம். இவர்களோடு நட்பாகவிருக்கும் தோழன் தோழியரை இலக்கியம் பாங்கன் பாங்கி எனக் குறிப்பிடுகின்றது.

இந்தக் காதல் களத்தில் தலைவியோடு பெரிதும் உடனிருக்கும் பாத்திரம் தோழியாவாள். அதிகாரத்திலும் வலிமையிலும் மேம்பட்டிருந்த ஆணாகிய தலைவனோடான காதலை வழிநடத்தி, அதை திருமணம் வரை கொண்டு செல்வதில் பெரும் பங்கு வகிக்கின்றாள் தோழி.

இச்செறித்தல் (வீட்டிற்குள் பெண்ணைக் காத்தல் ) போன்ற கட்டுப்பாடுகளுக்குள் வாழுகின்ற தலைவி தன் உணர்வுகளைப் பகிரவும், காதற் தூதாகச் செல்லவும், ஊரறியாமல் காதலைக் காக்கவும் தோழியே பெரிதும் பயன்பட்டிருக்கின்றாள்.

தோழியின் சான்றாமையைப் புலப்படுத்தும் சில இலக்கியக் காட்சிகளை நோக்குவோம்.

புறநானூறு இலக்கியத்தில் ஒரு காட்சி.

 அது மலை சூழ்ந்த நிலம். காலம் நள்ளிரவாகிக் கொண்டிருந்தது. தலைவன் வருகைக்காகத் தோழியோடு காத்திருக்கின்றாள் தலைவி. தோழியின் மனதில் சில சிந்தனைகள் தோன்றின.

பேசத் தொடங்குகின்றாள்.

“தலைவியே,  அவன் திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்திக்கொண்டிருக்கின்றான். அவனைச் சந்திக்கும் போதெல்லாம் நீயோ மொழி பேச மறந்துவிடுகின்றாய். இன்று நீ தலைவனைச் சந்திக்க வேண்டாம். நான் போய்ப் பேசி வருகின்றேன்.”

தலைவி சம்மதம் தெரிவிக்க, தோழியே தலைவனைச் சந்திக்கப் போகின்றாள்.

தலைவன் வருகின்றான். தலைவியை அங்கும் இங்கும் தேட, எதிர்ப்பட்டாள் தோழி;.

“எங்கே தலைவி?”
“உடல் நலமில்லை இன்று வரமாட்டாள்.”
“அப்படியா நான் சென்று வருகின்றேன்.”
“கொஞ்சம் பொறுங்கள், நான் சில வார்த்தை பேச வேண்டும்.”
“என்ன?”

மூங்கில் வேலிகளால் சூழப்பட்ட வேரில் பழுக்கின்ற பலாமரங்களைக் கொண்ட மலைச்சாரல்களை உடைய நாட்டைச் சேர்ந்தவனே, நான் சொல்வதைக் கேள்.

எப்போது என்ன நடக்கும் என்பதை யாரும் அறிந்தவர் இல்லை. சிறு காம்பிலே தொங்குகின்ற பெரிய பலாப்பழத்தைப்போன்று அவள் உயிரும் காதலும் இருக்கின்றது. காம்பைப் போன்றிருக்கின்றது அவள் உயிர். உன்னால் ஏற்படுத்தப்பட்ட காதல் நோயோ பலாப்பழம் போன்று பெருத்திருக்கின்றது.

“வேரல் வேலி வேர்கோட் பலவின்  
சார னாட செவ்வியை யாகுமதி    
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.”  (புறம் 18)

தோழி தலைவனுக்குக் கூறிய வார்த்தைகள் இவ்வளவே. ஆனால் உட்பொதிந்திருக்கும் ஆழம் மிகப் பெரிது.

தலைவா, நீ கொடுத்த காதல் நோய் பலாப்பழம்போல் பெருத்துவிட்டது. உரிய நேரத்தில் உரியவரால் அப்பழம் பறிக்கப்படாவிட்டால், எந்த நேரத்திலும் காம்பு அறுந்து விடலாம். அதாவது காதல் கனம் தாங்காது எவ்வேளையிலும் அவள் உயிர் விடலாம். காம்பு அறுந்து விழும் பழமானது ஊரெங்கும் மணம் பரப்புவதைப் போல் அவள் இறப்பின் காரணம் ஊரெங்கும் பரவி உனக்கும் இழுக்கை ஏற்படுத்தும்.

சிலவேளை இப்பலாபழச் செய்தி உனக்குப் புரியாமலிருக்கலாம் ஏனெனில், வேலிகள் கொண்டு பாதுகாக்கப்பட்டிருக்கும் உன் நாட்டுப் பலாமரங்கள் வேரிற்தானே பழுக்கின்றன.

எனவே இனியும் காலம் தாழ்த்தாதே, விரைந்து திருமணம் செய்.

ஐந்தே அடிகளால் தலைவனுக்கு இத்தனையையும் உணர்த்திவிட்டுத் தோழி போய்விடுகின்றாள்.

வெகு பண்புடனும், மிக நுட்பமாகவும், சுருங்கிய சொற்களாலும் ஆழமானதொரு செய்தியை அழுத்தமாகக் கூறிவிட்டுச் சென்ற தோழியின் பேரறிவு இன்றுவரை வியப்போடு நோக்கப்படுகின்றது.

மற்றுமொரு பாடலில் தலைவனை நோக்கிப் பேசும் தோழி வெளிப்படுத்தும் கருத்துகள் தலைவியின் நல்வாழ்வு மீது அவள் கொண்ட அதீத அக்கறையைப் புலப்படுத்துகின்றது.

இக்காட்சியிலும் தோழியே தலைவனை எதிர்கொள்கின்றாள். கூறவேண்டியவற்றை நேரடியாகவே வெளிப்படுத்தகின்றாள்.

நீ அவளைக் காண்பதற்காக எடுத்துக்கொள்ளும் கால இடைவெளி அதிகமாக இருக்கின்றது. அது அவளை வருத்துகின்றது. தலைவியின் தோள்களில் கண் மயங்கிக் கிடத்தலை நீயும் விரும்புகின்றவன். ஊரின் சான்றோர் தலைவி மீது அன்பு கொணடவராயினும் பழியோடு வருகின்ற இன்பத்தை விரும்பமாட்டார்கள். விண் முட்டும் மலைகளைக் கொண்ட நாட்டை உடையவனே, அவளை முறைப்படி மணம் செய்து கொள்ளத் தயங்குவது ஏன்?

“நாள்இடைப் படின் என்தோழி வாழாள்
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை
கழியக் காதலர் ஆயினும் சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்
வரையின் எவனோ? வான்தோய் வெற்ப”  (பா.112.9-13)

தன் தலைவியின் காதலுக்காகத் தலைவனிடம் போராடுகிறாள் தோழி. திருமணத்திற்கு முன்பதான  களவு ஒழுக்கம்  ஊரார் போற்றுகின்ற கற்பு வாழ்வாக மலர வேண்டும்.  இக்கற்பு வாழ்வில் காதல் நிலையானதாக இருக்க வேண்டும்.  இதுவே உண்மை; ஆழமான அன்புநிலை. பேரழகானதான இந்த வாழ்வுநிலையைத் தோற்றுவிக்கும் அறிவு சான்ற கதாபாத்திரமாகத் தோழி திகழ்கின்றாள்.

பிறிதொரு பாடலில் தலைவியோடு தாம் கொண்டிருக்கும் நட்பின் ஆழத்தைத் தலைவனுக்கு உணர்த்துகின்றாள்.

தலைவி மீது நீ மட்டுமே அன்பு கொண்டிருப்பதாகக் கருதுகின்றாய். தாய் தன் கண்ணை போன்று மகளைப் போற்றுகின்றாள். இவள் காலடி சிவக்க நிலம் நடக்கப் பொறுக்க மாட்டாதவர் தந்தை.  இருதலைப் பறவையை நீ அறிவாயா? அப்பறவையைப் போன்று இரு தலை ஓருயிர் ஆனவர். பிரிவறியாதவர்.

“யாயே கண்ணினும் கடுங்கா தலளே
எந்தையும் நிலனுறப் பொறா அன் சீறடிசிவப்ப
எவனில குறுமகள் இயங்குதி என்னும்
யாமே, பிரிவின் றியைந்த துவரா நட்பின்
இருதலைப் புள்ளின் ஓருயி ரம்மே” (அகம் 12)

வாய்ப்புக் கிடைக்கின்ற போதெல்லாம் தலைவனுக்கு அறிவுரை கூறவும், தேவைப்பட்டால் அதட்டவும் முயன்றிருக்கின்றாள் தோழி.

தலைவியும் தன் அகவுணர்வுகளை ஒளிவு மறைவின்றி தோழியிடம் சொல்கின்றாள்.

காதலன்  செல்வம் தேடுவதற்காகக் காட்டு வழியே பிரிந்து சென்றுவிட்டான். அவன் பிரிவைத் தாங்காது தவித்தவள் ஆறி அடங்கத் தோழியின் அருகாமையே உதவுகின்றது. “நான் மிகவும் வேதனைப்படும்படியாக என்னைப் பிரிந்து போய்விட்டார். என்னைப் பிரிய மாட்டேன் என முன்னர் கூறிய வார்த்தையையும் மறந்து விட்டார்” என்றுரைத்து வருந்துகின்றாள்.

 “பிரியலம் என்ற சொல் தாம்
மறந்தனர் கொல்லோ தோழி”    (அகம் 9)

தலைவின் மாற்றங்களை உணர்ந்து ஐயுறும் பெற்றோருக்கும், செவிலித்தாய்க்கும் கதை சொல்பவளாகவும் தோழியே திகழ்கின்றாள்.

தாங்கருஞ் சிறப்பின் தோழி மேன” (தொல் : பொருள்: 11) என தொல்காப்பியம் தோழியின் சிறப்புக்கு இலக்கணம் கூறுகின்றது.

தோழியானவள் தலைவன், தலைவியின் வாழ்வு செழுமையான நெறியில் செல்வதற்கு வழி செய்கின்றாள்.  அன்பு, அறிவு, அறன் என்ற மூன்றையும் சொல்லிலும் மனத்திலும் செயலிலும் கொண்ட நட்பின் உருவமாகத் திகழ்கின்றாள் தோழி.

தோழமைப்பண்பின் உயர்ந்த வடிவமே சங்க இலக்கியம் காட்டும் தோழி.


தலைவனும் தோழனும்

தலைவியின் அகவாழ்வில் தோழி பெற்றிருக்கும் உயர் பங்கு தலைவனின் காதல் வாழ்வில் தோழனுக்கு இருக்கவில்லை என்பது உண்மையே. தவைவனோடு தோழி பேசுவதற்கு உடன்பட்ட இலக்கிய மரபு தலைவியோடு தோழன் பேசுவதற்கு உடன்படவில்லை.  காதலுற்ற பெண்கள் பிற ஆடவரை நோக்குதலைத் தலைவனின் நண்பனாக இருப்பினும் இலக்கியங்கள் தவிர்க்கவே முயன்றிருக்கின்றன. தோழன் தலைவியின் முன் எதிர்ப்பட்ட போதும் தலைவி அவனை வழிபோக்கனாகவே கருதுவாள். ஏனெனில் அவளுக்கு தலைவனின் தோழர்களைத் தெரியாது.

தலைவியின் இருப்பிடம் அறிந்து கூறுவதுவும், அவள் வருகையை உணர்த்துவதுமே தோழனின் கடமைகளாகவிருந்தன.

‘தோழியிற் கூட்டம் போலப்பாங்கன்
உரையாடி இடைநின்று கூட்டாமையின்’ (தொல். 1047) என
நச்சினார்க்கினியாரும்,  “தன் வயிற்பாங்கன் அவள்வயிற் பாங்கு செய்யான்”
(தொல். 1443) எனப் பேராசிரியரும் தோழனின் கடமைகளை வரையறை செய்துள்ளனர்.

தலைவனுக்கும் தோழனுக்குமிடையான சுவையான உரையாடல் ஒன்ற குறுந்தொகையில் இடம்பெறுகின்றது.

தலைவியைச் சந்திக்கச் சென்ற தலைவன் வாடிய முகத்தோடு வருகின்றான். எதிர்கொண்ட தோழன் தவைவனின் முகவாட்டம் உணர்ந்து என்ன நடந்து என வினாவுகின்றான்.

“தலைவியைச் சந்தித்த வேளை சற்றே நெருங்கிவிட்டேன். அவள் கோபித்து விட்டாள்.”

“காதற் சந்திப்பில் இது ஒன்றும் புதியதில்லையே. நீ ஏன் வருந்துகின்றாய்?”

“இல்லை நண்பா, தலைவியும் தோழியும் என்னைத் தவறாக எண்ணுகிறார்கள்.”
“கலங்காதே நண்பா, காதலில் காமமும், காமத்தில் காதலும் கலந்துதான் இருக்கும். காமம் எம்மை வருத்தி அழிக்கின்ற ஆயுதமல்ல, தீர்த்துவிட முடியாத கொடிய நோயும் அல்ல. அது எவ்வகையிலும் குறைந்ததல்ல.  அதோ பார், அங்கே ஒரு பல்விழுந்த வயசான பசு புல் மேய்ந்துகொண்டிருப்பதை. புதிதாக முளைத்த அந்த இளம் புற்களை அந்தப் பசுவால் மேய முடியாது. பல் இல்லை. ஆனாலும் தன் நுனி நாக்கால் அந்தப் புற்களைகளைத் தடவி அவற்றை மேய்ந்த இன்பத்தைப் பெறுகின்றது. அப்படித்தான் காதலோடு இணைந்த காமமும். நினைக்கின்ற போதெல்லாம் இன்பந்தர வல்லது. இதயத்திற்கு இதம் தரக் கூடியது. மணமாகும் வரை எல்லை மீறாது இன்பத்தை உனக்குள் உணர்ந்து கொள்”

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே: நினைப்பின்,
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே” (குறு 136)

இதுவே தோழன் தலைவனுக்குக் கூறிய அறிவுரை. தலைவனின் மனம் நோகாது ஆறுதலும் கூறி, அழகான உவமையோடு எல்லை மீறாதே என இடிந்துரைக்கும் பண்பும் சங்கத் தோழனிடத்தே சிறந்திருப்பதை இப்பாடல் வழியாக உணரலாம்.

தோழனோடு தொடர்புபட்ட வேறு சில செய்திகளும் சங்க இலக்கியத்திலே இடம் பெற்றுள்ளன.

மேற் கூறப்பட்ட நட்புறவுகள் சங்ககால இலக்கியங்களிலே அழகுறவும் அழுத்தமாகவும் கூறப்பட்டுள்ளன. நட்பு மிகச் சிறந்த உறவு என்பதைக் காலங்காலமாக இலக்கியங்களும் ஏனைய கலைகளும் வெளிப்படுத்தி வந்துள்ளன.

காதலுக்கு அடுத்தபடியாக இலக்கியங்கள் அதிகம் பேசிய உறவு நட்பே.

அன்பு... காதல்... நட்பு என்ற மூன்றும் வெவ்வேறானவை. இவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் இடையே ஒரு மெல்லிய நூலிழை இடைவெளி இருக்கத்தான் செய்கிறது.

இதனை கவனமாய் கையாள்கிறவனுக்கு மட்டுமே காதலியுடனும், தோழியுடனும் நெருடல் இல்லாத நெருக்கம் ஏற்படும்.

சங்க இலக்கிய காலத்திற்குப் பின்னான அறநெறிக்காலத்தில் காதல் உணர்வுகளுக்கு முதன்மை வழங்கப்படவில்லை. ஆனால் அற இலக்கியங்கள் பலவும் நட்பைப் போற்றியிருக்கின்றன. நடபு பற்றிய அழுத்தமான படைப்புகள் இன்றுவரை இலக்கியங்களில் தோன்றிக்கொண்டேயிருக்கின்றன.

“துளியே கடல்
என்கிறது
காமம்

கடலே துளி
என்கிறது
நட்பு”      - கவிஞர் அறிவுமதி.




                      துணை நின்ற நூல்களும், இணையத்தளங்களும் :

தொல்காப்பியம்
அகநானூறு
புறநானூறு
குறுந்தொகை
தமிழ்க்காதல்  - முனைவர் வ.சு.ப. மாணிக்கம்