Monday, February 4, 2019

தைப்பொங்கல் - பண்பாட்டு நோக்கு

பண்பாட்டு நோக்கில் தைப்பொங்கல் 

முன்னுரை:

கடந்த நூறு ஆண்டுகளுக்குள் பேரெழுச்சி பெற்றதொரு தமிழர் விழாவாகத் தைப்பொங்கல்விழாவை நாம் அடையாளம் காணமுடியும். தமிழர் தமது வரலாற்று நீட்சியின் வழியே பல்வேறு விழாக்களைக் கொண்டாடி வந்ததுள்ளனர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப்; பின் மெய்யியல் வழிபாட்டுநெறிகள் (சைவம், வைணவம்) தமிழரிடையே பரவத் தொடங்கிய பின்னர், பல தமிழர் விழாக்கள் மெய்யியல் வழிபாட்டுநெறிகளுடன் தம்மைப் பிணைத்துக் கொண்டன. எடுத்துக்காட்டாகச் சித்திரைப் புத்தாண்டைக் கருதலாம். வடஇந்தியர்களின் கொண்டாட்டமான தீபாவளியும் இக்காலத்திலேதான் தென்னிந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

செந்நெறி இறைநெறிகள் மக்களிடையே ஆளுமை செலுத்துவதில் தமக்குள் போட்டியிட்டுக்கொண்டன. அத்துடன் அரசுகளையும் தம்பக்கம் ஈர்த்துக்கொண்டன. அவை நடத்திய மதப்போட்டிகளின் வெற்றி தோல்விகளுக்கான பரிசுகளையும் தண்டனைகளையும் உடன்நின்ற அரசுகளே வழங்கின. அரச ஆதரவுகளுடன் கோலோச்சிய மதங்கள் தமிழர்களின் பண்பாட்டிலும் மொழியிலும் ஆளுமை செலுத்தின. 

இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட திராவிடச் சிந்தனை, தனித்தமிழ் விழிப்புணர்வு என்பன எழுச்சி பெறும்வரையில் மெய்யியல் மதநெறிகள் மக்களிடையே தமது மாற்றுக்குறையாது பாதுகாத்துக் கொண்டன. கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழில் தோன்றிய இலக்கியங்கள் கடவுளரையும் வேந்தரையும் மட்டுமே பாட்டுடைத்தலைவர்களாகக் கொண்டிருந்தன என்ற கருத்தை இதற்குச் சான்றாகக் கருதலாம். சிலப்பதிகாரம் என்ற இலக்கியம் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. 

ஆட்சியாளர் என்றவகையில் ஆங்கிலேயரும் தமிழ்மொழியில் சமஸ்கிருதமும் ஆளுமை செலுத்திக்கொண்டிருந்தவேளையில்தான் மறைமலையடிகள் போன்றோர் தனித்தமிழ் இயக்கத்தையும் ஈ.வெ.ராமசாமி போன்றோர் திராவிடச் சிந்தனையையும் தோற்றுவித்தனர்.

இதன்வழியே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வுவே தமிழர் தம்முடைய அடையாளங்களையும் வேர்களையும் முனைப்போடு தேடத் தொடங்கியமைக்குக் காரணமாயிற்று. இத்தேடல்களின் வழியேதான் நாட்டுப்புற மக்களின் வாழ்வியலுக்குள் அறுவடைவிழாவாகப் போற்றப்;பட்டுவந்த பொங்கல் தமிழினப் பெருவிழாவாகத் தோற்றம் கொண்டது. 

பொங்கல் பெருவிழா வெளிப்படுத்தும் பண்பாட்டு விழுமியங்களைத் தெரிந்துகொள்ள முன்னர் சில வரலாற்று உண்மைகளை நாம் புரிந்து கொள்வோம்.

நாட்டுப்புற வாழ்வியலில் பொங்கல்

வரலாற்றுக்காலந்தொட்டுப் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை தமிழச்சமூகத்தில் கல்வியறிவு கொண்ட சிறு விழுக்காட்டினரே ஏட்டு இலக்கியங்களைப் படைத்து வந்துள்ளனர். தொல்காப்பியர் உள்ளிட்ட சங்கப்புலவர்கள், அறநூல் அறிஞர்கள், இலக்கணிகள், சமயக் குரவர்கள் என இலக்கியம் இலக்கணம் படைத்த அனைவருமே கற்றறிந்தோருக்குள் அடங்குவர். ஏட்டு இலங்கியங்கள் பெரிதும் கல்வியறிவு கொண்டோராலேயே கொண்டாடப்பட்டன. உயர்ந்த மானுடச் சிந்தனைகளையும் தமிழருடைய பண்பாட்டுச் சிறப்புகளையும் காலந்தோறும் இலக்கியங்களில் பேணிவந்தோர் இவர்களே. ஆளுமையாளரோடு இணைந்தே இக்கற்றறிவாளர் சமூகம் இயங்கியது. தமிழ்நாட்டில் காலூன்றிய மெய்யியல் இறைநெறிகளும் இந்தக் கற்றறிந்தோர் குழுமத்தையும் ஆட்சியில் இருந்த ஆளுமையாளர்களையுமே இலக்கு வைத்தன.

அக்காலத்தில் வாழ்ந்த தமிழர் எண்ணிக்கையில், ஆளுமைச் சமூகம் உட்படக் கற்றறிந்தோர் சமூகம் பத்து விழுக்காட்டுக்கும் குறைவானதாகவே இருந்திருக்க வேண்டும். மெய்யியல் இறைநெறிகளும் இந்தப் பரப்புக்குள்ளேயே காலுன்றி வளர்ந்தன. 

தமிழர்தொகையில் மேற்குறித்த பத்து விழுக்காட்டினர் போக, ஏனைய தொண்னூறு விழுக்காடு தமிழர்கள் யாவர்? அவர்கள் எங்கே இருந்தனர்? அவர்களின் கல்விநிலை என்ன? வாழ்வியல் பின்னணி என்ன? என்ற வினாக்கள் எழுகின்றன.

இன்றுவரை தமிழர் நிலத்தில் கிராமங்கள் தோறும் வாழ்ந்து வருகின்ற நாட்டுப்புற மக்கள், பட்டிக்காட்டு மக்கள், பாமர மக்கள் எனக் கருதப்படுவோரே அன்றைய அந்தத் தொன்னூறு விழுக்காடு மக்களின் இன்றைய தொடர்ச்சிகள் ஆவர். 

கற்றறிவாளர் சமூகம் ஒருபுறத்தில் ஏட்டிலக்கியங்கள் வழியே இயங்க, மறுபுறத்தில் கற்றறிவில்லாதோர் நாட்டார் சமூகமாக இயங்கினர். ஏட்டுக்கல்வியறிவு பெற்றிராத இவர்களை ஏட்டிலக்கிய சமூகம் பெரிதும் கண்டுகொள்ளவில்லை. உழவு உட்பட பல்வேறு தொழில்களையும் கிராமங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கையையுமே இவர்கள் கொண்டிருந்தனர்.

மெய்யியல் இறைநெறிகள் தமிழருக்குள் காலூன்ற முன்னர், ஆளுமைச் சமூகத்துக்கும் ஆட்சிக்குட்பட்ட மக்களுக்குமிடையே நெருக்கம் இருந்தமைக்குச் சங்க இலக்கியங்கள் சான்றாக உள்ளன.

தமது மெய்யியல் கொள்கைகளையும் ஒழுக்கங்களையும் மக்களிடையே பரப்ப முயன்ற இறைநெறிகள் ஆளுமைச் சமூகத்தையும் கற்றறிந்தோரையுமே குறி வைத்தன. கல்வியறிவற்ற நாட்டார் சமூகத்தை அவை பெரிதும் கண்டுகொள்ளவில்லை. அதுமட்டுமன்றி, இந்து மதநெறிகள் வர்ணம் என்ற சாதியப்பிரிவை அறிமுகப்படுத்தித் தலித், தாழ்த்ப்பட்டோர் என்ற பெயர்களோடு பெரும்பாலான நாட்டுப்புற மக்களை தமது இறைநெறிக்கு வழிபாட்டுக்கு வெளியே வைத்தன. 1930களுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆலய நுழைவுப் போராட்டங்களுக்குப் பின்னரே நாட்டுப்புற மக்கள் மெய்யியல் வழிபாட்டு ஆலயங்களுக்குள் ஓரளவேனும் காலடி வைக்கத் தலைப்பட்டனர்.

நாட்டுப்புற மக்கள் கல்வியறிவு இல்லாதிருந்த பொழுதிலும் பல்வகைப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளில் பாதிப்புகளுக்குப் பெருமளவில் ஆளாகாவில்லை. இதனாலேயே பண்டைய தமிழரின் பண்பாட்டுத் தொடர்ச்சி இவர்களிடையே பாரியளவிலான மாற்றங்களுக்கு உட்படாமல் பேணப்பட்டு வந்திருக்கின்றது. ஓரினத்தின் பண்பாட்டு நிலைக்களன்களாகத் திகழ்பவை அவ்வனத்தாரின் நாட்டுப்புற வாழ்வியலே என வரலாற்று அறிஞர் பலர் குறிப்பிட்டிருக்கின்றனர். 
தமிழில் தோன்றிய இலக்கியங்கள் பலவும் தமிழ் வாழ்வியல் மரபுகளோடு, மெய்யியல் இறைநெறிக் கருத்துகளையும் பிறவினத்தோரது பண்பாட்டு மரபுகளையும் உள்ளடக்கிக் கூறியவற்றை செவ்வியல் மரபுகள் எனக் குறித்தன. 

கற்றறிந்தோர் வெளிகளுக்குள் மட்டுமே நின்றுலாவிய ஏட்டிலக்கிய மரபுகள், நாட்டார் மரபுகளைத் தவிர்த்தே வந்துள்ளன. மேட்டுக்குடியினர் (அறிவு - ஆளுமை) என்ற பரப்புக்குள் ஆளுமை செலுத்திய மெய்யியல் இறைநெறிகளோடு, இயைந்து இயங்கிய படைப்பாளிகள் பலரும் நாட்டார் வாழ்வியலைக் கண்டுகொள்ளாது விட்டனர். ஏறக்குறைய பதினைந்து நூற்றாண்டுகாலத் ஏட்டிலக்கிய வரலாறு,  நாட்டார் வழக்காற்றியலைப் பெரிதும் கண்டுகொள்ளவே இல்லை. குற்றாலக் குறவஞ்சி போன்ற ஓரிரு இலக்கியங்கள் மட்டுமே விதிவிலக்காக அமைந்தன.

தொன்மைக்காலந்தொட்டு நாட்டுப்புற மக்களே பழமை சான்ற பல்வேறு விழாக்களையும் சடங்குகளையும் பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் இன்றுவரை சுமந்து வந்தோராவர்.
ஆளுமைச் சமூகமும் அறிவுடைச் சமூகமும் பெரிதும் ஆரிய, ஆங்கில ஆளுமைக்குள்ளேயே அமிழ்ந்திருந்தன. தமிழரின் மொழி, சடங்கு, வழக்கம், இசை, ஆடல் போன்ற இனத்தின் தன்னியல்புச் சிறப்புகளை வெளிப்படுத்தவல்ல களங்கள் யாவற்றிலும் ஆங்கிலமும் ஆரியமும் ஊடுருவியிருந்தன. இவற்றின் வழியே மாற்றம்பெற்ற போக்குகளைச்; தமிழர் மரபுகள் என வெளிக்காட்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. நாட்டுப்புறத் தமிழர்கள் காலங்காலமாகக் கொண்டாடி வருகின்ற சிறப்புமிக்க பல விழாக்களையும் நடத்தைகளையும் மேட்டுக்குடி எனக் கருதிக்கொண்டோர் பெரிதும் கண்டுகொள்ளவில்லை. எனினும் பெரும்பாலான நாட்டுப்புற ஊரகங்கள் பிற பண்பாட்டுப் படையெடுப்புகளுக்கு உட்படாத தூய தமிழ்ப்பண்பாட்டுக் களங்களாகவே இருந்தன.

தமிழர் தேசிய விழாவான பொங்கல்: 

திராவிடச் சிந்தனையும் தனித்தமிழ் எழுச்சியும் ஏற்பட்டவேளை, தமிழர, தமது அடையாளங்களை இலக்கியங்களுக்குள் மட்டும் தேடவில்லை. தமிழரின் தனிச்சிறப்பு மிக்க பண்பாட்டுக் கூறுகள் மாசுமறுவின்றி பேணப்பட்டு வருகின்ற களங்கள் ஊரகங்களே எனக் கண்டுகொண்டனர். கலப்புறாத மரபுகளும் வேர்களும் நாட்டுப்புற ஊரகங்களில்தான் கண்டுகொள்ளப்பட்டன. இன்றளவில் தமிழர் பேர்றறம் பல பண்பாட்டுக்கூறுகள் அங்கிருந்து மீட்கப்பட்டவையே. 

தமிழர் நாட்டார் விழாக்கள் தனிச்சிறப்பு மிக்கவை. நாட்டார் வழக்காற்றியல் வாழ்வு, ஆடலும் பாடலும் நிறைந்த கொண்டாட்டமாகவே இருந்திருக்கின்றது. வாழ்வின் அனைத்துப் படிநிலைகளையும் பாடல்களாகவே பாடிக் கொண்டாடியிருக்கின்றனர். பல்வகைப்பட்ட ஆடற்கலைகளைக் ஆடி மகிழ்ந்திருக்கின்றனர். தாம் வழிபட்ட அனைத்து சிறுதெய்வங்களுக்கும் ஆண்டுதோறும் விழாவெடுத்துக் களிப்புற்றிருக்கின்றனர். உண்டி கொடுத்து உயிர்காக்கும் உழவுத்தொழிலை தெய்வத்துக்கு இணையாகப் போற்றிய தமிழர் அறுவடை நாட்களை வெகுசிறப்போடு கொண்டியிருப்பர் என்பதில் ஐயமில்லை.

நாட்டுப்புற மக்கள் எழுச்சியோடு கொண்டாடிய  தைப்பொங்கலான அறுவடைத் திருவிழாவின் சிறப்புகளைத் திராவிடச் சிந்தனையாளரும் தனித்தமிழ் இயக்கத்தோரும் நன்குணர்ந்தனர். பொங்கலின் சிறப்புகளை விரிவாக்கி, அதையே தமிழரின் தேசிய விழாவாக்கினர்.

மெய்யியல் இறைவழிபாட்டு நெறிகளிலிருந்து மாறுபட்ட, தமிரின் தனிச்சிறப்புகளை மட்டுமே சுமந்த ஒரு விழாவாகப் பொங்கல்விழாவைச் சிறப்புடையதாக்கினர். இதை அடியொற்றியே பாரதிதாசன்,

'தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள்
செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம்
பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய்
ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப்
பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்
எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்!
தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்!"  

என்ற பொங்கல் பாடலை எழுதினார். இப்பாடலில் ‘தலைமுறை தலைமுறை தவழ்ந்துவரும் நாள்’ எனப் பாவேந்தர் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

ஆவணித் திங்களில் விதை விதைத்து, அதை முளையாக்கிப் பயிராக்கி, வளர்த்து, இடர்களில் இருந்து காத்து விளைவித்துப் பயனை வீட்டுக்குக் கொண்டுவருதற்குச் சில திங்கள்களாகும். கடும் உழைப்பின் நிறைவில் உழவின் பயன் வீடு வந்தடையும்போது உழவர் சமூகம் பெறும்; மகிழ்வுக்கு அளவேயில்லை. அந்த மகிழ்வைத் தமிழர் அறுவடை விழாவாகவே கொண்டாடியிருக்கின்றனர். அதற்கான சான்றுகள் இலங்கியங்களில் நிறைவே உள்ளன. 'பொருபடை தரூஉம் கொற்றமும் உழவர் ஊன்றுகால் மருங்கின் ஈன்றதன் பயனே" எனப் புறநானூறு உழவைச் சிறப்பிக்கின்றது. பழந்தமிழ் இலக்கியங்கள் உழவுத்தொழிலுக்கு அடுத்தே போர்த்தொழிலைப் போற்றியிருக்கின்றன. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடு;த்தோர்’ என ஒரு புலவர் உழவர்களை உயர்த்துகின்றார்.

வாழ்வின் பல படிநிலைகளிலும் வேண்டுதல்களுக்காகவும் மனநிறைவுக்காகவும் பல்வேறு தெய்வங்களை வணங்கி விழாவெடுத்த தமிழர், அறுவடை நிறைவுற்ற நாளில் வயல் சிறக்கப் பேராதரவாய்த் திகழ்ந்த கதிரவனைப் போற்றி வணங்கியிருப்பர் என்பது இயல்பானதே.
மெய்யியல் இறைநெறிகள் வலுவாக வேரூன்றியிராத காலத்தில், சமணரான இளங்கோவடிகள், சிலப்பதிகாரத்தின் இறைவணக்கத்தில் 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்" எனக் கதிரவனையே வணங்குகின்றார். குடிமக்கள் காப்பியம் எனப் போற்றப்படும் சிலப்பதிகாரம் கூறும் கதிரவ வணக்கம் உழவுத்தொழிலோடு தொடர்புடையது என்பதையும் நாம் உணர வேண்டும்.

உழவைக் கொண்டாடும் உணர்வு மட்டுமன்றி, உழவு சிறக்க உதவிய இயற்கை இறையான கதிரவனையும் நன்றியோடு வணங்கும் பண்போடும் இணைந்து தோற்றம் கொண்டதே அறுவடைவிழாவென நாம் கருதலாம். தமிழர் வாழ்வில் உற்ற துணையாக விளங்கிய தோழமை உயிரி மாடு. உழவுத்தொழிலில் இணையற்ற பங்காற்றிய மாடுகளுக்கு நன்றிகூறும் உயரிய உள்ளம் கொண்டவர்களாகத் தமிழர் இருந்தனர். வாழ்வின் ஆதார இருப்பாக விளங்கும் உழவுத்தொழிலோடு இணைத்து பண்டைத்தமிழர்களால் படைக்கப்பட்ட கொண்டாட்டமாகவே அறுவடைவிழாவைக் கருதலாம்.

இன்று கொண்டாடப்படும் பொங்கல்விழா அறுவடைவிழாவின் தொடர்ச்சியே எனக் கடந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் இந்த விழா பல்வகை மாற்றங்களை உள்வாங்கியிருக்கக் கூடும் என்பதை நாம் மறுக்கவில்லை. பிறவினத்தோரின் கலப்பற்ற கிராமிய வாழ்வாக இருந்தபோதும் காலவோட்டத்தில் ஏற்படும் வாழ்வியல் மாற்றங்கள் இயல்பானதே. பண்பாடுகளும் மரபுகளும் கூட அசைவுகள் என்ற வகையில் மாற்றங்களை உள்வாங்கிச் செல்வது நடைமுறைக்கு ஏற்புடையது. தொன்மை சான்ற அறுவடைவிழாவானது, காலவோட்டத்தில் தைமாதத்துக்குரிய பொங்கல்விழாவெனப் பெயர் கொண்டு, தொடர்ந்து ஐந்து நாட்கள் நடத்தப்படுகின்ற கொண்டாட்டமாக விரிந்திருக்கின்றது.

ஐந்து நாட்களும் கொண்டாடப்படுகின்ற பொங்கல்விழா பற்றி விரிவாக நோக்குவோம்.

போகிப்பொங்கல்

போகி என்ற சொல் ‘போக்கி’ என்ற சொல்லின் திரிபாக வந்ததென்பர். பழையவற்றைப் போக்குதல் என்ற செயலின் வழியாகத் தோன்றியது போக்கி என்ற தொழிற்பெயர்ச் சொல். மார்கழி நிறைவு நாளன்று வீட்டைத் தூய்மைசெய்து பழைய பொருட்கள் யாவற்றையும் தீமூட்டி எரிக்கும் நிகழ்வே போகிப் பொங்கலாகும்.

கதிரவப்பொங்கலுக்காக வீட்டையும் சுற்றாடலையும் தூய்மை செய்வது வழமை. இடங்களைத் தூய்மைசெய்து, குப்பைகளையும் கழிவுகளையும் ஓரிடத்தில் குவிப்பர். அறுவடையின் வாயிலாகப் பயன்பெற்றுப் பல தேவையான புதிய பொருட்களை வாங்கக் கருதியிருப்பர். அவ்வேளை பல பயன்படாத பொருட்களையும் அகற்றி குப்பைகளோடு குவிப்பர். பின்னர் அவற்றுக்குத் தீமூட்டி எரித்து அந்த ஒளியில் ஆடி மகிழ்வர். வீட்டுக்கு வண்ணம் தீட்டுதல், மாடுகளைச் தூய்மைசெய்து பொங்கலுக்கு அணியம் செய்தல் என்பனவும் இந்த நாளில் நடைபெறுவன.

தமிழகக் ஊரகங்களில் பலவிடங்களில் இந்நாளன்று வைகறையில் நிலைப்பொங்கல் செய்வர். வீட்டின் முன்வாயில் நிலைக்கு மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச்செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வீட்டுத் தெய்வத்தை வணங்குவர். பெரும்பாலும் இவற்றைக் குடும்பத்தலைவி நடத்துவார்.
 
போகிப்பொங்கன்று இரவே வீட்டு முற்றத்தில் வட்டமாக சாணத்தால் மெழுகி வைப்பர். மறுநாள் பொங்கலுக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிப்பர்.

பழையவற்றை அகற்றும் இந்தநாளைக் கொண்டாட்ட நாளாகவே கருதினர் தமிழர். மறுநாட்களில் வரக்கூடிய விழா மகிழ்வின் தொடக்கமாகப் போகியைப் பொங்கலாகவே கருதிப் போற்றினர். ஆண்டின் நிறைவுநாள் என்பதால் கடந்த ஆண்டுக்கு நன்றிசொல்லும் விழா என்றும் சிலர் இதைக் கருதுவர்.
போகியன்று வேப்பிலை, ஆலாப்பூ, ஆவாரம்பூ போன்றவற்றை வீட்டுக்கூரையில் செருகுவர். இவை நோய்த்தொற்றைத் தடுக்கும் தன்மை கொண்டன.

வீட்டில் உள்ள குப்பை, கழிவுகளை எரித்தல் என்ற நிகழ்வை மெய்யியல் அடிப்படையிலும் சிலர் நோக்குகின்றனர். சிந்தையில் இருக்கும் துயரங்களையும் எதிர்காலம் பற்றிய அச்சங்களையும் அகற்றி, அவற்றையும் எரித்துப் புதிய ஆண்டைத் தொடங்குவோம் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விழாவாகவும் போகிப்பொங்கலைக் கருதுகின்றனர்.

இந்தநாளில் சிறுதானியங்களில் உணவு செய்வர். எள், பயறு, உழுந்து போன்ற தானியங்களில் உணவு செய்து சிறுதெய்வங்களுக்குப் படைத்துத் தாமும் உண்பர்.

இந்தப் போகித் திருநாளை வடநாட்டாரே அறிமுகப்படுத்தினர் என்றும் இதன் வழியாகப் பழைமை வாய்ந்த ஏடுகளையும் பாரம்பரிய பொருட்களையும் எரியூட்ட வழிவகுத்தனர் என்ற கருத்தும் உண்டு.

கதிரவப் பொங்கல். 

இந்நாளே தைத்திங்களின் முதல்நாளாகும். கதிரவன் வெப்பம் தரவல்ல வடதிசையை நோக்கி நகர்வதைப் போன்ற தோற்றத் தருகின்ற முதல்நாள். இதை வடமொழியில் சங்கராந்தி என்பர். மார்கழி மாதத்தில் பனியும் புகாருமாய் மூடிக்கிடந்த நிலம் கதிரவனின் வடசெலவோடு சற்ற வெளிக்க ஆரம்பிக்கும். தை முதல்நாள் தொட்டு, வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும். தைத்திங்களில் தொடக்கநாள் என்பதோடு, வெப்பகாலத்தின் தொடக்கநாளாகவும் அமைகின்ற நாளையே தமிழர் தம்முடைய அறுவடைவிழா நாளாகக் கொண்டாடினர்.

பண்டைக்காலத்தில் நெற்பயிர் முழுமையான பயனைத் தருவதற்கு நான்கு முதல் ஐந்து திங்கள்வரை செல்லும். ஆவணியில் விதையிட்டால் மார்கழித் திங்கள் இறுதியில் அறுவடை செய்வர். உழவின் வழியே பெற்ற பயனைக் கொண்டாடுவதற்கேற்ற காலமும் இதுவே. உழவர் பொருளாதார மேன்மை காணும் இத்திங்களின் சிறப்பைப் பலவழிகளிலும் போற்றியிருக்கின்றனர். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது பொதுவான பழமொழி.

உழவர்கள் வயலில் முதன்முதலில் அறுவடை முடித்து எடுத்துவந்த கதிர்களைப் ஓரிடத்தில் பேணிவைப்பர். பொங்கலன்று அந்தக் கதிர்களைக் குற்றி அரிசியாக்கி, அதில் பொங்கல் செய்து, அதைக் கதிரவனுக்குப் படைத்து தமது நன்றியுணர்வை வெளிப்படுத்துவர். 

கதிரப்பொங்கலன்று அதிகாலை வீட்டிலுள்ள அனைவரும் எழுந்து நீராடி புத்தாடை அணிவர். கதிரவன் தோன்றுவதற்கு முன்பாகவே முதல்நாள் மெழுகப்பட்ட சாணத்தரைமீது அரிசிமாவில் கோலமிடுவர். கோலத்தின் ஒருபுறத்தில் தலைவாலையிட்டு நிறைகுடம் வைப்பர். மங்கல விளக்குகளும் வைப்பர். கோலத்தின் நடுவே மூன்று கல் வைத்து அடுப்பு மூட்டுவர். மஞ்சளும்  இஞ்சியும் மாவிலையும் கட்டப்பட்ட புதிய பானையை அடுப்பிலே வைத்து தூயநீரூற்றிக் கொதிக்க வைப்பர். இதனிடையே கரும்பு, தோட்டத்தில் விளைந்த பல்வகைப் பழங்கள், விளைபொருட்கள் பலவற்றையும் பொங்கும் பானையைச் சுற்றி வைப்பர்.

நீர் கொதித்துவரும் வேளையில் பாலை ஊற்றுவர். பால் கொதிக்கும் நிலையில் பானையில் இருந்து பொங்கி வழியும். கதிரவன் தோன்றும் பொழுதில் இது நிகழ வேண்டும் என அனைவரும் விரும்புவர். அதுவும் கதிரவன் தோற்றும் திக்கை நோக்கிப் பால் பொங்கி வழியுமாயின் பொங்கலிடுவோர் பெருமகிழ்ச்சி கொள்வர். பால் பொங்கும் வேளைக்காகக் காத்துநின்ற குடும்பத்தார் அனைவரும் பால் பொங்கும் போது, ~பொங்கலோ பொங்கல்| எனச் சத்தமிட்டு மகிழ்வர்.

பின்னர் எடுத்து வைத்த அரிசியைக் குடும்பத்தலைவர் இருகைகளாலும் அள்ளியெடுத்து தெய்வீக உணர்வுநிலையில் பானையில் இடுவார். பின்னர் குடும்பத்தோர் அனைவரும் பானையில் அரிசி இடுவர். தொடர்ந்து ஏனைய பொங்களுக்குரிய பொருட்களும் வெல்லமும் சேர்க்கப்பட்டு, உரியவகையில் பொங்கல் ஆக்கப்படும். இதேவேளை ஏனையோர் அவல், கடலை, மோதகம் என்பவற்றையும் மற்றுமொரு அடுப்பில் செய்வர்.

இவையாவும் செய்யப்பட்டவுடன், நிறைகுடத்துக்கு முன்பாகத் தலைவாலையில் கதிரவன் எழுந்திருக்கும் திசை நோக்கி ஆக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் படைக்கப்படும். மங்கலவிளக்குகளைக் குடும்பத்தலைவி ஏற்றுவார்.  படைத்தவுடன் குடும்பத்தார் அனைவரும் சுற்றிநின்று கதிரவனை நன்றியோடு வணங்குவர். பலர் பாடல்களும் பாடுவர். உழவர்கள் கதிரவனை நோக்கி நிலத்தில் விழுந்து வழங்குவர்.

இவ்வேளை பெரும்பாலும் பிறதெய்வங்களை உழவர்கள் வணங்குவதில்லை. சாணத்தில் அறுகம்புல் செருகி வைத்து வணங்கும் வழக்கம் பின்னாளில் இடையிட்டுத் தோன்றியதாக இருக்க வேண்டும். பட்டாசு கொழுத்துதல் போன்றனவும் பின்னாட்களில் வணிக நோக்கத்தோடு அறிமுகமானவையாகும்.
பொங்கல் படைக்கப்பட்டு, கதிரவனை வழிபட்டபின், அனைவருமாகக் கூடியிருந்து பொங்கல் உண்டு மகிழ்வர்.  பின்னர் அயலோர் வீடுகளுக்கும் பொங்கலை எடுத்துச் சென்று வழங்குவர். தனித்து வாழ்வோருக்கும் துறவிகளுக்கும் இயலாதோருக்கும் பொங்கல் உட்பட பல்வகை உணவுப்பொருட்களைக் கொண்டுசென்று வழங்குவர்.

மாட்டுப்பொங்கல்

மாடு என்றால் செல்வம் என்பதே தமிழ் கூறும் உயர்பொருள். தமிழர்களின் மிக நீண்ட வாழ்வியலில் மாடுகள் பேரங்கமாகவே திகழ்ந்து வந்துள்ளன. மாடுகளுக்காகவே பெரும் போர்களும் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. தொல்காப்பியம் கூறும் புறத்திணையில் காணப்படும் போர் மரபுகள் ஆநிரை கவர்தலையும் காத்தலையும் அடிப்படையாகக் கொண்டவை.

மாடு என்ற விலங்கினம் உடலளவில் பலமானது என்ற போதிலும் மென்னியல்பு கொண்ட விலங்காக, மாந்தரோடு இயைந்து, இணைந்து வாழும் உயிரினமாகவே இருந்தது. தாம் வளர்க்கும் மாடுகளை உழவர்கள் குடும்ப உறுப்பினர்களாகவே கருதினர். பெண் மாடான பசு மாந்தரின் உணவுத் தேவைகளைக் பெருமளவில் நிறைவேற்றியது. ஆண் மாடான காளை உழவு, செலவு (பயணம்) போன்ற தேவைகளில் பெரும்பங்கு வகித்தது.

பண்டைய வாழ்வியலில், மக்களது செல்வத்தின் அளவு, மாடுகளை வைத்தே கணக்கிடப்பட்டது. மாடுகளைத் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றிய தமிழர், மாட்டிறைச்சி உண்பதை முற்காலம் முதலே தவிர்த்து வந்துள்ளனர்.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஆவினத்தைத் தமிழர் போற்றி வந்தமை மாடுகள் மீது அவர்கள் கொண்டிருந்த பேரன்பை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது.

உழவுத்தொழில் சிறக்க உதவியோர் அடுக்குகளில் கதிரவனுக்கு அடுத்த இடத்தை மாடுகள் பிடித்துக்கொள்கின்றன. இவை இரண்டுமே பயனை எதிர்பாராமல் மாந்தருக்கு உதவி வருகின்ற இயற்கையின் வளங்கள். அதனால் தமிழரின் உயர்ந்த நன்றிக்குரியவையாகிவிடுகின்றன. அந்த நன்றியறிதலைப் பெருங்கொண்டாட்டமாகவே நிகழ்த்தி வருகின்றனர் தமிழர்.
கதிரவப் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது. இதைப் பட்டிப் பொங்கல், கன்றுப்பொங்கல் என்றும் அழைப்பர். பொங்கல்நாளான்று காலை, மாடுகள் கட்டும் தொழுவத்தைத் தூய்மை செய்வர். மாடுகளை நன்றாகக் கழுவி அவற்றையும் தூய்மை செய்வர். கொம்புகளைச் சீவிக் கூராக்கி, பளபளக்கும் வண்ணங்கள் தீட்டுவர். கொம்புகளில் குஞ்சங்களும் கட்டுவர். கழுத்தில் தோல்பட்டைகள் அணிவித்து மணிகளும் கட்டிவிடுவர். மாடுகளில் நெற்றியில் பொட்டுகளும் வைப்பர். காளைகளுக்கு புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு போன்றவற்றையும் அணிவிப்பர்.

ஏர், கலப்பை போன்ற உழவுக்கருவிகளையும் தூய்மை செய்வர். எல்லாவற்றையும் ஓரிடத்தில் வைத்து பொட்டுகள் இட்டுச் சிறப்புச் செய்வர்.

பின்னர் மாலைப்பொழுதில் தொழுவத்துக்குள் அல்லது அதனருகே பொங்கல் செய்யத் தொடங்குவர். முதல்நாள் செய்த கதிரவப் பொங்கலைப் போலவே பல்வகைப் பழங்களும் தானியங்களும் மாட்டுப்பொங்கலின்போது படைக்கப்பட்டிருக்கும். மாடுகளுக்குப் பிடிக்கும் என்பதற்காக வெண்பொங்கல் செய்யும் வழக்கமும் உண்டு. பொங்கிய பின், விளக்கேற்றி, ஒளியேந்தி மாடுகளை வழிபடுவர். எல்லா மாடுகளுக்கும் பொங்கிய பொங்கலையும் பழங்களையும் காய்கறிகளையும் ஊட்டுவர்.
நிறைவில் 'பொங்கலோ பொங்கல், மாட்டு பொங்கல், பட்டி பெருகுக, பால் பானை பொங்குக, நோவும் பிணியும் தெருவோடு போக" என்று கூறி மாடுகள் பொங்கல் உண்டபின் அருந்திய மிகுதி நீரைத் தொழுவம் எங்கும் தெளிப்பர்.

ஐந்தறிவு கொண்ட விலங்குதானே, நன்றி சொன்னால் அதற்குப் புரியவா போகின்றது? என்றெண்ணி விட்டுவிடாமல் மாடுகளையும் மாந்தநேயத்தோடு போற்றும் பண்பு மானுடத்தின் உயர்ந்த இயல்பாகும். மாட்டுப்பொங்கல் இதையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

காணும் பொங்கல்:

பொங்கல் கொண்டாட்டங்களில் இது நான்காம்நாள் கொண்டாடமாகும். முதல் மூன்று நாட்களிலும் தமது குடும்பச் சூழலுக்குள் பொங்கலைக் கொண்டாடிய தமிழர், இந்த நான்காம்நாளைச் சமூகக் கொண்டாட்டமாக்கினர். ஊர்மக்களாக ஒன்றிணைந்து அன்பும் பண்பும் சிறக்க, இந்நாளைச் சமூகப் பெருவிழாவாகக் கொண்டாடுவர். இந்நாளிலே குடும்பமாகச் சென்று, பெரியோர்களைக் கண்டு, வாழ்த்துகள் பெறுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்நாளிலே கிடைக்கப்பெறும் பெரியோரின் வாழ்த்துகள் ஆண்டு முழுமைக்கும் நன்மை தரும் என்று நம்பினர்.

அன்றையநாள் ஊருக்கு நடுவே உள்ள திடலில் ஊர்மக்கள் கூடுவர். கொண்டுவந்த சிற்றுண்டிகளை ஊரவரோடு பரிமாறி உண்டு மகிழ்வர். ஒருவரையொருவர் கண்டு, அன்பு நெகிழப் பேசிக் உவகைகொள்வர். அந்தத் திடலில் பல்வகைக் கலைநிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருப்பர். பெரும்பாலும் நாட்டார்;கலைகள் யாவும் இங்கு வெளிப்படும். உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல், தலையணைச் சண்டை போன்ற விளையாட்டுகளுடன் பட்டிமன்றம், கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகளும் இந்நாளில் நடைபெறுவன.

இந்நாளிலேதான் ஏறுதழுவுதல் என்ற பழந்தமிழர் விளையாட்டான சல்லிக்கட்டும் இடம்பெறுகின்றது. தமிழர், காளை மாடுகளை எப்போதும் பலம் செறிந்ததாகவே வளர்ப்பர். உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் வலு மிகுந்த காளைகள் வேண்டும். இந்தக் காளைகள் சிலபொழுதுகளில் கட்டுக்கடங்காமல் திமிறிப் பாயவல்லவை. அவ்வேளை இக்ககாளைகளை அடக்கும் வல்லமைகளையும் நெறிமுறைகளையும் ஆண்கள் தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறான காளைகளை அடக்கவல்ல ஆண்கள் ஊர் நடுவே வீரர்களாகவே போற்றப்பட்டனர். காளைகளை அடக்கும் இளைஞர்களுக்கே தமது மகளைத் திருமணம் செய்து வைப்போம் என பல பெற்றோர் கருதி வந்துள்ளனர். போர்க்களத்தில் வீரர்களை அடையாளம் காணமுன், ஊரக மக்கள் ஏறுதழுவுதல் என்ற வீரவிளையாட்டின் வழியே தீரம்மிக்க இளையோரை அடையாளம் கண்டனர்.

மாடுகளை மந்தைகளாக மேய்க்கச் செல்லுமிடங்களில் மாடுகளைக் கவர்ந்து செல்லப் பகைவர்கள் வருவர். அவர்களை எதிர்த்து நின்று மாடுகளைக் காக்கவேண்டிய வீரமும் மேய்ப்போருக்கு இருக்கவேண்டும். மேய்ப்போரின் வீரத்தை அடையாளம் காணவும் ஏறுதழுவுதல் பயன்பட்டது. மேய்ப்போர் கொண்டுசெல்லும் நீண்டதடியைத் தற்பாதுகாபபுக்காகப் பயன்படுத்திச் சண்டையிடுவர். அதுவே பின்னாட்களில் சிலம்பாட்டம் என்றானது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏறுதழுவுதல் பற்றிய பல செய்திகள் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.

பிற்காலத்தில் மாடுகளின் கழுத்தில் பரிசுப்பொருட்களைக் கட்டி ஓடவிடுவர். அக்காளைகளை அடக்குவோர் அப்பரிசுகளை எடுத்துச் செல்வர். அதில் உலோகக் காசுகளைக் கட்டிவிடும் வழக்கமும் ஏற்பட்டது. கலகலக்கும் உலோகக் காசுகளைச் சல்லிக்காசு என்றழைக்கும் வழக்கம் இன்றும் ஊரகங்களில் உள்ளது. இதுவே சல்லிக்கட்டு என்றழைக்ப்பட்டு இன்று ஜல்லிக்கட்டாக மருவி நிற்கின்றது. இதனை ஒரு சாரார் மஞ்சுவிரட்டு என்றும் அழைத்து வருகின்றனர்.

நான்காம் நாளான காணும்பொங்கல், கலைநிகழ்ச்சிகளும் விளையாட்டுகளும் நிறைந்த விழாவாகவும் சமூக ஒருமைப்பாட்டை ஆழமாகவும் மீளவும் வலியுறுத்தும் பொதுமைக்களமாகவும் இன்றும் திகழ்ந்து வருகின்றது.

இந்நாளைக் கணுப்பொங்கல் என அழைக்கும் ஒரு வழக்கமும் இருக்கின்றது. இந்நாளில் கணுப்பிடி என்னும் ஒருவகை நோன்பைப் பெண்கள் கடைப்பிடிப்பர் என்றும் தம்மோடு உடன்பிறந்த ஆண்மக்கள் நலமாக இருக்க வேண்டும் என வேண்டி இந்த நோன்பு கடைப்பிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்நாளில் சல்லிக்கட்டு விளையாட்டில் ஈடுபடப்போகும் ஆண்கள், புண்படாது நலமாகத் திரும்ப வேண்டும் என்று பெண்கள் வேண்டுவது இயல்பானதே. இப்போது இந்த நோன்பு பெரிதும் வழக்கத்தில் இல்லை.

சிற்றில் பொங்கல்:

சிற்றில் பொங்கல் இப்போது பெருவழக்கில் இல்லையென்றே கூறலாம். தொடர்ந்து நான்குநாள் கொண்டாட்டத்தின் பின் வீட்டுப் பெண்கள் பலரும் சோர்வடைந்திருப்பர். இந்நிலையில் இந்த ஐந்தாம் நாளில் வீட்டிலுள்ள சிறுபெண்களே சமையல் செய்யப் பணிக்கப்படுவர். அதாவது விடலைப் பருவத்தினரான சிறுபெண்கள் பெரியோருடைய துணையுடன் தாமாகவே சமையல்செய்து பெரியோருக்குப் பரிமாறுவர். இச்சிறுபெண்கள் சமையலைக் கற்றுக்கொண்டு, ஏனையோருக்குப் பரிமாறும் முறைகளைத் தெரிந்து கொள்ளும் நாளாகவும் இது அமைகின்றது. இந்நாளில் இவர்களின் சமையல் திறனை ஊக்குவித்துப் போற்றுவர் பெரியோர்.

சிறிய இல் என்ற பொருள்பட, சிற்றில் என்ற சொல் இங்கு கையாளப்பட்டுள்ளது. சிறுமியர் மணலில் கட்டி விளையாடும் சிறு வீட்டையும் சிற்றில் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.
இவ்வாறாக பல்வேறு சிறப்புகளுடன் இந்த ஐந்து நாட்களும் தொடர்ச்சியாகக் கொண்டாடப்பட்டன. இதுபோன்று தொடர்ச்சியாகக் கொண்டாடும் இனஞ்சார்ந்த விழாக்கள் தமிழரிடையே வேறில்லை.

பொங்கல் வெளிப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகள்.

பொதுவாகப் பண்பாட்டுக் கூறுகளை அகச்சார்பு, புறச்சார்பு என இருவகையாகப் பிரிக்கலாம். ஓரு மானுடக் குழுமத்தின் தன்னியல்புச் சிறப்புமிக்க வாழ்வியலோடு இரண்டறக் கலந்து காலங்காலமாகப் பேணப்பட்டு வருகின்ற நடத்தைகளை அகச்சார்புக் கூறுகள் எனக் கருதலாம். விருந்தோம்பல், நன்றியறிதல் போன்றன அகத்திலிருந்து மலர்கின்ற பண்பாட்டுக் கூறுகளாகும். பொங்கல்விழா தமிழர் வாழ்வியலின் பல அகக்கூறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 

தீபாவளி என்ற பண்டிகையும் தமிழரால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இது வடநாட்டாரின் மெய்யியல் இறைநெறியைத் தழுவிய கொண்டாட்டம். தென்னிந்தியர் இந்தப் பண்டிகையை எவ்வித ஆழமான பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டிராமல், மகிழ்வுற்றுப் பொழுதுபோக்கும் விழாவாகவே கொண்டாடி வருகின்றனர். இவ்விழாவும் தமிழருடைய கொண்டாட்டக் கூறுகளில் ஒன்றாகிவிட்டது. இது தமிழருடைய தனிச்சிறப்பான அகக்கூறோடு ஒட்டாமல் புறத்தே நிகழ்கின்ற விழாவாகவே இருக்கின்றது. எனவே இது புறச்சார்பு பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டதாகும்.
தமிழ்மக்களுடைய அகவியலின் அதியுயர்ந்த வெளிப்பாடாகப் பொங்கல்விழாவைக் கருதலாம். இனி பொங்கல் வெளிப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகளை ஒவ்வொன்றாக நோக்குவோம்.

அன்புடை உள்ளம்

விலங்குநிலை வாழ்விலிருந்து மாந்தரை விடுவித்துப் பண்புடை உலகத்துக்கு இட்டுச் சென்றது அன்பு என்ற உயர்வுணர்வே. அன்பெனும் ஊற்றை உள்ளமெங்கும் நிறைத்து அதைப் பண்படுத்தி உயர்ந்தோர் மாந்தர். அன்புநிலை வழியாக பற்று, பக்தி, அருள், இரக்கம் என்ற நல்லுணர்வுகள் மனதிடையே விளைந்தன. குடும்பவாழ்வையும் கூட்டுவாழ்வையும் அன்பென்ற அகவுணர்வே கட்டமைத்தது. அன்பின் வழிநின்று கூடிவாழ்தலின் ஊடாகப் பற்றும் பக்தியும் விழாக்களும் உருவாகின. உள்ளத்தின் பெருக்கெடுத்த அன்பூற்றின் உயர்ந்த அடையாளமாக பொங்கல்விழாக் கருதலாம். தொழில் மீதும் அது சிறக்க உதவியோர் மீதும் கூடி வாழ்வோர் மீதும் கொண்டிருந்த பேரன்பின் வெளிப்பாடே பொங்கல்விழா. பொங்கல்விழா வாயிலாக வெளிப்படும் அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளுக்கும் இந்த அன்பே திறவுகோலாக அமைகின்றது.

அரிசிப் பண்பாடு:

தமிழர்களின் முதன்மை உணவு அரிசியே. 'வரப்புயர நெல் உயரும்" என்ற ஒளவையின் கூற்றே இதற்குச் சான்றாகும். உணவே உயிரிருப்பின் தளம். அத்தளத்தின் களம் நெல் விளையும் வயல். வயல் வழியே விளைந்து வருகின்றது அரிசி. இந்த அரிசியைக் கொண்டே பல்வகை உணவுக் பொருட்களை ஆக்கி, உண்டு மகிழ்ந்தனர் தமிழர். அரிசியைக் கொண்டு பல்வகை உணவுப் பொருட்களைச் செய்துண்ணும் பண்பாடு தென்னிந்தியர்களுக்கே உரியது. அரசியோடு வெல்லம், பால் சேர்த்து பொங்கும் மரபு தென்னிந்தியர்களிடம் மட்டுமே காணப்படுவதாகும்.

அரிந்துகால் குவித்த செந்நெல்' (அகநானூறு 116ம் பாடல்)
'பழஞ்செந்நெல்லின் முகவைக் கொள்ளாள்' (அகம்- 126)
'பால் பெய்செந்நெற் பாசவல் சேற்றோடு' (அகம்- 237)
'வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்' (அகம்- 40)
'வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை' (அகம்- 96)
'வெண்ணெல் வைப்பின் நல்நாடு பெறினும்' (அகம்- 201)

என்ற சங்கப்பாடல் வரிகள் நெல்லின் சிறப்பை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவாகக் கூறியிருக்கின்றன.

'உயர் நெல்லின் ஊர்கொண்ட உயர் கொற்றவ" (மது.83) என்று, நெல்லின் சிறப்பைக் கொண்டே பாண்டியன் நெடுஞ்செழியன் போற்றப்படுகின்றான்.

சங்க இலக்கி;யங்கள் நெல்லின் பல வகைகளைக் குறிப்பிடுகின்றன. குளத்தின் நீரைப் பெற்று விளையும் நெல்லை 'வெண்ணெல்' என்றும் வானம் பார்த்த பூமியில் மழையை நம்பி விளையும் நெல்லை 'ஐவன வெண்ணெல்' என்றும் குறிப்பிட்டனர். நெல்லில் இருந்து தோன்றுபவற்றை அரிசி, சோறு, வல்சி, அடிசில் எனப் பல்வகைப் பெயர்களால் அழைத்தனர்.

உலகில் பேசப்படும் பல மொழிகளுக்கும் அரிசி என்ற சொல்லைத் தமிழே வழங்கியிருக்கின்றது என்பதிலிருந்து தமிழருக்கும் அரிசிக்கும் உள்ள நெருக்கத்தைப் புரிந்து கொள்ளலாம். பின்னாட்களில் நிறைகுடத்தின் கீழே நெல் அல்லது அரிசி வைக்கும் வழக்கமும் ஆகம முறைப்படி நடக்கும் சடங்குகளில் அரிசி தூவி வாழ்த்தும் பண்பும் அரிசியைத் தமிழர் போற்றியiமைக்குச் சான்றாகின்றன.
தமிழருடைய உணவுகளில் அரசியாகத் திகழும் அரிசியை முதன்மையாகக் கொண்ட பொங்கல்விழா தமிழரின் உணவுப் பண்பாட்டின் உயரிய அடையாளமாகத் திகழ்கின்றது.

தொழிலைப் போற்றுதல்:

ஒவ்வொருவரும் செய்யும் தொழிலே அவரவர் வாழ்வுக்குத் தளமாக அமைகின்றது. வாழ்வாதாரமான தொழிலை மதித்துப் போற்றுவதும் மானுடப் பண்புமாகின்றது. இதையே பாரதியார் ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்றார். எனினும் உழவுத்தொழிலை மாந்தர் அனைவரும் போற்ற வேண்டும் என்பதைத் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் பெரிதும் வலியுறுத்தியுள்ளன.

உலகப்பொதுமை கொண்டு, மானுடத்துக்கான நன்நெறிகளை உரைத்த வள்ளுவர் தொழில்களில் உழவை மட்டுமே சிறப்பித்துள்ளார். உழவுக்கென ஓர் அதிகாரத்தை அவர் ஒதுக்கியிருப்பதே உழவின் சிறப்பை வெளிப்படுத்திவிடுகின்றது.

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை” (உழவு: குறள் 1031)

என்ற குறள் வாயிலாக, ‘உலகமே உழவை நம்பிச் சுழன்றுகொண்டிருக்கின்றது. அதனால் உழவே தலை’ என உழவை உயர்த்தி உரைக்கின்றார் வள்ளுவர். உண்டி தந்து உயிர்காக்கும் உழவுத்தொழிலைப் போற்றிக் கொண்டாடுவது உயர்வானதொரு மானுடப் பண்பு என்பதைப் பலரும் வலியுறுத்தியுள்ளனர். இராமாயணம் என்ற ஒப்பற்ற நூலை எழுதிய கம்பர், ஏர் எழுபது என்ற படைப்பினூடாக உழவைப் பெரிதும் போற்றியுள்ளார்.வரலாற்றுக் காலந்தொட்டே தமிழர் உழவுத்தொழிலைப் மிகவுயர்வாகப் போற்றி வந்துள்ளனர். 

பொங்கல்விழா உழவுத்தொழிலைக் கொண்டாடும் ஒப்பற்றதோர் விழா என்பதில் எவருக்கும் ஐயமில்லை. தொழில் போற்றும் மானுடப் பண்பைத் தமிழர் இ;வ்விழா வழியே வெளிப்படுத்துகின்றனர். இப்பண்பின் வழியே வளர்த்த தமிழர் தாம் செய்யும் ஏனைய தொழில்களையும் போற்றிவருவதைக் காணலாம்.

நன்றியுணர்வு: 

மானுடச் சிந்தையில் தோன்றும் ஒப்பற்ற பண்புணர்வுகளில் தலையாயது நன்றியுணர்வு. ஒருவருக்கு உதவுதல் பொதுமையான மானுடப் பண்பு. ஏற்கனவே உதவிய ஒருவருக்கு உதவுதல் ஒருவகைக் கடன். அதனால்த்தான்  'நன்றிக்கடன்' என்றார்கள்.

தொழிலில் உழவைச் சிறப்பித்த வள்ளுவர் பண்புகளில் நன்றியறிதலைச் சிறப்பிக்கின்றார்.

'எந்நன்றி  கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு' 

என்ற குறள் வாயிலாக, ‘நன்றி மறந்தவர்க்கு உய்வே இல்லை’ என்கின்றார் வள்ளுவர். வள்ளுவருக்கு முன்பாகவே சங்க இலக்கியங்களில் நன்றி தொடர்பான பண்புகள் கூறப்பட்டுள்ளன. தமிழர் நன்றியறிதல் என்ற பண்பொழுக்கத்தைக் கைக்கொண்டவர்களாக இருந்துள்ளனர். அவ்வொழுக்கத்தைப் பொங்கல்விழா வாயிலாகச் சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
உலகுக்கு மழையும் வெய்யிலும் தந்து காப்பவன் கதிரோன். கதிரவனின் செயற்றிறத்தாலே உலகம் இயங்குகின்றது. வாழ்வு பெறுகின்றது. தமிழர் இதை நன்குணர்ந்திருந்தனர். தமது வாழ்வின் ஏற்படும் நன்மைதீமைகளுக்காகப் பல்வேறு தெய்வங்களை வழிபட்ட தமிழர், உழவுத்தொழில் தொடர்பில் கதிரவனையே நன்றிக்குரிய முதற்பொருளாகக் கருதினர். இவர்கள் நன்றி கூறாவிடில், கதிவன் சினங்கொள்ளப் போவதில்லை, கதிரவனுக்குப் பழிவாங்கவும் தெரியாது. எனினும் ஒளிதந்து காத்த கதிரவன் மேல் இவர்கள் பேரன்பு கொண்டிருந்தனர். அந்த அன்பின் வழிநின்று கதிரவன் மீதான தமது நன்றிப் பெருக்கை வெளிப்படுத்தினர். இந்த நன்றி வெளிப்பாடு தமிழ் மாந்தருக்குப் பெரும் நிறைவைத் தந்தது. அந்த நிறைவே நன்றியுணர்வை வலுப்படுத்துவதாகவும் அமைந்தது.

தமிழரின் நன்றியறிதலின் மற்றுமொரு சிறப்பு, மாடுகளுக்கு நன்றி கூறும் பண்பு. இந்தப் பண்பொழுக்கத்தின் அகவுணர்வைப் புரியாமல் வெளியே நின்று நோக்குவோருக்கு, மாடுகளுக்கு நன்றி சொல்வது மூடநம்பிக்கையாகத் தோன்றக் கூடும். ஆனால் அதுவே நன்றி கூறும் மானுடப் பண்பின் உச்சநிலை என்பதை உணர வேண்டும். ஐந்தறிவு கொண்டதும் வாய் பேசாததுமான மாடுகள் உழவருக்கு ஆற்றிய உறுதுணையை மனதில் இருத்தி, அவற்றை தமது உறவுகளாகவே போற்றிய தமிழர் மாண்புநிறைப் பண்பு இது. பிறவுயர்களையும் தம்முயிர் போல் போற்றும் மாந்தநேயத்தை மாட்டுப்பொங்கல் நிகழ்வு வெளிப்படுத்துகின்றது.  

இந்நாளில் தமக்கு உதவியோருக்கு அன்பளிப்புகள் வழங்குவதையும் உழவர்கள் கொண்டுள்ளனர். உழவு சிறக்க உதவிய தொழிலாளர்களுக்கு நன்றியுணர்வுடன் புத்தாடைகள், பரிசுப்பொருட்களையும் வழங்குவர். இன்று உழவர்கள் மட்டுமல்ல, வணிகர்களும் இவ்வாறு பல அன்பளிப்புகளைத் தமது பணியாளருக்கு வழங்குவதுண்டு.

கூட்டுணர்வு

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறி வைத்தோர் தமிழர். பல்வேறு படிநிலைகளில் கூடிச் செயலாற்றும் பண்பு, பண்டைக்காலம் தொட்டே நிலவி வந்துள்ளது. தமிழர்கள் விருப்போடு மேற்கொண்ட விழாக்கள் அனைத்தும் கூட்டுணர்வின் வெளிப்பாடே. போர்களும் பிளவுகளும் இருந்தபோதும் சான்றோரும் சமூகமும் கூட்டுணர்வை வலியுறுத்தியே வந்துள்ளனர்.
'ஊரொடு பகைக்கின் வேரொடு கெடும்", 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" போன்ற முதுமொழிகள் கூட்டுணர்வுக்கு வலிமையூட்டும் நோக்கிலே தோன்றியவை. விழைவு என்ற சொல்லிலிருந்து பிறந்ததே விழா என்பதாகும். ஊரோடு கூடி உறவாடும் நோக்கோடு ஏற்பட்ட விழைவே விழாக்களானது.
அவ்வாறான விழாக்களில் பொங்கல்விழா முதன்மையிடத்தைப் பெறுகின்றது. பொங்கல்விழா நடைபெறுகின்ற ஐந்து நாட்களும் குடும்பமாகவும் சுற்றாடலாகவும் ஊராகவும் கூடியே கொண்டாடுகின்றனர். கருத்து வேறுபாடுகள் கொண்டோரும் இந்த நாட்களிலே வேற்றுமைகளைத் துறந்து ஒற்றுமையாகிவிடுகின்றனர். மாந்தநேயத்தின் அடித்தளம் இந்த கூட்டுணர்வே. பலமாகக் கட்டமைக்கப்பட்ட கூட்டுத்தளத்திலிருந்தே பண்பாடும் மரபுகளும் முழுமையை நோக்கி வளர்ந்து வடிவம் கொள்கின்றன. 

சமுதாயத்தின் கூட்டுணர்வை ஆண்டுதோறும் வலிமைப்படுத்துவதோடு, ஒருவரையொருவர் புரிந்தும் இணைந்தும் செயற்படுவதற்குரிய களங்களையும் பொங்கல்விழா உருவாக்கிக் கொடுக்கின்றது. காணும்பொங்கலன்று கூடுவோர் புதிய உறவுகளையும் அறிமுகமாக்கிக் கொள்கின்றனர். அன்பும் உறவும் நட்பும் இதன்வழியே வளம் பெறுகின்றன.

தலைமுறை தலைமுறையாகக் ‘கூட்டுக் குடும்பவாழ்வு’ என்ற பண்பொழுக்கத்தை இன்றும் கைக்கொண்டு வருபவர்களாகத் தமிழர் திகழ்கின்றனர். இதற்குத்  தளமிட்டுவரும் விழாக்களில் பொங்கலே முதன்மையானது.

விருந்தோம்பல்

மானுடப் பண்புகளில் விருந்தோம்பலுக்குத் தனியிடமுண்டு. தமிழர் இலக்கியங்கள் விருந்தோம்பலைப் போற்றிய அளவுக்கு வேறு எந்த பண்பையும் போற்றியதாகத் தெரியவில்லை. வீட்டுக்கு வருவோரையும் நல்ல உணவையும் ‘விருந்து’ என்ற ஒரு சொல்லால் அழைக்கும் பண்பு தமிழர்களுக்கே உரித்தானது.

'உண்டால் அம்ம, இவ் உலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதுஆயினும், 'இனிது' எனத்
தமியர் உண்டலும் இலரே..." 
எனப் புறநானுறு கூறுகின்றது.

~இந்திரருக்குரிய அமிழ்தம் தமக்கு வந்து கூடுவதாயினும் அதனை இனிதென்று கொண்டு தனித்து உண்டவர் இல்லை| என்கிறது இப்பாடல்.

பொங்கல்விழாவின் உயர்வானதொரு பண்பியல் அங்கம் விருந்தோம்பல். பொங்கல்விழா ஒரு குடும்பத்துக்குள் நிகழ்த்தப்பட்டாலும் அது, அச்சுற்றாடலின் வாழும் தனித்தோர், துறவியர், வறியோர், பிறவினத்தோர் எல்லோரையும் தேடிச்சென்று பொங்கலைக் கொடுத்து விருந்தோம்பும் பண்பையும் போற்றி நிற்கின்றது. கொடுத்துண்டு வாழும் பண்பை தலைமுறைதோறும் ஊட்டிச் செல்லும் பண்பறி களம் பொங்கல். 

ஆக்கம் போற்றுதல்

சமூகம் சார்ந்த விழாவொன்றைக் கொண்டாடுவதற்குப் பல நோக்கங்கள் உள்ளன. தமிழருக்கே உரித்தான பல நாட்டுப்புறச் சமூகவிழாக்கள் ஆக்கவுணர்வை அடிப்படையாகக் கொண்டன. ஆக்கவுணர்வைக் கொண்டாடுவதிலும் பொங்கல்விழாவே முதனிலை பெறுகின்றது. தமிழர் உற்பத்திச் சமூகமாகத் தம்மை உருவாக்கிக் கொண்டு, உணவுப்பொருளாக்கத்தில் தம்மை வெகுவாகவே ஈடுபடுத்திக் கொண்டனர். பயிர்செய்தலும் மந்தை வளர்தலும் அன்றாடவாழ்வின் அங்கங்களாயின. உற்பத்தியாக்கத்தில் வெற்றியும் நிறைவும் கண்ட தமிழர் ஆக்கிய பொருட்களைக் கொண்டாடிப் போற்றும் பண்பையும் பெற்றனர்.

தீபாவளி அழிவைப் போற்றும் விழாவாகும். திருமால் நரகாசுரனை அழித்தமைக்காகத் தீபாவளியைக் கொண்டாடுவதாக வடநாட்டார் கூறுகின்றனர். இது அழிவு தொடர்பான சாவுணர்வையே வெளிப்படுத்துகின்றது. வடநாட்டாரின் பல்வேறு விழாக்கள் அழிவின் வழியாக விளைந்தவையாகவே இருக்கின்றன. மகிஷாசுரன், சூரன், இரணியன், இராவணன் என, வேண்டாதவர்களை அழித்தமையையே விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

தமிழரோ பெரிதும் ஆக்கங்களைப் போற்றும் விழாக்களையே கொண்டாடி வருகின்றனர். ஆடிப்பிறப்பு, கார்த்திகை விளக்கீடு என்பன இதற்குச் சில சான்றுகள். பொங்கல்விழா அதியுயர்ந்த ஆக்கவுணர்வின் வெளிப்பாடாகும்.

பெரியோரைப் போற்றுதல்

பொங்கல்விழாவின்போது பெரியோர் அனைவரும் சுறுசுறுப்பாகப் பல பணிகளில் ஈடுபட்டுச் சுற்றிச் சுழன்று செயலாற்றுவர். பெரியோரின் இச்செயற்பாடுகளே சிறியோரின் வாழ்வுக்கான பாடங்களாகின்றன. பொங்கல் கொண்டாடுகின்ற முறைகளையும் காரணங்களையும் பெரியோரிடம் கேட்டறியும் சிறியோர், இயல்பாகவே பெரியோரிடம் பெருமதிப்புக் கொள்வர். அவர்களையே தமது வழிகாட்டியாக்கி ,அவர்களைப் போன்றே செயற்பட முனைவர்.  பொங்கல்விழா சிறியோருக்குப் பண்பறிவிக்கும் ஒருவகைப் பள்ளியே.

ஊரில் வாழும் பெரியோர்கள் பலரும் இந்தப் பொங்கல்விழாவை ஊர்விழாவாக முன்னின்று நடத்துவர். அவரிலும் மூத்தோர், கூடவேநின்று நல்ல அறிவுரைகளை வழங்குவர். அவ்வாறான பெரியோரை இளையோர் தேடிச்சென்று வாழ்த்துகள் பெறுவர். அப்பெரியோரை மனதிருத்தி உயர்வாகப் போற்றுவர். பொங்கல்விழா வாயிலாகப் பெரியோரைப் மதிக்கும் பண்பு சிறப்பாகவே போற்றப்பட்டு வருகின்றது.

கலை வெளிப்பாடுகள்:

நெடிய வாழ்வியலைக் கொண்ட இனத்தின் அனைத்து அசைவுகளிலும்  கலையின் இயக்கம் இரண்டறக் கலந்திருக்கும். அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நடத்தையிலும் அது இழையோடிக்கொண்டிருக்கும். உரலில் இடிக்கும்போதும் அம்மியில் அரைக்கும்போதும் எழும் தாளலயங்களைச் சுவைத்தவாறே பணிகளைச் செய்வர்.

நாட்டுப்புறத் தமிழர் வாழ்வு அளவிறந்த கலைகளால் நிறைந்தது. அவைகளில் கைவினைக் கலைகள், நிகழ்த்து கலைகள் என்பன முதன்மையானவை. விழாக்காலங்களில் கலைஞர்கள் அரங்கிலும் பொதுவிடங்களிலும் நிகழ்த்துபவை நிகழ்த்துகலைகள் எனப்படுவன. ஓரினத்தாரின் மரபுகளையும் பண்பாட்டையும் காலந்தோறும் பேணிச்செல்வதில் நிகழ்த்துகலைகளுக்கு முக்கியபங்கு உண்டு.
இவ்வாறான கலைவெளிப்பாடுளுக்கான சிறந்தவொரு களமாகவும் பொங்கல்விழா திகழ்கின்றது. தமிழகத்தின் ஊர்கள்தோறும் நடைபெறும் பொங்கல் கலைவிழாக்கள் ஒவ்வொன்றுமே தனிச்சிறப்புக் கொண்டவை. கலை நிகழ்த்தப்பெறும் மரபுகளும் அவை வெளிப்படுத்தும் பண்பாட்டுக்கூறுகளும் இடத்துக்கிடம் வேறுபட்டுக் காணப்படும். ஈழத்தில் கிழக்குப்பகுதிகளின் கூத்துமரபு வடமோடி எனில், வடக்கின் மரபு தென்மோடியாகும். தமிழகமெங்கும் இந்த வேறுபாடுகளைக் காணலாம். இவையாவுமே தமிழருக்குப் பொதுவான கலைமரபுகளே. 

இவ்வாறான மாறுபாடுடைக் கலைவடிவங்களை பொங்கல்விழாவின்போது ஊர்கள் தோறும் காணலாம். தமிழர்கள் பயன்படுத்தும் பெரும்பாலான மரபுசார் இசைக்கருவிகளும் இக்காலங்களிலே பயன்படுத்தப்படும்.

பரதம், கர்நாடக இசை போன்ற வைதீக நெறிகளோடு கலந்துவிட்ட தமிழர்கலைகளை விடவும் நாட்டுப்புற மக்கள் போற்றிவரும் கலைகளிலேயே தமிழரின் தொடர்ச்சிமிக்க மரபுகளையும் தன்னியல்புச் சிறப்பான அடையாளம் காணலாம். இதற்குப் பொங்கல்விழா விரிவான களங்களை அமைத்துக் கொடுக்கின்றது.

நாட்டார் விளையாட்டுகள்: 

இக்காலத்தில் அனைத்துலக விளையாட்டுகள் பல, மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றபோதும் தாயக ஊரகங்கள் எங்கும் மரபுசார் விளையாட்டுகள் பேணப்பட்டு வருகின்றன. காணும்பொங்கலன்று பொதுவெளிகளில் பல்வேறு நாட்டார் விளையாட்டுகளைச் சிறப்பாக நடத்துவர்.
உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல், கிளித்தட்டு, கபடி, சடுகுடு போன்றன நாட்டார் விளையாட்டுகளுள் சிலவாகும். பொங்கல்விழாவின்போது இவை பெரும்போட்டிகளாக நடத்தப்படும். இளைஞர்கள் ஆர்வத்தோடு இதில் கலந்துகொள்வர்.

இவ்வாறான மரபுவழி விளையாட்டுகளை உயிர்ப்போடு காத்துச் செல்வதிலும் பொங்கல்விழா பெருமளவில் பங்காற்றி வருகின்றது.


முடிவரை:

தமிழரின் மிக நீண்ட வரலாற்றோடு இணைந்து வலுவான தளத்தில் உயர்ந்த பண்பாட்டின் குறியீடாக இன்றளவும் இயங்கி வருகின்றது பொங்கல்விழா. தொடக்ககாலத்தில் அறுவடைவிழாவாகத் தோற்றங்கொண்டு, காலவோட்டத்தில் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளையும் ஏற்று, பொங்கல் என்ற பெயரோடு தமிழ்த் தேசியவிழாவாகப் பெருவளர்ச்சி கொண்டிருக்கின்றது இவ்விழா.
உலகளாவிய நிலையில் தன்னியல்புச் சிறப்புமிக்க இனங்கள் பலவும் ‘உலகமயமாதல்’ என்ற பேராயுதத்தால் தாக்குண்டு, மெல்லமெல்லத் தமது இயல்புகளை இழந்துவரும் பேரிடர்; நிகழ்ந்துவருகின்றது. இவ்வாறான இனங்கள் தமது தனிச்சிறப்பு மிக்க நடத்தைகளின் வேர்களைக் கண்டறிந்து, அவற்றைத் தலைமுறைதோறும் புகட்டுதல் முதன்மையானது.

தமிழரைப் பொறுத்தளவில் தைப்பொங்கல்விழாவை முழுமையாகப் புரிந்துகொண்டாலே போதுமானது. தமிழினத்தின் வாழ்வியல் சிறப்பியல்புகளை எளிதில் அடையாளங்காண அது வழிவகுத்துவிடும்.
தாயகங்களில்  மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் நிலையாக வாழத்தலைப்பட்டுவிட்ட தமிழர், தமது வாழ்தளங்களில் இனஞ்சார் பண்பாட்டு விழுமியங்களையும் மரபுகளையும் பேணிச்செல்லவல்ல களமாகவும் பொங்கல்விழாவே திகழ்கின்றது.

பொங்கலைப் போற்றி எமதெழில் காப்போம்.


துணை நின்ற தளங்களும் நூல்களும்
திராவிட மானுடவியல் - பக்தவத்சல பாரதி
பண்பாட்டு வேர்களைத் தேடி - நாட்டார் வழக்காற்றியல் மையம்
நாட்டுப்புறவியல் - முனைவர் சு. சண்முகசுந்தரம்
சங்க இலக்கியங்கள்
திருக்குறள்
பண்பாட்டு அசைவுகள் - தொ.பரமசிவன்
http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/23405/10/10_chapter%205.pdf