Friday, November 11, 2022

ஆண்களுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்!

 ஆண்களுக்கான தமிழ்ப் பெயர்கள்! 

இப்பெயர்கள் வடமொழிக்கலப்பு அற்றவை, அத்துடன் பொருள் செறிந்தவை.

அறிவன், அறிஞன்,அழகன்,அழலன், அன்பன், அருள், அருளன், அதியன், அனைத்தன், அரணன், அமுதன், அமிழ்தன், அகண்டன்,அகத்தியன், அகவன், அகில்,அங்கயன், ,அண்ணல்,அண்ணாவி, அணியன், அம்பரன், அம்பலன்,அமரன்,அரங்கன் .அரன், அரவணையன், அறன்,  அரியன், அருந்திரள், அருகன், அருங்கலன், அருளி, அரும்பன், அளியன், அனலன் ,அழல்வண்ணன், அறவோன், அறவாழி,அறவாணன், அறுமுகன்,அனிச்சன், ஆழன், அரசன், அஞ்சுகன், அகன், 

ஆதன், அறிவன், ஆடகன், ஆணையன், ஆரூரன், ஆர்கலியன்,ஆராவமுதன், ஆழியன், ஆழ்வார், ஆளரி, ஆற்றுநன், ஆன்றவன், ஆய், ஆயன், ஆயனன், 

இனியன், இயன், இதழன், இமிரன், இசை, இளவல், இயல்,  ஈழவன், எழில், எழிலன், ஈகன்,  ஒளிரன், உதியன், உரன், உரவோன், எல், எல்லாளன், ஐயன், ஐயன்கோ, ஐயனார், ஒப்பிலான், 

வாகை, கோ, வளவன், சேயோன், வழுதி, கோன், முருகன், சான்றோன். யாழன், வள்ளல், பாரி, வேள், வேந்தன், நன்னன், எயினன். நாடன், கிள்ளி, தமிழ், தமிழவன், சுடர், சுடரவன்,  பரிதி, பாகன், பகலவன், தூயோன், தென்றல், கிழான், வழுதி, வெற்பன், சேந்தன், வேலன், ஐயன், பாவலன், புரவலன், புலவன், மன்னன், மலரவன், வானன், வாணன். நாகன், வேங்கை, 








Saturday, November 5, 2022

சங்கத் தமிழரது குடும்பக் கொள்கைகள்

 சங்கத் தமிழரது குடும்பக் கொள்கைகள்

அனைத்துலக மனித உரிமை சாசனம் குடும்பம் என்பதற்கு பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளது.

“குடும்பம் என்பது, சமுதாயத்தின் இயல்பானதும் அடிப்படையானதுமான குழு அலகாகும் என்பதுடன் சமூகத்தாலும் தேசத்தாலும் பாதுகாக்கப்படுவதற்கான தகுதியைக் கொண்டது என்பதாகும்.”

குடும்பமே ஓர் இனத்தின் முதன்மையான சமூக அலகு எனப்படுகின்றது. மிக நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட ஓர் இனத்தினது பண்பாட்டு வளர்ச்சியின் அடையாளமாகவும் பண்பாட்டைப் பேணி வெளிப்படுத்தும் தளமாகவும் குடும்ப அலகே  திகழ்கின்றது. 

தமிழர் வரலாற்றில் குடும்ப அமைப்பு எப்போது, எவ்வாறு தோன்றியது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. எனினும் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியம் குடும்பம் தொடர்பான சிறந்த விளக்கங்களையும் இலக்கண வரையறைகளையும் எமக்குத் தந்துள்ளது. இவ்வாறான குடும்ப ஒழுக்கநெறிகள் தொல்காப்பியர் காலத்தில் நடைமுறையில் இருந்திருக்கின்றது என்பதை அறியும் போது தமிழர் குடும்ப அமைப்பு தொல்காப்பியத்துக்குப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என்பது உறுதியாகின்றது.

தொல்காப்பியமும் அக, புற திணைகளைச் சார்ந்த சங்க இலக்கியங்களும் தமிழரது அக்காலக் குடும்பக் கொள்கைகளை வரையறுப்பதற்குரிய போதிய சான்றுகளைத் தருகின்றன. அவற்றை நோக்குவோம். 

தொல்காப்பியரின் குடும்பக் கொள்கைகள்: 

உலகில் இப்போது பேசப்படுகின்ற ஆயிரக்கணக்கான மொழிகளுக்கு முன்பே தோன்றிய மூத்த மொழி தமிழ். மனிதத் தோற்றத்தின் பின்னான முதல் மொழியாகிய சைகை மொழியில் இருந்து பேச்சு, எழுத்தாக வளர்ச்சி பெற்ற மொழி, பின்னர் இன்புறுத்தற்குரிய இலக்கியம் எனப் பன்முக வளர்ச்சி கொண்டு எழுச்சி பெற்ற மொழியாகத் தமிழ் திகழ்ந்தது. இலக்கியப் போக்குகளைச் சீரமைக்கவும் வரையறுக்கவும் இலக்கணத் தோற்றத்தின் அவசியம் உணரப்பட்டதையடுத்துப் பல இலக்கண நூல்கள் தோன்றின. பின்னாளில் அவ்விலக்கணங்களின் செழுமையான வடிவமாகத் தோற்றங் கொண்டு இன்றுவரை அழியாது தமிழர் வாழ்வியலின் பெருஞ்சான்றாகத் திகழ்வது தொல்காப்பியமாகும். 

மொழியால் செய்யப்படுவது இலக்கியம் என்பதால் இலக்கியம் படைப்பதற்கு மொழியிலக்கணம் அறிய வேண்டியது அவசியமாயிற்று. மொழி வல்லாளர் அக்காலத்திலேயே மொழியை எழுத்து, சொல் எனும் இரு பகுப்புகளாகக் கொண்டு இலக்கணம் செய்தனர். இன்றுவரை உலக மொழிகள் பலவும் இவ்விரு பகுப்புகளுக்கும் மட்டுமே இலக்ணம் செய்து வருகின்றன. 

இலக்கியம் ஆக்குதற்கு மொழியறிவு மட்டுமே போதுமா? காலத்தை விம்பமாய்க்; காட்டவல்ல இலக்கியம் படைக்க வேண்டுமாயின் தமிழர் வாழ்வு பற்றிய தெளிவும் வரையறைகளும் படைப்போருக்குத் தெரிந்திருக்க வேண்டுமே.

இதை நன்கு உணர்ந்து கொண்ட தமிழ் இலக்கணவியலாளர் தமிழர் வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர் எழுத்து, சொல்லோடு இவ்விலக்கணத்துக்குப் ‘பொருள்’ எனப் பெயரிட்டனர். இந்தப் பொருள் இலக்கணமானது அக்காலத்தில் நடைமுறையில் இருந்த வாழ்வியலை உய்த்துணர்ந்து பகுத்தும் தொகுத்தும் உருவாக்கப்பட்டது. 

இலக்கியம் செய்வோர் தமிழர் வாழ்வியலை இயல்பாகவும் நுட்பமாகவும் செப்பமாகவும் படைக்க இவ்விலக்கண வரையரைகளே உதவின. இக்காலத்தே இயல்புக்குப் புறம்பான கற்பனை மிகுந்த காவியங்களை வடமொழி உட்பட பிற மொழிகள் படைத்துக்கொண்டிருந்தவேளை இயற்கையோடிணைந்த வாழ்வை இயல்பு மாறாமல் தமிழர் படைத்தனர். இதற்கான முதன்மைக்காரணம் இலக்கணத்தார் வரையறுத்த ‘பொருள்’ இலக்கணமே. 

அகம், புறம் என்ற இருபெரும் பகுப்புகளைக் கொண்ட பொருள் இலக்கணத்தில் அகத்திணையே தமிழரது குடும்பக் கொள்கை வகுப்பின் தளமாகத் திகழ்கின்றது. 

தொல்காப்பியர் காட்டும் அகத்திணையானது களவு, கற்பு என்னும் இருபெரும் பகுப்புகளைக் கொண்டதாகும். பருவம் எய்திய ஆணும் பெண்ணும் மனமொத்துச்; செய்யும் காதல் பெரிதும் களவு நெறி சார்ந்ததாகும். களவு ஒழுக்கம் வெளிப்பட்ட பின் திருமண உறவினூடாக இருவரும் இணைந்து  குடும்ப வாழ்வை ஆரம்பிப்பர். 

சங்க இலக்கியங்கள் பெரிதும் காதலைப் போற்றியுரைத்தாலும் அக்காலச் சமூகம் களவு ஒழுக்கமாகிய காதலை பெரிதும் ஏற்றுக்கொண்டதாகக் கூற முடியாது. தொல்காப்பியம் களவுக் காலத்தில் நிகழும் நான்கு விடயங்களைக் குறிப்பிடுகின்றது. இச்செறித்தல், அறத்தொடு நிற்றல், உடன்போகுதல், மடல் ஏறுதல் என்பனவாகும்.

இச்செறித்தல்: காதல் வயப்பட்ட தலைவியின் போக்கை உணர்ந்த பெற்றோர் அவளை வீட்டுக்காவலில் வைப்பர். 

அறத்தொடு நிற்றல்: தலைவியின் காதலைத் தோழி போன்றோர் பெற்றோருக்குத் தெரியப்படுத்துதல்.

உடன்போக்கு: பெற்றோர் திருமணத்துக்கு ஒப்புதல் வழங்காதவிடத்துத் தலைவனும் தலைவியும் உடன்போக்கின் வழியே தனித்துச் சென்று திருமணம் செய்தல்.

மடல் ஏறுதல்: விரும்பிய பெண்ணை அடைய முடியாதவிடத்து ஆண்மகன் பனை மட்டைகளால் செய்யப்பட்ட குதிரையில் ஏறி உடலில் பெண்ணின் உருவத்தையும் பெயரையும் பச்சை குத்தி ஊர்வலமாக வருதல். 

இளையோரது காதலைப் பெற்றோரும் சமூகத்தோரும் ஏற்றுக்கொள்ளப்படாத சூழ்நிலையிலேயே இவையெல்லாம் நிகழ்ந்தன. 

தொடக்ககாலத்தில் ஊர் அறிய நிகழ்த்தப்படுகின்ற திருமண முறை இருக்கவில்லை. பருவம் அடைந்த ஆணும் பெண்ணும் இயல்பாகக் கூடி வாழ்தலே குடும்ப வாழ்வாக இருந்திருக்க வேண்டும். இந்த வாழ்வில் ஏமாற்றுதலும் பொய்யும் களவும் தோன்றியதையடுத்து, ஊரார் அறிய நிகழும் திருமணமுறை தோன்றியது என்கின்றார் தொல்காப்பியர். 

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் 

ஐயர் யாத்தனர் கரணம் என்ப. (தொ. பொ. 72)

தொல்காப்பியர் குறிப்பிட்ட ஐயர் என்போர் ஆரியப் பிராமணர் அல்லர். சமூகச் சான்றோரே என ஆய்வாளர் குறிப்பிடுகின்றனர். 

திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பத்து வகையான பொருத்தங்கள் இருக்க வேண்டும் என இலக்கணம் கூறுகின்றது. 

“பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு,

உருவு, நிறுத்த காம வாயில்,

நிறையே, அருளே, உணர்வொடு, திரு என

முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே. (தொ.பொ.மெ. 25)

நற்குடிப் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு பிறந்தால் போதாது. அந்நற்குடிக்கேற்ற நல்லொழுக்கம் இருவரிடமும் இருக்க வேண்டும். பிறப்பு வேறு, குடிமை வேறு எனப் பிரிக்கிறார். இருவரிடமும் ஆண்மை அதாவது ஆளுமை ஒத்திருக்க வேண்டும்.

அகவை ஒப்புமை வேண்டும். காலத்திற்கு ஒப்ப வயது ஒப்புமை பார்க்க வேண்டும். உருவ ஒப்புமையும் வேண்டும். பார்ப்பவர் பொருத்தமான இணையர் என்னும்படியாக உயரம், பருமன் இருக்க வேண்டும்.

நிறுத்தக் காம வாயில் என்பது தொல்காப்பியர் சிந்தித்துச் சொன்ன அரிய கருத்தாகும். உடலில் அமைந்த காம நுகர்வுக்கான உடல், உள்ளக் கூறுகள் பொருத்தமாக இருக்க வேண்டும்.

நிறை என்பது மனத்தைத் திருமணமான பின் கண்டவாறு ஓடவிடாது தடுத்து நிறுத்துதல். அருளுடைமையும் அதன் அடிப்படையான அன்பும் உடையவர்களாக இருவரும் திகழ வேண்டும். உணர்வு என்பது ஒருவரை ஒருவர் அறிதல்; புரிந்து கொள்ளுதல்; உலகியலறிதல் வேண்டும். திரு என்பது செல்வம்.

இவ்வகைப் பத்துப் பொருத்தமும் நல்ல குடும்ப வாழ்வுக்குரிய திருமணத்துக்கு இன்றியமையாததாகும் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். 

திருமணத்துக்குப் பின்னான குடும்ப வாழ்வைக் கற்புநெறி என்பர் இலக்கணவியலாளர். 

“கற்பெனப்படுவது கரணமொடு புணரக்

கொளற்குரிய மரபிற் கிழவன் கிழத்தியைக் 

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே.”  (தொல் பொ. 71)

பெண்ணைப் பெறுவதற்குரிய மரபிற் தோன்றிய ஆடவனுக்குப் பெண்ணைக் கொடுக்கவல்ல மரபில் தோன்றிய பெற்றோர், உறவினர் என்போர் பெண்ணைக் கொடுக்க ஆடவன் தரப்பினர் கொள்வர். இதுவே கற்புநெறியின் தொடக்கமாகும். 

பெற்றோர், சமூகத்தோரது உடன்பாடு இன்றியும் திருமணங்கள் நடைபெறவல்லன என்பதையும் தொல்காப்பியம் சுட்டுகின்றது. 

“கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே

புணர்தலுடன் போகிய காலையான” (தொல். பொ 73) 

மறைந்து ஒழுகும் களவுநெறியில் நின்று வெளிப்படுவதுவும், உறவினர் கொடுக்க நடக்கும் திருமணமும் இயல்புநெறி சார்ந்ததாகும். இத்திருமண உறவில் மகிழ்ச்சி, புலத்தல், ஊடல், ஊடல் உணர்தல், பிரிதல் ஆகிய நிகழ்வுகளும் உள்ளன எனவும் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.(தொல்.பொ.74)

இலக்கியங்களில் குடும்பக் கொள்கைகள்: 

திருக்குறள் தமிழரது குடும்பக் கொள்கைகளை விளக்கும் உயர்ந்த நூலாகும். திருக்குறள் வகுத்த கொள்கைகள் பலவும் தமிழரது நீண்ட வாழ்வின் வழியே பெறப்பட்ட சாரம் எனலாம். சங்க இலக்கியங்கள் பலவும் இக்குடும்பக் கொள்கைகளை அழகாகப் புலப்படுத்துகின்றன. 

கணவனும் மனைவியும் மனமொத்துத் தன்னலமில்லாமல் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொண்டு ஈருடல் ஓருயிராய் வாழ வேண்டும் என இலக்கியங்கள் கூறுகின்றன. 

இல்லறம் நல்லறம்

வாழ்க்கைத் துணை நலமாய் விளங்கும் பெண், அன்பு, கற்பு, பொறுமை, விருந்தோம்பல், சுற்றம் பேணல் முதலிய அருங்குணங்களைப் பெற்றுத் திகழ்தல் சிறப்பு. மேற்குறித்த பண்புகளோடு பிற சிறந்த பண்புகளும் ஒருங்கே அமையப் பெற்ற தலைவியை அகநானூறு பின்வருமாறு சித்தரிக்கிறது.


“அன்பும், மடனும், சாயலும், இயல்பும்,

…………………………………………………………………………

ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி,“……………(அகம் 225 : 1-3)

பாலைத்திணையில், ‘தன் மீது அன்பு கொண்டவள், சிறந்த மடமையும் சாயலும் குணங்களும் பொருந்தியவள், எலும்பையும் நெகிழச் செய்விக்கும் இனிதான பேச்சை உடையவள், இப்படி பிற சிறந்த குணங்களும் எல்லாம் ஒன்றுபட்டு இருக்கின்ற ஒரு குறிக்கோளுடையவளாக ஒருங்கே அமைந்திருப்பன போல விளங்குபவள் நம் தலைவி’ என்று தலைவன் கூற்றாக எயினந்தை மகனார் இளங்கீரனார் என்ற புலவர் தலைவியின் இயல்புகளைக் குறிப்பிடுகிறார்.

மனைவி என்பவள் தன் கணவன் மீது அன்பும், ஐம்பொறியால் நுகரும் மென்மைத் தன்மையினைக் கொண்டு இருத்தல் வேண்டும். இத்தகைய தன்மையினைக் கொண்ட தன் மனைவியைக் காணவேண்டுமென்று எண்ணித் தேரினை விரைந்து செலுத்த பாகனை வேண்டுகிறான்.

“வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து 

…………………………………………………………

இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே! “……………(அகம் 94 : 12-14)

என்று நன்பலூர்ச் சிறுமேதாவியார் முல்லைத்திணையில் குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.

பிறவிதோறும் தொடரும் உறவு:

கணவன் மனைவி உறவு சட்டெனத் தோன்றுதல்ல,  பல பிறவிகளாகத் தொடர்ந்து வருவதாகச் சங்கத் தமிழர் கருதினர். முதற் பிறப்பிலும் கணவன் மனைவியாக வாழ்ந்தோரே இப்பிறவியிலும் விதியின் வலிமையால் இணைந்துள்ளனர் என நம்பினர். 

ஒரு குறுந்தொகைப் பாடல் இதை அழகுறக் கூறுகின்றது. 

இம்மை மாறி மறுமை யாயினும்

நீயா கியரென் கணவனை

யானாகியர் நின் நெஞ்சுநேர் பவளே” (குறு 49)

இப்பிறப்பு நீங்கி மறுபிறவியில் பிறப்பினும் நீயே என் கணவனாவாய். நானே உன் நெஞ்சில் நிறைந்தவளாவேன் என்கிறாள் மனைவி. 

உண்மை மிக்க காதல் பிறவிதொறும் தொடரும் என்பதனை,

“சாதல் அஞ்சேன், அஞ்சுவல் சாவில்

பிறப்புப் பிறிதாகுவ தாயின்

மறக்குவென் கொல்என் காதலன் எனவே” (நற்றிணை 397)

என்னும் அடிகளும் காட்டுகின்றன.


“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆர் அளவின்றே – சாரல்

கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. (குறுந்தொகை-3)

என்றுரைக்கிறாள் மற்றுமொரு பெண். என் காதலனோடான நட்பு நிலத்தை விடப் பெரியது. வானத்தை விட உயர்ந்தது, நீரை விட ஆழமானது என அன்பின் அகலத்தையும் உயரத்தையும் ஆழத்தையும் வெளிப்படுத்துகின்றாள். 

வறுமையிலும் செம்மை:

செல்வக் குடும்பத்தில் பிறந்தவள் தலைவி. அவளை மணந்தவன் குடி வறுமையுற்றது. அந்நிலையிலும் தலைவி தன் செல்வத் தந்தையின் உதவியை எதிர்பாராமல், எளிய உணவை வேளை தவறி உண்டு வாழ்கிறாள்.

“கொண்டகொழுநன் குடிவறன் உற்றெனக்

கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்

ஒழுகுநீர் நுணங்கு அறல்போலப்

பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே” (110)


காதல் வாழ்வின் நுட்பங்களை மிக அழகாகக் கூறுவது கலித்தொகை. இதன் உவமைகள் அழகு மிக்கன்; ஓசை இனிமை நிறைந்தன் எண்ணங்கள் மிக உயர்ந்தன.

இருக்கின்ற ஒரே ஆடையைப் பகுத்து உடுத்து வாழும் கொடிய வறுமை நிலையிலும் மனம் ஒன்றி வாழும் வாழ்க்கையே சிறந்த இல்லற வாழ்க்கை என்பதை ஒரு புலவர் பின்வருமாறு பாடுகிறார்.

“ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை”     (கலி.18)

காதலன் துன்பத்தில் பங்கு ஏற்றலைவிடக் காதலிக்குப் பெரிய இன்பம் இல்லை என்கிறாள் ஒரு தலைவி.

அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு

துன்பம் துணையாக நாடின் அதுவல்லது

இன்பமும் உண்டோ எமக்கு?           (கலி. 6)

மனத்தில் வருத்தம் உண்டாகும்படி பிரிந்து செல்வதைப் பற்றி எண்ணாமல் உன்னுடன் வந்து வழியில் ஏற்படும் துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதைவிட வேறு இன்பம் எங்களுக்கு உண்டா? என்கிறாள் தலைவி.

விருந்தோம்பல்:

தமிழ் மக்களின் பண்பாட்டில் விருந்தோம்பல் சிறப்பிடம் பெற்றிருக்கும் பெருமரபாகும். 

“இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு” எனத் திருவள்ளுவர் இல்லறத்தானின் கடமைமையை உணர்த்துகின்றார். குடும்ப வாழ்வின் உயர்ந்த கொள்கையாக விருந்தோம்பல் பேணப்பட்டு வந்திருக்கின்றது. 

நீண்ட மரபைக் கொண்ட சங்கத் தமிழரின் விருந்தோம்பல் பண்பின் தொடர்ச்சியே வள்ளுவத்தில் கூறப்பட்டுள்ளது என்பதற்கான சான்றுகள் பல சங்க இலக்கியங்களில் உள்ளன.

தொல்காப்பியம் புதியதாக வரும் எல்லா இலக்கியங்களையும் விருந்து என்ற பொருளில் குறிப்பிடுகின்றது.

விருந்தே தானும்

புதுவது புனைந்த யாப்பின் மேற்றே (பொருள் 1495)

இதனை அடிப்படையாகக் கொண்டே புதியதாக வருவோரை விருந்தினர் என அழைக்கும் வழக்கம் தோன்றியிருக்கலாம். 

இல்லறத்தார் தம் இல்லத்திற்கு விருந்தினர் வரவேண்டும் என்ற எண்ணத்தையும் அவ்விருந்தினருக்கு இனிய உணவு அளிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் கொண்டிருப்பர். அதனால் மீன் வேட்டைக்குச் சென்ற கணவர் விரைவில் திரும்பி வரவேண்டும் என்று மனைவி எதிர்நோக்கிக் காத்திருக்கும் செய்தியும் இரவில் விருந்தினர் வந்தாலும் மனைவியும் கணவனும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் வரவேற்று விருந்து படைக்கும் செய்தியும் நற்றிணையில் இடம் பெற்றுள்ளன.

“... மனையிலிருந்து

இருங்கழி துழவும் பனித்தலைப்பரதவர்

திண்திமில் விளக்கம் எண்ணும்” (நற்:372)

”அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும்

முல்லை சான்ற கற்பின் மெல்லியல்” (42, 9-18)

பெருங்குன்றூர்கிழார் இளஞ்சேட் சென்னியிடம் பரிசில் பெறச் சென்ற பொழுது “எனக்கு எந்தக் குறையும் இல்லை என்றாலும் விருந்தினர் வந்தால் அவர்களை வரவேற்பதற்குத் தேவையான செல்வம் இல்லாத வறுமைநிலை மட்டும் என்னிடம் இருக்கின்றது. அதனை மட்டும் தீர்த்து வைப்பாயாக” என்று கூறுவதன் மூலம் விருந்தோம்பலின் சிறப்பு வலியுறுத்தப்படுகின்றது.

“விருந்துகண் டொளிக்குந் திருந்தா வாழ்க்கைப்

பொறிப்புன ருடம்பிற் றோன்றியென்

அறிவுகெட நின்ற நல் கூர்மையே” (புற:266)

என்ற பாடல் வரிகள் விருந்தோம்பலின் முக்கியத்துவத்தைக் கூறுகின்றது.

சிறுபாணாற்றுப்படை அரசர்களின் கொடைச் சிறப்பைக் கூறுவதுடன் விருந்தோம்பல் பற்றிய செய்திகளையும் கூறுகின்றது.

‘எயில்பட்டின பரதவப் பெண்கள் சூடான குழல் மீன் கறியையும், வேலூரில் இருக்கும் எயினர் குலப்பெண்கள் இனிய புளிக்கறி சேர்த்து சமைத்த சோற்றுடன் காட்டுப்பசு இறைச்சியையும், ஆழுரைச் சார்ந்த உழவர்களின் தங்கைகள், குற்றிச் சமைத்த சோற்றுக் கட்டியுடன் பிளந்த காலுடைய நண்டுக்கறியையும் விருந்தோம்பலுக்குப் பயன்படுத்துவர்’ என்று சிறுபாணாற்றுப்படை கூறுகின்றது.

“எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு

தேமா மேனிச் சில்வளை ஆயமொடு

ஆமான் நாட்டின் அமைவரப் பெறுகுவீர்” (சிறு 175 – 177)

“சுவைப்பு மான் அரிசி அமலை வெண்சோறு

சுவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர்” (சிறு 194-195)

நமது நெஞ்சம் வலிக்கத்தக்தாக காதலர் பொருள் தேடச் சென்றுள்ளார். அப்பொருள் நாம் அனுபவிப்பதற்காக அல்ல, இல்லை என்று வருவோருக்குக் கொடுப்பதற்காகவே. ‘இரக்கமே என் காதலர்’ எனத் தலைவி தன் தோழிக்கு உரைக்கின்றாள். 


'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல் 

வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும் 

பொருளே காதலர் காதல்;

அருளே காதலர் என்றி, நீயே. (அகம் 53)

‘அறநெறியிலிருந்து நீங்காது இல்வாழ்க்கை நடத்துதலும் சுற்றத்தாரது பலவகையான துன்பங்களைத் தாங்குதலும் பசித்தவர்க்கு இல்லை என்று சொல்லாத உயர்ந்த பண்பையும்; தொல்தமிழர் பெற்றிருந்தனர்’ என முள்ளியூர்ப் பூதியார், அகநானூற்றில் குறிப்பிட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அன்பு கொண்ட தலைவனும் தலைவியும் விருந்தோம்புதலையும், சுற்றம் தழுவுதலையும், வலியோர் தம்துயர் துடைத்தலையும் தம்முடைய கடமைகளாகக் கொண்டிருந்தனர் என்னும் பண்பு தெரிகிறது.

பிறரிடம் கேட்பதைத் விடவும் கொடுப்பதே சிறந்தது என்ற உள்ளம் கொண்ட தலைவனும் தலைவியும் இல்லறத்திலிருந்து பிறர்க்கு ஈதலையே தம்நெறியாகக் கொண்டனர். தான் ஈட்டிய செல்வம், தனக்கு மட்டுமேயின்றி பிறரும் பயனடைய வேண்டும் என்று விரும்பினர். அதுவே தம் பிறவிப்பயன் என்றும் கருதினர், இதனை,


“இரப்போர் ஏந்து கை நிறைய, புரப்போர் 

…………………………………………………………

அரும் பொருள் வேட்டம் எண்ணி, கறுத்தோர்”…………… (அகம் 389 : 11-13)

என்று நக்கீரனார், பாலைத்திணையில் குறிப்பிடுகிறார். இல்லையென்று வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாத உயர்ந்த பண்பு இன்றைய தலைமுறையினருக்குப் பாடமாக அமைகின்றது. இத்தகைய நற்குணங்களைக் கொண்ட தலைவன் தலைவி தம் இல்லத்திலிருந்து சமுதாயக் கடன்களை ஆற்றியுள்ளமை போற்றுதலுக்குரியது.


மக்கட்பேறு:

குடும்ப வாழ்க்கை மக்கள் பேறின்றி முழுமையடைவதில்லை என்பது தமிழ் ஆன்றோர் கொள்கையாகும். வள்ளுவர் மக்கட் பேறு என்னும் தனித்துவமான அதிகாரத்தின் வழியே குடும்பப் பேறிள் சிறப்பினை அழகுறக் கூறியுள்ளார். 

பாண்டிய மன்னன் அறிவுடைநம்பி எழுதிய ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெறுகின்றது. 

“படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்

உடைப்பெருஞ் செல்வராயினும் இடைப்படக்

குறுகுறு நடந்து சிறு கை நீட்டி

இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்

மயக்குறு மக்களை இல்லோர்க்குப்

பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே"(புறம்-188)

"எல்லாச் செல்வங்களையும் பெற்று செல்வனாக இருப்பது பயனில்லை. பலரோடு விருந்துண்டு உறவாடுதலிலும் பயனில்லை. வீட்டில் இங்கும் அங்குமாக நடைபயிலும் குழந்தை கையை நீட்டும்; கலத்துணவைத் தரையில் தள்ளும். பிசைந்து வாயிலிட்டு,நெய்யுணவை உடலில் படுமாறு சிதறிவிடும். இவ்வாறு சிறுகுறும்பு செய்யும் மக்களை பெற்றிராதோரது வாழ்நாள் பயனற்றது என்கிறது இப்பாடல்.

ஐங்குநூறு என்ற இலக்கியத்தில் ஓர் அழகிய காட்சி. 

செவிலித்தாய் தலைவியும் தலைவனும் வாழும் வீட்டிற்குச் சென்றபொழுது, அவர்கள் மகனுடன் மகிழ்ச்சியாக ஒற்றுமையாக இருப்பதைப் பார்த்து மகிழ்கிறாள். திரும்பி வந்து தலைவியின் தாயிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள இவ்வாறு சொல்கிறாள். 


“மறி இடைப் படுத்த மான் பிணை போலப்

புதல்வன் நடுவணனாக நன்றும்

இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி

நீல் நிற வியல் அகம் கவைஇய

ஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே"

(ஐங். 401) 

மான் இணையின் இடையே படுத்திருக்கும் மான் போல மகன் நடுவில் படுத்திருக்க வெறுப்பின்றித் தலைவனும் தலைவியும் படுத்திருப்பது இனிமையிலும் இனிமையாய் இருக்கிறது. இக்காட்சி நீல நிறம் சூழப்பட்ட அகன்ற இவ்வுலகிலும் மறு உலகிலும் கிடைத்தற்கரியதாகும்.

குழந்தை பெற்ற தாய் இலக்கியங்களில் பல இடங்களிலும் பாராட்டப்படுகின்றாள். 

“மனைக்கு விளக்கம் மடவாள் மடவாள்

தனக்கு விளக்கம் தகைசால் புதல்வர்” என விளம்பிநாகனார் என்னும் புலவர் கூறுகின்றார். 

குடும்ப வாழ்வில் பெருவரமாகச் சங்கத் தமிழர் மகப்பேற்றைக் கருதினர். 

அக்காலச் சமூகத்தில் குடும்பம் வலுவானதோர் அங்கமாகவே கருதப்பட்டது. இக்குடும்ப அமைப்பில் மகளிருக்குக் கடமைகளும் கட்டுப்பாடுகளும் அதிகமாவே இருந்தன. ஆண்களின் அதிகார எல்லை பரந்து விரிந்திருந்தது. எனினும் சிறப்பான வாழ்க்கை முறைகளும் ஒழுக்கநெறிகளும் குடும்பங்களுக்கென வகுக்கப்பட்டிருந்தன.

சங்கத் தமிழரின் வாழ்வு இலக்கியங்கள் வாயிலாக உணரப்பட்டு போற்றப்படுவதற்கு அக்கால குடும்ப அமைப்பே முதன்மைக் காரணம் எனலாம். 


துணை நின்ற நூல்களும் இணையத்தளங்களும்:

தமிழர் நாகரிகமும் பண்பாடும் - முனைவர் அ. தட்சனாமூர்த்தி

சங்ககாலம் - முனைவர் கு. முத்துராசன். 

அகநானூறு

புறநானூறு

ஐங்குநூறு 

https://thoguppukal.wordpress.com/2011/03/15/விருந்தோம்பலின்-சிறப்பு
https://ta.wikipedia.org/wiki/அறிவுடை_நம்பி
http://thaenmaduratamil.blogspot.com/2014/04/ainkurunooru401.html