கணுக்களின் இடுக்குகளில்
தொங்கும் பனித்துளிகள்
சுரணைக்குச்
சோதனை தர,
கொம்புகளால் மட்டுமே
குளிரை
விரட்டிக் கொண்டிருந்தன
நிர்வாண மரங்கள்.
“கோடையில் துளிர்ப்பதுவும்
குளிரில் விறைப்பதுவுமாய்
பட்டைக்குள் பச்சையங்களைப்
பதுக்கிக் கொண்டு
ஏனிந்த
ஜீவமரணப் போராட்டம்”
மேபிள் லீவ்
தலைமை ஏற்க,
உயிர்ப்பைக்
காழ் பகுதியின்
ஆழத்தில்
பத்திரப்படுத்திவிட்டு
மொட்டை மரங்கள்
மொத்தமாய்க் கூடின.
‘பரம்பரைகளாய்ப்
பழக்கப்பட்டமாறாத் துயரம்,
உறைந்து உயிர்க்கும்
இந்த அவலம்
இனியும் வேண்டாம்’
மூத்தமரமொன்று
முனகியது.
‘வெப்பத்தை இழந்து
ஒப்புக்கு உலாவரும்
கனடியச் சூரியன்
கையாலாகாதவன்,
கூதலை விடவும்
சாதலே மேல்.’
நெட்டை மரமொன்று
நெஞ்சு பொருமியது.
‘வரலாற்றுக் காலந்தொட்டு
வகுக்கப்பட்ட வாழ்வு
வாழ்ந்துதான் ஆக வேண்டும்’.
குட்டை மரமொன்று
குரலை மட்டும் அனுப்பியது.
“இயலாமையின் புலம்பல்.....
யாரது?”
மேபிள் கர்ச்சிக்க....
குட்டை மரம்
மேலும் குறுகிக் கொண்டது.
“தாவரப் படைப்பிலும்
ஓரவஞ்சனை
பச்சையத்தைப்
பாதுகாக்கும் சக்தி
நத்தார் மரங்களுக்கு மட்டும்
எப்படிச் சாத்தியம்...?”
“கடும் குளிரிலும்
தன் இலைகளை
இழக்கச் சம்மதிக்காத
நத்தார் மரங்களைக் காரணம் கேட்போம்.”
மேபிள்
தோழர்களை அணிவகுத்தது.
தூரமாய்
ஒரு ஈனஸ்வரம்.....
மொட்டை மரங்கள்
பட்டைக்குள் செருகிக் கிடந்த
செவிகளைக் கூர்மைப்படுத்தின.
நிதானித்தன நிர்வாண மரங்கள்
அழகாய் அடர்ந்திருந்த
நத்தார் மரமொன்றைக்
கோடாரியொன்று
கொத்திக் கொண்டிருக்க,
அதன் ஓலம்
தாவர தேசத்தை ஊடுறுத்தது.
மனிதர்களே......
தேவன் எம்மைப்
பாரங்களாய்ச் சுமந்தார்.
நாங்கள் பாவங்களாய்
உங்களைச் சுமந்தோம்.
ஈற்றில் தேவனையே சுமந்தோம்.
தாவர அழிப்பில் ஏன்
இன்னமும் தேவ பிரார்த்தனை.
எம் இறப்புகளில்தான்
தேவ பிறப்பு
சந்தோஷிக்கப்படுகின்றதா?
ஏற்பாடுகளில்
ஏதேனும் ஒன்று
இதற்கு
உடன்பட்டதுண்டா?
மோஈசனின் தீர்மானங்கள்
இந்த மோசத்தை முன்மொழிந்ததுண்டா?
பட்டை போர்த்திய
மரங்களுக்கிடையே
பச்சையம் போர்த்தியதாலா
எமக்கு இந்தப் பரிதாபம்?
பனிக்காலம்
பருவம் தருகின்ற அற்ப தண்டனை.
பண்டிகைக் காலம்
நீங்கள் தரும்
மரண தண்டனை.
தேவ தர்மத்தின் போதகர்களே.....
உப ஆகமத்தின்
புதிய பாகமாய்
தாவர தர்மத்தையும்
சேர்த்துக் கொள்ளுங்கள்.
மரத்தின் மொழி
மனிதனுக்குப் புரியவில்லைப் போலும்.
கோடாரியின் காம்பு சொன்னது.
உன் மரண வாக்குமூலத்தை யார் கேட்டது?
சும்மா கிட...
நத்தார் மரம் இலைகளோடேயே
இறந்து போனது.
அந்த விறைப்புக்குள்ளும்
வியர்த்து நின்றன
நிர்வாண மரங்கள்.
ஒரு நிமிட வணக்கத்தின் பின்
மேபிள் சொன்னது......
திரும்புங்கள்
கொம்புகளையேனும் காத்துக் கொள்வோம்.
பொன்னையா விவேகானந்தன்