Saturday, May 28, 2011

முறிக்கப்பட்ட பேனாவின் அழிவற்ற ஞாபகங்கள்...













சிவராம் நினைவாக,

கலப்பற்ற உண்மைகளை
உலகமொழியில் பேசிய
ஒரு தமிழ்ப்பேனா...

மூர்க்கர்களினால்
மூளை பிடுங்கப்பட்டிருக்கின்றது.

உயிர்க் குவியல்களுக்குள்
இருந்த உண்மைகளை
எச்சரிக்கை மீறியும்
எழுதியதற்காக,

பேனாவைப் பிரசவித்த
கர்ப்பம்
ஒரு தமிழ்த்தாயினுடையது
என்பதற்காக...

பேனாவின் இதயமான
ஈழத்தேசியத்தை அழவைப்பதற்காக..

எதற்காயும் இருக்கலாம்...

இது,
மூடத்தனத்தின் முழுமை திரண்டு
ஈனத்தனமாய் இயங்குவதின்
உலக சாட்சி..

இது,

மையிட்டு எழுதும் கோல்களுக்குள்
பொய்யிட்டு எழுதுவதைப் புறந்தள்ளி
மெய்யிட்டுக் கோளறு பதிகம்
எழுதிய கோல்..

கறல் ஏறிய
பேரினச் செங்கோலின்
ஓரின வாதத்தை
பூமியின் செவிட்டுச் செவிகளுக்குள்
ஓங்கி எழுதிய தீக்கோல்.

எம் எழுதுகோல்கள்
ஈழத்தேசியத்தைத் தூக்கி நிறுத்திய
மூன்றாம் கால்கள்....


உயிர், மெய் இரண்டோடு
உயிர்மெய்யும் கொண்டு
ஆய்தம் கண்டு
ஆனது  எம் எழுத்து

கடல் திரண்டு கோள் எழுந்து
கொள்ள வந்தபோதெல்லாம்
கோளையே குடித்து
எழுந்த கோல்கள்

பகை மிக்க நண்பனே!

யாரை அழ வைக்க
அற்பங்கள் செய்கின்றாய்...?

என்றோ அழ வைத்த
காரணத்தால்த்தானே
எழத் தொடங்கினோம் நாம்!

அதன் பின்
நாம் அழ மறந்த கதையை
நீ அறிந்ததில்லையா...?

ஈழத்தேசியத்தின் விழி
ஆழமாய்   கசிகின்றது
நீராய் அல்ல.. அமிலமாய்..

சிதறிவிழும் இடத்தில்
தீப்பற்றும் திராவகமாய்...

சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட
இந்தப் பேனா
சூரியச் சுவர்களில் மோதித் தெரித்த
உயிர்மெய் எழுத்து..

பகை திகைத்து நிற்க,
கரியான பின்பும்
பிரபஞ்ச வெளிகளில்
இவனே எழுதப்போகின்றான்..

                                 பொன்னையா விவேகானந்தன்

No comments:

Post a Comment