தமிழர் மரபியல்
உலகில் தற்போது பேசப்படுகின்ற மொழிகளில் மிகப் பழைய மொழியாகத் தமிழ் கருதப்படுகின்றது. உலகெங்கும் ஏறக்குறைய 100 மில்லியன் மக்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தமிழருடைய பூர்வீகத் தாயகங்கள், இந்தியாவின் தென் மாநிலமான தமிழகமும் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுமாகும். இந்தத் தாயகங்களிலிருந்து புலம் பெயர்ந்தோர் உலகெங்கும் ஏறக்குறைய ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழர் மொழி வழிப்பட்ட இனமாவர். இவர்கள் பல்வேறு மதங்களைச் சார்ந்தும் பல நாடுகளில் நிரந்தரமாக வாழ்ந்தும் வருகின்றனர். இவ்வனத்தோர் அனைவரும் தமிழ்மொழி பேசுவோர் என்ற உறவிலேயே ஓரினமான இணைந்துள்ளனர்.
பன்னெடுங்காலத்துக்கு முன்பே இந்தியத் துணைக்கண்டத்திலும் இந்தியாவுக்குத் தெற்கே கடல் கொண்ட குமரிக்கண்டத்திலும் வாழ்ந்த பழம்பெரும் இனம் தமிழர் எனக் கருதப்படுகின்றது. இவை பற்றிய ஆய்வுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.
5000 ஆண்டுகளுக்கு முன் பெருவளர்ச்சி பெற்றதாகக் கருதப்படுகின்ற சிந்துவெளி நாகரிகக் கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்தோர், அங்கு வாழ்ந்தோர் பெரிதும் தமிழர் பண்பாட்டை ஒத்துள்ளனர் எனக் குறிப்பிடுகின்றனர்.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கணநூல் 3000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதாகும். மொழியின் பகுப்புகளான எழுத்து, சொல் என்ற இரண்டுக்கும் இலக்கணம் எழுதிய இந்த நூல், தமிழருடைய வாழ்வியலுக்கும் இலக்கணம் எழுதி வைத்துள்ளது. மக்களுடைய வாழ்வை அகம், புறம் என இரண்டாகவும் வாழ்நிலங்களில் அடிப்படையிலும் வாழ்க்கைக்கான இலக்கணங்களை வகுத்துள்ளது. உலகில் வாழ்வுக்கு இலக்கணம் எழுதிய ஒரேயொரு நூல் இதுவே. பண்டைத் தமிழருடைய பண்பாட்டு மரபுகளையும் விழுமியங்களையும் அழகுற எடுத்துரைக்கும் பண்பாட்டுக் களஞ்சியமாக இந்த நூல் திகழ்கின்றது.
தமிழில் எழுதப்பட்ட மற்றுமொரு நீதி நூல் திருக்குறளாகும். இது கிறிஸ்த்துவுக்குப் பின் 2ம் நூற்றாண்டில் திருவள்ளுவர் என்பவரால் எழுதப்பட்டது. நாடு, மொழி, மதம் என்ற எல்லைகளைக் கடந்து மனிதருக்காக மனிதரால் ஆக்கப்பட்ட ஒப்பற்ற நீதிநூல் இதுவாகும். தனிமனித ஓழுக்கம், வாழும் சமூகம் சார்ந்த வினைத்திறன், பண்பாடு மிக்க அகவொழுக்கம் என்பவற்றைத் தமிழர் மரபொழுக்க வழி நின்று எடுத்துரைக்கின்றது இந்த நூல். இதுவரை 65க்கு மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காகத் தமிழ்நாட்டுச் சென்ற கிறிஸ்தவப் பாதிரியார்களான ஜோசப் பெஸ்கி (இத்தாலி), ஜி.யு. போப் (பிரித்தானியா), ரொபேட் கார்டுவெல் (அயர்லாந்து) போன்றோர் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ந்து அதைப் போற்றியுள்ளனர்.
தமிழ் இனத்தவருடைய தொன்மைமிக்க வாழ்வியலை நூற்றுக்கணக்கான தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. ஒவ்வொரு தலைமுறையினரும் தொடர்ச்சியான வாழ்வியல் வழியாகவும் இலக்கியங்கள் வாயிலாககவும் பண்பாட்டு விழுமியங்களையும் மரபுகளையும் கற்றுணர்ந்து போற்றி வருகின்றனர்.
தமிழர் சிறந்த கலைமரபுகளைக் கொண்டுள்ளனர். இசை, ஆடல், ஓவியம், சிற்பம், கட்டடக்கலை எனத் தனித்துவமான பல கலைமரபுகளைப் பேணி வருகின்றனர். இந்தியாவின் புகழ்பெற்ற இசைமரபான கர்நாடக இசை தமிழிசை மரபுகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
உலகலாவிய வகையில் புகழ் பெற்றிருக்கும் பரத நாட்டியம் தமிழர்களின் சிறந்த ஆடற்கலையாகும். தமிழரின்; சிறந்த கட்டடக்கலைக்குத் தஞ்சைப் பெரிய கோவிலும், மாமல்லபுர சிற்பக் கோவில்களும் சான்றாக உள்ளன.
பண்டைக்காலம் தொட்டு தமிழர் நிலம் மூவேந்தர்களால் ஆளப்பட்டு வந்திருக்கின்றது. 1700களின் பின்னர் பிரித்தானியரின் ஆட்சிக்குட்பட்டுத் தமிழர் தமது தன்னாட்சியை இழந்தனர். அதன்பின் இன்றுவரை தமிழர்கள் தன்னாட்சி கொண்ட அரசொன்றை நிறுவ முடியாதிருப்பது வேதனைக்குரியதே.
9ம் நூற்றாண்டில் கிழக்காசியாவின் பெரும்பகுதியை ஆண்டவர்கள் தமிழராவர். வலிமையான கடற்படையும் போரில் சிறந்த வீரர்களையும் கொண்டிருந்த தமிழரசு இந்து சமுத்திரத்தைப் 13ம் நூற்றாண்டுவரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
விவசாயத் தொழிலில் சிறந்தவர்களான தமிழர் மழைநீரைத் தேக்கியும் ஆற்றுநீரை வழிமறித்தும் வயல்களுக்குப் பாசனம் செய்து உலகிற்கு புதிய நீர்ப்பாசன முறையை அறிமுகப்படுத்தியவர்களாவர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் நடைபெற்றுவந்த இனவழிப்பிலும் உள்நாட்டுப் போரிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழர், தாய்நாடு விட்டகன்று பிறநாடுகளில் குடியேறினர். அவ்வாறு குடியேறியோர் தாம் வாழும் நாடுகளின் சட்ட ஒழுங்குகளை மதித்து அந்நாட்டின் வளர்ச்சியில் பங்குகொள்வதோடு, தமது பண்பாட்டு மரபுகளையும் பேணி வருகின்றனர்.
இந்தவகையிலேயே கனடா அரசு தமிழருடைய பண்பாட்டு மரபுரிமைக்கு மதிப்பளித்துத் தைமாதத்தைத் தமிழரின் மரபுரிமை மாதமாக அங்கீகரித்துள்ளது.
பலவழிகளிலும் தமிழர் வாழ்வில் சிறப்புப் பெற்றிருக்கும் மாதம் தையாகும். தாயகங்களில் விவசாயத்தின் பயன்கள் வீடு வந்து சேரும் காலம் தையாகும். தமது வாழ்வுக்கு உதவுகின்ற கதிரவன், மாடு போன்றவற்றுக்கு நன்றி கூறுகின்ற தைப்பொங்கல் என்ற விழாவும் தை மாதத்திலேயே நடைபெறுகின்றது. பண்டைத் தமிழர் தமது புத்தாண்டையும் தைமாத்திலேயே கொண்டாடியுள்ளனர். எனவேதான் தமிழர் தமது மரபுரிமைகளைப் போற்றுவதற்குரிய மாதமாகத் தையைத் தமிழர் தேர்ந்தெடுத்தனர்.
தைமாத்தில் கனடாவாழ் தமிழர் பல்வேறு மரபுரிமை நிகழ்வுகளை நடத்தி, இனஞ்சார் பெறுமானங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.