Friday, January 20, 2017

மாடும் மானமும் தமிழருக்கொன்றே.



நீதான் சட்டமா?

கொஞ்சம் நில்

நிதானமிருப்பின் கேள்.

மாட்டுக்கும் மனிதனுக்கும்
உண்டான உறவிலிருந்து,

தமிழனுக்கும் மாட்டுக்கும்
உண்டான உறவை வேறுபடுத்து.

ஆண்டின் அத்தனை நாட்களிலும்
மாட்டிடம்
நாங்கள் காட்டும் பரிவை
நீ பார்த்ததுண்டா?

ஒரு குடும்பத்தில்
மகவு ஐந்தெனில்
ஆறாம் மகவு மாடு
என்பதை நீ அறிவாயா?

மாடுகளை நேசிப்பது எப்படி என்பதை
எம்மிடம் கற்றுக் கொள்.

ஆநிரை கவர்தலும்
ஆநிரை மீட்டலும்
காலவழி வந்த
தமிழர் மரபு.

கடவுளர்
கண்டறியப்பட முன்பே
கதிரவனுக்கு
முதல் வணக்கமும்
காளைக்கு
மறு வணக்கமும்
வைத்தோர்
வழிவந்தவர் நாம்.

‘மாட்டா’ரைக்
கனம் பண்ணுவது
எப்படி என்பதை
‘கனம் கோட்டா’ரை விட
அதிகம் அறிந்தவர் நாங்கள்.

ஆடு கோழி பலியிட்ட தமிழர்
மாட்டைப் பலியிட்டதில்லை.

எம் வீட்டுக்கடுத்து நாம்
உணவூட்டிப் போற்றிய
ஒற்றை உயிர் மாடு மட்டுமே.

மாடு எழுப்பிய
மணியோசைக்காய்
மகனையே பலியிட்டான்
மனுநீதி.

செல்வத்தைக் கூட
மாடென்றே மதித்தவர்
நாங்கள்

வள்ளுவன் கூட
‘மாடல்ல மற்றுப் பிற’ என்றான்.

அஞ்சாநெஞ்சொடு
நிமிர்ந்து நடை பயிலும்
காளைகளை
‘ஏறு’ என்றழைத்தல்
எம் வழக்கு.
ஆண்டிலே ஒருநாள்
ஏறோடு கூடி
எம் காளையர் ஆடுவர்.

ஏறுகளும் வீழ்வதுண்டு
காளைகளும் கவிழ்வதுண்டு

இது, தோன்றிய காலம்
எதுவென்றறியா
வீர விளையாட்டு.

தழுவப்படுவதற்காக ‘ஏறு’ களும்
தழுவி மகிழ்வதற்காகவே காளைகளும்
வளர்கின்ற மண் இது.

கழனியிலே ஏர் பூட்டவும்
களத்திலே மார் தட்டவும்
தமிழன் பயில்கின்ற பள்ளி இது.

மாடும் மானமும்
தமிழருக்கொன்றே.

இவை பறிக்கப்படுகின்ற
போதெல்லாம்
வெறி கொண்டெழுவர்.

ஒப்புக்கு உலா வரும் சட்டமே!

துள்ளியெழும் அலைகளைச்
சுட்டு வீழ்த்தலாம்
என்று எண்ணாதே.

நாளொன்றில்
மாடுகளை விடவும்
மனிதர்களே அதிகம்
வதைக்கப்படுகின்றார்கள்.

காளைகளை நாங்கள்
கவனித்துக் கொள்கின்றோம்.

நிணம் ஒழுகி வழியும்
உன் ஓட்டைகளை நீ கவனி.

 - தமிழன்

ஓவியங்கள் ஓவியர் மருது அவர்களால் வரையப்பட்டவை.



No comments:

Post a Comment