தமிழர் மரபுரிமை - புரிதலும் பேணலும்
இன்றைய காலத்தில் மரபுரிமை என்ற சொல்லாட்சியைத் தமிழர் பெரிதும் கையாண்டு வருகின்றனர். குறிப்பாக ஈழத்தமிழர்களும் புலம்பெயர்ந்தோரும் இன்றைய தேவைகளுக்கு ஏற்ப இச்சொல்லை அதிகமாவே பயன்படுத்துகின்றனர். வாழும் சூழலும் காலமாற்றங்களுமே இச்சொல்லாட்சியின் பொருளையும் பயன்பாட்டையும் விரிவாக்கி விளக்கம் தருகின்றன எனலாம்.
மரபு உரிமை என்ற வேறுபட்ட பொருளைக் கொண்ட இவ்விரு சொற்களும் இணைக்கப்பட்டு, புதியதொரு சொல்லாட்சியில் தமிழர் கையாளத் தொடங்கிய காலம் கடந்த நூற்றாண்டாகவே இருக்க வேண்டும்.
Legacy என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக மரபுரிமை என்ற சொல்லை அகராதிகள் சுட்டுகின்றன. Heritage என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக அகராதிகள் 'பாரம்பரியம்' என்பதைக் குறிப்பிடுகின்றன.
இரு நூற்றாண்டுக்கு முற்பட்ட எந்தத் தமிழ் ஆக்கங்களிலும் மரபுரிமை என்ற சொல் பயன்பட்டதாகத் தெரியவில்லை. தமிழரிடையே ஏற்பட்ட ஆங்கில மொழித்தாக்கமும் மரபுரிமை என்ற சொல்லின் தோற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம்.
தமிழர் இயல்பான அன்றாட வாழ்வுடன் இணைந்து வெளிப்பட்டும் மறைந்தும் பின்பற்றப்பட்ட வந்த மரபுகள், வாழிடச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே, அவை பேணப்பட வேண்டும் என்ற தேவையை சமூகத்துக்கு ஏற்படுத்திருக்கக் கூடும்.
எடுத்துக்காட்டாக, பிறவினத்தோரின் பண்பாட்டு நடத்தைகள், தமிழினத்தோரிடையே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சூழலில், இனம் சார்ந்த தனித்துவமான மரபைப் பேணுதல் என்ற உணர்வு தோற்றம் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு.
பண்பாட்டுப் படையெடுப்புகள், பண்பாட்டுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் தோன்றும் நிலையில், காலங்காலமாகப் பின்பற்றி வந்த மரபை தமது உரிமையாகக் கருதி, அவற்றைப் பேண வேண்டும் என்ற விழிப்புணர்வை இனத்தோரிடையே ஏற்படுத்தும் நோக்கில் இது உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.
இன்றைய பொழுதுகளில் மரபுரிமை என்ற சொல், தமிழரின் மரபுகளை, அடையாளங்களைப் பேணிச் செல்லும் நோக்கில் எங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இச்சொல் பற்றிய தெளிவான புரிதலையும் அதைப் பேணிச்செல்லும் வழிவகைகளையும் கூற முனைகின்றது இந்தக் கட்டுரை.
சொல் விளக்கம்:
தமிழர் மரபுரிமை என்றால் என்ன? என்பதற்கு விடையாக, ~ஒரு தனித்துவமான இனக்குழுமானது கடந்த காலங்களில் தமக்கென உருவாக்கிக் கொண்டு, பின்பற்றியும் போற்றியும் வருகின்ற மரபுகள், மொழி, கட்டிடங்கள் என்பன இன்றும் நிலைத்து நிற்கும் நிலையில் அவை மரபுரிமை எனக் கருதப்படுகின்றன| என்ற விளக்கத்தை கேம்பிறிஜ் அகராதியை அடியொற்றிக் குறிப்பிடலாம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்ககழக வரலாற்றுத்துறை விரிவுரையாளர் ச. குமரதேவன் மரபுரிமை குறித்து பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
'மரபுரிமை என்பது எமது முன்னைய சந்ததிகளில் இருந்து கொண்டுவரப்படுவதாகும். இது பாரம்பரியமாக முன்னோர்களால் வைத்திருக்கப்பட்ட உருவமற்ற சொத்து அல்லது கலை அல்லது சம்பிரதாயத்தால் கொண்டுவரப்படும் நடைமுறைகள், கட்டடங்கள், சமூகம் மற்றும் கலாசாரம் போன்றவற்றிற்கு முக்கியமாக கருதப்படும் வரலாறு, நம்பிக்கைகள் போன்றவற்றை குறிக்கும். இதனால் மரபுரிமை என்பது வரலாற்றுச் சூழலின் ஒரு உள்ளீட்டு அங்கமாக கொள்ளப்படும். ஆனால் இதனை ஒரு விடயமாக மட்டும் வரைவிலக்கணப்படுத்த முடியாது. இது பல்வேறு அம்சங்களின் தொகுப்பாகும். பண்பு, அடையாளம், கலாசார வேறுபாடு என்பன காலந்தோறும் கட்டியெழுப்பப்படும். இவற்றின் கலவை ஒரு இடத்தின் மரபுரிமையை உருவாக்க பயன்படும். பொதுவாக ஒரு நாட்டின் மரபுரிமையை கலாசார மற்றும் இயற்கை அம்சங்களைக் கொண்டு கலாசார மரபுரிமை, இயற்கை மரபுரிமை என இரண்டாக பிரிக்கலாம். இதில் கலாசார மரபுரிமை. கண்ணுக்கு புலப்படக்கூடிய, கண்ணுக்கு புலப்படாத இரு அம்சங்களைக் கொண்டு காணப்படுகின்றது. இது ஒரு குழு அல்லது சமூகத்தால் கடந்த காலத்தில் பின்பற்றப்பட்டதும் நிகழ்காலத்தில் தொடர்ந்து பராமரிக்கப்படுவதும், எதிர்காலத்தில் அடுத்த சந்ததியினரின் நலனுக்காக கொடுக்கப்பட வேண்டியவையுமாகும். இவ்வாய்வு கண்ணுக்கு புலப்படக்கூடிய யாழ்ப்பாணத்தில் உள்ள புராதன குடியிருப்பு மையங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமய வழிபாட்டு ஸ்தலங்கள், யாழ்ப்பாண இராசதானி கால கட்டடங்கள், ஐரோப்பியர் கால கோட்டைகள், ஐரோப்பியர் கால அரச நிர்வாக மையங்கள், வெளிச்ச வீடுகள் முதலான மரபுரிமைச் சின்னங்களை அடையாளப்படுத்தி, ஆவணப்படுத்தி, அதன் வரலாற்று முக்கியத்துவத்தினை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று, மரபுரிமைச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற சூழலை உருவாக்குவதாகும். இதன் மூலம் மரபுரிமைச் சின்னங்கள் அழிந்து போவது மக்களால் தடுக்கப்படுவதற்குரிய ஒரு சூழலை உருவாக்குவதுடன், அவற்றை பாதுகாப்பதன் மூலம் எமது எதிர்கால சந்ததியினருக்கு எமது மரபுரிமைச் சின்னங்களை ஒப்படைப்பதுமாகும்."
இக்கூற்றானது, மரபுரிமை பற்றிய போதிய விளக்கத்தைத் தருவதாக அமைகின்றது.
தொல்காப்பியத்தில் மரபு - உரிமை:
பழம்பெரும் இலக்கணமான தொல்காப்பியம் மரபு, உரிமை என்ற இரண்டு சொற்களையுமே ஆழமான பொருளில் கையாண்டுள்ளது.
மரபு என்றால் என்ன? என்பதற்கு 'மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல்" என்று தொல்காப்பியம் விளக்கம் தருகின்றது. அதாவது, மரபு என்பது மாற்றமுடியாத சிறப்பினை உடையது. மொழி முன்னோர் கூறிய மரபு வழியில் பேசப்படுகிறது. மரபுநிலை திரிந்தால் மொழி பலவாகச் சிதையும் என்பதே இதன் பொருளாகும்.
தொல்காப்பியரின் மரபு பற்றிய விளக்கம் மொழிப் பயன்பாடு சார்ந்ததேயாயினும் பிற்காலத்தில் அது தமிழரின் வாழ்வியற் கோட்பாடுகளை முன்னிறுத்தியும் பொருள் தருவதாயிற்று.
பொதுவாகவே தமிழர் பேச்சுவழக்கில் மரத்தல் என்ற சொல்லைப் பயன்படுத்துவர். ‘கால் மரத்து விட்டது’ ‘கை மரத்து விட்டது’ என இன்றும் பலர் கூறுவதைக் கேட்கலாம். மரத்தல் என்றால் நிலைபெற்ற நிலை எனவும் பொருள் கொள்ளலாம். நிலைபெற்று நிற்கும் தாவரம் மரம் எனப்பட்டது. இதனடிப்படையிலேயே ஓரினத்தின் நிலைபெற்ற நடத்தைகளை மரபு என அழைக்கம் வழக்கம் தோன்றியிருக்கலாம் எனவும் கருதுவர்.
உரிமை என்ற சொல் மிகவும் தொன்மையானது. இச்சொல் பெரிதும் இலக்கணங்களில் கையாளப்பட்டுள்ளது. தொல்காப்பியர் சில இடங்களில் உடைமை என்ற பொருள்படக் கையாண்டிருக்கின்றார்.
'உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும்
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்.." என்பது தொல்காப்பியர் கூற்று.
இலக்கியங்கள் பெரிதும் கிழமை என்ற சொல்லையே உடைமை என்ற பொருளில் கையாண்டிருக்கின்றன.
தொன்மையான தமிழ்ச் சொற்களான மரபு, உரிமை இரண்டையும் இணைத்து மரபுரிமை என்ற சொல்லை ஆக்கியோர் நுட்பமாகவே சிந்தித்திருக்கின்றனர்.
பன்முகப் பண்பாட்டு வாழ்க்கைச் சூழலும் உலக மயமாதலும் உலகெங்கும் வாழ்கின்ற ஒவ்வொரு இனத்தினதும் தனித்துவதான பண்பாட்டுச் சூழலுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் ~எமக்கான எமது மரபுரிமை| என்ற உரவொலியே (கோஷம்) மக்களுக்குள் ஓர் எழுச்சியை ஏற்படுத்துகின்றது.
தமிழர் மரபின் தொன்மை:
இனங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்துவமாக வரலாறுகள் இருக்கின்றன. சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பு தோற்றம் கொண்ட இனங்களும் இருக்கின்றன. பலவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகிவிட்ட இனங்களும் இருக்கின்றன.
பழமையானவற்றைப் பேணிச்செல்வதில் இவ்வுலகம் பெரும் ஈடுபாட்டை வெளிப்படுத்தி வருகின்றது. பழைய கட்டிடங்களையும் தாவரங்களையும் பேணுவதற்காகப் போராட்டங்களே நடைபெறுகின்றன.
தமிழினத்தின் தொன்மை குறித்து அதிகம் எழுத வேண்டியதில்லை. உலகில் இதுவரை செம்மொழி தகுதி பெற்ற ஏழு மொழிகளில் தமிழும் ஒன்று. தமிழ்மொழிக்குத் தாய்மொழி இல்லை. இன்றும் அன்றாடப் பயன்பாட்டிலும் இலக்கியப் பயன்பாட்டிலும் சிறந்திருக்கும் மொழி.
நீண்ட வரலாற்றையும் உயர்ந்த பண்பாட்டு மரபுகளையும் கொண்டிருக்கும் தமிழனம் உயர்வான வாழ்வியல் கொள்கைகளைக் கொண்டிருந்ததாகப் பிறவறிஞர் கூறுகின்றனர். அவ்வாறதொரு வாழ்வியல் கொள்கைகள் இல்லையெனில் திருக்குறள் என்ற மானுடப் பொதுமை மிக்க நூலை உருவாக்கியிருக்க முடியாது என்பது அவர்கள் கருத்து.
பிறவினத்தோர் மற்றுமோர் இனத்துக்கான பெறுமானத்தை வழங்குவதில், அவ்வினத்தின் தொன்மையும் போற்றுதற்குரிய பண்பாட்டு நடத்தைகளும் சிறப்பிடம் பெறுகின்றன. வரலாறு அறிந்த பிறவினத்து அறிஞர் தமிழரைப் பெருமதிப்போடு நோக்குவது இயல்பு.
பன்முகப் பண்பாட்டுச் சூழலில் வாழும் தமிழர், இனஞ்சார் தொன்மையும் மரபையும் பேணிச் செல்வதனூடாகப் பிறவினத்தோரின் நன்மதிப்பைப் பெற முடியும். எமது தனித்துவத்தையும் காத்துக்கொள்ள முடியும்.
புலம்பெயர்ந்தோர் சூழலில் மரபுகளும் பண்பாட்டு நடத்தைகளும்:
ஓரினத்தின் மரபுகளும் பண்பாட்டு நடத்தைகளும் வாழும் சூழலுக்கு ஏற்பவே வடிவமைக்கப்படுகின்றன. நிரந்தரமானதொரு நிலத்தில் வரலாற்றுக்காலம் தொட்டு வாழ்கின்ற இனம், அந்த நிலத்தின் அமைவுக்கும் தட்பவெப்ப சூழலுக்கும் ஏற்பவே வாழ்வை அமைத்துக் கொள்கின்றது. அந்த வாழ்விலிருந்தே மரபுகளும் பண்பாட்டு நடத்தைகளும் தோற்றம் கொள்கின்றன.
இயற்கை, மற்றும் போர்ச் சூழல் காரணமான இடப்பெயர்வுக்கு உள்ளாகி, புதிய சூழலில் வாழத் தொடங்கும் இனம், வாழும் சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ள முற்படுகின்றது. இது தவிர்க்க முடியாத மாற்றமாகும். ஓரினமாது தமது தனித்துவத்தை ~மரபைப் பின்பற்றுதல்| என்ற இயக்கத்தின் மூலமே வெளிப்படுத்திப் பேணிச்செல்ல முடியும்.
இத்தன்மையைப் புலம்பெயர்ந்தோர் வாழ்வியலில் காண முடியும்.
தமிழர் பெரிதும் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் அனைத்தும் பன்முகப் பண்பாட்டுச் சூழலைக் கொண்டவையே. அந்நாடுகளில் குடியேறிய இனம் ஒவ்வொன்றும் தனித்துவமான பண்பாட்டு மரபுகளைக் கொண்டிருப்பது இயல்பு. பெரும்பாலன இனங்கள் குடியேறிய நாடுகளில் தமது மரபுகளைப் பேணிச்செல்வதில் முனைப்போடு செயற்படுகின்றன. யூதர், சீக்கியர், ஆர்மேனியர், சீனர், இஸ்லாமியர் போன்றோரை இதற்கு எடுத்துக்காட்டாகக் கருதலாம்.
புதிய பண்பாட்டு, வாழ்வியல் சூழல்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய, வடஅமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் குடியேறிய தமிழர்கள் தாயகத்துக் வெளியே தமக்கானதொரு தனித்துவமான வாழ்களத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனர். தொடக்கத்தில் அங்கு வாழும் பிறவினங்களோடு இணைந்து வாழ்வதிலும் தனித்துவமான பண்பாட்டு மரபுகளைப் பேணுவதிலும் பல சவால்களை எதிர்கொண்ட போதிலும் காலவோட்டத்தில் வலுவான சமூகமாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர்.
தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்த முதல் தலைமுறையினர் பெரிதும் தாயக வாழ்வியல் நடத்தைகளையே பின்பற்றி வாழ்ந்திருந்தனர். அந்த வாழ்வில் இயல்பாகவே மரபும் பண்பாட்டு உணர்வுகளும் இணைந்திருந்தன. மரபைப் பேணுதல் வேண்டும் என்ற உணர்வு பெரியளவில் தலைதூக்கவில்லை எனலாம்.
இன்றைய காலத்தில் முதற் தலைமுறையினர் ஏறக்குறைய ஓய்வுக்கு வந்துவிடுகின்ற நிலையில், இளைய தலைமுறையினர் சமூகத்தில் முதன்மை பெற்று வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து மூன்றாம் தலைமுறையினர் இளையோராக வளர்ந்து வருகின்றனர்.
குடியேறிய நாடுகளில் பிறந்தும் அல்லது சிறிய வயதில் குடியேறியவர்களுமான இளையோர் பெரிதும் வாழும் நாடுகளுக்குரிய பொதுமைப் பண்பாட்டு வாழ்வியல் முறைமைகளை உள்வாங்கி வளர்வது இயல்பானதே.
எனினும் பன்முகப் பண்பாட்டுச் சூழலில், ஓரினம் என்ற அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கும் ஒருமைப்பாடு மிக்க தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவதற்கும் மரபுகள், பண்பாட்டு நடத்தைகள் பின்பற்றப்படுவது மிக அவசியமாகும்.
மரபுகள், பண்பாடுகள் என்பவற்றைப் பின்பற்ற வேண்டும் என கூறிச் செல்வது அனைவருக்கும் எளிதானது. ஆனால் தமிழர் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைமுறைகளுக்கமைய மரபுகளைப் பேணிச் செல்வது மிகவும் கடினமானது.
புலம்பெயர் நாடுகளில் வாழும் இளையோர், தமிழருக்கான மரபுகளையும் பண்பாட்டு நடத்தைகளையும் விட்டு விலகிச் செல்கின்றனர்| என்ற கூற்றை முன் வைப்பதற்கு முன், அவர்களைப் தமிழர் மரபுகளின் வழியே நடத்திச் செல்வதற்கு சமூகம் எடுத்த ஆக்கபூர்வமான முயற்சிகள் யாவை? எனக் கேட்பின், பொருத்தமான விடையை எவராலும் கூற இயலாது.
மரபியல் பண்பாட்டுக் கல்வி:
தமிழர் வாழும் நாடுகளில் அந்நாடுகளுக்குரிய தேசியப் பொதுமைப் பண்பாடு என்ற ஒரு பொதுமையான போக்கு காணப்படும். இந்தப் பொதுமைப் பண்பாடு அங்கு வாழும் அனைத்து இனங்களுக்கும் பொதுவானது. கிறிஸ்மஸ், ஆங்கிலப் புத்தாண்டு என்பன ஏறக்குறைய இந்தப் பொதுமைப் பண்பாட்டு இயக்கங்களுக்குள் உள்ளடங்கி விட்டன. பள்ளிகளிலும் பணியிடங்களிலும் இவ்வாறான பொதுமைப் பண்பாட்டு நடத்தைகள் தவிர்க்க முடியாதன.
இவ்வாறான பொதுமைப் பண்பாட்டு நடத்தையை ஏற்றுக்கொண்டு வளரும் இளையோர், தமது இனஞ்சார்ந்த பண்பாட்டு நடத்தைகளைத் தமது சமூகத்திடமிருந்தே கற்றுக் கொள்ள வேண்டியவர்களாகின்றனர். சமூகக் கொண்டாட்டங்களிலும் வீட்டுச் சடங்குகளிலும் வெளிப்படும் மரபுசார் விடயங்கள், பண்பாட்டு நடத்தைகள் வாயிலாகவே இளையோர் பலவற்றைத் தெரிந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுகின்றன. இளையோர் மரபுகளையும் பண்பாட்டு நடத்தைகளையும் அறிந்து கொள்வதற்கு இந்த வாய்ப்பை மட்டுமே சமூகம் வழங்குகின்றது.
இதேவேளை, இளையோரின் சூழலையும் சமூகம் தெரிந்து கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட சமூகக் கொண்டாட்டங்களில் பெரும்பாலான இளையோர் பங்குபற்றுவதில்லை. அனைத்து இளையோரும் வீட்டுச் சடங்குகளில் பெரிதும் ஈடுபாடு கொள்வதில்லை. பல இளையோர், சமூகத்தோரால் பின்பற்றப்படும் மரபுகளுக்கும் பண்பாட்டு நடத்தைகளுக்கும் விளக்கம் கேட்கின்றனர். போதிய விளக்கம் தாருங்கள், அவற்றைப் பின்பற்றுவது குறித்துச் சிந்திக்கின்றோம் என்கின்றனர். மரபுசார் செயற்பாடுகள் பற்றிய போதிய விளக்கங்கள் பெரியோர் பலருக்கும் இல்லை என்பதே உண்மை.
இந்நிலையில்தான் மரபு, பண்பாடு சார்ந்து கட்டமைக்கப்பட்ட தனித்துவமான கல்வியின் தேவை ஏற்படுகின்றது. இக்கல்வியானது மொழிக்கல்வியில் இருந்து வேறுபட்டது. அதேவேளை மொழிக்கல்வியோடு இணைத்துக் கற்பிக்கப்பட வேண்டியது.
குடியேறிய பல நாடுகளிலும் மொழிக்கல்வி தொடர்பாடல் தேவையை அடியொற்றியே கற்பிக்கப்படுகின்றது. அண்மைக்காலங்களில் ஏற்பட்டுவரும் கல்வித்திட்ட மாற்றங்களில் பண்பாட்டுக் கல்வி ஓரளவு இணைக்கப்பட்டிருந்தாலும் பண்பாட்டுக் கல்வி சார்ந்த தனித்துவமான கட்டமைப்புக்குரிய தேவை உருவாகி வருகின்றது.
தமிழர் மரபியல், பண்பாட்டுக் கல்வியைத் திட்டமிடுவோர், புலம்பெயர் வாழ்வியலை நன்கு உள்வாங்கியவர்களாகவும் தமிழர் மரபியல், பண்பாடு சார்ந்து தெளிந்த அறிவைக் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
தாயகத்தில் பின்பற்றப்படும் மரபு, பண்பாடு செயற்பாடுகளை உள்ளதை உள்ளவாறே பிற சூழல்களில் பின்பற்ற முடியாது. வாழும் சூழலுக்கு ஏற்ப, சில செயற்பாடுகள் முற்றாகக் கைவிடப்பட வேண்டியிருக்கும். சிலவற்றில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருக்கும். சிலவற்றை உள்ளதை உள்ளவாறே பின்பற்றலாம்.
இவ்வாறான பண்பாட்டுக் கல்வியும் வாழிட மொழியில் எழுதப்பட்ட ஒரு பண்பாட்டுக் கையேடும் காலத்தின் தேவை என்பதைப் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் அறிந்திருத்தல் வேண்டும்.
முன்னர் ஒருதடவை குறிப்பிட்டதைப் போன்று, தமிழர் மொழிவழிப்பட்ட இனத்தோர் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். தமிழர் தன்னாட்சி அரசு என்ற ஆளுமையான தளத்தையோ, மதவழிப்பட்ட இனம் என்ற வலுவான தளத்தையோ கொண்டிருக்கவில்லை. உலகெங்கும் பரந்து வாழும் 80 மில்லியன் வரையான தமிழ்மக்கள் மொழியென்ற ஒற்றை இழையால் மட்டுமே தமிழர் பிணிக்கப்பட்டிருக்கின்றனர்.
எனவேதான் மொழி சார்ந்த பண்பாட்டுக் கல்வியானது தனித்துவத் துறையாகத் தோற்றம் கொண்டு பேணப்பட வேண்டும் என்ற கருதுகோளை இக்கட்டுரை முன்வைக்கின்றது.
பெயர்வுச் சமூகத்தில் (Diapora) மரபுரிமையின் முதன்மை:
இக்கட்டுரையின் தொடக்கத்திலேயே மரபுரிமை பற்றிய தெளிவான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. மரபுரிமை சொல்லின் ஆழமான பொருளை உணர்ந்து பயன்படுத்த வேண்டிய தேவைகளை அதிகமாகக் கொண்டுள்ள சமூகம் இதுவாகும்.
பெயர்வுப்புலத்தில் தனித்துவமான இருப்பைப் புலப்படுத்துவதற்கும் தம்மை நிலைநிறுத்துவதற்கும் மரபுப் பேணல் அவசியமாகின்றது என்பதை பெயர்வுச் சமூகம் உணர்ந்து வருகின்றது.
பல்லினச் சமூகச் சூழல் கொண்ட வாழ்புலத்தில் ஒரு பொதுமைப் பண்பாடு நிலவும் என்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தோம். பள்ளிகளிலும் வேலைத்தலங்களிலும் பெரிதும் ஆளுமை செலுத்தும் இப்பொதுமைப் பண்பாடு, தன்னினப் பண்பாடு மீது ஈர்ப்பு இல்லாதவர்களை எளிதாகவே ஆட்கொண்டுவிடுகின்றது.
பொதுவாக நம்மவர்களால் மேற்கத்தைய நாகரிகம் என அழைக்கப்படுகின்ற இப் பொதுமைப் பண்பாடு, நடை, உடை, நடத்தை, பழக்கவழக்கங்கள் சிந்தனைகள் என்பவற்றில் எல்லா இனங்களுக்கும் பொதுவான தனித்துவங்களைக் கொண்டிருக்கும்.
எடுத்துக்காட்டாக, விருந்து, திருமண வரவேற்பு நிகழ்வுகளில் ஆண், பெண் ஒன்றாக இணைந்து ஆடுவதைக் குறிப்பிடலாம். னுயவiபெஇ டiஎiபெ வழபநவாநச என்று சொல்லப்படுகின்ற நடத்தைகளெல்லாம் இப் பொதுமைப் பண்பாட்டுக்குரியதே.
ஒவ்வொரு இனங்களிலும் தன்னினம் சார்ந்த மரபு, பண்பாடு என்பவற்றில் விருப்பு இல்லாதவர்களைக் காணலாம். இவ்வாறானோர் பொதுமைப் பண்பாட்டு நடத்தைகளே தமது பண்பாடாகக் கருதி வாழத் தலைப்படுகின்றனர்.
தமிழ்ச் சமூகத்தின் இளையோர் பலரும் இவ்வாறான பொதுமைப் பண்பாட்டு நடத்தைகளையே தமது பண்பாட்டுத் தளமாகக் கருதத் தொடங்கியுள்ளனர். இளையோர் மட்டுமல்ல, குறிப்பிடத்தக்கவளவு பெரியோரும் முற்றுமுழுதான ஆங்கிலச் சூழலுக்குள் தம்மைக் கட்டமைத்து, தமிழியற் செயற்பாடுகளில் இருந்து முற்றும் விலகி வாழ்ந்து வருகின்றனர்.
தனித்துவமான மரபுகளையும் பண்பாடுகளையும் பேணுவதில் பெரும் சவால்களைக் கொண்டதான இந்த வாழ்புலத்தில், பொதுமைப் பண்பாட்டுக்குள் தொலைந்து காணாமல் போவோர் பல இனங்களிலும் இருக்கின்றனர்.
எனினும் இந்தப் பெயர்வுப்புலத்தில் வேர்களைத் தேடுதல் என்ற ஒரு பொது மரபும் இருக்கின்றது. பெற்றோரால் அடையாளங்களைத் தொலைத்த இளையோர் பலர் தீவிரமாகவே தமது வேர்களைக் கண்டறிந்து, தான் சார்ந்த இனத்தோடு இணைந்து செயற்படுவதையும் இங்கு காணக்கூடியதாக உள்ளது.
தன்னினம் சார்ந்த மரபுகளிலும் பண்பாட்டு நடத்தைகளிலும் ஈர்ப்பு ஏற்படாமையே பொதுமைப் பண்பாட்டு நடத்தைகளைப் பலர் முழுமையாக உள்வாங்கக் காரணம் என்பதை பெயர்வுத் தமிழச்சமூகம் ஏற்றுக்கொண்டாகவேண்டும்.
நான் தமிழ்ப் பண்பாட்டை வெறுக்கின்றேன் எனக் கூறிய இளம் பெண் அதற்குக் கூறிய காரணம், 'எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் என் அப்பாவும் அம்மாவும் நாள்தோறும் கெட்ட வார்த்தைகளைப் பேசி சண்டை பிடித்துக்கொண்டிருப்பார்கள். இடையே வந்துபோகும் உறவினர்களும் அவ்வாறே சண்டை பிடிப்பார்கள். என்னைக் கவனிக்க யாரும் இல்லை. இதனால் எனக்குத் தமிழர் என்றாலே பிடிக்கவில்லை" என்றாள்.
இவை போன்ற (தாயகத்தில் பொதுவாக நிகழும்) பல சமூகக் குறைபாடுகள் இளையோரைப் பாதிக்கின்றன. சமூகத்தின் நடத்தைகளைப் பொதுமைப் பண்பாட்டுடன் ஒப்பிட்டு, இனஞ்சார் நடத்தைகளைக் தாழ்வாக மதிப்பிடும் போக்கு இயல்பாகவே எங்கும் காணப்படுகின்றது.
ஆங்கியேர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர் வெளிப்படுத்திய மேற்குலகப் பண்பாட்டு நடத்தைகளைப் போற்றிய மனோபாவத்தில் இருந்து விடுபடாத பெற்றோரும் தமிழர் பண்பாட்டு விழுமியங்களைப் போற்றத் தவறுகின்றனர்.
தமிழர் பின்பற்றிவரும் பல பண்பாடுசார் நடத்தைகளுக்கும் சடங்களுக்குமான போதிய விளக்கங்கள் இளையோருக்கு இல்லை. எடுத்துக்காட்டாக ஏன் நிறைகுடம் வைக்க வேண்டும் என ஒரு இளையவர் கேட்டால் அதற்கான விளக்கத்தைத் திருத்தமாக வழங்க எல்லோராலும் முடிவதில்லை. பொருத்தமான விளக்கங்கள் கிடைக்காதவிடத்து இளையோர் இனஞ்சார்ந்த பண்பாட்டு நடத்தைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்குவர்.
ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, தமிழர் சிறப்பான பண்பாட்டு நெறிகளைக் கொண்டுள்ளனர் என்ற போதிலும் பெயர்வுப்புலத்திற்கேற்பத் தமிழர் தமது மரபுசார் இயங்கங்களையும் பண்பாட்டு நடத்தைகளையும் வடிவமைத்துக் கற்கைக்குரிய நெறியாகவே சமூகத்தோருக்குப் புகட்ட வேண்டிய தேவையைச் சமூகம் நன்குணர வேண்டும்.
இவ்வாறான வாழ்களச் சூழலில் குறிப்பிட்ட இளையோர், இனஞ்சார் மரபுகளையும் பண்பாட்டு செல்நெறிகளையும் உள்வாங்கிப் பின்பற்றுவதுடன், அவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் செயற்பட்டு வருகின்றனர்.
தமிழ்ச்சமூகமானது, மேற்குறிப்பிட்ட சவால்களை வெற்றி கொண்டு வாழும் மண்ணில் மரபுரிமையை நிலைநிறுத்துவதற்கான வழிவகைகளைக் கண்டறிதலே தற்போதைய தலையாய பொறுப்பு. தமிழர் மரபுகளை உறுதியுடன் பேணுவதோடு, அதை ஒவ்வொரு தலைமுறைக்கும் ஊட்டிச்செல்லும் வலுவான சமூகக் கட்டமைப்பையும் உருவாக்குதல் வேண்டும். அடையாளங்களைப் பேணும் நோக்கிலான தொடர் செயற்பாடுகள் இடையறாது நடைபெற வலுவான இயங்குதளங்கள் உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய செயற்பாடுகளே எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்வதற்கும் இறுக்கமான சமூகப் பிணைப்புகளைப் பேணுவதற்கும் அவசியமானவை.
இச்செயற்பாட்டுக்கு வலிமை செய்யும் வகையில் கனடா அரசு தைத்திங்களைத் தமிழருக்கான மரபுரிமைத் திங்களாக அங்கீகரித்துள்ளமை சிறப்புக்குரியது.
தமிழர் மரபுரிமைத் திங்கள்:
பெயர்வுத் தமிழச்சமூகம் வாழும் நாடுகளில் அதிக தமிழர்களைக் கொண்ட நாடாகக் கனடா திகழ்கின்றது. கனடாவின் பன்முகப் பண்பாட்டுக் கொள்கைகளுக்கு ஏற்ப, பலருடைய முயற்சியாலும் தைத்திங்கள் தமிழரின் மரபுரிமைத் திங்களாக அரச நிர்வாக அலகுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மரபுத்திங்களை முன்னிட்டு, பல அமைப்புகளும் நிறுவனங்களும் பல நிகழ்வுகளையும் ஒன்றுகூடல்களையும் நடத்துகின்றன. சில நிகழ்வுகளும் செயற்பாடுகளும் காத்திரமான பயன்களைத் தருகின்றன என்ற போதிலும் பல நிகழ்வுகள் ஆடலும் பாடலுமாக வழமையான கலைநிகழ்வுகளைப் போலவே நடந்தேறி விடுகின்றன.
மரபுரிமை நிகழ்வுகளி;ன நோக்கம் பெரிதும் மரப்புப் பேணல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவே இருத்தல் வேண்டும். அமைப்புகளும் விழா ஏற்பாட்டாளர்களும் கீழ்க்காணும் விடயங்களைக் கவனத்திற் கொள்ளுதல் சிறப்பாக இருக்கும்.
மரபுரிமை விழிப்புணர்வுச் செயற்பாடுகளை மூன்று தளங்களாக வகுக்கலாம்.
1. இளையோருக்கு விழிப்புணர்வுவை ஏற்படுத்துதல்
2. பிறனத்தோருக்கு உணர்த்துதல்
3. இனஞ்சார் செயற்பாடுகளை வடிவமைத்தல்
இளையோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பில் பின்வரும் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.
• இளையோரிடையே மொழி, பண்பாடு, கலை போன்ற இனஞ் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகளை நடத்துதல்
• மொழி, கலை, பண்பாடு, இனம் சார்ந்த செயற்பாட்டுக் களங்களை இளையோருக்கு உருவாக்கிக் கொடுத்தல்.
• செயற்படும் மாணவர்களுக்கு ஊக்கம் வழங்கி வழிகாட்டி இயக்கிச் செல்லுதல்
• இளையோருக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நடத்துதல்.
• உலகலாவிய இளையோர் அமைப்புகளை எதிர்கால இருப்புநோக்கி ஒருங்கிணைத்தல்.
• இளையோரிடையே தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தி, இனஞ்சார்ந்து பணியாற்றத் தூண்டுதல்.
பிறவினத்தோருக்கு உணர்த்துதல்:
நாம் பல நாடுகளிலும் பிறவினங்களோடு இணைந்தே வாழ்கின்றோம். எமது பண்பாடு, மொழி, கலை தொடர்பில் பிறவினத்தோருக்குப் பெருமதிப்பை ஏற்படுத்த வேண்டியது எமது பொறுப்பாகும்.
பிறவினத்தோர் எம்மினம் குறித்து உயர்வான எண்ணத்தைக் கொண்டிருக்கும் நிலையில், நாம் புலம்பெயர மண்ணில் எம்மைச் சிறப்பாக நிலைநிறுத்த முடியும். ஓரினம் கொண்டிருக்க வேண்டிய அனைத்துச் சிறப்புகளும் எமக்கு உண்டு. அதைத் திட்டமிட்டுப் பிறவினத்தோரிடையே எடுத்துச்செல்ல வேண்டும்.
பள்ளிகளில், வேலைத்தலங்களில், பொதுஅமைப்புகளில் அங்கம்பெறும் தமிழர்கள் மரபுரிமை மாதத்தைப் பயன்படுத்தி இந்தப் பணிகளைச் செய்ய வேண்டும்.
இனஞ்சார் செயற்பாடுகளை வடிவமைத்தல்:
நாம் அன்றாட நடத்தைகளில் பின்பற்றிச் செல்ல வேண்டிய பல பண்புகளை இழந்து செல்கின்றோம். எமது விழாக்கள், சடங்குகள் என்பன பண்பாட்டுத்தளங்களை விட்டு, விலகிச் செல்கின்றன.
கலை வகுப்புகளில் ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு என்பன இடம்பிடிக்கின்றன. சடங்குகளில் இந்திப் பாடல்கள் தாராளமாக இடம் பிடிக்கின்றன. ஆடை முறைமைகள் வடநாட்டைத் தழுவிச் செல்கின்றன.
தமிழர்கள் மட்டுமே கூடும் அரங்குகளில் நிகழ்ச்சித் தொகுப்பு ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறுகின்றது. தமிழ்,பண்பாட்டு வகுப்புகளுக்கு மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.
மரபுகள் பண்பாடுகள் பற்றிய பிரக்ஞை ஏதுமின்றி, தான்தோன்றித்தனமாக எதுவும் செய்யலாம், எதையும் மாற்றியமைக்கலாம் என்ற போக்கு இயல்பாகவே தமிழர் பலரிடமும் இருக்கின்றது. இதனாலேயே பொதுமைப் பண்பாட்டு நடத்தைகளும் வடஇந்தியப் பண்பாட்டு நடத்தைகளும் தமிழர் பண்பாடுகளுக்குள் எளிதாகக் கலந்துவிடுகின்றன.
இந்தப் பெயர்புலங்களில் தமிழர் பின்பற்ற வேண்டிய மரபுகள், பண்பாட்டு நடத்தைகள் என்பன தீர்க்கமாக வரையறுக்கப்பட்டு கையேடாக வழங்கப்பட வேண்டும்.
• ஆடை, அணிகலன், ஒப்பனை தொடர்பில் தமிழர் மரபியல் அழகின் வெளிப்பாடாக அமைதல் நன்று.
• பெரிதும் தமிழர் கலந்துகொள்ளும் நிகழ்வில் நிகழ்வுகளும் நிகழ்வுத் தொகுப்பும் தமிழ்மொழியிலேயே இருத்தல் வேண்டும்.
• தமிழ்மொழிக்கல்வி எங்கும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
• தமிழருக்கிடையேயான தொடர்பாடலில் பெரிதும் தமிழ்மொழியே பயன்படுத்தப்பட வேண்டும்.
• தாயக உறவுகளுடன் இளையோருக்குத் தொடர்புகளை ஏற்படுத்தி அதைப் பேணல் வேண்டும்.
இவை போன்ற எளிதான முயற்சிகளை அனைவரும் மேற்கொண்டாலே இனஞ்சார்ந்த இருப்புகளுக்கு வலுச் சேர்க்க முடியும். இளையோரிடையும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இவ்வாறான சமூக ஈடுபாடு கொண்ட செயற்பாடுகளைப் பலர் செய்து வருகின்றனர்.
முடிவுரை.
கனடாவில் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர் மரபுரிமை விழிப்புணர்வு நிகழ்வுகள், பெயர்வுப் புலங்கள் யாவற்றிலும் முன்னெடுக்கப்படும் நிலை உருவாக வேண்டும். தைத்திங்களில் உலகெங்கும் இவ்வாறான மரபுரிமை விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுமாயின் அது உலகத் தமிழரிடையே இனவுணர்வு தொடர்பில் பேரெழுச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
தமிழினம் மொழிவழி நின்று, மரபுகள், பண்பாடுகள் வாயிலாவே தம்மை ஓரினமாகக் கட்டமைத்திருக்கின்றது. மதவழி, தன்னாட்சிக் கட்டமைப்புகளை விட இக்கட்டமைப்பு வலிமை குறைந்தது. அடையாளங்களைப் பேணிச்செல்வதில் பெரும் சவால்களையும் இடர்களையும் எதிர்கொள்ளக் கூடியது.
வலிமையான செயற்பாட்டுத்தளமும் இனவொருமையும் இருந்தால் மட்டுமே நாம் எமது மரபுரிமைகளைக் காலாகாலத்துக்கும் பேணிச்செல்ல முடியும்.
பொன்னையா விவேகானந்தன்
விரிவுரையாளர் - ரொரண்ரோ பல்கலைக்கழகம்