புலம்பெயர் தமிழர்களின் தாய்மொழிக்கல்வியும் பண்பாட்டு மொழியும்
முன்னுரை:
பண்டைய இலக்கியங்கள் தமிழர் வாழ்வை நிலம், காலம் முதற்பொருட்களுக்கமைய ஐந்தாக வகுத்திருந்தன. இந்தப் பகுப்பின் அடிப்படையில் இன்றைய தமிழர் வாழ்வை உற்றுநோக்கின் புதியதும் ஆறாவதுமான ஒரு வாழ்வியல்தளத்தை நாம் அடையாளம் காண முடியும்.
குறிப்பாகப் பெருமளவில் இலங்கையில் இருந்து பெயர்ந்த தமிழர்கள் ஐரோப்பா, வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியேறி, அங்கு நிரந்தரமான வாழ்வுத்தளத்ததை கட்டமைத்துள்ளனர். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர்தான் இக்கட்டமைப்புச் சூழல் அடையாளம் காணுமளவுக்கு வளர்ச்சிபெற்றிருந்தது. இத்தளத்தின் வழியே ஒரு புதிய தலைமுறைத் தொடர்ச்சி குடியேறிய நாடுகளில் ஏற்படத் தொடங்கிவிட்டது. தாயக வாழ்வியல் நெறிகளில் இருந்து பெரிதும் மாறுபட்ட பண்புகளைக் கொண்டதான இத்தமிழ்ச் சமூகத்தையே ஆறாம்திணை எனச் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். இச்சமூகம் ‘புலம்பெயர் தமிழச் சமூகம் எனத் தமிழிலும் (Diaspora Tamil) என ஆங்கிலத்திலும் குறிக்கப்படுகின்றது.
இச்சமூகத்தின் இன்றியமையாத தேவைகளில் முதன்மையானதான தாய்மொழிக்கல்வி பற்றியும் அதன் வழியே பண்பாட்டு மொழி என்ற நோக்கில் பண்பாட்டுக்கல்வி குறித்தும் இக்கட்டுரை சுருக்கமாக ஆய்வு செய்வதாக அமைகின்றது.
தாய்மொழிக் கல்வியின் தேவையும் தோற்றமும்
பெயர்வுத் தமிழர்கள் வாழும் நாடுகள் ஒவ்வொன்றும் தனித்துவமான தேசியப் பண்பாட்டைக் கொண்டிருந்தன. இ;ந்தத் தேசியப் பண்பாட்டு ஓட்டத்துடன் இணைய வேண்டிய அழுத்தம் இயல்பாகவே அங்கு குடியேறும் ஒவ்வொரு இனத்துக்கும் உண்டு. குறிப்பாக, அந்நாடுகளில் பிறந்து வளரும் தமிழ்ப் பிள்ளைகள் வாழிட நாடுகளுக்கான தேசியப் பண்பாட்டை ஒட்டியே வளர்ந்து வருவர். இந்நிலையில் தாய்மொழியையும் பண்பாட்டு மரபுகளையும் வரலாற்றையும் கல்;வி வாயிலாகவே பெயர்வுத் தமிழர்களின் புதிய தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் வழியே தமிழ்மொழிக்கல்வியின் தேவையை உணர்ந்த பெயர்வுத்தமிழர்கள் வலுவான தாய்மொழிக்கல்விக் கட்டமைப்புகளை உருவாக்கத் தலைப்பட்டனர்.
புலம்பெயர்ந்தோர் சமூகச் சூழலில் தமிழ்க்கல்வியின் தோற்றம் ஏறக்குறைய கால் நூற்றாண்டைக் கடந்துவிட்டது. இந்தக் கால் நூற்றாண்டில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. தொடக்ககாலத் தமிழ்ச் சமூகத்தின் உளப்பாங்கு இப்போது இல்லை. வாழும் நாட்டுக்குரிய பண்பாட்டு வடிவங்களை உள்வாங்கிய தலைமுறையினர் தலையெடுத்து விட்டனர். பொருளாதார வளங்களும் வேறு தளத்துக்குச் சென்றுவிட்டன. சமூகத்தவரின் அடிப்படைச் சிந்தனைகளும் தேடல்களும் மாற்றங்களை நோக்கிச் செல்கின்றன.
பெயர்வுத்தமிழர்கள் முன்னெடுத்துவரும் தாய்மொழிக்கல்வி, அடையாளம் சார்ந்த இருப்பைப் பேணுவதில் பெரும்பங்கு வகிக்க வேண்டியதொன்றாகும். இக்கல்வியின் தேவை குறித்தும் எதிர்ப்படும் சவால்கள் பற்றியும் சற்றே விரிவாக ஆராய்கின்றது இக்கட்டுரை.
தாய்மொழியை இரண்டாம் நிலையில் கற்கும் சூழலின் தோற்றம்:
‘தாய்மொழியைப் பாரம்பரிய மொழியாக முதல் மொழிக்கு அடுத்த நிலையில் கற்றல்’ என்னும் சூழலின் தோற்றம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே அவதானத்துக்குரியதாக உருக்கொண்டதெனலாம். இக்கல்விச் சூழல் தோற்றம் கொண்டதற்கான பின்புலத்தை நாம் அறிந்திருத்தல் இக்கட்டுரையை முழுமையாக விளங்கிக்கொள்ள உதவும்.
ஐரோப்பியரது ஆட்சிக்காலத்தில் வேலை வாய்ப்புகளுக்காக அவர்களது ஆட்சிக்குட்பட்டிருந்த பிறநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டோர் இருவகையினராவர். கூலித்தொழிலாளிகளாகக் கொண்டு செல்லப்பட்டோர் ஒருவகை. கல்விப் பின்புலம் சார்ந்து தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்றோர் மறுவகை. இத்தகையோரும் அந்தந்த நாடுகளில் நிரந்தரமாகத் தங்கிவிட்டனர்.
விடுதலைக்குப் பின்னரும் கல்வி தொழில் வாய்ப்புகளுக்காக வளர்ச்சியுற்ற நாடுகளுக்குச் செல்வோரும் இருந்தனர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உள்நாட்டு யுத்தங்கள், இயற்கைப் பேரழிவுகள் காரணமாக அகதிகள் என்ற பகுப்பில் கணிசமானோர் ஐரோப்பிய, வடஅமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் குடியேறினர். இத்தகையோரும் குடியேறிய நாடுகளில் நிரந்தரமாகத் தம் வாழ்வை அமைத்துக்கொண்டனர்.
இவ்வாறு குடியேறியோர் தமது முதற் தலைமுறைக் காலத்தில் தாய்மொழியிலேயே பெரிதும் தமது தொடர்பாடலைக் கொண்டிருந்தனர். அவர்களது சிந்தனா மொழியாகவும் தாய்மொழியே இருந்தது.
மொழியாலும் பண்பாட்டாலும் பழக்கவழக்கங்களாலும் முற்றிலும் மாறுபட்ட ஒரு புலத்தில் வாழத்தலைப்பட்ட ஓரினத்தினுடைய தனித்துவ இயல்புகளில் மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.
குடியேறியோரது இரண்டாம் தலைமுறையே இவ்வாறான மாற்றங்களை பெரிதும் வெளிப்படுத்துவோராக இருந்தனர். குடும்பம் என்ற சிறு வட்டத்துக்கு அப்பால் இரண்டாம் தலைமுறையினரின் சமூக மொழியாகவும் தொடர்பாடல் மொழியாகவும் அந்தந்த நாடுகளுக்குரிய மொழியே ஆதிக்கம் பெற்றுச் சிந்தனா மொழியாகவும் திகழ்ந்தது. அவர்களது தாய்மொழி இரண்டாம் மொழி என்னும் நிலையை அடைந்தது.
இந்நிலையில்தான் முதல்மொழியை அடுத்து, தாய்மொழியை பாரம்பரிய மொழியாக இரண்டாம் நிலையில் கற்கும் சூழல் தோற்றம் கொண்டது. இச்சூழல் தமிழருக்கு மட்டும் உரியதன்று. ஆசிய, ஆபிரிக்க தென்னமெரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தோருக்கும் பொருந்தும்.
தமிழ்மொழி இரண்டாம் நிலையில் கற்பிக்கப்படும் நாடுகள்:
ஒரு நூற்றாண்டுக்கு முன்னேரே தாயகங்களை விட்டுப் புலம்பெயர்ந்தோரில் தமிழரும் அடங்குவர். பதினெட்டாம் நூற்றாண்டிலேயே தமிழர் பெயர்வுகள் தொடங்கிவிட்டன. ஆங்கிலேயர் தமிழரைக் கூட்டங்கூட்டமாகக் கரிபியன் தீவுகள், லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா, பிஜி தீவுகள், சிங்கப்பூர், மலேசியா, மொறிசியஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்றனர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே கல்வி, தொழில் போன்றவற்றோடு அகதிகள் என்ற வகையிலும் ஐரோப்பா, வடஅமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற கண்டங்களில் தமிழர் குடியேறினர். பிரஞ்சு நாட்டின் ஆளுகைக்குட்பட்டிருந்த பாண்டிச்சேரியில் இருந்தும் தமிழர் கணிசமான தமிழர் பிரஞ்சு நாட்டில் குடியேறியிருந்தனர்.
இன்றைய காலத்தில் கரிபியன் தீவுகளிலும் கயானா, ட்ரினிடாட், ரியூனியன், பிஜி போன்ற நாடுகளிலும் வாழ்வோர் பெரிதும் தமிழருக்கான அடையாளங்களை இழந்துவிட்டனர். தாய்மொழி எதுவெனத் தெரியாதோராகவே பலரும் வாழ்கின்றனர். அவர்களது மொழி ஆங்கிலம் அல்லது ஸ்பானிய மொழியாகவே மாறிவிட்டது.
தமிழர் குடியேறிய பிற பகுதிகளான ஐரோப்பா, வடஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா கண்டங்களிலும் மொறிசியஸ் பர்மா போன்ற நாடுகளிலும் தாய்மொழியை இரண்டாம் மொழியாகக் கற்கும் சூழல் தற்போது வலுவாகத் தோற்றம் கொண்டுள்ளது.
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழ் இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்பட்டாலும் முதல்மொழி என்னும் தகுதியை அது இன்னும் இழந்துவிடவில்லை எனலாம். சமூகமொழியாகவும் தொடர்பாடல் மொழியாகவும் தமிழ் இப்போதும் அங்கு நிலைத்துள்ளது. இவ்விரு நாடுகளும் தாயகத்தோடு நெருக்கமான தொடர்பைக் கொண்டிருப்பதனால் தமிழ்மொழி பயன்பாட்டுச் சூழல் எளிதில் மாற்றமடைய வாய்ப்பில்லை.
தமிழ்மொழி இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்படும் நாடுகளான ஐரோப்பா, வடஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா போன்றவற்றினது கல்விச் சூழலே இக்கட்டுரைக்குக் தளமாக அமைகின்றது.
தமிழ்மொழி இரண்டாம் நிலையில் கற்பிக்கப்படும் சூழலைப் புரிந்து கொள்ளல்:
உள்நாட்டுப் போர் காரணமாகப் பெருமளவில் தமிழர் புலம்பெயர்வதற்கு முன்பாகவே குறிப்பிடத்தக்க தமிழர் ஐரோப்பா, வடஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்காப் பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். இவர்களில் சிலர் தமது பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்க முனைந்தனர். தொடக்கத்தில் வீடுகளில்; தமிழ்ப் பெற்றோர் அல்லது தமிழ் மொழியறிவு கொண்டோரால் தமிழ் கற்பிக்கப்பட்டது. 1980க்கு பின் ஈழத்தமிழர் பெருமளவில் வெளிநாடுகளை நோக்கிப் புலம்பெயரத் தொடங்கினர். தொடக்கத்தில் பெரிதும் இளைஞர்களே புலம்பெயர்ந்திருந்தனர். 80களின் கடைசியில்தான் கணிசமான அளவில் குடும்ப வாழ்க்கைச் சூழல் தோற்றம் கொண்டது. புதிய இளந்தலைமுறையில் தோற்றம் அவதானிக்கப்பட்டது. இதன் விளைவாகத் தமிழ் கற்பித்தல் செயற்பாடுகள் முனைப்புப் பெறத் தொடங்கின.
ஐரோப்பா, வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா கண்டத்திலும் கனடாவிலும் தாய்மொழிக் கல்விச் செயற்பாடுகள் 1990க்குப் பின் நிறுவனமயப்படுத்தப்பட்டன. இதன் பின்பே இக்கல்விச் சூழல் பற்றிய விழிப்புணர்வு தமிழ்ச்சமூகத்தவருக்கு ஏற்பட்டது.
இக்கருத்துக்கு ஆபிரிக்கா விதிவிலக்காகும். ஆபிரிக்கத் தமிழர் 150 ஆண்டுகளுக்கு மேலாக ஆபிரிக்காவில் வலுவான சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். தாய்மொழியாக இரண்டாம் மொழியை கற்பிக்கும் சூழல் அங்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே உருவாகிவிட்டது. ஆபிரிக்காவில் குடியேறியோர் பலரும் கற்றறிந்தோர் என்பதனால் இனஞ்சார் அடையாளங்கள் பெரிதும் அங்கு பேணப்பட்டன. அதன் தொடர்ச்சியை இன்றும் அங்கு காணலாம்.
இப்புதிய கல்விச் சூழலானது, தாயகத்தின் மொழி கற்பித்தல் முறைகளிலிருந்து பெரிதும் மாறுபட்டது என்பதை அடிப்படையில் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தோர் வீட்டில் பேச்சு மொழியாகத் தமிழைப் புரிந்து கொள்பவராகவும் சிலவேளை ஓரளவு அல்லது சில சொற்கள் பேசவும் தெரிந்திருப்பர். இவர்களுடைய தொடர்பாடலும் சிந்தனையும் கல்வி மொழியும் அந்நாட்டிற்குரிய மொழி வழியாகவே நடைபெறும். இந்த மொழியே இவர்களது முதல் மொழியாகும். இந்நிலையில் தாய்மொழியான தமிழை இரண்டாம் நிலையில் கற்பர்.
இவ்வாறானோர் தமிழைக் கற்கும்போது அந்நாட்டுக்குரிய மொழியோடு ஒப்பிட்டே கற்பர். அந்நாட்டுக்குரிய கற்பித்தல் முறைகளையும் வகுப்பறைச் சூழலையும் தமிழ் மொழி கற்பித்தல் சூழலோடு ஒப்பிடுவர்.
இந்நாடுகளில் தாய்மொழி கற்றலில் அந்நாடுகளுக்குரிய கல்விச் சூழல் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இச்சூழலில் தாய்மொழி கற்பிப்போர் அந்நாட்டுக்குரிய கல்விச் சூழலைப் புரிந்து கொள்வது மிக அவசியமானது.
குடியேறிய புலங்களில் தொடக்ககாலக் கற்பித்தல் முறைகள்:
தாய்மொழிக் கல்வி நிறுவனமயமாக்கப்படுவதற்கு முன்னரும் பின்னான தொடக்க காலத்திலும் பெரிதும் தாயகத்தில் கையாளப்பட்ட கற்பித்தல் முறைகளே பின்பற்றப்பட்டன. தொடக்கத்தில் இக்கற்பித்தல் முறை பயன் தந்தது என்பதை மறுப்பதற்கில்லை. தாயகத்தில் பிறந்து இந்நாடுகளில் குடியேறியேறிய மாணவரே பெருமளவில் தமிழ் கற்போராக இருந்தனர்.
தாயகத்தில் இருந்து தருவிக்கப்பட்ட பாடநூல்களும் அவற்றை அடியொற்றி இங்கு உருவாக்கப்பட்ட சில நூல்களும் பயன்படுத்தப்பட்டன. பெரிதும் ஆசிரியர் மையக்கல்வி (Teacher-centered instruction) முறையே பின்பற்றப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள் தொடக்கக் கல்வியைத் தாயகத்தில் கற்றிருந்ததனால் அவர்களுக்கு மரபுசார் கற்பித்தல் முறைகள் சிக்கலாக இருக்கவில்லை.
தொடக்ககாலத்தில் தமிழ் கற்பிக்க முற்பட்ட ஆசிரியர்கள் தமிழ் கற்பித்தலில் தாய்நாட்டில் மொழி கற்பிக்கப்படும் வழிமுறைகளையே முற்றிலும் நம்பினர். குடியேறிய நாட்டில் நடைமுறையில் இருந்த கற்பித்தல் முறைகளையும் வகுப்பறைச் சூழலையும் பெரிதும் அறியாதவராக இருந்தனர். அதற்கான அவசியமும் அக்காலத்தில் இருக்கவில்லை. இவ்வாறு தமிழ் கற்பிக்க ஆரம்பித்தோரில் சிலர் தாயகத்தில் தமிழ்மொழி கற்பிக்காதவராகவும் வேறு சிலர் ஆசிரியத் தொழிலுக்கே புதியவர்களாகவும் இருந்தனர்.
இக்கற்பித்தல் முறைகள் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் போன்ற மொழிப்பயன்பாடுகளையே உச்ச இலக்குகளாகக் கொண்டிருந்தன. கற்போர் தமிழில் தொடர்பாடுதலும் அதற்குரிய மொழியறிவு பெற்றிருத்தலும் தொடக்ககாலக் கல்விமுறையின் நோக்கங்களாக இருந்தன. தகவற்றொழில் நுட்பக் கருவிகளின் பயன்பாடுகள் அக்காலத்தில் பெரிதும் இல்லாதிருந்தன.
தொடக்ககாலத்தில் வீடுகளில் பெரிதும் தமிழே பேச்சுமொழியாக இருந்தது. மாணவர்களும் தமக்கிடையேயான தொடர்பாடல்களைத் தமிழிலேயே மேற்கொண்டனர்.
அரச கல்விச்சபைகளில் தமிழ்மொழி கற்பிக்கத் தொடங்கியபின்தான் வாழும் நாட்டின் கல்விச் சூழலோடு தமிழ்மொழிக் கல்வியை இணைத்து நோக்கும் போக்கு ஏற்பட்டது.
தமிழ் கற்கும் தற்கால மாணவரின் பின்னணி:
1980க்குப் பின் மேற்கூறிய நாடுகளில் இதுவரை ஏறக்குறைய பத்து இலட்சம் தமிழர் குடியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையில் வட, கிழக்குப் பகுதிகளிலிருந்து ஏதிலிகளாகப் புலம் பெயர்ந்தோராவர். 2009க்குப் பின்னர் இலங்கையிலிருந்து புலம்பெயர்வோரது எண்ணிக்கை வீழ்ச்சிடைந்து வருகின்றது. 2015க்குப் பின்னர் தொழில், கல்வி கருதி தமிழகத்திலிருந்து புலம்பெயர்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
ஆயினும் குடியேறியோரது குடும்ப வாழ்வின் வழியே பிறக்கும் குழந்தைகளும் குடும்ப அழைப்பு (குயஅடைல ளிழளெழச) வாயிலாக வருவோரும் தமிழரது எண்ணிக்கை உயர வழிசெய்கின்றனர். இத்தகைய நாடுகளில் தொடக்க காலத்தில் இளம் வயதில் குடியேறியோரும் இங்கு பிறந்தோருமே இரண்டாம் தலைமுறையினர் என அழைக்கப்படுகின்றனர். இக்காலத் தமிழ் சமூகத்தின் வலிமைமிக்க உறுப்பினர்களாக இவர்களே அழைக்கப்படுகின்றனர். இவர்களுடைய பெற்றோராகத் திகழ்ந்த மூத்த தலைமுறையினர் மெல்லமெல்ல ஓய்வை நோக்கிக் சென்று கொண்டிருக்கின்றனர்.
தற்காலத்தில் சமூகப் பொறுப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கும் இரண்டாம் தலைமுறையினரின் பிள்ளைகளே இப்போது மாணவராகத் திகழ்கின்ற மூன்றாம் தலைமுறையினராவர். இவர்களுடைய பெற்றோராகிய இரண்டாம் தலைமுறையினர் வாழும் நாட்டினுடைய மொழியைச் சரளமாகப் பயன்படுத்துவர். கணிசமானோருடைய வீட்டுமொழியாகவும் தொடர்பாடல் மொழியாகவும் அந்நாட்டுக்குரிய மொழியே பயன்படுவதாக இருக்கும். இவர்கள் கணிசமானவளவு வாழும் நாட்டினுடைய பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கியவராகவும் இருப்பர். இவர்களுடைய தாயகத் தொடர்புகள் முற்றிலும் அறுபட்டோ அல்லது குறைவாகவோ காணப்படும்.
இவ்வாறானதொரு சூழலில்தான் தற்போதைய மாணவர் சமூகம் வளர்கின்றது. அந்நாட்டுக்குரிய மொழியை ஏறக்குறைய எல்லாநிலைகளிலும் முதல்மொழியாக்கிக் கொண்ட இந்த மாணவ சமூகம் தாய்மொழி தமிழை முற்றிலும் இரண்டாம் மொழியாகப் பயில்கின்றவராக உள்ளனர்.
தலைமுறை இடைவெளிகள் பெரிதும் காணப்படுகின்ற இச்சமூகங்களில் தலைமுறை தோறும் தமிழ்ப் பயன்பாடு வீழ்ச்சியடைந்து செல்வதை வெளிப்படையாகவே கண்டுகொள்ளலாம். மொழி, பண்பாடு வாழ்வியல் நடைமுறைகள் சார்ந்து வாழும் நாட்டினது இயல்புகளைப் பெரிதும் உள்வாங்கியோராகவே மூன்றாம் தலைமுறையினர் பெரிதும் திகழ்கின்றனர்.
ஆங்கிலத்தை முதல்மொழியாகக் கொண்டிராத நாடுகளில் தமிழ் வீட்டுமொழியாக ஓரளவு பேணப்பட்டு வருகின்றது. இந்நாடுகளில் பயிலும் மூன்றாம் தலைமுறையினரின் தமிழ்க்கல்வி ஏனைய நாடுகளை விட மேம்பட்டிருக்கின்றது.
நாடுகள் தோறும் மாறுபடும் கற்பித்தல் முறைகள்:
மொழிக்கல்வி தொடர்பான கற்பித்தல் முறைகள், பெரிதும் கடந்தகால அனுபவங்களில் இருந்தும் கற்கும் மாணவரின் சூழலை நன்கு புரிந்து கொள்வதிலிருந்தும் தோன்றுகின்றன.
மொழிக்கல்வி கற்பித்தல் முறைகள் நாடுகளின் சமூக அமைவுகளுக்கமைய மாறுபடுகின்றன. உலகெங்கும் காணப்படும் கற்பித்தல் முறைகளைக் கீழ்க்காணும் நான்கு பகுப்புகளுக்குள் அடக்கி விடலாம்.
•தமிழே மூல மொழியாக இருக்கும் சூழலில் அதனையே முதல் மொழியாகவும் கற்கும் முறை. எ-டு தாயகத் தமிழ்க்கல்வி
•தமிழ்மொழி வீட்டு மொழியாகவும் தொடர்பாடல் மொழியாகவும் பேணப்பட்டுவரும் சூழலி;ல் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் முறை. எ-டு சிங்கப்பூர், மலேசியா
•இயற்கை, பண்பாட்டுத் தளங்களில் பெரிதும் மாறுபட்ட நாட்டில் பிறிதொரு மொழியின் பேராதிக்கம் மிக்க சூழலில் தமிழ் மொழியை இரண்டாம் மொழியாப் பயிற்றுவிக்கும் முறை. எ-டு ஐரோப்பிய நாடுகள் (பிரித்தானியா தவிர்த்து)
•ஆங்கில மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளில் தமிழ்மொழியை இரண்டாம் மொழியாகப் பயிற்றுவிக்கும் முறை எ-டு பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா
பின்னிரண்டு பகுப்புகளும் தமிழ்மொழி கற்பித்தலில் பெருஞ்சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.
ஏறக்குறைய முப்பது ஆண்டுகால புலம்பெயர்ந்த தமிழர் வரலாற்றைக் கொண்ட ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளும் அவுஸ்திரேலியாவும் தொடக்க காலத்தில் தாயகக் கற்பித்தல் முறைகளையும் பின்னர் சிங்கப்பூர் கற்பித்தல் முறைகளையும் பின்பற்றின. தொடக்ககாலத்தில் புலம்பெயர்ந்தோர் வீட்டிலும் வெளியேயும் தொடர்பாடல் மொழியாகப் பெரிதும் தமிழையே கொண்டிருந்தனர். ஆனால் தற்போது இந்நாடுகளில் சமூக அமைவுகள் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்குள்ளாகியுள்ளன.
இந்நாடுகளுக்குரிய மொழியையே முதல்மொழியாகக் கொண்ட இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர் தலையெடுத்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் தமிழ்மொழி கற்பித்தல் முறைகள் தனித்துவமான மாற்றங்களுக்குள்ளாக வேண்டிய வலுக்கட்டாய நிலை இப்போது தோன்றியுள்ளது.
பெரும்பாலான தமிழர் குடும்பங்கள் இந்நாடுகளில் நிரந்தரமாகத் தங்கிவிடத் தலைப்பட்டு விட்டன. கல்வி, தொழில் சார்ந்து அந்தந்த நாட்டுக்குரிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்து வரும் புதிய தலைமுறையினரே எங்கும் தலையெடுத்துள்ளனர். இவ்வாறானோர் தமிழ்மொழியை இரண்டாம் மொழியாகக் கற்கும் தேவையும் அதன் போக்கும் பெரிதும் மாறியுள்ளன.
ஆங்கிலத்தை முதன்மொழியாகக் கொண்ட நாடுகளில் குடியேறிய தமிழர் வெகுவிரைவாகத் தமது வீட்டுமொழியாகவும் ஆங்கிலத்தை ஆக்கிக் கொண்டு வருகின்றனர். வட அமெரிக்க நாடுகளில் வாழ்வோருடைய தாயகத் தொடர்புகளும் குறைவடைந்து வருகின்றன. இந்நாடுகளில் தோற்றம் கொண்ட புதிய தலைமுறையினர் தமிழ்மொழியை ஓர் அந்நிய மொழி போன்றே கற்க வேண்டியுள்ளது.
ஆனால் பிரித்தானியா தவிர, பிற ஐரோப்பிய நாடுகளில் வாழ்வோர் பெரிதும் தமிழையே வீட்டுமொழியாகக் கொண்டிருந்தனர். இப்போதும் பெரும்பாலான வீடுகளில் தமிழே பேசப்பட்டு வருகின்றது. புதிய தலைமுறையினர் தாம் வாழும் நாடுகளின் மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் தமிழ்மொழியை நன்கு பேசத் தெரிந்தவர்களாக உள்ளனர். தாய்நாட்டு உறவுகளுடனும் தொடர்பில் இருக்கின்றனர். இவர்களுடைய தமிழ்க்கல்விச் சூழல் பிறவற்றிலிருந்து வேறுபட்டிருக்கின்றது.
இவ்விரு சமூக அமைவுகளுக்கும் ஏற்ப, புலம்பெயர்தோர் மொழிக்கல்வி இருவேறு கற்பித்தல் முறைகளைக் கொண்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட கற்பித்தல் சூழல்களுக்கான கற்பித்தல் வழிமுறைகள் இப்போதும் முழுமையானதாக உருவாக்கப்படவில்லை. இந்த மாறுபட்ட சமூக அமைவுகளைக் கருத்திற் கொண்டு சிறந்த பாடத்திடங்களும் கற்பித்தல் முறைகளும் வகுக்கப்பட வேண்டும்.
இக்கல்விச் சூழலோடு நீண்டகாலமாக இணைந்திருந்து பெற்ற அனுபவமும் மொழி, மொழியியல் அறிவும் உலகளாவிய மொழிக்கல்விக் கோட்பாடுகள் பற்றிய தெளிவும் வாழும் நாட்டினது கல்விக்கொள்கை பற்றிய புரிதலும் கொண்டோரே புதிய கற்பித்தல் உத்திகளைக் கண்டறியவும் வகுக்கவும் வல்லோர் ஆவர்.
ஐரோப்பாவைத் தளமாகக் கொண்டியங்கும் அனைத்துலகத் தமிழர்கல்வி மேப்பாட்டுப் பேரவை என்ற கல்விக்கான தமிழர் அமைப்பு, மாணவ சமூகத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு, புதிய தாய்மொழிக்கல்வி கோட்பாடுகளை வகுத்து அதற்கமைய கற்பித்தலை முன்னெடுத்து வருகின்றது.
நீண்ட வாழ்வியல் மரபையும் அதைத் தலைமுறைதோறும் காவிச்செல்லும் தனித்துவமான மொழியையும் கொண்ட ஓர் இனமானது புலம்பெயரந்து பலவினங்கள் வாழும் ஒரு சமூகத்தில் நிரந்தரமான வாழத் தலைப்படுகின்றது. இப்புதிய வாழ்களத்தில் வளரும் தலைமுறைகளிடையே வாழிட மொழியே ஆதிக்கம் பெற்றுவரும் நிலையில் தாய்மொழிக் கல்வியின் வடிவங்களை மாற்றிச் செல்ல வேண்டிய நிலை வலுவாக உணரப்பட்டு வருகின்றது. எனினும் மொழிக்கல்வி தொடர்பாடற் பயன்பாடு என்பதற்கு அப்பால் பண்பாட்டு மொழியாகவும் கற்பிக்க வேண்டியது முதன்மையாகின்றது.
பண்பாட்டுக் மொழிக்கல்வி பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பாகப் பண்பாட்டு மொழி என்றால் என்ன? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வது சிறப்பானதாக இருக்கும். பண்பாட்டு மொழி என்பது மொழியின் தொடர்பாடல் பண்பிலிருந்து வேறுபட்டதாகும்.
தனக்கேயுரித்தான ஒரு நிலத்தில் தலைமுறை தலைமுறையாக மிக நீண்டகாலமாக வாழ்ந்து வரும் ஒரு இனமானது, உணவு, உடை, இருப்பிடம், உறவு முறைகள், நம்பிக்கைகள், பழக்க வழங்கங்கள், கலைகள் தொடர்பாக தனித்துவ வினைத்திறன் கொண்டியங்குவதாக இருக்கும். இவை தலைமுறை தோறும் காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்று அவ்வினத்தால் கைக்கொள்ளப்படுவதாக இருக்கும்.
ஒரு சமூகத்தின் இவ்வாறான தனித்துவமான வினைத்திறன் மிக்க இயக்கமே அவ்வினத்தின் பண்பாடு எனப்படுகின்றது. இந்தப் பண்பாட்டு நடத்தைகளை அச்சமூகம் சார்ந்த மக்கள் எவ்வாறு தலைமுறை தோறும் காவிச் செல்கின்றனர்? என்ற வினா இவ்விடத்தில் முக்கியமானது. ‘சமூகத்திலுள்ள மூத்தோரிடமிருந்து இளையோர் பண்பாட்டு விழுமியங்களைக் கற்றுச் செல்கின்றனர்’ என மேம்போக்காக விடையைக் கூறிவிட முடியாது.
அச்சமூகத்தோடு இணைந்தியங்கிச் செல்லும் சில காவிகளே தலைமுறைதோறும் பண்பாட்டு நடத்தைகளைச் சுமந்து செல்கின்றன. சில இனங்களிடையே காவிகளாக மதங்கள் இருக்கின்றன. இவ்வனங்களின் மதம் அழியுமானால் வெகுவிரைவில் இவர்கள் பண்பாட்டுத் தனித்துவத்தையும் இழந்து விடுவர்.
வேறு சில இனங்களில் அரசியல் சட்டங்கள் பண்பாட்டு நடத்தைகளைக் காவிச் செல்கின்றன. இந்த அரசுகள் சிதையுமானால் விரைவிலேயே இவர்கள் பண்பாடும் சிதைந்துவிடும்.
இன்னும் சில இனங்களில் மொழியே அவற்றைப் பன்னூற்றாண்டுகளாகப் பாதுகாத்துச் செல்கின்றன. இவ்வாறான மொழிகள் வழக்கொழியுமானால் அத்தோடு இவ்வினங்களில் பண்பாடும் வழக்கற்று விடும்.
இதில் இறுதியாகக் கூறப்பட்ட நிலையிலேயே ஒரு மொழி பண்பாட்டு மொழியாகின்றது. உலகில் பல மொழிகள் பண்பாட்டு மொழியாகப் பேணப்பட்டு வருகின்றன.
பண்பாட்டு மொழிக்கான அத்தனை வரைவிலக்கணங்களையும் கொண்ட மொழியாக தமிழ் திகழ்ந்து வருகின்றது. ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் எழுதியதோடு நின்றுவிடாது, தமிழருடைய வாழ்வியல் நெறிகளுக்கும் வரைவிலக்கணம் எழுதியது. இந்த வாழ்வியல் நெறிகளினூடாகத் பழந்தமிழருடைய பண்பாட்டுச் செல்நெறிகள் தெளிவாக வெளிப்பட்டிருந்தன.
காலந்தோறும் தமிழ்மொழி, இலக்கியங்களின் வாயிலாகத் தமிழருடைய பண்பாட்டுச் செல்நெறிகளைப் பதிவு செய்து வருவதுடன் ஒவ்வொரு தலைமுறைக்கும் அதைப் புகட்டி வருகின்றது. தமிழர் தமது பண்பாட்டு மரபுகளையும் வரலாற்றையும் மொழிவழிப் பதிவுகளான இலக்கியங்களாகவே கொண்டுள்ளனர்.
தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் அற நூல்களும் ஐம்பெரும் காப்பியங்களும் பக்தி இலக்கியங்களும் சிற்றிலக்கியங்களும் சமகாலப் படைப்புகளுமே தமிழர் பண்பாட்டைச் சுமந்து நிற்கின்றன.
தமிழினத்தின் இருப்புக்கும் அடையாளத்துக்குமான ஆதார ஊற்று தமிழ்மொழியே. தமிழர் எக்காலத்தில் தமது தாய்மொழியை இழக்கின்றனரோ அன்றே இனவi-யாளத்தையும் இழந்துவிடுவர். இதனாலேயே தமிழ் சிறந்த பண்பாட்டு மொழியாகத் திகழ்கின்றது.
புலம்பெயர்ந்தோர் வாழிடங்களில் பண்பாட்டு மொழி.
பண்பாட்டு மொழி தொடர்பான புரிதல் அனைத்துத் தமிழர்களுக்கும் பொதுவான ஒன்றே. வாழும் சூழலும் அது சார்ந்த சமூக அமைப்புமே இது பற்றிய தேடல்களையும் தேவைகளையும் விரிவாக்குகின்றன.
இந்த நூற்றாண்டில் தனித்துவமான இனங்கள் பலவும் ஒரே சூழலில் இணைந்து வாழும் வாழ்க்கை முறைகள் பெருமளவில் பெருகியுள்ளன. இவ்வாறான பல்லினக் கலப்புகளைக் கொண்ட சமூகத்தில் பண்பாட்டு மொழி என்ற சொற்றொடர் இப்போது பலம் பெற்று வருகின்றது. இவ்வாறான சூழலில் வாழும் இனங்கள் பல தமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் தொடர்ச்சியாகப் பேணிச் செல்வதற்காகப் ‘பண்பாட்டு மொழி’ என்ற துறையைப் பலப்படுத்த ஆரம்பித்துள்ளன.
உலகில் வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படுகின்ற பல்வேறு நாடுகளிலும் வாழுகின்ற தமிழர் பலர் அந்நாடுகளில் தமது வாழ்வை நிரந்தரமாக்கிக் கொண்டுள்ளனர். அவர்களில் பலரும் தாயகத்துக்குத் திரும்பப் போவதில்லை. இவ்வாறான சூழ்நிலையில் வாழும் நாடுகளில் இறுக்கமும் தனித்துவமும் மிக்க சமூகமாக வாழ வேண்டியுள்ளது.
பல்லின சமூகத்தில் வாழும் ஓர் இனம் அந்தந்த நாடுகளுக்குரிய பொதுவான வாழ்வியல் முறைகளையே பெரிதும் பின்பற்ற வேண்டியுள்ளது. வேலைத்தலங்களிலும் பள்ளிகளிலும் இந்தத் ‘தேசியப் பொதுப் பண்பாட்டு வாழ்வியல்’ தவிர்க்க முடியாதவொன்றாகின்றது.
பல பண்பாடுகளைக் கொண்ட சமூகங்கள் வாழுகின்ற சூழலில் ஒரு பொதுமைப் பண்பாடு உருவாவதுவும் அதைப் பின்பற்ற வேண்டியதும் தவிர்க்க முடியாததாகும். வாழும் நாட்டினுடைய தேசிய அடையாளங்களைக் கொண்டதாகவும் தேசிய தனித்துவங்களில் ஓர் அங்கமாகவும் திகழும் வாய்ப்பினை இந்தப் பொதுமைப் பண்பாடு கொண்டுள்ளது. கனடாவில் நீண்ட காலத்துக்கு முன் குடியேறிய பல இனங்கள் இந்தப் பொதுமைப் பண்பாட்டையே தமது இனஞ் சார்ந்த பண்பாடாகவும் கொண்டுவிட்டன.
இவ்வாறானதோர் சூழ்நிலையில்தான் இனஞ் சார்ந்த தனித்துவமான பண்பாட்டுப் பேணல்கள் தொடர்பான ஆழமான சிந்தனைகள் எழுகின்றன. பொதுமைப் பண்பாட்டைப் பின்பற்றும் அதேவேளையில் எவ்வாறு இனஞ் சார் பண்பாடுகளையும் மரபுகளையும் பேணலாம்? என்ற தேடல்களும் உருவாகின்றன. பல்லினப் பண்பாட்டு வாழ்புலத்தில் வாழும் தனித்துவ அடையாளங்கள் மிக்க இனத்தோரிடையே எழுகின்ற இவ்வாறான தேடல்கள் தவிர்க்க முடியாதவை. இயல்பானவை.
தாயகங்களில் பாரம்பரியமானதும் பாரியதுமான பரந்த பண்பாட்டுச் சூழலுக்குள்ளேயே தமிழரின் வாழ்வு காலங்காலமாக இயங்கி வருகின்றது. புலம்பெயர் சூழலில் முற்றிலும் புதியதான வாழ்வியல் தளத்தில் திட்டமிட்டும் அதற்கான ஒழுங்குமுறை நெறிகளை வகுத்தும் பண்பாட்டுத் தொடர்ச்சியைப் பேணவேண்டியுள்ளது.
இதுவே பண்பாட்டுச் சிந்தனை தொடர்பில் தாயக வாழ்வியலுக்கும் புலம்பெயர்ந்தோர் வாழ்புலச் சூழலுக்குமுரிய பாரிய வேறுபாடாகும்.
பெரிதும் பொருளாதாரப் பின்புலத்தையே மையமாகக் கொண்டியங்கும் இயந்திர இயக்கத்துக்கு ஒப்பான புலம்பெயர் வாழ்புலத்தில் தனித்துவமான பண்பாட்டுப் பேணல் எளிதானதல்ல. ஒவ்வொருவரையும் சுற்றி வளைத்திருக்கும் பொருளாதாரத் தேவைகளையும் அன்றாட இருப்புக்காகத் தொடர்கின்ற போராட்டங்களையும் மீறி, பண்பாட்டுப் பேணல் குறித்து ஆழமாகச் சிந்தித்துச் செயற்படுவது பெருஞ் சவால்களைக் கொண்டது.
கனடா போன்ற பன்முகப்பண்பாட்டுச் சூழலைக் நாடுகளில் இவ்வாறான வாழ்வியல் போராட்டங்களுக்கு ஆட்பட்ட பல இனங்கள் தமது தனித்துவப் பண்பாட்டை இழந்துவிட்டன. வாழ்ந்து கொண்டிருக்கும் இனங்களிலிருந்து பல குடும்பங்கள் ஆண்டுதோறும் தொலைந்து கொண்டிருக்கின்றன.
தாயகத்தில், ஐரோப்பியர் இனக்கலப்பில் தோன்றி, ஐரோப்பியப் பண்பாடு பழக்க வழங்க்ளைப் பின்பற்றி வாழ்கின்ற ‘பறங்கியர்’ என்ற இனத்தோரைப் போலவே இங்கு பல தமிழ்க் குடும்பங்கள் வாழத் தலைப்பட்டுவிட்டன. அவை தமிழர் என்று தம்மை அடையாளப்படுத்துவதை விடுத்துக் கனடியர் என்றே தம்மைக் கருதிக் கொள்கின்றன.
இவ்வாறான சூழலில்த்தான் பண்பாட்டுத் தொடர்ச்சியை எவ்வாறு நெறிப்படுத்தப்பட்ட வழிமுறைகளில் பேணலாம் என்ற வினா பெரிதாக எழுகின்றது.
இவ்வாhனதொரு சிந்தனைத்தளத்திலேயே தாய்மொழிக்கல்வி பண்பாட்டு மொழிக்கல்வியாகக் கற்பிக்க வேண்டும் என்ற கோட்பாடு வலுப்பெறுகின்றது.
நிறைவுரை:
ஆறாந்திணைச் சமூகம் என்று கருதப்படக்கூடிய பெயர்வுத் தமிழ்ச்சமூகம் புதிய புலத்துக்கான வாழ்வியல் கோட்பாடுகளை வகுத்துக் கொள்வதிலும் அவற்றைப் பின்பற்றிச் செல்வதிலும் தாய்மொழிக்கல்வியின் வகிபாகம் முதன்மையானதாகவே இருக்கப் போகின்றது. இச்சமூகத்தினரின் தாய்மொழிக்கல்வியின் ஆய்வு பரப்பு பெரியது. இன்னுமொரு பொழுதில் அதை விரிவாக நோக்குவோம்.
No comments:
Post a Comment